முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கயவர்களா?

முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஷெட்யூல் (தாழ்த்தப்பட்ட) வகுப்பாருக்கும் காங்கிரஸ் இழைத்துவந்த கொடுமைகள் அச்சமூகத்தில் சுயமரியாதை உள்ள மக்கள் அறியாததல்ல. அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள தனித்தொகுதி உரிமைகளை ஒழிப்பதற்கு ஆக காங்கிரஸ்காரர்கள் ஆதியில் இருந்தே பட்டபாடும் செய்த சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியிருந்தும் அவ்வவ் சமூகங்களில் உள்ள வீரர்களான சில தலைவர்களால் அது பெறப்பட்டு காப்பாற்றப்பட்டு இன்று அச்சமூகங்கள் அரசியலிலும் அரசியல் சேவைகளிலும் பங்குபெற முடிந்தது.

ஒரு நாட்டில் அரசியல் சீர்திருத்தமோ, உரிமையோ, சுதந்திரமோ எது கிடைப்பதானாலும் எவ்வளவு கிடைப்பதானாலும் அவற்றில் பங்கு பெற அந்நாட்டிலுள்ள ஒரு மதத்துக்கோ, ஜாதிக்கோ, வகுப்புக்கோ இடமில்லாமல் அவ்வகுப்பை ஒடுக்கி அழுத்தி எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் வகுப்புக்கே பெரும்பங்கும் போவதாய் இருந்தால் அச் சுதந்திரங்கள் எப்படிப்பட்டவையானாலும் எதற்குதவும் என்று கேட்கின்றோம்.

இந்நாட்டில் முஸ்லீம்கள் அரசியலில் தனி உரிமை பெறுவதற்கு முன் இந்துக்களிடையில் தீண்டப்படாதவர்களாய் இருந்ததை எந்த மனிதனாவது “எந்த கயவ”னல்லாதானாவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

“துலுக்கனைத் தொட்டால் தொட்ட விரலைத் துண்டித்து விடவேண்டும்” என்கின்ற பழமொழியும் “துலுக்கன் என்றால் மிலேச்சன்” என்கின்ற அகராதியும் அதைவிட இழிவான கருத்துக்களடங்கிய ஆதாரங்களும் இன்றும் இந்துக்களிடையில் இருக்கிறதா இல்லையா? என்று கேட்கின்றோம்.

அதுபோலவே கிறிஸ்தவர்களுக்கும் வகுப்புரிமை கிடைப்பதற்கு முன் இந்துக்களிடையில் இருந்த மரியாதை என்ன என்பது யாரும் அறியாததா என்று கேட்கின்றோம். இன்றும் அவர்களுக்கு மற்ற இந்துக்கள் குடியிருக்கும் வீதிகளில் குடி இருக்க வீடு கிடைக்கிறதா என்று கேட்கின்றோம்.

கிறிஸ்தவர்கள் என்றால் இந்துக்கள், “பறையர்”களுக்கு சமதையாகவே கருதி வந்தார்கள். இந்துக்களில் இன்றும் தம்முள் ஆசாரமில்லாதவர்களை “கிறிஸ்தவப் பறையனாட்டமா இருக்கிறான்” என்று சொல்லுவதே வழக்கமாக இருந்து வருகிறது. இன்றும் கூட முஸ்லீம் உபாத்தியாயரையோ, ஒரு கிறிஸ்தவ உபாத்தியாயரையோ கிராமப்பள்ளிக் கூடத்திற்கு நியமித்து விட்டால் உடனே தங்கள் பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கழைத்துக் கொள்ளுகிற வழக்கம் அமுலில் இருந்து வருகிறது. பள்ளிப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டு வேறு துணி கட்டிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் துலுக்கனைத் தொட்டிருப்பார்களாம்.

