ராமநாதபுரம் ஜில்லாவில்
ஈ.வெ.ரா. பிரசங்கம்
தலைவர் அவர்களே! தோழர்களே!
இந்திய அரசியலில் புதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரப்போகிறது. அது சம்பந்தமாக இனியும் ஒன்றரை மாதத்தில் தேர்தல் நடக்கப்போகிறது. காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் போட்டி போடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். அதற்காக பொது ஜனங்களிடமிருந்து ஒரு அளவுக்கு பணமும் வசூலித்துக்கொண்டார்கள். பண ஆத்திரமும் பதவி ஆத்திரமும் அதிகார ஆத்திரமும் கொண்டவர்களாகப் புதிது புதிதாகத் தேடிப்பிடித்து தங்கள் கட்சியில் சேர்த்து எலக்ஷனுக்கு நிறுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து மற்ற ஆட்களின் தேர்தல் செலவுக்கு பணமும் வசூலித்து சேர்த்து வருகிறார்கள். இந்தப் பணங்களால் பார்ப்பனர்களை தேர்தலுக்கு நிறுத்தியும், காலிகளுக்கு கொடுத்து காங்கிரசுக்காரர்கள் அல்லாதவர்களுடைய தேர்தலுக்கு இடையூறு செய்தும் தொல்லை விளைவிக்கப் போகிறார்கள்.
நாம் வெறும் தர்ம நியாயம் பேசிக்கொண்டு வீணாய் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம். நமது நேரம் மிகவும் விலை உயர்ந்த நேரமாகும். ஏற்கனவே நாட்டில் காங்கிரஸ்காரர்களால் ஏராளமான விஷமப்பிரசாரம் நடந்தாய் விட்டது. தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்றும், சர்க்கார் அடிமைகள் என்றும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நல்ல வேளையாய் இப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்களால் நாட்டுக்கோ மக்களுக்கோ ஏற்பட்ட பலன் இன்னது என்றும் அவர்களுடைய திட்டம் இன்னது என்றும் இதுவரை அவர்கள் சொல்லவில்லை. சொல்லுவதற்கு அவர்களிடம் யாதொரு சரக்கும் இல்லை. தாங்கள் ஒரு காலத்தில் ஜெயிலுக்கு போனதையும் சட்டம் மீறினதையும் சர்க்கார் உத்திரவு மீறி அடிபட்டதையும் எடுத்துச் சொல்லி பெருமை அடைகிறார்கள். மாஜி அடிபட்டவர்கள் என்றும் மாஜி ஜெயிலுக்குப் போனவர்கள் என்றும் சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். இப்போது ஜெயிலுக்குப் போவதும் சட்டம் மீறுவதும் தங்கள் கொள்கை அல்ல என்று சொல்வதோடு அந்தப்படி காங்கிரஸ்காரர்கள் சர்க்காருக்கு எழுதியும் கொடுத்து விட்டார்கள். அவ்வளவோடு நிற்கவில்லை. எந்த சர்க்காரை சைத்தான் கவர்ன்மெண்ட் என்றும் எந்த சர்க்காரோடு ஒத்து உழைப்பது பாவம் என்றும் பேசினார்களோ அந்த சர்க்காரிடமே – அந்த சர்க்கார் இவர்களை உதைத்து ஜெயிலுக்கு அனுப்பி புத்தி கற்பித்த பிறகு இனி அப்படிச் சொல்வதில்லை என்று எழுதிக்கொடுத்து விடுதலையாகி வெளிவந்து இப்போது அந்த சர்க்காருக்கும் அந்த சர்க்காருக்கு