பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (17) ஆர்.டி.அய். சட்டத்தைக் குலைத்த ஒன்றிய ஆட்சி விடுதலை இராசேந்திரன்
- மனித மலத்தை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒதுக்கிய நிதி – பாதியளவில் குறைப்பு.
- மோடி பட்டம் பெறவில்லை என்ற உண்மையை வெளி உலகிற்கு மறைக்க ஆர்.டி.அய். சட்டமே திருத்தப்பட்டது.
- உயர் கல்விக்கான நிதியும் குறைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
தலித் மக்களின் வளர்ச்சிக்கான நிதியை படிப் படியாகக் குறைத்த மோடி ஆட்சி, மாணவர் கல்விக்கான உதவித் தொகையிலும் கை வைத்தது. தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தது.
பட்டியல் இனப் பிரிவு மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் அவர்களுக்கான மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு துறை யிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 22.5 சதவீத நிதி ஒதுக்கீட்டுக்கு பதிலாக 2014-15ஆம் ஆண்டுக்கு 8.79 சதவீதம்; 2015-16இல் 6.63 சதவீதமும், 2016-17இல் 7.06 சதவீதமும், 2016-17இல் 8.91 சதவீதமும், 2017-18இல் 6.55 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டன. மிகக் குறைவாக ஒதுக்கப்பட்ட நிதியும் கூட பட்டியலினப் பிரிவினருக்கு நேரடியாகப் பயன்தரக் கூடிய திட்டங்களுக்கு செலவிடப்பட வில்லை.
ஏற்கனவே அமுல்படுத்தி வரும் பட்டியல் இனப் பிரிவினருக்கான நல்வாழ்வுத் திட்டங் களை செயற்படுத்துவதற்கான நிதியும் மோடி ஆட்சியில் கணிசமாக வெட்டப்பட்டது. தனித் தனியாக நேரடி பயன்தரக்கூடிய திட்டத் துக்கான நிதி ஒதுக்கீட்டில் 50.69 சதவீதமும், பொதுவான சமூகநலத் திட்டங் களுக்கு 49.3 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதாவது தேவையான முழு ஒதுக்கீட்டில் பாதியளவு கூட ஒதுக்கப்படவில்லை. அது மட்டுமின்றி பட்டியலினப் பிரிவுனருக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு மடை மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து ரூ. 6312 கோடியை நோய் தடுப்புத் திட்டத்துக்கும், 244.50 கோடியை காற்றாலை மின் உற்பத்தி திட்டத் துக்கும், ரூ. 857.92 கோடியை சூரிய மின் உற்பத்தித் திட்டத்துக்கும் திருப்பிவிடப்பட்டது. இது அப்பட்டமான முறைகேடு. (ஆதாரம்: நாடாளுமன்றத்தில் 2.1.2018இல் இணை அமைச்சர் விஜய் சாம்ப்ளா தந்த தகவல்)
உயர் கல்வி நிதி வெட்டு
தலித் மாணவர்கள் உயர் கல்விக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 348 கோடி ரூபாயை அரசு குறைத்துவிட்டது. அதுவும் ஏற்கனவே 51,03,243 தலித் மாணவர்கள் இந்த உதவித் தொகைக் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண் டிருந்த சூழலில் ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மேலும் குறைத்தார்கள். உதவித் தொகைக் கிடைக்காத நிலையில் ஏராளமான தலித் மாணவர்கள் உயர் கல்வியை பாதியிலேயே கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் என்ற தலித் வேட்பாளரை நிறுத்தி, தலித் ஆதரவு நாடகம் நடத்தும் மோடி ஆட்சி யில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படு கிறதா?
மிகவும் விளிம்பு நிலையில் உள்ள சமூகத் தினரான, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கான முன் னுரிமை என்பது ‘பசு’விற்குக் கொடுப்பதைவிட குறைவேயாகும். தலித்துகள், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து நாட்டிலுள்ள ஊடகங்கள் வாயே திறப்பதில்லை.