இவர்கள் இரு சமூக சங்கதியே இப்படி இருக்கும் போது மற்றபடி உண்மையாகவே மிலேச்சர் என்றும் சண்டாளரென்றும் புலையரென்றும் பறையரென்றும் இந்துக்களால் அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

இந்த சமூகங்கள் தனித்தொகுதி மூலம் தனி உரிமை பெற்ற பின்பே மனிதர்களாக இந்து “பெரியோர்கள்”களால் “கயவர்”கள் அல்லாதவர்களால் மதிக்கப்படுகின்றார்கள். அப்படிக்கு இருக்க, அச்சமூகங்களின் வகுப்புரிமைகளைப் பற்றிப் பார்ப்பன அடிமைப் பத்திரிக்கைகளிலும் பார்ப்பனக் கூலிப் பத்திரிக்கைகளிலும் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் இழிமக்கள் கையாளும் பத்திரிக்கைகளிலும் தலை சிறந்து விளங்கும் “தினமணி” பத்திரிக்கையானது தனது 3.2.37ந் தேதி தலையங்கத்தில் “கிறிஸ்தவ முஸ்லீம் தொகுதிகள்” என்னும் தலைப்பின் கீழ் (3.2.37ந் தேதி தினமணி 6 பக்கம் 3ம் கலத்தில் உள்ளபடி)

“பதவி வேட்டையே தொழிலாக உள்ள ஒரு சிலரைத் தவிர வகுப்பு மாச்சரியங்களை கிளப்பினாலொழிய தமக்கு சமூகத்தில் எவ்வித செலாவணியுமிருக்காதென்று கருதும் கயவர்களைத் தவிர வேறு யாரும் தனித்தொகுதியை விரும்பார்கள்”

என்று குறிப்பிட்டிருக்கிறது. இக்கயவர்கள் பட்டத்தை தனித்தொகுதியை விரும்பும் முகம்மதியர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ளுகிறார்களா? என்று அவ்விரு சமூகத்திலும் சுயமரியாதை உள்ள மக்களைக் கேட்கின்றோம்.

தனித்தொகுதியை விரும்பும் முஸ்லீம்கள் கயவர்கள் என்றால் மெளலானாக்கள் முகம்மதலி, ஷவுக்கத்தலி, ஜனாப் ஜின்னா, நவாப் அப்துல் ஹகீம் முதலிய தலைவர்களும், ஆங்காங்கு இன்று தனித்தொகுதி பேரால் நிற்கும் முஸ்லீம் கனவான்களும் ஓட்டர்களும் கயவர்களே ஆக வேண்டும். தனித்தொகுதியின் பேரால் அபேட்சகர்களை நிறுத்தி இருக்கும் முஸ்லீம் பார்லிமெண்டரி போர்ட் தலைவர் தோழர் ஜமால் முகம்மது அவர்களும் அக்கூட்டத்தில் (கயவர்கள் கூட்டத்தில்) பகுதி அளவாவது சேர்க்கப்பட்டாக வேண்டும் அல்லவா? மற்றும் முஸ்லீம் லீக்கும் முஸ்லீம் புரோகரசீவ் பார்ட்டியும் தனித்தொகுதி விரும்பும் முஸ்லீம்களின் சகல சங்கங்களும் கயவர்களின் சங்கங்களாகத்தானே இருக்கவேண்டும்?

இதை முஸ்லீம் வாலிபர்களும் பெரியோர்களும் ஒப்புக்கொள்ளு கிறார்களா என்று கேட்கின்றோம்.

1916 ஆம் வருஷத்தில் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்போது அக்காங்கிரஸ், கயவர்கள் கூட்டமா என்று கேட்கிறோம்.

1931ல் தோழர் காந்தியார் “முஸ்லீம்களுக்கு சரித்திர சம்பந்தமான காரணங்களை உத்தேசித்து தனி உரிமை கொடுக்க வேண்டியதுதான்” என்று சொல்லி இருக்கிறார். ஆகவே காந்தியாரையும் கயவர்கள் கூட்டத்தில் சேர்க்க வேண்டியதுதானா என்று “தினமணி”யைக் கேட்கின்றோம்.

