பார்ப்பனர்களின் விளம்பர முறை

 

தோழர் ஜவஹர்லால் காரில் போகும்போது ஒரு மாட்டு வண்டி குறுக்கே நின்றதாம். அதை அந்த வண்டிக்காரனால் விலக்க முடியவில்லையாம். தோழர் ஜவஹர்லால் கீழே இறங்கி வண்டியை மூங்கிலைப் பிடித்து ஒரு ஓரமாய் தள்ளி விட்டுவிட்டு தன் வண்டியை ஓட்டிக்கொண்டு போனாராம். மாட்டு வண்டிக்காரன் “நான் அதிர்ஷ்டசாலி” என்றானாம். இது அசோசியேட் பிரசில் வெளியாகி பார்ப்பனப் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் போடப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய பரோபகார காரியம்? எவ்வளவு பெரிய மனிதன் ஜவஹர்லாலைப் புகழ்ந்து விட்டான் பாருங்கள்.

ஆகவே ஒரு ஆசாமியை பார்ப்பனர்கள் பெரிய ஆள் ஆக்க வேண்டுமானால் எவ்வளவு மானமற்ற முறையில் விளம்பரம் செய்து பாமர மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை குறிப்பிடவே இதை எழுதுகிறோம். இது போலவே “காந்தியார் பூனைக் குட்டியுடன் விளையாடினார்!!”

“ஒரு பழுத்த கிழவி ஜவஹர்லாலை கும்பிட்டாள்!!!” “ஒரு பெண் பட்டேலுக்கு ஆலாத்தி எடுத்தாள்!!!!”

என்பது போன்ற அற்ப பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி பிறகு அவர் அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார் அந்தப்படி கேளுங்கள் என்று சொல்லித் தாங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளுகிறார்கள்.

இம்மாதிரி காரியம் செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால் அதில் அதிசயம் ஒன்றும் இருக்க நியாயமில்லை.

மக்களுக்கு உண்மையாய் நன்மை செய்ய விரும்புபவர்கள் இந்த மாதிரி பித்தலாட்ட மார்க்கத்தில் வெற்றியைக் கண்டு பயப்படாமல் உறுதியுடன் இருந்து இவற்றை வெளிப்படுத்துவதன் மூலம்தான் தங்கள் காரியத்தில் சித்தி பெறவேண்டுமே ஒழிய அற்ப காரியத்தில் பிரவேசிக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 17.01.1937

You may also like...