தலைவராய் இருக்கும் ராஜாவுக்கும் அந்த ராஜாவின் பின் சந்ததிக்கும் பக்தி விஸ்வாசமாய் இருப்பதாக தங்கள் கடவுளை வேண்டி பிரமாணம் செய்து கொடுத்து அந்த சர்க்காரது சட்டத்துக்கு கீழ்ப்படிந்து நடப்பதாய் சத்தியம் செய்து கொடுக்க முன் வந்துவிட்டார்கள். இந்தப்படி சத்தியம் செய்து கொடுப்பதற்கு காங்கிரசை வெறுத்து காங்கிரஸ்காரர்கள் நடத்தையில் அதிருப்திப்பட்டு வெளியேறின காந்தியாரே அனுமதி கொடுத்துவிட்டார். காந்தியார் மாத்திரமல்லாமலும் “பிரிட்டிஷாரையே அடியோடு விலக்கி ஆட்சி புரிய வேண்டும் என்பது தான் பூரண சுயராஜ்யம், அதுதான் எனது கொள்கை” என்று சொல்லுகிறவரும் காங்கிரசின் “மகத்துவம்” பொருந்திய தலைவருமான தோழர் ஜவஹர்லால் நேரு அவர்களும் ராஜவிஸ்வாசப் பிரமாணத்துக்கும், சட்டத்துக்கு கீழ்படிந்து நடக்கும் பிரமாணத்துக்கும் அனுமதி கொடுத்துவிட்டதோடு அந்தக் காரியம் செய்வதற்கு ஆக சட்டசபைக்குப் போகும் ஆட்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்யவும் துணிந்து இறங்கிவிட்டார். ஆகவே இனி வேறு எந்த விதத்தில் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும் மற்ற கட்சிக்காரர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரசுக்காரருக்கு இன்று ஏற்பட்ட இந்த புத்தி இந்த பதினைந்து வருஷத்துக்கு முன் ஏற்பட்டிருக்குமானால் நாட்டில் எவ்வளவோ அபிவிருத்திகள் ஏற்பட்டிருக்கும். மிதவாதிகளும் ஜஸ்டிஸ்காரரும் சொன்னதை காங்கிரஸ்காரர் பரிகாசம் செய்தார்கள். அதனால் நாடு இந்த 15 வருஷமாய் பாழாகி விட்டது. அரசியல் தத்துவம் மற்ற தேசங்களில் இந்த 15 வருஷங்களில் எவ்வளவு முன்னேற்றமடைந்ததோ அவ்வளவு நம் நாட்டில் பின்னேற்றமடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நாடு சமூகத்துறையிலோ அரசியல் துறையிலோ அதாவது ஒரு சிறிது அம்சமாவது முன்னேற்றமடைந்தது என்று சொல்லப்படுமானால் அது காங்கிரசுக்கு எதிராக இருந்து வந்த ஸ்தாபனங்களாலும் வேகத்தாலும் தான் என்று சொல்லவேண்டுமே ஒழிய காங்கிரசினால் சிறிது கூட ஏற்பட்டது என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை.
அரசாங்கத்தார் நமக்கு அளித்த வாக்கு சுதந்திரத்தையும் எழுத்து சுதந்திரத்தையும் காங்கிரஸ்காரர் துஷ்பிரயோகம் செய்து மக்களுக்குள் ஒற்றுமையற்ற தன்மையையும் கலவரத்தையும் காலித்தனத்தையும் உண்டாக்கி வருகிறார்கள். உதாரணமாக இப்போது எங்காவது ஒரு கூட்டம் நடக்க வேண்டுமானால் காலித்தனம் இல்லாமல் நடைபெறுமா என்பது சந்தேகமாய் இருக்கிறது. என் அனுபவத்தில் 100க்கு 50 கூட்டம் கலவரத்தில்தான் நடக்கின்றன. காங்கிரசுக்காரர்களின் 16 வருஷத்திற்கு முந்தியதும் இன்றைக்கு உள்ளதும்தான் ஜஸ்டிஸ் கட்சியினுடையவும் கொள்கையாகும்.