காங்கிரஸ்காரர்கள் இன்றும் கூட தனித்தொகுதி தேர்தல்களிலும் தங்கள் அபேக்ஷகர்களை போட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றைய காங்கிரசுகாரர்களும் அவர்களால் தனித்தொகுதிக்கு நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களும் பதவி வேட்டைக்காரக் கயவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்களா என்று கேட்கின்றோம்.

“தனித்தொகுதி பேரால் காங்கிரஸ் இன்னும் அதிக அபேக்ஷகர்களை நிறுத்தவில்லையே” என்று “தினமணி” அதே வியாசத்தில் வியாகூலப்படுகிறது.

அதாவது,

“இங்கும் இந்த தனித்தொகுதி முழுவதற்கும் காங்கிரஸ் அபேக்ஷகர்களை போட்டிருக்கலாம். அநாவசியமாக சந்தேகங் கொண்டு சில தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக அபேக்ஷகர்களை நிறுத்தாது போய் விட்டோம்” என்று அழுகின்றது. என்ன சந்தேகம்? தாங்களும் ஏன் கயவர்கள் ஆகவேண்டும் என்கின்ற சந்தேகமா? தாங்கள் “கயவர்கள்” ஆனால் தங்களை மக்கள் உண்மையாகவே கயவர்கள் என்று கருதி சைபர் (0) ஓட்டு போட்டு விடுவார்கள் என்கின்ற சந்தேகமா? அல்லது முஸ்லீம் லீக்கின் சென்னை தலைவர் ஜனாப் ஜமால் மகமது சாயபு இடமும் நவாப் ஹகீம் சாயபு இடமும் பிச்சை கிடைக்காமல் போகுமே என்கின்ற சந்தேகமா? அல்லது இக்கயவர்களை நம்பி முஸ்லீம்கள் உண்மையான கயவர்கள் ஆகமாட்டார்களே என்கின்ற சந்தேகமா? என்று கேட்கின்றோம்.

ஆகவே காங்கிரஸúம் “தினமணி”யும் ஏன் இந்தக் கயவர் கூட்டத்திற்கு சந்தேகத்தோடு மனுப்போட்டு தாங்களும் முதல் நெம்பர் வடிகட்டின கயவர்களாக ஆக ஆசைப்படுகிறார்கள் என்று கேட்கின்றோம்.

எனவே இந்திய முஸ்லீம் சமூகத்தையும் அவர்களது மாண்புமிக்க ஸ்தாபனங்களையும் அவற்றின் தலைவர்களையும் கயவர்கள் என்று பட்டம் சூட்டும் “தினமணி”க்கு புத்தி கற்பிப்பார்களா? அல்லது மானமின்றி சுயமரியாதை இன்றி “தினமணி”யைப் பார்த்து மகிழ்ச்சியோடு கயவர் பட்டத்தை வரவேற்பார்களா என்பதைப் பார்க்கக் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

