தலையங்கம் அய்.அய்.டி.களில் தொடரும் ‘மனு தர்மம்’
நாட்டின் உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனமான ‘அய்.அய்.டி.’கள், பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி, ‘மனு தர்மத்தை’ அறிவிக்கப்படாத சட்டமாக பின்பற்றி வருகிறது. கடும் போராட்டத்துக்குப் பிறகு மாணவர், ஆசிரியர் தேர்வுகளில் 27 சதவீதம்,
22.5 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற சட்டம் இயற்றிய பிறகும், பார்ப்பன நிர்வாகம் இடஒதுக்கீட்டை முழுமையாகப் பின்பற்றாததோடு, நிறுவனம் நடத்தும் ‘தகுதி’க்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அற்பக் காரணங்களுக்காக படிப்பைத் தொடர விடாமல் தடுத்து விடுகிறது. 1996 முதல் 2000 வரை சென்னை அய்.அய்.டி.யின் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் தொடர் போராட்டங்களை நடத்தி, அங்கே நடக்கும் ‘பாகுபாடு’களை பார்ப்பனி யத்தை பொது வெளிக்கு வெளிச்சப்படுத்தியது.
கடந்த நவம்பர் 24, 2021 அன்று உச்சநீதிமன்றம் அய்.அய்.டி.களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றப் படாததை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. குறிப்பாக ஆய்வுப் படிப்புகளில் பட்டியல் இனப் பழங்குடி மாணவர் களுக்கான ஒதுக்கீடுகள் மறுக்கப்படுகின்றன. நாடு முழுதும் உள்ள 23 அய்.அய்.டி. களுக்கும் ஒன்றிய அரசுக்கும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விளக்கம் கேட்டு தாக்கீது பிறப்பித்துள்ளது. ஆசிரியர் நியமனங்கள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். பேராசிரியர்கள் பணியாற்றும் திறன் குறித்து மதிப்பீடுகள் வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டதோடு அது நிர்வாகம் தொடர்பானது என்றும் இடஒதுக்கீடு பிரச்சினையை மட்டுமே நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் கூறி விட்டது.
அய்.அய்.டி.யில் சமூகத் தடைகளைக் கடந்து இடம் பிடித்த ஒரு இளம் ‘தலித்’ மாணவரால் கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் பணம் செலுத்திய வங்கியில் நடந்த தொழில்நுட்பக் கோளாறுதான். ஆனால், அய்.அய்.டி. நிர்வாகம் உரிய நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று காரணம் கூறி மாணவரை சேர்க்க மறுத்து விட்டது. இப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து வரும் மாணவர்கள், தேர்ச்சி பெற்றும் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பைத் தொடர முடியவில்லை என்றும், தெலுங்கானா மாநிலத்தில் இந்த எண்ணிக்ககை அதிகம் என்றும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (நவம், 25, 2021) செய்தி வெளியிட்டுள்ளது.
‘அய்.பி.எம்.’ எனும் உயர் தொழில்நுட்பப் பட்டப் படிப்பில் உரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பி. திவ்யா வாணி இடம் பிடித்தார். இப்படி தேர்ச்சி பெற்ற பிறகும் அய்.அய்.எம்., என்.அய்.டி. போன்ற படிப்புகளுக்கு நிர்வாகம் 6 மாத பயிற்சி ஒன்றை நடத்தி, அதிலும் வடி கட்டுகிறது. அதில் தேர்ச்சி பெற்ற பிறகும் உரிய கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மாணவர்கள் சேர முடியாமல் வாய்ப்புகளை இழந்து நிற்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் பி. திவ்யா வாணி. மாணவியின் தந்தை ஒரு லாரி ஓட்டுனர். படிப்புக்காக அவரால் ரூ.30 இலட்சம் வரை தான் திரட்ட முடிந்தது. அது போதாமையால் ‘பி.காம்.’ பட்டப் படிப்பில் தெலுங்கானாவில் ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்துள்ளார். இதேபோல் சுமார் 40 தலித் மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.
இந்த நிலையில் உயர்ஜாதி ‘ஏழை’களுக்கென்று ஒன்றிய ஆட்சி கொண்டு வந்த சமூக நீதிக்கு எதிரான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வரம்பு தான் பிற்படுத்தப்பட்டோருக்கும் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. உச்சநீதிமன்றமே இந்த ‘பாகுபாட்டை’ சுட்டிக் காட்டி ஒன்றிய ஆட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் இருந்தாலும் அதை முறையாக செயல்படுத்தாமல் முட்டுக்கட்டைப் போடுகிறது பார்ப்பன அதிகார வர்க்கம். ஒரு ‘எல்லைக்கு மேல்’ இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைத்து விடக் கூடாது. உச்சகட்ட அதிகாரமிக்க பதவிகளுக்கும் அதேபோல உயர்மட்ட ஆய்வு படிப்புகளுக்கும் வந்து விடக்கூடாது என்பதில் இவர்கள் உறுதி காட்டு கிறார்கள். ‘ஏறி வரும் ஏணியை எட்டி உதைக்கும்’ இந்த நயவஞ்சகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கா விட்டால் இடஒதுக்கீடு என்ற சமூக நீதியின் நோக்கம் முழுமை பெற முடியாது.
எனவே சமூக நீதியைக் குலைக்க கொல்லைப் புறமாக பின்பற்றப்படும் முட்டுக்கட்டைகள் மீது உரிய கவனம் செலுத்தி தடைகளை நீக்குவதற்கான விழிப்புணர்வை சமூகத்தில் உருவாக்குவதோடு ஒன்றிய ஆட்சிக்கு அழுத்தம் தரப்பட வேண்டியது அவசியம்.
பெரியார் முழக்கம் 02122021 இதழ்