அர்ச்சகர் உரிமை: பார்ப்பனர்கள் இரட்டை வேடம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தபோது இப்படி ஒரு ஆணையைப் பிறப்பிப்பதற்கு அறநிலையத் துறைக்கோ, தமிழ்நாடு அரசுக்கோ உரிமையில்லை என்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக கூடாது என்றும் அனைத்து பார்ப்பனர்களும் கூறினார்கள். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்கள். உச்சநீதிமன்றத்திலும் சுப்ரமணியசாமி இதன் அடிப்படையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர்களிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது.

14.11.2021 அன்று பத்திரிக்கையில் வந்த இரண்டு சம்பவங்களை குறிப்பிட விரும்புகிறோம். முதலில் ஸ்ரீரங்க கோவிலை பற்றி. ஸ்ரீரங்க கோவில் ஒரு வைணவக் கோவில். இந்தக் கோவிலுக்குள் மோடியின் பேச்சை ஒலிபரப்பி யிருக்கிறார்கள். ஒலிபரப்பியது, பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது பாஜக தொண்டர்கள். இதை எதிர்த்து ரங்கராஜ நரசிம்மன் என்கிற வைணவப் புரோகிதர், முகநூலில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இந்த எதிர்ப்பு தெரிவித்ததனால் பாஜகவினர் கடுமையாக மிரட்டுகிறார்கள். லாரி ஏற்றி கொன்றுவிடுவோம் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு மரணம் நிகழுமானால் பாஜக அண்ணாமலை தான் காரணம் என்று முகநூலில் கடுமையாக பதிவிட்டு இருக்கிறார். இவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக கூடாது, அதில் தலையிட அரசுக்கு உரிமையில்லை. என்று சொன்னவர். அவரே தற்போது அரசாங்க உதவியை நாடுகிறார். கோயில் கடவுள் சிலையை அர்ச்சகர்கள் வீட்டுக்கு எடுத்துப் போய் விடுங்கள் என்று கூறியது இவரே.

1982 இல் கோவில் வழிபாட்டுத் தலங்கள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி அண்ணா மலை மீதும், பாஜக வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசு ஆணை பிறப்பிப்பது, அரசுக்கு உரிமையில்லை ! ஆனால், வைணவக் கோவிலில் சைவ மடத்தில் மோடி பேசிய பேச்சை ஒலிபரப்புவது எதிரானது என்று வருகிறபோது தமிழ்நாடு அரசுக்கு, அறநிலையத்துறைக்கு இதில் உரிமையுண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரே பதிவிடுகிறார். இந்த இரட்டை வேடத்தை புரிந்து கொண்டாக வேண்டும்.

மற்றொன்று, காஞ்சி வரதராஜர் சுவாமி கோவிலில் நடந்த ஒரு நிகழ்வு. இந்தக் கோவிலில் இப்போது பிரம்மோத்சவம் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் அய்ந்தாவது நாளில் தென்கலைப் பிரிவினருடைய ஸ்தோத்திர பாடல் பாடப் படுவது வாடிக்கை, ஆனால் வடகலைப் பிரிவினர் தென்கலைப் பிரிவினருடைய ஸ்தோத்திரங்களை பாடக்கூடாது என்று தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால், வட கலையும், தென்கலையும் அடிக்கடி கைகலப்பில், அடிதடியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது தென்கலைப் பிரிவைச் சார்ந்த ரங்கநாதர் உயர்நீதி மன்றத்தை நாடியிருக்கிறார். உயர்நீதிமன்றத்தில், இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அறநிலையத்துறை தீர்த்து வைப்பதற்கு உரிமையுண்டு, அறநிலையத்துறை தலையிட்டு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று அவர் உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். உயர்நீதி மன்றமும் இந்தக் கோரிக்கையை ஏற்று அறநிலையத்துறை தலையிட்டு இந்தப் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

வடகலை தென்கலை மோதல் குறித்து 1882ஆம் ஆண்டிலும் பிறகு 1962ஆம் ஆண்டிலும் நீதிமன்றங்களில் வழக்கு வந்திருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது உயர்நீதிமன்றம். அறநிலையத் துறை சட்டம் 63(இ) பிரிவின்படி கோயில் சம்பிரதாயங்கள் மீறப்படுவதாக புகார் வந்தால், அறநிலையத் துறை துணை ஆணையரோ, இணை ஆணையரோ

தலையிட முடியும் என்று கூறுவதால், அறநிலையத் துறை இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. ‘சம்பிரதாயங்கள்’ என்று பார்த்தால், கோயிலில் பிராமணர்கள் வழிபாட்டு உரிமைகளே கிடையாது என்று பல்வேறு தீர்ப்புகளில் கூறப்பட்டிருப்பதை வழக்கு ஆதாரங்களுடன் நாகர்கோயில் வழக்கறிஞர் சிதம்பரம், தனது நூலில் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியிருப்பதைச் சுட்டிக்காட்ட  வேண்டும்.

வைணவர் கோவிலில் சைவ மடத்தில் மோடி பேசிய பேச்சை ஒலிபரப்புதல் என்று வருகிறபோது அது பாஜகவினராக இருந்தாலும் கூட, தமிழ்நாடு அரசு விதித்த சட்டத்திற்கு எதிரானது என்று கூறுகிறார்கள். மற்றொரு பக்கம், தென்கலைக்கும், வடகலைக்கும் மோதல் வருகிறபோது இதில் தலையிட்டு சமரசம் செய்யக்கூடிய உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு என்கிறார்கள். ஆனால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை உண்டு என்று அரசு உத்தரவு பிறப்பிக்கும் போது அரசுக்கு உரிமை யில்லை, அறநிலையத்துறைக்கு உரிமையில்லை என்று கூறுகிறார்கள். எனவே இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டாக வேண்டும். இந்த இரட்டை வேடத்திற்குப் பின்னால் பதுங்கி நிற்பது, “கோவில் கர்ப்பகிரகம் என்பது தங்களுடைய பார்ப்பன ஆதிக்கப் பிடியில் இருக்க வேண்டும்” என்பது ஒன்று மட்டுமே தான்.                             – இரா

பெரியார் முழக்கம் 18112021 இதழ்

You may also like...