வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஜே!

வங்காளம் “தேசீயத்துக்கு” படு தோல்வி

ஆனால் சமூக ஒற்றுமை ஏற்பட்டது

வங்காளத்தில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் “இருந்த வகுப்பு வாதப் பேய்” “மாண்டு மடிந்து” தீர்க்காயுள் பெற்று விட்டது. அதாவது ராஜி ஏற்பட்டு விட்டது. வகுப்புரிமைக்கு சிரஞ்சீவிப்பட்டம் கிடைத்து விட்டது. “தேசீயம்” செத்து ஒழிந்தது. இரு கட்சித் தலைவர்களும் கூடி இரு சமூகத்துக்குள்ளும் ராஜி செய்துகொண்டார்கள்.

ராஜி நிபந்தனை

  1. இன்று அரசாங்கம் முஸ்லீம்களுக்கு அளித்துள்ள விகிதாச்சார வகுப்புரிமை வகுப்புத் தீர்ப்பு அதில் கண்டபடி 10 வருஷ காலத்துக்கு ஆக்ஷேபிக்கப்படக்கூடாது. இரு சமூகத்தார் சம்மதித்தால் மாத்திரம் அதைப்பற்றி மத்தியில் யோசிக்கலாம்.
  2. மந்திரிசபை அமைக்கப்படுவதில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகுதிக்கு தகுந்தபடி பகுதி எண்ணிக்கை கொடுக்கப்படவேண்டும்.
  3. சர்க்கார் உத்தியோகம் மற்ற பிரதிநிதித்துவம் ஆகியவைகளில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகை விகிதப்படி பகுதி விகிதாச்சாரம் ஒதுக்கப்படவேண்டும். யோக்கியதாம்சப் பரீøை குறைந்த அளவுக்கே ஏற்படுத்தப்படவேண்டும் என்பதாகும்.

இந்த நிபந்தனைகள் 1933ம் வருஷத்திலேயே பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டியில் எடுத்துரைக்கப்பட்டனவாம். அப்போதே முஸ்லீம்கள் ஒப்புக்கொண்டார்களாம். ஆனால் இந்துக்கள் தான் ஆட்சேபித்தார்களாம். 4 வருஷம் சென்று இப்போதுதான் இந்துத் தலைவர்களுக்கு புத்தி வந்திருக்கிறது. இப்போதாவது ஒப்புக்கொண்டு ஒற்றுமைப்பட்டதற்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

தென்னாட்டிலும் பார்ப்பனர்களுக்கு எப்போது இந்த மாதிரி புத்தி வந்து பார்ப்பனர் – அல்லாதார் என்கின்ற வேற்றுமையும் பிணக்கும் ஒழிய இணங்குவார்களோ தெரியவில்லை. பார்ப்பனருக்கு இருக்கும் இன்னம் கொஞ்ச நஞ்சம் யோக்கியதையும் ஒழிந்து நெருக்கடியான காலம் வந்த பிறகே அவர்கள் வழிக்கு வருவார்கள் என்று எண்ணுகிறோம்.

நாளாக நாளாக நமக்கு நன்மைதான். ஏனென்றால், அவர்களைப்பற்றி அதிக பிரசாரம் செய்ய வசதி இருந்து வருகிறது. கடனுக்கு நாளாக நாளாக வட்டி ஏறுவது போலும் விவகாரம் வலுக்க வலுக்க வட்டியும் கோர்ட்டு செலவும் அதிகரிப்பது போலும் கலகமும் பிணக்கும் வளர வளர நமக்கு விகிதாச்சாரப் பிரச்சினை பெருகிக் கொண்டே வர வசதி இருக்கிறது. தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் சத்தியமூர்த்தியாரும் செய்கின்ற ஆர்ப்பாட்டங்கள் இன்று பார்ப்பனர்களுக்கு ஏதோ பெரிய ஆதாயம் கொடுப்பதாக காணப்படலாம். பார்ப்பனரல்லாதாருக்கு பெருத்த அழிவுகாலம் ஏற்பட்டுவிட்டது போல் தோன்றலாம். ஆனால் இதன் முடிவு கடைசியில் பார்ப்பனருக்கு 100க்கு 3 விகிதத்துக்கே கொண்டு வந்து விடப் போகிறது என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆகவே இன்றைய “தோல்வி” “வெற்றி” “போர் தொடுக்க துவஜாரோகணம்” “ஜஸ்டிஸ் கட்சிக்கு அழிவு காலம்” “ஜஸ்டிஸ் கட்சி அழிந்தே போய்விட்டது” என்கின்ற “தேசீயப் பிரசாரங்களு”க்கு நாம் மயங்கவேண்டியதில்லை; கலங்க வேண்டியதில்லை.

பார்ப்பனீயம் ஒழிக, பார்ப்பன ஆதிக்கம் அழிக என்கின்ற பல்லவியே நமது “தாரக” மந்திரமாய் “உபாசனாமூர்த்த”மாய் இருக்கவேண்டியது. மரணமடைய நேரும் ஒவ்வொரு தமிழ் மகனும் இதையே “மரணத்தறுவாய் நாம மந்திரமாக”க்கொள்ள வேண்டியது.

துரோகிகளைப்பற்றி கவலைவேண்டாம்! கோடாலிக் காம்புகளைப் பற்றி நினைவு வேண்டாம்!! நடப்பது நடக்கட்டும்!!! வெற்றி நம்முடையதே!!!! வெற்றி நம்முடையதே!!!!! நம்முடையதே!!!!!!

குடி அரசு – கட்டுரை – 10.01.1937

You may also like...