காங்கிரஸ் “ஜெயித்தது”
காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலுக்கு இதுவரை தமிழ் நாட்டில் அபேக்ஷகர்களை நிறுத்தப்பட்டதிலிருந்தே ஒரு அளவுக்குக் காங்கிரசின் கொள்கை வெற்றி பெற்று விட்டதென்றே கூறலாம்.
என்னவெனில் இன்று தென்னாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஆயுதம் என்பதும் அவ்வாதிக்கத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியால் ஏற்படப் போகும் ஆபத்திலிருந்து தப்புவதற்காகவே காங்கிரஸ் நடத்தப்படுகிறது என்பதும் அறிஞர் அறியாததல்ல. அதற்கு ஆகவே காங்கிரஸ் இன்று சட்டசபை வேட்டை ஆடுகின்றது. முடிவு எப்படி இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு வெற்றி ஏற்பட்டுவிட்ட தென்றுதான் சொல்லவேண்டும்.
என்ன வெற்றி என்றால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சட்டசபைக்குப் பொதுத் தொகுதி மெம்பர்கள் பெண்கள் உள்பட 64 பேர்களேயாகும். இந்த 64 ஸ்தானங்களுக்கு இதுவரை காங்கிரஸ் 62 ஸ்தானங்களுக்கு ஆட்களை நிறுத்தி இருக்கிறது.
இவற்றிலும் தோழர்கள் சுப்பையா, சொக்கலிங்கம், அண்ணாமலை, காமராஜ நாடார், கிருஷ்ணசாமி பாரதி, ஆதிகேசவ நாயக்கர், சேலம் சுப்பிரமணியம், ராமநாதன், கிருஷ்ணசாமி பாரதி மனைவி முதலிய சுமார் பதின்மர்களை அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்கின்ற கவலை இல்லாமல் அந்த இடங்களைப் பூர்த்தி பண்ணுவதற்காகவே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி தோழர்களை நீக்கிக் கணக்குப் பார்த்தால் காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் நிஜமாகவே நிறுத்தப்பட்டிருக்கும் அபேக்ஷகர்கள் மொத்தம் 50 அல்லது 52 பேர்களே யாவார்கள். இவர்களில் 18 பேர்கள் பார்ப்பனர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தோழர்கள் சென்னை 1. டி. பிரகாசம், 2. என்.எஸ். வரதாச்சாரி. 3. சத்தியமூர்த்தி, 4. ருக்மணி லòமிபதி, 5. டாக்டர் சீனிவாசய்யர், 6. கே. பாஷ்யம், 7. சேஷாத்திரி ஆச்சாரியார், 8. சிதம்பர அய்யர், 9. பூவராக அய்யங்கார், 10. அம்மாப்பேட்டை வெங்கிட்டராமய்யர், 11. ஆலஸ்யம் அய்யர், 12. திண்டுக்கல் குப்புசாமி அய்யர், 13. மட்டப்பாறை வெங்கிட்டராமய்யர், 14. எக்ஞேஸ்வர சர்மா, 15. சங்கரய்யர் லòமி, 16. திண்டுக்கல் நாகராஜ அய்யர், 17. சேலம் பி.டி. வெங்கட்டாச்சாரி, 18. கோபி டீ. சீனிவாசய்யர் ஆகியவர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னம் 2 ஸ்தானங்கள் பாக்கி இருக்கின்றன.
ஆகவே 62க்கு ஏன் 52க்கு 18 பேர் பார்ப்பனர்களாகிவிட்டார்கள். இது மொத்தத்தில் மூன்றில் ஒரு பாகத்துக்கு மேலாகவே இருக்கிறது. சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கும் இது போலவே நிறுத்தப்பட்டார்கள். அது வெற்றி பெற்ற பின்பு இன்றும் 3ல் ஒரு பாகம் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
ஆகவே முறையில் காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லித்தானே ஆகவேண்டும்? இனி அடுத்த தேர்தல் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு 2-ல் ஒரு பாகம் அதாவது சரி பகுதிப் பேர் நிறுத்தப்படுவார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. அப்புறம் பழையபடி “சர்வம் பார்ப்பன மயம்” என்று ஆகிவிடலாமல்லவா? இதற்கு ஆக நாம் மாத்திரம் வருந்தி என்ன செய்ய முடியும்? நம்மவர்களின் காட்டிக்கொடுக்கும் தன்மையும், மானங்கெட்ட தன்மையும் இன்னமும் அச்சுக் குலையாமலிருக்கும் போது நமது தலைவர்கள் என்பவர்களில் பலரே இன்னமும் அவர்களுக்கு உள் ஆளாய் இருக்கும்போது இவற்றை எதிர்பார்க்கவேண்டியதுதானே.
ஆகவே ஜஸ்டிஸ் கட்சி நியாயமான கட்சி என்பதற்கும், அது இன்னும் வெகுநாளைக்கு இருக்க வேண்டி இருக்கிறது என்பதற்கும், வெற்றியோ தோல்வியோ என்ன ஏற்பட்டாலும் லட்சியம் செய்யாமல் அதற்காக இன்னமும் உழைக்க வேண்டியது உண்மை சமதர்ம வாதிகளுக்கு நீங்காக் கடமை என்பதற்கும் ஆதாரமும் அவசியமும் இதிலிருந்தாவது விளங்கவில்லையா?
குடி அரசு – கட்டுரை – 10.01.1937