மின்வாரியத் துறையிலும் வடநாட்டுக்காரனா?
தமிழ்நாட்டில் உதவி மின் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 325 பேரில் 36 பேர் வடமாநிலங்களையும் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்ற செய்தி தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டைச் சார்ந்த 80,000 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்தே பொறியாளர்கள் பட்டம் பெற்ற இளைஞர்களிடம் வேலை இல்லாத் திண்டாட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். வட மாநிலத்துக்காரர்கள் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புகளைப் பறிப்பதற்கான காரணம் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் தவறான கொள்கைதான். 2013ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாக வேண்டுமெனில் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் மொழிக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த விதியை 2016ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி திருத்தி தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். தமிழக அலுவல் மொழியான தமிழை வேலைக்குச் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம்...