தமிழ்நாட்டு அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு -திவிக கடும் கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு திவிக கண்டனம்:
தங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலை வேண்டாமென்று நூறு நாட்களாக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நூறாவது நாளாக இன்று முற்றுகைப் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்திருந்தார்கள். தமிழக அரசு துப்பாக்கிச் சூட்டில் 9 உயிர்களைப் பலி கொண்டு விட்டது. நூறு நாட்கள் போராட்டத்தின்போது மக்களை சந்தித்துப் பேசாத இந்த அரசு, மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்று 9 உயிர்களைப் பலி வாங்கியதற்குப் பிறகு நியாயம் பேசத் தொடங்கியிருக்கிறது. வன்முறை பிரச்னைக்கு தீர்வாகாது என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது தமிழக அரசின் ஆதரவோடு இங்கே வன்முறைகள் கண்மூடித் தனமாக கட்டவிழ்க்கப்பட்டன. அதற்கு அரசும் துணை போனது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.
இப்போது நடப்பது ஒன்றும் அரசியல் போராட்டம் அல்ல. தூத்துக்குடியில் வாழ்கின்ற மக்கள் நடத்தும் போராட்டம். 20,000 பேர் பேரணியாக சென்றார்கள் என்று அரசு கூறுகிறது. இதிலிருந்தே இந்தத் திட்டத்துக்கு மக்கள் எவ்வளவு எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் என்பது புரியும். மாவட்ட ஆட்சித் தலைவரை, போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சந்திக்கச் செய்து மனு கொடுத்திருக்க செய்திருக்கலாம். அல்லது அவர்களிடம் சென்று அரசு சமாதானம் செய்திருக்கலாம் அல்லது பிரதிநிதிகளுடன் பேசி இருக்கலாம். இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 100 நாள் போராட்டத்துக்குப் பிறகு, அதுவும் மக்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டு நடத்திய முற்றுகைப் போராட்டத்தில், தடியடிகளை நடத்தி, துப்பாக்கிச் சூடுகளை செய்துவிட்டு, இது தவிர்க்க முடியாது என்று நீலிக் கண்ணீர் வடிப்பதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் கம்பனியின் ஏவல் ஆளாக மாறி, மக்கள் உயிரை துப்பாக்கியால் பலி வாங்குவது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டுப் போராட்டங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு நீண்டகாலம் ஆகிவிட்டது. *ஜனநாயகத்துக்கான உரிமைகளைத் துப்பாக்கிகளால் அடக்கி ஒடுக்கிவிட முடியும் என்று தமிழ்நாடு அரசு கருதினால் தமிழ்நாடு அரசை மக்கள் நிச்சயமாகத் தூக்கி எறிவார்கள்*. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த துப்பாக்கிச் சூட்டை மிக அழுத்தமாக, வன்மையாகக் கண்டிப்பதோடு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டுமென்று வற்புறுத்துகிறது.
விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்.