இக்கயவர் தன்மையை “தினமணி” கிறிஸ்தவர்கள் மீதும் சுமத்தி இருக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தில் தனி தொகுதி விரும்பாத அதாவது “கயவர்” அல்லாதவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கேட்கின்றோம். இன்று காங்கிரஸ் கூட்டத்தாரால் தனித் தொகுதிக்கு அபேக்ஷகராக நிறுத்தப்பட்டிருக்கும் தோழர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் “தினமணி” கூற்றுப்படி பதவி வேட்டைக்காரக் கயவர் அல்ல என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்கிறோம். ஒரு சமயம் தோழர் ஜோசப் அவர்கள் பதவி ஆசையால் தன்னை கயவர் அல்ல (தனித்தொகுதிக்காரன் அல்ல) என்று சொல்லிக் கொள்வதானாலும் கயவர் அல்லாதவராய் இருந்தபோது (காங்கிரசில் பொதுத் தொகுதியில் இருந்தபோது) அவருக்கு ஸ்தானம் கிடைத்ததா என்று கேட்கின்றோம். கொஞ்ச நாளைக்கு முன்தோழர் ஜோசப் அதுவும் “யங்இந்தியா” பத்திரிகை ஆசிரியராய் இருந்த தோழர் ஜோசப் அவர்கள் காங்கிரஸ் பிரமுகராய் இருந்த போதே மதுரையில் ஒரு முனிசிபல் கவுன்சிலர் ஸ்தானத்துக்கு காங்கிரஸ் சார்பாக ஒரு அபேக்ஷகராக நின்றார். அதே தொகுதிக்கு காங்கிரஸ் சார்பு அல்லாமல் ஒரு பார்ப்பனர் நின்றார். தோழர் ஜோசப்புக்கு திருச்சி தேவருக்கு ஏற்பட்ட தோல்வியைவிட மகத்தான தோல்வி ஏற்பட்டு காங்கிரஸ் அல்லாத பார்ப்பனருக்கு வெற்றி ஏற்பட்டது. அது “அக்கிராரத்” தொகுதியாய் இருந்ததால் காங்கிரஸ் பார்ப்பனர்கள் எல்லோரும் பெரிதும் ஜோசப் அவர்களுக்கு நாமம் சாத்தி கோவிந்தா போட்டுவிட்டார்கள்.

இதை சகிக்காமல் ஜோசப் அவர்கள் கொஞ்ச நாளையில் ஜஸ்டிஸ் கòக்கு வந்து தனித் தொகுதியின் மேன்மையைப் பிரசாரம் செய்தார். அது சமயம் பார்ப்பனர்கள் அவர் மனைவிக்கு பயமுறுத்தல் கடிதம் எழுதினார்கள். அது முதல் இதுவரை காங்கிரசுக்கு வெளியில் இருந்தவர் இப்பொழுது என்ன காரணத்தால் 2 மாதத்துக்கு முன் காங்கிரசில் சேர்ந்து தேர்தலுக்கு நிற்கிறார்கள் என்பதை “கயவர்” அல்லாத கூட்டத்தைச் சேர்ந்த “தினமணி” கூற முடியுமா? என்று கேட்கின்றோம். முஸ்லீம் சமூகமும் கிறிஸ்தவ சமூகமும் “கயவர்”களாக ஆவதற்கு முன் எத்தனை பேருக்கு எந்தெந்த வகைகளில் பதவியும் ஸ்தானங்களும் காங்கிரஸ் அளித்து வந்தது என்று கேட்கின்றோம். இன்றும் காங்கிரசுக்கு இவ்விரு சமூகத்திலும் கயவர்கள் அல்லாத ஆட்கள் வேண்டுமானால் பெரும்பாலும் 100க்கு 90 கனவான்கள் 4ம் தரம் 5ம் தரம் தகரப்போகணி ஆட்கள் தான் கிடைக்கிறதே தவிர மற்றபடி அச்சமூக பிரமுகர்களில் உண்மை சுயமரியாதை உள்ளவர்கள் கிடைக்கிறார்களா? அப்படியானால் தனித்தொகுதி பேச்சிலும் செய்கையிலும் வேண்டாம் என்று சொல்லி வெளியில் நிற்கும் பிரமுகர்களில் ஒரு 10 பெயர்களையாவது நம் நாட்டில் எடுத்துக்காட்டும்படி “தினமணி”யை அறைகூவி அழைக்கின்றோம். இன்று காங்கிரசால் நிறுத்தப்பட்ட சகல முஸ்லீம்களும் தனித் தொகுதியை விரும்பியே இருக்கிறார்கள். தனித்தொகுதிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். ஆகையால் இம்மாதம் 16ந் தேதி முஸ்லீம் தொகுதிக்கும் கிறிஸ்தவ தொகுதிக்கும் பிறகு நடக்கும் ஷெட்யூல் வகுப்பு ஸ்தானங்களுக்கும் நடக்கப்போகும் சென்னை சட்டசபை தேர்தல்களுக்கு அச்சமூகத்தார் தங்களுடைய ஓட்டுகளை சமூக சுயமரியாதைக்கு ஓட் செய்யப்போகிறீர்களா? அல்லது இச்சமூகங்களை கயவர்கள் கூட்டமென்று சொல்லுகின்ற அயோக்கியர்களை ஆதரிக்கும் மானங்கெட்ட இழிதன்மைக்கு ஓட்டு செய்யப்போகிறீர்களா? என்று கேட்கின்றோம். காங்கிரசின் பேரால் நிற்கும் முஸ்லீம், கிறிஸ்து, ஷெட்யூல் வகுப்புத் தோழர்களையும் ஒன்று கேட்டுக்கொள்ளுகிறோம். தோழர்களே! உங்கள் சமூகத்தையும் சமூகப் பிரமுகர்களையும் சமூக ஸ்தாபனங்களையும் கயவர்கள் என்று சொன்ன பிறகு அதுவும் நீங்கள் ஜீவாதாரம் என்று கருதும் உரிமைக்காக உங்களைக் கயவர்கள் என்று சொல்லும் போது நீங்கள் அவர்கள் சார்பாக அவர்களது கையாட்களாக இருந்து ஓட்டுப் பெற நினைப்பது உங்கள் சுயமரியாதைக்கு ஏற்றதா? என்று கேட்கின்றோம்.