2014 பொதுத் தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும் கடந்த காலங்களில் அது அமல்படுத்தியுள்ளவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே பாஜகவின் மோசமான ஆட்சியை நன்கு புரிந்துகொள்ள முடியும், ‘பாஜக மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட உறுதி பூண்டிருக்கிறது’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
ஆனால், இந்த உறுதிமொழிக்கும் எதார்த்த நிலைக்கும் தொடர்பே கிடையாது. உண்மை யில், 2017-18இல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மனித மலத்தை சுமந்திடும் மனிதருக்கு மாற்று வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு பத்து கோடி ரூபாய் அளவிலிருந்து ஐந்து கோடி ரூபாயாக, அதாவது பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் உலர் கழிப்பிடங்கள் 26,07,612 இருக்கின்றன. இதற்கு சுமார் 2 இலட்சம் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தேவை.
இத்துடன் இரயில்வே மற்றும் பொது இடங் களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய் வோரையும் சேர்த்தால் இவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். இவ்வாறு மலம் அள்ளும் தொழிலாளிக்கு மாற்றுப்பணி அளிப்பதற்காக ஒரு நபருக்கு ரொக்க ஊக்கத் தொகையாக 40 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கணக்கிட்டால், மொத்தம் 800 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் 2016 பிப்ரவரி 15 வரையிலும் 7,573 நபர்களுக்கு மட்டுமே மாற்றுப்பணி அளிக்கப்பட் டிருக்கிறது. 1,92,427 பேர் மாற்றுப்பணி எதுவும் அளித்திடாமல் நிர்க்கதியாய் விடப்பட்டிருக் கிறார்கள். மோடியின் ‘தூய்மையான பாரதம்’ திட்டத்தின் கீழ் எத்தனை உலர் கழிப் பிடங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன என்பதற்கான தரவு எதுவும் கிடையாது.
‘ஆர்.டி.அய்.’ சட்டம் சீர்குலைவு
ஊழல் அதிகார முறைகேடுகளை வெளிச்சத் துக்குக் கொண்டு வருவதற்கு மிகப் பெரும் ஆயுதமாகத் திகழ்வது 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம். இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சீர்குலைக்கும் அத்தனை முயற்சி களிலும் மோடி ஆட்சி செயல்பட்டிருக்கிறது.
- ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு 3 ஆண்டு படித்தால் எவரும் பட்டம் பெறலாம். எத்தனை பேர் இப்படிப் பட்டம் பெற்றார்கள் என்ற தகவல் – தகவல்கள் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பே எளிதாகக் கிடைத்துதான் வந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஓர் அதிசயம் நடந்தது; அது என்ன தெரியுமா?
- 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் 3 ஆண்டு பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றதாக மோடி நாடாளுமன்றத்தில் போட்டி யிடுவதற்கான வேட்பு மனுவில் குறிப்பிட் டிருந்தார். அவர் 1978இல் பட்டம் வாங்கியது உண்மையா? என்பதை அறிய அந்த ஆண்டு டெல்லி பல்கலையில் பட்டம் வாங்கியவர்கள் விவரங்களை குறித்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேட்டார். தகவல் ஆணையம் தகவல் தர மறுக்கவே, தகவல் கேட்டவர் மேல்முறையீடு செய்தார். தகவல் ஆணையர் தகவல் தர உத்தரவிட்டார். தகவல் தெரிவிக்க முடியாது என்று டெல்லி பல்கலைக் கழக நிர்வாகம், டெல்லி உயர்நீதி மன்றத்தில் தகவல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் அரசு செலவில் நியமிக்கப் பட்டனர். டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மோடி உண்மையில் பட்டம் வாங்கினாரா என்ற தகவல் வெளிப் படுத்த முடியாத நாட்டின் இரகசியமாக்கப் பட்டது.
