பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் சொல்கிறார் “பிராமணர்களும் பனியாக்களும் எங்களின் பாக்கெட்டில் உள்ளனர்!”
‘பிராமணர்’களும் பனியாக்களும் பாஜக-வின் பாக்கெட்டில் உள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார். மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் முரளிதர ராவ் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். “பாஜக-வும் பாஜக ஆட்சிகளும் பழங்குடிகள், தாழ்த்தப்பட் டோர் முன்னேற்றத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோரை வாக்கு வங்கிகளாக நாங்கள் கருதவில்லை. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களை வழங்கவே பாஜக விரும்புகிறது. அதனால்தான் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீது கவனம் செலுத்துகிறோம்” என்று அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
அப்போது, “பாஜக என்றாலே “பிராமணர்கள்”, பனியாக்கள் கட்சிதான் என அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்றோ தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீது கரிசனம் காட்டுகிறீர்கள். மற்றொரு பக்கம் அனைவருக்குமான வளர்ச்சி, முன்னேற்றம் என முழக்கம் எழுப்புகிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த முரளிதர ராவ், “உண்மைதான்… “பிராமணர்”களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்தான் இருக் கிறார்கள். பாஜக-வில் “பிராமணர்”கள், பனியாக்கள் அதிகம் இருப்ப தால்தான் ஊடகங்கள் எங்கள் கட்சியை பிராமணர்கள் – பனியாக்கள் கட்சி என குறிப்பிடுகின்றன. பாஜக-வைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையை பெறுவதில் உறுதியாக உள்ளது. அதை நோக்கி பயணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். முரளிதர ராவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
“அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற மமதையில் பாஜக தலைவர்கள் பேசி வரு கின்றனர்” என்று முன்னாள் முதல்வர் கமல் நாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் 18112021 இதழ்