சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

ஒரு பேராபத்தை தமிழகம் எதிர்நோக்கியிருக் கிறது. வரலாற்றிலே இவ்வளவு பெரிய பேராபத்தை தமிழகம் எப்போதாவது சந்தித்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாத் தளங் களிலும் தமிழகம், தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதுகுறித்துதான் இந்த மண்டல மாநாட்டிலே அறிவார்ந்த தலைவர்கள் பேசவிருக்கிறார்கள். அதிலே, தமிழகத்தின் நிலம் எப்படிப் பாழ்படுகிறது, வாழ முடியாத ஒரு பகுதியாக தமிழ்நாடு எப்படி மாற்றப்படுகிறது, இதனால் என்ன ஆகும் என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

ஒரு மனித இனத்திற்கு வாழ்வதற்கு அடிப்படை யானது மண். மண்தான் மனித வாழ்வை வடிவமைக் கிறது. ஒரு மனிதனுடைய தோற்றத்தை, பண் பாட்டை, அவனுடைய வாழ்வின் போக்கை  மண்தான்  தீர்மானிக்கிறது. மலைப் பகுதியில் வாழக் கூடிய மனிதனுக்கும், சமவெளியில் வாழக்கூடிய மனிதனுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. மண்ணின் வளம் அல்லது வறட்சியைப் பொறுத்து மனித வாழ்க்கை அமைகிறது. பொருளாதாரம் அதைப் பொறுத்துதான் அமைகிறது. அந்தப் பொருளாதாரம்தான் பண்பாட்டைத் தீர்மானி க்கிறது. ஒரு மண்ணில் வாழும் இனம் நிலைத்து நிற்கும் வரை, தன்னுடைய பண்பாடு, தன்னுடைய மொழியோடு அது சிறந்து வாழும். அந்த மண்ணை விட்டு அந்த இனம் மறைந்துவிட்டால் அதன் பண்பாடு தேய்ந்து மறையும். மொழி காணாமல் போகும். தன்னுடைய அடையாளத்தை இழக்கும். இதுதான் உலக வரலாற்றிலே நாம் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஆற்றுப் படுகையிலேதான் பேரரசுகள் எழுந்தன. இங்கும் கூட காவிரி ஆற்றங்கரையிலே சோழப் பேரரசு, வைகை ஆற்றங்கரையிலே பாண்டியப் பேரரசு, பாலாற்றங்கரையிலே, காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பல்லவப் பேரரசு என்று பேரரசுகள் எழுந்தன. ஏனென்றால் ஆறுகள் அங்கே வளத்தை அளித்தன. அதனால் அங்கே இதுபோன்ற பேரரசுகள் எழுந்தன. இதெல்லாம் கடந்தகால வரலாறு. இன்றைய நிலை என்பது கவலை தரக்கூடியதாய் உள்ளது. இந்த மண் என்பது முற்றிலுமாக சிதைக்கப்பட்டு, இந்த மக்கள் அகதிகளாக வெளியேறக்கூடிய ஒரு சூழல் எழுந்திருக்கிறது. 7.5 கோடி தமிழர்கள் வாழக்கூடிய, தமிழர்களின் தாயகம் சிதைந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் இருந்த ஏரிகள் குளங்கள் இன்று காணாமல் போயிருக்கின்றன. முப்பத்தொன்பதா யிரம் ஏரிகளும், குளங்களும் கொண்டிருந்த நிலப்பரப்பு நம்முடையது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 5000 ஏரிகள் இருந்தன. ஆனால் இன்று 2,600 ஏரிகள்தான் இருக்கின்றன.

தமிழர்கள் உலகின் மூத்த இனம் என்ற வரலாற்றுக்கு இங்கே சான்றாக இருப்பவை இங்குள்ள மலைகள். உலகம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன. உலகின் மிக மூத்த மலை என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் இருப்பவை. இந்த மலைகள் எல்லாம் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு 10,000 கன மீட்டர் வரை மலைகள் நொறுக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இது இல்லாமல் மணற்கொள்ளை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லாரிகள் மணலை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. கிராவல் மண் என்பது தமிழகத்தை விட்டு வெளி யேறிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் லாரிகள் கிராவல் மண்ணை எடுத்துச் செல்கின்றன.