- மோடி பிரதமரானவுடன் தலைமை தகவல் அதிகாரி பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு அதிகாரியை நியமிக்காமல் மோடி ஆட்சி கிடப்பில் போட்டது. டெல்லி உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தலையிட்டு உத்தரவிட்ட பிறகே 10 மாத இடைவெளிக் குப் பிறகு தலைமை ஆணையாளர் நியமிக்கப்பட்டார். அந்த 10 மாத காலமும் மேல்முறையீட்டுக்கு வந்த அந்த விண்ணப் பங்களும் கிடப்பிலேயே போடப்பட்டன. தகவல் பெறும் ஆணையத்தில் பதவிகள் காலியான போதெல்லாம் நீதிமன்றங்கள் தலையீட்டுக்குப் பிறகே மோடி ஆட்சி அதிகாரிகளை நியமித்தது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் தகவல் ஆணையர் பதவிகள் நிரப்படுவதே இல்லை. 2016ஆம் ஆண்டு காலியான பதவிகளுக்கு விண்ணப் பங்கள் கேட்டு விளம்பரம் தந்தார்கள். அவ்வளவுதான்; பதவிகளை நிரப்பும் முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
- தகவல் கேட்டு விண்ணப்பித்தவர் இறந்து விட்டால் தகவல் தர வேண்டிய அவசிய மில்லை என்று 2017இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது மோடி ஆட்சி. இதனால் தகவல் வெளிவந்துவிடக் கூடாது என்று நினைக்கும் மோசடிப் பேர் வழிகள், தகவல் கேட்போரை தீர்த்துக் கட்டத் தொடங்கினர்.
- தகவல் கேட்டு மேல் முறையீடு செய்தவர்கள், விரும்பினால் முறையீட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று மோடி ஆட்சி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. இதனால் மேல்முறையீடு செய்தவர்களை மிரட்டி இலஞ்சம் கொடுத்து, விண்ணப் பத்தைத் திரும்பப் பெற வைக்கும் முயற்சிகள் தொடங்கின.
- தலைமை தகவல் ஆணையர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையாகக் கருதப் பட்டு தலைமை நீதிபதிக்கு உரிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மோடி ஆட்சி, அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்காமலே தலைமை தகவல் ஆணையரின் ஊதியத்தைக் குறைத்தது.
- ஆணையம், அனைத்து தகவலையும் ‘டிஜிட்டல்’ மயமாக்கியது. ஒளிவு மறை வின்றி எல்லா தகவல்களையும் கணினியைப் பயன்படுத்தி பார்க்கலாம்; இதைத் தடுப்பதற்காக ‘அட்மின் லாக் இன்’ என்ற முறையைக் கொண்டு வந்து தகவல்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மோடி ஆட்சி தடுத்து விட்டது.
- தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன் படுத்தி ஊழல் முறைகேடுகளை அம்பலப் படுத்தி வந்த சமூக செயல்பாட்டாளர்கள் 70 பேர் வரை கொலை செய்யப்பட்டார்கள். இந்த அச்சுறுத்தலைத் தடுக்க முந்தைய காங்கிரஸ் தலைமையிலான 15ஆவது நாடாளுமன்றம், 2014 மே மாதத்தில் தகவல் பெறுவோர் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் கிடைத்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சி சட்டத்தை இதுவரை கெசட் டில் வெளியிடவில்லை. நடைமுறைக்கு வராத சட்டமாக மோடி ஆட்சி மாற்றி விட்டது. கடைசியாக 2018ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தகவல் பெறும் சமூக செயல் பாட்டாளர் படுகொலை செய்யப்பட்டார். நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முடக்கிய மோடி ஆட்சி பிறகு அந்த சட்டத்தை பலவீனமாக்க மேலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்து, அதை பொது மக்கள் விவாதத்துக்குக் கொண்டு வராமலேயே மூடி மறைத்து மே 11, 2015இல் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட மசோதாவை திடீரென்று அறிமுகப்படுத்தியது.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 25112021 இதழ்