காங்கிரசுக்காரர்கள் கேட்கும் சுயராஜ்யம்தான் ஜஸ்டிஸ் கட்சியாரும் கேட்கின்றார்கள். காங்கிரசுக்காரர் போக விரும்பும் சட்டசபைக்குத்தான் ஜஸ்டிஸ்காரரும் போக விரும்புகிறார்கள். காங்கிரசுக்காரர் ஏற்படுத்திய சம்பளம்தான் ஜஸ்டிஸ்காரர்களும் வாங்குகிறார்கள்.
ஆனால் காங்கிரசுக்காரர் சட்டசபைக்குப் போய் மந்திரி பதவி ஏற்பதா இல்லையா என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வெளிப்படையாய் பதவி ஏற்போம் என்று சொல்லுகிறார்கள். காங்கிரசுக்காரர் சீர்திருத்தம் உதவாது, அதை உடைக்கவேண்டும் என்கிறார்கள். ஜஸ்டிஸ்காரர் சீர்திருத்தம் போதாது, ஆனால் நடத்திக்காட்டி தகுதியை சொல்லி அதிகம் கொடுக்கும்படி வற்புறுத்துவோம் என்கிறார்கள். காங்கிரசுக்காரர்கள் முன்பு பல தடவைகளில் தங்கள் வாக்கை நிறைவேற்றவில்லை. ஜஸ்டிஸ்காரர்கள் தங்களால் கூடுமானதைச் சொல்லி அந்தப்படி நடந்து வருகிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள் அல்லாத மற்ற எந்தக் கட்சியாருள்ளும் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்து அதனால் கூடுமான பலனை மக்களுக்குச் செய்யச் செய்வது என்பதில் அபிப்பிராய பேதமில்லை. காங்கிரசுக்காரர்களுக்குள் பலவித அபிப்பிராய பேதம் சி.ஆர். ரெட்டி, ஜவஹர்லால், சத்தியமூர்த்தி ஆகியவர்கள் பல அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி நிலையில் ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் ஏன் வெட்டிப் புதைக்க வேண்டும்? அது யாரையாவது ஏமாற்றிற்றா? வெட்டி அளப்பு அளந்து இப்போது படுத்துக்கொண்டதா? ஓட்டர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிற்றா? அதன் முக்கியக் கொள்கை அரசாங்க பிரதிநிதித்துவம், உத்தியோகம் முதலியவைகளை அடைவதில் இந்திய மக்களில் முக்கிய வகுப்புகளுக்குள் கலகம் கூடாது; ஏமாற்றமடையக் கூடாது; எல்லோருக்கும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இருக்கவேண்டும் என்பதுதான். இது சரியா தப்பா என்பது வேறு விஷயம். இந்த கருத்தில் ஜஸ்டிஸ்காரர்கள் ஏதாவது மாறிவிட்டார்களா? ஜஸ்டிஸ்காரர்கள் தங்கள் ஆட்சியில் இதைச் செய்யவில்லையா? இந்தக் காரியங்கள் இன்று அவர்கள் அமுலுக்குக் கொண்டு வந்து சீர்திருத்தத்திலும் புகுத்திவிடவில்லையா? என்பவைகளை நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.