வந்தேறிக் கொண்டிருக்கிற பன்னாட்டு பெரு முதலாளிகளின் தேவைக்காக அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. கடலூரிலிருந்து வேளாங்கண்ணி வரை கடற்கரை ஓரமாக 12 அனல் மின் நிலையங்கள் இப்போது நிறுவப்பட இருக்கின்றன. நாகூருக்கு அருகிலே உள்ள துறைமுகம் நிலக்கரி இறக்குமதி செய்து மக்கள் வாழ முடியாத பகுதியாக அப்பகுதியை ஆக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று துறைமுகங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. மொத்தத்தில் பன்னாட்டு முதலாளி களின் தேவைக்காக கரிக்காடாக அந்தப் பகுதி மாற இருக்கிறது. இறக்குமதி செய்யப்படுவது கூட இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். காவிரிப் படுகையிலே 1600 அடி வரையில் நிலக்கரி இருக்கிறது. இதை 100 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். இதை எடுப்பதற்கு முன்பாக 25 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகள் வரை அந்த நிலக்கரி இடுக்கிலே இருக்கக்கூடிய மீத்தேன் என்ற எரிவாயுவை எடுக்கலாம். ஆக தஞ்சை, திருவாரூர், நாகை மூன்று மாவட்டங்களும் கரிக்காடக மாறவிருக்கிறது. அதுவும் பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்காகத் தான்.

ஷேல் ஆயில்

ஷேல் ஆயில் என்று சொல்லக்கூடிய பாறை எண்ணெய் 3.25 கிலோமீட்டர் ஆழத்தில் காவிரிப் படுகையில் இருக்கிறது. இதுவும் மீத்தேன்தான். 500 அடிக்கு கீழ் இருக்கக்கூடிய நிலக்கரி இடுக்கில் இருக்கக்கூடிய எரிவாயுவும் மீத்தேன்தான்.  இந்த மீத்தேனை எடுக்க ஒரு அபாயகரமான தொழில் நுட்பம் பின்பற்றப்படுகிறது. நீரியல் விரிசல் (ழலனசயரடiஉ கசயஉவரசiபே) என்ற முறையில் 634 ரசாயனங்களைப் பயன்படுத்தி, அந்த மண்ணை நச்சுக் காடாக்கி கீழே இருக்கக்கூடிய நிலக்கரி ஆனாலும் சரி, அதற்குக் கீழே இருக்கக் கூடிய ஷேல் எரிவாயு என்ற சொல்லக்கூடிய களிப்பாறையாக இருந்தாலும் சரி அதை நொறுக்கி, உறிஞ்சி எடுப்பார்கள். மொத்தத்தில் 30 ஆண்டு களுக்குள் காவிரிப் படுகை மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறும். பன்னாட்டு முதலாளிகள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்தப் பகுதிக்கு அவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் வந்தேற இருக்கிறார்கள். பல்வேறு தொழில்களை தொடங்க இருக்கிறார்கள். வயல்களை எல்லாம் கைப்பற்றி தொழிலகங்களாக மாற்ற இருக்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி  ஒரு தொழிற்சாலை தொடங்க அதன் முதலாளி நிலத்தைக் காட்டிவிட்டால் போதும், அரசாங்கமே பிடுங்கிக் கொடுக்கும். என்னுடைய வயலை நான் தர மாட்டேன் என்று விவசாயி சொல்ல உரிமை கிடையாது. இதற்கேற்ப ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது கூடங்குளத்தில் 6 அணு உலைகள் தொடங்கவிருக்கிறார்கள். பல மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்டது அது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா என அங்கெல்லாம் விரட்டப்பட்ட அணு உலை தான், கடைசியில் தமிழ்நாட்டிற்கு, கூடங்குளத்திற்கு வந்துள்ளது. முதலில் ஒரு அணு உலை என்றார்கள். பிறகு இரண்டு என்றார்கள். இன்றைக்கு 6 அணு உலைகள் தொடங்கப்பட இருக்கின்றன. எல்லா வடிவத்திலும் தமிழகம் நெருக்கப்படுகிறது.

