தலையங்கம் பாரதிதாசனும், பாரதியும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றனரா?
பாரதியும் பாரதிதாசனும் ஏற்றுக்கொண்டதே புதிய கல்வி கொள்கை என்று திருச்சியில் பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பேசியிருக்கிறார். அதே மேடையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அதற்கு மறுப்பையும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை. விருப்பமுள்ளவர்கள் வேறு எந்த மொழியையும் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்ள எந்த தடையும் கிடையாது என்று விளக்கம் அளித்திருக்கிறார். தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசின் தனியான கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் அதற்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த நாளே அறிவித்திருக்கிறார்.
பாரதி, பாரதிதாசன் காலங்களில் பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகளாகவும் 3, 5, 8, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தும் முறை எங்கே இருந்தது? ஆளுநருக்கு உரை எழுதித் தரும் அதிமேதாவிகள் பாரதிதாசன் ஏற்றுக் கொண்டதுதான் புதிய கல்விக் கொள்கை என்று எழுதித் தருகிறார்கள். தமிழ் நாட்டைப் பற்றி ஏதும் அறியாத ஆளுநர் அதை அப்படியே பேசுகிறார். சமஸ்கிருதத்தையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்து தமிழ் இயக்கம் என்ற நூலில் புரட்சிப் பாக்களை வடித்தவர் புரட்சிக் கவிஞர். ‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும்’ என்று எக்காள மிட்டவர் அவர். சமஸ்கிருதம், இந்தியை உயர்த்திப் பிடித்து சமூகநீதியைக் குலைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு பாரதிதாசன் முத்திரை குத்தி இங்கே விற்பனை செய்ய முயற்சிப்பது கேலிக்குரியது. தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய மதிமுக தோழர் காரை செல்வராஜ் ‘இது கோல் வாக்கரின் கல்வித்திட்டம் என்று கூறுங்கள் பாரதி தாசனை இழுக்காதீர்கள்’ என்று பதிலடி கொடுத்தார்.
மாநிலங்களுக்கான கல்விக் கொள்கையை உருவாக்குவது ஒன்றிய அரசின் வேலை அல்ல. அரசியல் நிர்ணய சபையில் அலுவல் மொழியாக இந்தி அங்கீகரிக் கப்பட்டது ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தான் என்பதை மறந்து விட வேண்டாம். அண்ணா முதல்வரானவுடன் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இருந்து இந்தியை விரட்டி தமிழ்நாட்டு மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கை என்று சட்டம் ஆக்கினார். 1976ஆம் ஆண்டு இந்தி தொடர்பான ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்திலும் இது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்ற நிபந்தனையுடன் தான் இடம் பெற்றிருந்தது.
வலதுசாரி மனுவாதி ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தி படிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்பை மறுக்கலாமா ? என்று அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார். நீட் தேர்வை திணித்து அரசு பள்ளி மாணவர் களின் மருத்துவ கனவில் மண்ணை அள்ளிப் போட்ட ‘மனுவாதிகள்’ இவர்கள் தான். ஜெர்மனியில், ரஷ்யாவில் தமிழ்நாட்டில் இருந்து வேலைக்குப் போகின்றவர்கள் அந்த மொழியை கட்டாயமாக படித்துத் தான் தீர வேண்டும் அப்படித் தான் படிக்கிறார்கள். விருப்ப மொழி என்று வந்து விட்டால் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மட்டுமல்ல; உலக மொழிகள் அனைத்திலும் எது விருப்பமோ, எது தேவையோ, அதைப் படிப்பது தான். உலக மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டுப் பள்ளி களில் கற்றுத் தர வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார் களா ? இவர்களுக்கு இந்தியை புகுத்தினாலே போதும் இவர்கள் வாயை மூடிக் கொள்வார்கள். சமஸ்கிருதத்தை தெய்வ மொழி ‘இந்து’ கலாச்சார மொழி என்று கூறி, அதற்கு ஏனைய தேசிய மொழிகளைவிட பல மடங்கு கூடுதல் நிதி உதவி ஒதுக்குவது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி தானே?
விருப்பத்தின் பெயரால் தான் சமஸ்கிருதம் படிக்கிறார்களா? பார்ப்பனர்களே ‘வேத பாடசாலைக்கு’ முழுக்குப் போட்டு விட்டு ஜெர்மனியும், பிரஞ்சும் தானே படித்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்த நிலையிலும் பேச ஆளில்லாத மொழிக்கு பல கோடி ரூபாயைக் கொட்டி அழும் ஒன்றிய ஆட்சியின் ஊதுகுழல்கள், அரசுப் பள்ளி மாணவர்களின் விருப்ப மொழி தடுக்கப்படுகிறதே என்று கபட நாடகமாடுகிறார்கள். பள்ளி மாணவர் விருப்பத்தைத் தடுக்கலாமா என்று கேட்கும் ‘மனுவாதி’களுக்கு சில கேள்விகள்.
விரும்புகிற மதத்தை தேர்வு செய்ய ஏன் மறுக்கிறீர்கள்? மாட்டிறைச்சியை விரும்புகிறவர்கள் சாப்பிடுவதற்கு ஏன் கூச்சல் போடுகிறீர்கள் ? விரும்புகிற ஜாதியை தேர்வு செய்ய முடியாமல் பிறப்பின் அடிப்படையில் இந்து மதத்திற்கு ஏன் இரும்பு வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறீர்கள்? மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு விரும்புகிற கல்விக் கொள்கையை உருவாக்கும் போது அதை ஏன் தடுக்கத் துடிக்கிறீர்கள்! அவரவர் விருப்பம், உரிமைகளை காப்பாற்ற வந்தது போல இவர்கள் எழுதும் திரைக்கதை, வசனங்கள் இப்போது காலாவதியாகிவிட்டன. மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள் இதை சீண்டுவதற்குக் கூட எவரும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பெரியார் முழக்கம் 16122021 இதழ்