குடியாத்தம் – இராமாலையில் சிறப்புடன் நடந்தது ‘நான் இந்துவாக இருக்கப் போவதில்லை’: பெரியாரின் நூல் திறனாய்வு கூட்டம்
வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 7.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தலித்முரசு மற்றும் காட்டாறு பதிப்பகம் வெளியிட்ட பெரியாரின் கட்டுரைத் தொகுப்புகள் “நான் இந்துவாக இருக்கப் போவதில்லை” இன்னும் நூல் குறித்த அறிமுக நிகழ்வும் சமூகநீதி தளத்தில் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்ற தோழர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வும் நடை பெற்றது.
இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலித்முரசு ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் புனித பாண்டியன், எழுத்தாளர் அழகிய பெரியவன், திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் சடகோபன், இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்டத் தலைவர் தலித் குமார் ஆகியோர் பங்கேற்று நூல் குறித்து மிக விரிவாகப் பேசினர். இந்நிகழ்விற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார் கழகத்தினுடைய வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சதீஷ்குமார், ரூபன், கோதண்டராமன், சுரேஷ், பார்த்திபன், வினோத், புருஷோத்தமன் ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். அரவிந்த் ஜெய்சூர்யா வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான சாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணத்தை நடத்திக் கொண் டிருக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ஈஸ்வர னின் சாதி ஒழிப்பு களப் பணியைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கப் பட்டது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அறிவாசான் பெரியார் பிறந்த நாளையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் 1500 சதுர அடியில் மிகப் பிரம்மாண்டமான பெரியார் ஓவியத்தை தொடர்ந்து எட்டு மணி நேரம் வரைந்து சாதனை படைத்த ஆசிரியர் தெருவிளக்கு கோபிநாத் பணியைப் பாராட்டி பயன் ஆடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப் பட்டது.
கழகத் தோழர் திராவிட பாண்டியன், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார் எனவே, தோழரே களப்பணி நீதிமன்றத்திலும் மேலும் தொடர வேண்டும் என்று பாராட்டிப் பயணித்து அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக வேலூர் மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் சிவா நிலத்தில் நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது தொடர் மழையின் காரணமாக உடனடியாக குடியாத்தம் பகுதியில் திராவிடர் கழகத் தோழர் அன்பரசன் இல்லத்தில் அமைந்துள்ள பெரியார் அரங்கத்திற்கு மாற்றப் பட்டது. மழையின் காரணமாக தோழர்கள் வருகை புரிய பெரும் சிரமம் இருப்பினும் தோழர்கள் அதை பொருட்படுத்தாமல் சுமார் 100 பேர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கழகத் தோழர் ஜெயக்குமார் – ரோகிணி ஆகியோரின் ஆண் குழந்தைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கபிலன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
நிகழ்வின் இறுதியில் மாட் டிறைச்சி உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக நிகழ்வினை தொடக்கம் முதல் இறுதி வரை கழகத்தின் பெண் தோழர்களே நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வின் இறுதியாக ஜெயக்குமார் நன்றி கூறினார்
பெரியார் முழக்கம் 11112021 இதழ்