தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது.

பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக இந்திய உள்துறை அமைச்சர் கூற வேண்டிய தேவை என்ன?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றால் எல்லாவற்றிற்கும் பதிலாக இருப்பது ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இப்படி அரச பயங்கரவாதம் நடத்தப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை.  இந்த ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும், குறி பார்த்துத் துப்பாக்கியால் சுட்ட சீருடை அணியாத காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. நிகழ்வில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குமரி : மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 26.05.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா தலைமையில் முருகன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாநிலத் துணைத் தலைவர்) முன்னிலை யில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் பால் பிரபாகரன் (கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர்) கண்டன உரையாக நடுவண் பாரதிய சனதா கட்சியின் நான்காண்டில் தமிழகம் நீட், மீத்தேன், நியூட்ரினோ, குமரித் துறைமுகம், ஸ்டெர்லைட் போன்றத் திட்டங்களாலும், இடஒதுக்கீட்டை ஒழிப்பதாக ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கை களையும் தமிழர்மேல் திணித்து தமிழர்களை  பார்ப்பனர்களின் அடிமையாக செயல்படுத்தத் துடிக்கிறது என்று விளக்கிப் பேசிக் கண்டித்தார். நீதிஅரசர் கண்டன முழக்கங்கள் எழுப்பினார். கூட்டத்தில் தோழர்கள் தமிழ் மதி, சூசையப்பா, மஞ்சுகுமார், இரமேஸ் பாபு, போஸ், சுந்தரமணி, இராதா கிருஷ்ணன், ஜான்மதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சென்னை : சென்னை அண்ணா சாலையில் 22.05.2018 மாலை 6.30 மணிக்கு இரா.உமாபதி (தென் சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட தோழர் கள் காவல்துறையால் குண்டுகட்டாக இழுத்து செல்லப்பட்டனர். தோழர்கள் அனைவரும் புதுப்பேட்டை சமூகநலக் கூடத்தில் அடைக்கப்பட்டு  இரவு 9 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

பள்ளிபாளையம் : மே 23ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப் பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட பொருளாளர் முத்துப் பாண்டி தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மாவட்ட தலைவர் சாமிநாதன்,  மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல், தமிழக தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆதவன், தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாவட்ட செய லாளர் செந்தமிழன், சி.பி.அய்.எம்.எல் அமைப்பின் நகர செயலாளர் மாரியப்பன்,  புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் மாணிக்கம், புதிய ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை யாற்றினர்.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத் தில் நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் உள்ளிட்ட அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 31052018 இதழ்

You may also like...