நீரவ் மோடி-அம்பானி-அதானி கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’
மோடியின் நண்பரும், மோசடிப் பேர் வழியும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி, சிங்கப்பூர் பாஸ்போட் மூலம் இலண்டனில் பதுங்கியுள்ளார் என்று அமுலாக்கப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன. சமீபத்தில் அவ்வாறு அடுத்தடுத்து உலுக்கிய ஊழல்கள் நீரவ் மோடியின் ரூ 11,700 கோடி வங்கி மோசடியும் ரோடோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் 800 கோடி ஊழலும் ஆகும்.இது வெளிப்பட்ட ஊழல்தான் இன்னும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ரோடோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, நீரவ் மோடிக்கு சளைத்தவர் அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.கோத்தாரி அடித்த கொள்ளை ரூ.800 கோடியல்ல; ரூ.3695 கோடி என்பதும் அம்பலமாகி இருக்கிறது.இந்த இரு ‘கனவான்களும்’ வங்கிகளை எவ்வாறு “ஆட்டையை” போட்டார்கள் என்பது குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் வெளிவராத செய்தி ஒன்று உண்டு. வங்கிகளின் பணத்தை அதாவது மக்களின் பணத்தை “ஆட்டையை” போட்ட இவர்களின் குடும்பங்களுக்கும் அம்பானி மற்றும் அதானி குடும்பங்களுக்கும் உள்ள “உறவு” குறித்து பல ஊடகங்கள் கண்களை மூடிக்கொண்டன.
நீரவ் மோடி- அம்பானி உறவு : முதலில் நீரவ் மோடிக்கும் அம்பானிக்கும் என்ன உறவு என்பதை காண்போம். நீரவ் மோடியின் முதன்மை நிதி அதிகாரி விபுல் அம்பானி. இவர் அனில் மற்றும் முகேஷ் அம்பானிக்களின் சிற்றப்பாவான நாது பாய் அம்பானியின் மகன்; அதாவது அனில் மற்றும் முகேஷ் அம்பானிகளின் ஒன்றுவிட்ட சகோதரர். இவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபுல் அம்பானி தனது பணியை அம்பானிகளின் ரிலையன்ஸில்தான் தொடங் கினார். நீண்டகாலம் அங்கு பணியாற்றிய பிறகு நீரவ் மோடியின் நிறுவனங்களுக்கு முதன்மை நிதி அதிகாரியாக செயல்பட்டார். தற்பொழுது சிபிஐ விபுல் அம்பானியை கைது செய்துள்ளது.நீரவ் மோடியின் இளைய சகோதரர் நீஷல் மோடி. இவரது மனைவி இஷாட்டா சல்கோகர். இவர் அம்பானிகளின் சொந்த சகோதரி மகள். அதாவது நீஷல் மோடி அம்பானிகளுக்கு மருமகன் உறவு! இவர்களின் திருமணத்தை அம்பானிக்கள்தான் நடத்திவைத்தனர். செலவு மிக அதிகம் இல்லை ஜென்டில்மேன்! சில நூறு கோடிகள்தான்! நீஷல் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.ஒரு பக்கத்தில் அம்பானிகளின் சகோதரர் விபுல் அம்பானி நீரவ்மோடிக்கு நிதி அதிகாரி! மறுபுறத்தில் அம்பானி நீஷல் மோடிக்கு மாமனார் முறை! நீரவ் மோடிக்கும் அம்பானிக்களுக்கும் எத்தகைய “உறவுகள்” இருந்தன என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்!
விக்ரம் கோத்தாரி- ஜதின் மேத்தா- அதானி உறவு : அடுத்து ரூ800 கோடி “ஆட்டையை” போட்ட விக்ரம் கோத்தாரிக்கும் நரேந்திர மோடியின் நிழல் மனிதரான அதானிக்கும் என்ன உறவு என்பதை காண்போம்.விக்ரம் கோத்தாரியின் மகள் நர்மதா! இந்த நர்மதாவின் கணவர் பிரணவ் அதானி! இவர் கவுதம் அதானியின் சகோதரர் மகன். அதாவது ரூ.800 கோடி “ஆட்டையை” போட்ட விக்ரம் கோத்தாரியும் அதானியும் “சம்பந்தி”களாக “பரிணமிக்கின்றனர்.”அதோடு இந்த உறவுச் சங்கிலி முடியவில்லை ஜென்டில்மேன்! அதானிக்கு கிருபா அதானி என்றொரு சகோதரி மகள்! இவரது கணவர் சூரஜ் மேத்தா! சூரஜ் மேத்தாவின் தந்தை ஜத்தின் மேத்தா! அதாவது அதானியின் இன்னொரு சம்பந்தி! ஜத்தின் மேத்தாவின் சாதனை என்ன? “வராக் கடன்” எனும் பெயரில் வங்கிகளிடமிருந்து 7000 கோடியை சுருட்டிக்கொண்டார். ஆக, அதானியின் ஒரு சம்பந்தி 800 கோடி “ஆட்டையை” போட இன்னொரு சம்பந்தி 7000 கோடி “ஆட்டையை” போட இதைவிட மோடியின் நண்பர் என்பதற்கு அதானிக்கு வேறு ஏதாவது “தகுதி” வேண்டுமா? இந்தியாவே இந்த மோசடிகள் குறித்து அலறிக்கொண்டிருக்க பிரதமர் “மவுன விரதம்” இருப்பது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது வள்ளுவன் வாக்கு. ஆனால் மோசடியில் ஈடுபடும் குடும்பங்கள் மோசடி செய்பவர்களுடன்தான் “திருமண உறவுகளை” உருவாக்குகின்றனர். இந்த மோசடிகள் ஏதோ ஒரு சில வங்கி ஊழியர்கள் செய்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். வங்கி நிர்வாகங்கள் மீதும் தணிக்கையாளர்கள் மீதும் அருண்ஜெட்லி கோபத்தைக் கொட்டினார். அல்லது அவ்வாறு தோற்றத்தை உருவாக்குகிறார். வங்கிகளில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த மோசடிகளுக்கு அடிப்படை காரணம் காங்கிரஸ் அரசாங்கங்கள் தொடங்கிவைத்து தற்பொழுது மோடி அரசாங்கம் வெறித்தனமாக அமலாக்கிவரும் நவீன தாராளமய கொள்கைகள்தான்! இந்த மோசமான பொருளாதார கொள்கைகள்தான் தகுந்த புறச்சூழலை உருவாக்குகின்றன. இத்தகைய கொள்கைகள் தொடரும்வரை மோசடிகளும் தொடரவே செய்யும்.
பெரியார் முழக்கம் 24052018 இதழ்