அதுவும் ஜஸ்டிஸ்காரர்கள் தங்களுடைய இந்தக் கொள்கையை அரசாங்கத்தார் ஒப்புக்கொள்ளும்படி செய்து விட்டதோடு மாத்திரமல்லாமல் காங்கிரசுக்காரர்களையும் ஒப்புக்கொள்ளும்படியும் அதற்குக் கீழ்ப்படியும்படியும் செய்துவிட்டார்கள். இன்று அந்தத் திட்டத்தின்படியே காங்கிரசுக்காரர்களும் அடையப் புகுந்து விட்டார்கள். இன்னும் பல செய்யவேண்டுமென்கிறோம். இந்த முயற்சியால் சமுதாயத் துறையில் அரிய பெரிய புரட்சி செய்துவிட்டோம். மத ஆதிக்கமெல்லாம் பறந்தோடும்படி செய்து வருகிறோம். இவை செய்யாமல் வெறும் அரசியல் சுதந்திரம் என்ன நன்மை செய்துவிடும்? இந்தியா இன்று நேற்று அடிமை அல்ல. புராண காலம் தொட்டு சரித்திரமறிய ஆயிரக்கணக்கான வருஷமாய் அடிமை. இந்த நாட்டில் பறையனும், பள்ளனும், சூத்திரனும் எவ்வளவு காலமாய் அடிமையாய் இருந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? வெள்ளைக்காரனா இதற்கு ஜவாப்தாரி? அல்லது துருக்கனா இதற்கு ஜவாப்தாரி? ராமராஜ்யம், அரிச்சந்திர ராஜ்யம், சேர சோழ பாண்டியன், நாயக்கன், மராட்டியன் முதலிய எல்லா சுயராஜ்யத்திலும் இருந்த கொடுமைதான் இன்றும் இருந்து வருகிறது. இவற்றை ஒழிக்கத்தான் ஜஸ்டிஸ் கட்சி முயல்கின்றது. அதை வீணாக தேசத்துரோக கட்சி என்பதில் ஏதாவது அர்த்தமுண்டா? அது தேசத்தைவிட சமூகத்தை – மக்களை முக்கியமாய் கருதி மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சி இந்நாட்டு எல்லா மக்களுக்கும் சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. எல்லா மக்களும் சுயராஜ்யத்தில் பங்கு பெறும்படி செய்திருக்கிறது. அது தோன்றிய பிறகே இந்திய மக்கள் சமூகத்தில் பெரும் பெரும் எண்ணிக்கை கொண்ட முஸ்லீம், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய 10, 12 கோடி ஜனங்களுக்கு அரசியலில் சம்மந்தமும் சமூக இயலில் மனிதத்தன்மையும் ஏற்பட்டிருக்கின்றன.
கல்வியிலும் அரசியல் நிர்வாகத்திலும் மிகவும் பிற்பட்டுக் கிடந்த மக்களாகிய பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் அனேக வகுப்புகளை முன் வரிசைக்கு கொண்டு வந்து இருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் சமூகத்துறையில் தங்கள் பெண்களை விபசாரத் தனத்திற்கு விட்டுப் பிழைத்துத் தீரவேண்டிய மக்களை இன்று மற்ற ஜாதி மக்களோடு சமமாய் வாழச் செய்திருக்கிறது. சமூகத்துறையில் தங்கள் ஜாதியின் பெயரை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மேல் ஜாதிப் பெயர்களை சொல்லிக்கொண்டு மறைமுகமாய்த் திரிந்த சமூக மக்களையெல்லாம் முக்கியமான சமூக மக்களாக ஆக்கி இருக்கிறது. தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொள்ள உரிமையற்றுக் கிடந்த மக்களை முன்னணியில் நிற்க செய்திருக்கிறது. சமூகத்தில் தீண்டக்கூடாத மக்களாய் இருந்தவர்கள் இன்று பார்ப்பனருடனும் பணக்காரப் பிரபுவுடனும் சரிசமமாய் உட்காரச் செய்திருக்கிறது. இப்படியாக சமூகத் துறையில் வாழ்க்கைச் சுதந்திரம் மாத்திரம் அல்லாமல் மனிதத் தன்மை சுயமரியாதை இல்லாமல் இழிவு பட்டுக் கிடந்த மக்களை தலை நிமிர்ந்து நடந்து மற்ற மக்களுடன் தோளோடு தோள் உறைந்து நிற்கும்படி செய்துவிட்டது. எனவே இப்படிப்பட்ட கட்சியை என்ன காரணத்திற்காக ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள் என்பதை மக்கள் கவனித்துப் பார்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்.
குறிப்பு:- 22.12.1936 இல் அருப்புக்கோட்டை தேரடி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதைத் தொடர்ந்து சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பேசிய சொற்பொழிவின் சுருக்கம்.
குடி அரசு – சொற்பொழிவு – 03.01.1937