பெரியார் பங்கேற்ற திரைப்பட விழா
1972இல் ‘சூரிய காந்தி’ என்னும் படத்தின் நூறாவது நாள் விழா நிகழ்ச்சியிலே படத்தில் நடித்த கலைஞர்களுக்குப் பரிசு வழங்குவதற்கு பெரியாரை அழைத்தார்கள் – படத் தயாரிப்பாளரும், டைரக்டரும்.
வழக்கம்போல பெரியார் நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே சென்றார். பெரியார் எப்போதும் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு வருபவர்களில் இருந்து சற்று மாறுபட்ட கூட்டம் அது. சினிமாக் கலைஞர்களைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம் பாதியும், சினிமா விழாவில் பெரியார் என்ன பேசப் போகிறார் என்பதைக் கேட்க வந்த கூட்டம் பாதியுமாக அரங்கு நிறைந்திருந்தது.
தமிழக முதல்வர் கலைஞர் விழாவிற்குத் தலைமை வகித்தார். வரவேற்புரை நிகழ்த்தியவர் பேசும்போது, ‘ஒளரங்கசீப்பைப்போல கலையை வெறுக்கும் பெரியார் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
பெரியார் பேசும்போது, “நான் சினிமாவுக்கோ கலைகளுக்கோ எதிரியல்ல. சினிமா மக்களுக்கு அறிவு வர, தெளிவு பெறப் பயன்படவில்லையே என வருந்துகிறவன் நான். சினிமா உலகிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. போல் அறிவுப் பிரச்சாரம் செய்தவர்கள் யாருமில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் ஒரு முறை கேட்டேன், ‘கொள்கைக்காக நீங்கள் நடிக்கக் கூடாதா!’ என்று. அவர், ‘இந்தத் தொழிலில் கொள்கை எல்லாம் பார்க்க முடியாது; எல்லாம் ‘ருபீஸ் அனாஸ் பைஸ்’தான் என்றார். சினிமாத் தொழில் என்பது வெறும் பிழைப்புக்காகவே ஆகி விட்டது.
நான் இரஷ்யாவில் ஒரு சினிமா பார்த்தேன். அந்தச் சினிமா மதக் கருத்துகளுக்கு விரோதமாகக் காட்டப்பட்டது. ஒருவன் கொலையாளியாகிறான்; அவனை நீதிபதி தண்டிக்கிறார்; அவன் சிறையிலிருந்து தப்பித்து ஓடுகிறான். பிறகு, பாதிரியாகிறான். அவனுக்கும் சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகிறது. ஒருமுறை நீதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். நீதிபதி அவவனை உற்றுப் பார்த்து, ‘என்னால் தண்டிக்கப்பட்ட கைதிதானே இவன்!’ என்று கேட்கிறார். அதற்குள் நீதிபதியின் மனைவி, ‘பாதிரியின் முன் மண்டியிட்டு வணக்கம் செலுத்தும்படி’க் கூறுகிறார். நீதிபதியும் வணங்குகிறார்.
இதை எவ்வளவு அழகாக எடுத்திருக்கிறார்கள். இது மாதிரி நம்மவர்களும் படம் எடுக்க வேண்டாமா?” எனக் கேட்டார்.
‘உண்மை’ செப்.17, 1974 இதழில் விடுதலை மேலாளர் என்.எஸ்.சம்பந்தம் எழுதிய பதிவு.
இந்த விழாவில் ‘சூர்யகாந்தி’ படத்தில் நடித்த ஜெயலலிதா, நிகழ்வின் இறுதியில் பெரியாரோடு படம் எடுத்துக் கொண்டார். அதுதான் பெரியாருடன் ஜெயலலிதா எடுத்த ஒரே படம். விழா நடந்த இடம் ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம்
நிமிர்வோம் ஏப்ரல் 2018 இதழ்