மோசடி ‘யூடியுபர்’ விடுதலை; விஜயேந்திரர் – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி காசியில் ஆர்.எஸ்.எஸ். குரலை ஒலிக்கிறார் மோடி
கடந்த வாரம் நிகழ்ந்த செய்திகள் குறித்து நமது பார்வை.
‘தினமலரின்’ திமிர்
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, ‘பெண்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்து பட்டம் பெறு வதற்கு பெரியார் பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்ததே காரணம்’ என்று பேசி இருந்தார். ‘தினமலர்’ பார்ப்பன ஏடு, “எல்லாத்துக்கும் ஈ.வெ,ரா. தான் காரணமா?” என்று அமைச்சர் மீது ஆவேசமாகப் பாய்ந்து, ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெரியாருக்கு முன்பே பாரதி பாடவில்லையா என்று கேட்கிறது. பாரதி பாடியிருக்கலாம், ஆனால், சமூகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு அவர் இயக்கம் நடத்தினாரா? ‘பேராசைக் காரனடா பார்ப்பான்’ என்றுகூட பாரதி பாடியிருக்கிறார். அதை ‘தினமலர்’ ஏற்கிறதா? அவ்வையார், காக்கைப் பாடினியார் என்ற புலவர்கள் பெரியாருக்கு முன்பே இருந்துள்ளனர் என்கிறது ‘தினமலர்’. அவர்களின் தொடர்ச்சி யாக ஏன் பெண் புலவர்கள் உருவாகாமல் போனார்கள்?
கணவன் இறந்தவுடன், மனைவியை கணவன் இறந்த நெருப்பிலேயே உயிருடன் போட்டுக் கொளுத்த வேண்டும் என்ற கொடூரத்தை அரங்கேற்றியது யார்? கணவன் இறந்த உடன் பெண்ணுக்கு மொட்டை அடித்து விதவையாக்கி அவர்களை மூலையிலே முக்காடு போட்டு உட்கார வைத்தது யார்? சிறு பெண் குழந்தைகளை திருமண வாழ்க்கையில் தள்ளி, பால்ய விவாகத்தை அரங்கேற்றியது யார்? இதற்கு பிரிட்டிஷ் ஆட்சியில் தடைச் சட்டம் வந்தபோது, ‘அய்யோ, அய்யோ’ மதத்தில் கை வைக்கிறார்களே என்று மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டது யார்? கோயில்களில் பெண்களை ‘பொட்டுக் கட்ட’ வைத்து அவர்களை புரோகிதப் பார்ப்பனர்களின், கோயில் தர்மகர்த்hக்களின் ‘உடல் பசிக்கு’ தீனியாக்கியது யார்? தடைச் சட்டம் வந்தபோது எதிர்த்துப் பேசிய ‘சத்தியமூர்த்தி’ என்ற ‘மனிதாபிமானமற்ற’ மனிதன் யார்? பெண்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுசாஸ்திரத்தை ஆதரித்து ஜோதிர் லதா கிரிஜாவைப் பிடித்து இப்போதும் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பது யார்? இதே ‘தினமலர்’ தானே! இப்படி நீண்ட பட்டியலிடலாம்.
இத்தனைக் கொடுமைகளையும் எதிர்த்துப் பெரியார் இயக்கமும் திராவிடர் இயக்கமும் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் தமிழ்நாட்டுப் பெண்களின் கல்வி வளர்ச்சி. ‘தினமலர்’ திமிர் பிடித்து ‘பூணூலை’ உருவிக் கொண்டு ஆட வேண்டாம். குடும்ப சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று இந்தியாவிலேயே முதன்முறையாக சட்டம் கொண்டு வந்தது – கலைஞர் ஆட்சி தான். அதற்குப் பிறகு தான் நாடாளுமன்றத்திலேயே சட்டம் வந்தது. ‘தினமலர்’ புரிந்து கொள்ளட்டும்.
கவர்னரிடம் காவடி தூக்கும் அண்ணாமலை
தமிழக ஆளுநரிடம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அவரது பரிவாரங்களோடு சென்று புகார் மனு தந்திருக்கிறார். ‘மாரிதாஸ்’ போன்ற ‘யூடியுபர்களை’ தமிழ்நாடு அரசு பழி வாங்கி வருவதாக அதில் குற்றம்சாட்டி இருந்தனர். தமிழ்நாட்டில் இராணுவத் தளபதி உள்ளிட்ட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி உயிரிழந்ததற்குக் காரணம், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் காஷ்மீர் தீவிரவாதிகள் ஊடுருவியதால் தான் என்று திமிரோடு எழுதியிருந்தார் அந்த ஆசாமி.
