முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது
முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திட சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை காவல்துறை கைது செய்தது. மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தஇந்த நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கழகம், ம.தி.மு.க., தமிழர் விடியல் கட்சி, எஸ்.டி.பி.அய்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், த.பெ.தி.க., தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. அனைவரும் கைது செய்யப்பட்டனர். இரவு விடுதலையாகும் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, மாண்டுபோன தமிழர்களுக்கும் விடுதலைப் புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.
பேராவூரணியில் : பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழக சித.திருவேங்கடம், சிபிஎம் பொறுப்பாளர்கள் கருப்பையா, வேலுச்சாமி சி.பி.ஐ. பொறுப்பாளர்கள் ராஜமாணிக்கம், சித்திரவேலு, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தி.வி.க. தா.கலைச்செல்வன், மதிமுக குமார், கோபி, அறநெறி மக்கள் கட்சி த.ஜேம்ஸ், தமிழின உணர்வாளர்கள் பூக்கொல்லை ரமேசு, நீலகண்டன், தமிழ்க் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு காரணமான இந்திய, இலங்கை அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
பெரியார் முழக்கம் 24052018 இதழ்