திருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா. சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்
நான் பிரசாரத்திற்குப் புறப்பட்டுப்போகும் வழியில் இங்குள்ள பிரசாரகர்களுக்கு ஏதோ சில திட்டங்களை வகுத்து விட்டுப் போகலா மென்றுதான் வந்தேன். இது ஒருவர் பட்டம் பெற்றதன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் ஒரு பாராட்டு விருந்துக் கூட்டம். அதிலும் சமீபத்தில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் என்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுத் தங்கள் பகுத்தறிவை உபயோகிக்கக்கூடிய எளிய அறிவுடையவர்களாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தோழர்கள் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் ஒரு நண்பரால் காண்பிக்கப்பட்ட “ஆனந்தவிகடன்” பிரதியை (7.2.37ந் தேதி) புரட்டிப் பார்த்ததில் அதில் சில விஷயங்கள் என் கண்களுக்குப் புலப்பட்டன. ஏதோ அவைகளைப் பற்றி சில வார்த்தைகள் கூறுகிறேன். “ஆனந்தவிகடன்” தனது தலையங்கக் குறிப்பில் 1920ம் வருஷத்தில் இம்மாகாணத்தில் எல்லா சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் சேர்ந்து சம்பளம் நாலுகோடி ரூபாய்; 1934-ம் வருஷத்தில் அதே சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளம் பத்தரைக்கோடி ரூபாயென்றும், குறிப்பிட்டிருப்பதோடு, இவ்வளவு சம்பள உயர்வுக்கும் காரணம் ஜஸ்டிஸ் மந்திரிகளின் நிர்வாகம் தான் என்றும்...