‘நியூஸ் 18’ தொலைக்காட்சி முதன்மைச் செய்தி யாளராக இருந்த கு. குணசேகரன், செய்தியாளர் ஜீவசகாப்தன் போன்றவர்கள், பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தொலைக் காட்சியை இந்து மதத்துக்கும், மோடி ஆட்சிக்கும் எதிராகப் பயன்படுத்துவதோடு, ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி, மோடிக்கு எதிராகவும், இந்துமத துவேஷத்துடனும் செயல்படுகிறது என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ‘நியூஸ் 18’ நிர்வாகமே 100 கோடி இழப்பீடு கேட்டு மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. ‘நியூஸ் 18’ இணையதள செய்தி ஆசிரியர், தனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் ஒரு கடிதத்தை மாரிதாஸ் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அது மோசடிக் கடிதம். அப்படி ஒரு கடிதத்தை எழுதவே இல்லை என்று ‘நியூஸ் 18’ இணையதள ஆசிரியர் மோசடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, தொடை நடுங்கி வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வில்லை. இப்போது ஆட்சி மாற்றம் வந்த பிறகு, இராணுவத் தளபதி உயிரிழந்தது தொடர்பாக வெளியிட்ட பதிவின் கீழ் தமிழக அரசு காவல்துறை வழக்கு பதிவு செய்து, மாரிதாசை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது அண்ணாமலையும் அவரது ஆட்களும் ஆளுநரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இரண்டே நாளில் மதுரை உயர்நீதி மன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அனைத்து வழக்குகளையும் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தபோது பா.ஜ.க. நடத்திய நிகழ்ச்சியில் இந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பங்கேற்றதை உரிய ஆதாரத்துடன் முகநூலில் ‘நெட்டிசன்கள்’ வெளியிட்டுள்ளார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், இறை வாழ்த்தும் ஒன்று தான் என்றும், சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டியது ஒன்றும் கட்டாய மில்லை என்றும் இதே நீதிபதி தீர்ப்பளித்தார். இதுபோன்ற துறவிகள் உட்கார்ந்த நிலையிலேயே தியானத்தில் கடவுளை பிரார்த்திப்பவர்கள் என்றும் தீர்ப்பில் அவர் கூறியது நினைவுகூரத் தக்கது.
உ.பி. தேர்தலும் காசி விசுவநாதன் கோயிலும்
உ.பி. சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், தனது வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட காசி விசுவ நாதன் கோயிலுக்கும் கங்கை நதிக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்தும் வகையில் 339 கோடி செலவில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத் துள்ளார் மோடி. வேத புரோகிதர்கள் மணிக் கணக்கில் வேத மந்திரங்கள் ஓத அவர்களுக்கு எதிரே பயபக்தியுடன் அமர்ந்திருக்கும் காட்சிகளை நீண்ட நேரம் தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளி பரப்பின. கங்கையில் புனித ‘நீராடி’ விட்டு சிவலிங்க அபிஷேகம், ‘தீப ஆராதனை’களை நடத்தி விட்டு கோயில்களைக் கட்டிய தொழிலாளர்கள், பொறி யாளர்கள், கைவினைஞர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அவர்களை கவுரவித்தாராம் மோடி. ஆனால், இந்தத் தொழிலாளர்களுக்கு தொடர்பே இல்லாத சமஸ்கிருத வேத மந்திரங்கள் தான் கோயிலுக்குள் கேட்க முடியும். பார்ப்பன புரோகிதர் களிடமே பிரதமர் மண்டியிட்டு வணங்குவார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரைப் போல இஸ்லாமிய வெறுப்பைக் கக்கியிருக் கிறார். அவுரங்க சீப், காசி கோயிலை இடித்தார் என்றும், இஸ்லாமியர்கள் இந்து கோயில்களை தகர்த்தனர் என்றும் பேசியிருக்கிறார். மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்தது. ஜனநாயக நாட்டில், பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி, இடித்தது யார்? இடித்தவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வைத்தது யார்? இவர்களுக்கு ‘தியாகப் பட்டம்’ சூட்டி மகிழும் மோடிக் கூட்டத்துக்கு அவுரங்க சீப்பை குறை கூற என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
பெண்களை இழிவுபடுத்தும் சி.பி.எஸ்.இ.
சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகள்.
அந்த சர்ச்சைக்குரிய கேள்வி ஒரு பெரிய சொற் றொடராக இடம்பெற்றிருந்தது. அந்த வாக்கியத்தில், மனைவிகள் தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள், அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்க மின்மைக்கு முக்கியக் காரணம், மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. பெண் விடுதலை குழந்தைகளிடையே ஒழுக்கமின்மைக்கு வழி வகுத்தது, சமூக பிரச்சினைகளுக்கு பெண்களின் விடுதலை தான் காரணம், மேலும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன. சோனியா உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஆங்கில பாடத் திட்டம் தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்திருக்கிறது.
– தொகுப்பு ‘இரா’
பெரியார் முழக்கம் 16122021 இதழ்