அதேபோல தமிழ்நாட்டின்  நீராதாரங்கள் குலைந்து போய் விட்டன. 239 நீர் வட்டங்கள் அபாயத்தில் இருக்கின்றன.  உப்பாகிப் போனவை என்று அரசாங்கம் அறிவிப்பது 11. தண்ணீர் இதற்கு மேல் கிடையாது என்று கறுப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது 10. பாதுகாப்பானவை என்று தமிழகத்தில் சொல்லக்கூடியது 110 வட்டங்கள் மட்டும்தான். இப்படி அதலபாதாளத்திற்கு நிலத்தடி நீர் போய்க் கொண்டிருக்கிற நிலையில், பன்னாட்டு நிறுவனங்களும், வட இந்திய நிறுவனங்களும் நிலத்தடி நீரை மேலும் சூறையாடிக் கொண்டிருக் கின்றன. திட்டமிட்டு ஒரு நீர் முற்றுகையைத் தமிழகத்தின் மீது சுமத்தியிருக்கிறது இந்திய அரசு.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே ஆரியத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. அறிவு என்றால் அது வேதத்தில் இருந்து பிறந்தது, மொழி என்றால் அது சமசுகிருதத்தில் இருந்து பிறந்தது, இனம் என்ற ஒன்று இருக்குமானால் அது ஆரியத்திலிருந்து பிறந்தது, அவைதான் இங்கு இருக்கலாம். இதற்கு மாறுபட்ட ஒன்று இங்கு இருக்குமானால் எங்களால் அதை சகித்துக்கொள்ள முடியாது என்று ஆரியம் பேசுகிறது. பார்ப்பனிய மேலாண்மையை, சமசுகிருத மேலாண்மையை, வேத மேலாண்மையை இந்த மண்ணில் மீண்டும் நிலைநிறுத்திவிட வேண்டு மென்று நீண்டகாலமாக ஆரியம் போராடி வருகிறது. வருணாசிரம ராஜ்யத்தைத்தான் அவர்கள் இந்து ராஷ்ட்ரியம் என்று சொன்னார்கள். இப்போது ராமராஜ்யம் என்று சொல்கிறார்கள். அந்த இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறது இந்திய அரசு. அதில் காங்கிரசை விட பாஜக தீவிரமாக இருக்கிறது.

தமிழ்நாட்டைப் போல மேலும், சில மாநிலங்கள் மீதும் இவர்களுக்கு தீராப்பகை இருக்கிறது. அந்தப் பகை காஷ்மீர் மீது இருக்கிறது. மரபணு ரீதியாக அவர்கள் ஆரியர்களாக இருந்தாலும் இப்போது அவர்கள் இந்துத்துவத்தை எதிர்க்கிறார்கள். அதனால் காஷ்மீரை ஒடுக்குகிறார்கள். அதேபோல வட கிழக்கு மாநிலங்கள் மீதும் இவர்களுக்கு தீராப்பகை இருக்கிறது. அவர்கள் மொழியும், பண்பாடும் ஆரியத்தோடு தொடர்பில்லாதது. அதனால் ஒடுக்குகிறார்கள். தெற்கில் ஆரியம் கலந்ததால் தமிழ் தெலுங்கானது, கன்னடமானது, மலையாளமானது. அந்த ஆரியத்தைப் பிடுங்கி வேரோடு எறிந்துவிட்டு மொழித் தூய்மை பேணக்கூடியதாக இங்கே தமிழ் இருக்கிறது. அதனால் இந்தியா தமிழை மன்னிக்கத் தயாராக இல்லை.

1980 முதல் இங்கே எண்ணெய் எடுக்கிறார்கள். அதனால் நிலத்தடி நீர் மாசடைந்திருக்கிறது. நிலம் வாழ முடியாத பகுதியாகி இருக்கிறது. ஓ.என்.ஜி.சி செய்த வேலைகளால் பல பகுதிகளில் மக்கள் தீர்க்கவே முடியாத நோய் கொண்ட மக்களாக மாறியிருக்கிறார்கள். பல குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகியிருக்கின்றனர். முன்னரே கச்சா எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்த திட்டம் இல்லாமல் மீத்தேன் திட்டத்தை 2010ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்கள். கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற தனியார் நிறுவனத்துக்கு 691 கிலோமீட்டர் சதுர பரப்பளவில் தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கினார்கள். ஆனால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதைத் தடை செய்து ஒரு வல்லுநர் குழு அமைத்தார். அந்த வல்லுநர் குழு தனது அறிக்கையில், ‘மீத்தேன் எடுத்தால் அந்தப் பகுதியின் அமைப்பே மாறிவிடும், பசுமை அழிந்துவிடும், உழவுச்சூழல் கெடும். நிலத்தட்டுகள் நகரும். பூகம்பம் ஏற்படும். இதைக் கைவிடுவது நல்லது அல்லது மறுபார்வை செய்ய வேண்டும்’ என்று கூறியது.

அதன் அடிப்படையில் 8.10.2015 தேதியிட்ட தமிழக அரசாணை மீத்தேன் திட்டத்தை தடுத்தது. இதுபோன்ற திட்டங்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதாக இருந்தால் முதலில் தமிழக அரசோடு கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் இந்த ஆணையில் கூறப்பட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு அந்த அரசாணையை டெல்லிகாரன் மதிக்கவில்லை என்பது மட்டும் அல்ல. தமிழக அரசே மதிக்க வில்லை. இதன் அபாயங்களையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

(தொடரும்)

செய்தி தொகுப்பு : பிரகாஷ்

பெரியார் முழக்கம் 24052018 இதழ்

You may also like...