சுயமரியாதையும்-பொதுவுடைமையும்
காரல்மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் ஆண்டு இது. மார்க்சியம் குறித்த விவாதங்கள், மறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே வரலாற்று ரீதியான உறவுகள் உண்டு. பெரியார் சோவியத் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே சமதர்ம கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததை அவரது பேச்சு, எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பெரியார் அய்ரோப்பிய சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பியவுடன், பொதுவுடைமை – சுயமரியாதைக் கொள்கை களில் உறுதியுடன் இருந்த தோழர் சிங்காரவேலர் தயாரித்து, பிறகு விவாதங்கள், திருத்தங்கள் செய்யப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை 1933இல் பெரியார் வெளியிட்டதோடு சுயமரியாதை இயக்கத்தில் ‘சமதர்மப்’ பிரிவு ஒன்றைத் தொடங்கி நாடு முழுதும் சுயமரியாதை சமதர்ம சங்கங்களை தோற்றுவித்தார். ‘சமதர்மத் திட்டத்தை’ பெரியார் கையில் எடுத்த நிலையில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி சுயமரியாதை இயக்கத்தின் மீது கடும் ஒடுக்குமுறைகளைத் தொடங்கிவிட்டது. சமதர்மத் திட்டத்தை ஒத்தி வைத்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க பெரியார் முடிவெடுத்தபோது...