ஷெடியூல் வகுப்பு என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு இதே சமயத்தில் தனியாகவும் ஒரு வார்த்தை சொல்லுகிறோம்.

அதாவது, தோழர்களே! காந்தியார் சாகும் நிலையில் இருப்பதாகப் பாசாங்கு செய்து உங்கள் தலைவர்களுடைய கால்களில் தங்கள் உள்ளங்கைகளும் விரல்களும் படும்படியாக நடந்து கையெழுத்துப் பெற்று தனித்தொகுதியை ஒழித்துவிட்டு அன்று அதாவது காந்தியாரின் உயிரை மீட்கக் கையெழுத்து வாங்கிய தலைவர்களையே இன்று ஒழிக்க காங்கிரஸ் வஞ்சகம் செய்கின்றது. அதாவது காந்தியாரை உயிர்ப்பிக்க தோழர் சிவராஜ் அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். இன்று அவரை எந்தத் தொகுதியிலும் நிற்க விடாமல் தொல்லை கொடுக்கிறார்கள். கடசியாக தோழர் ஊ.பு.அ. செளந்திரபாண்டியன் அவர்களும் தோழர் வி.வி.ராமசாமி அவர்களும் தங்கள் இருவர் ஸ்தானங்களையும் வாப்பீஸ் வாங்கிக்கொண்டு தோழர்கள் சிவராஜ் அவர்களுக்கும் அவரது வாழ்க்கைத் துணைவி மீனாம்பாள் அவர்களுக்கும் இடம் தந்து தங்கள் சொந்த செலவில் வேலை செய்கிறார்கள். அத்தம்பதிகள் வரக்கூடாது என்று அத்தொகுதிகளில் காங்கிரசுக்காரர்கள் செய்யும் சூழ்ச்சியும் தொல்லையும் கொஞ்சநஞ்சமல்ல. அதிகாரிகளும் அவர்கள் தொகுதியில் வேலை செய்யும் தொண்டர்கள் மீது ஜாமீன் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே கல்வியும் அரசியல் ஞானமும் உள்ள பெரியார்களை பதவிக்கு வரவொட்டாமல் அடித்து தங்கள் அடிமைகளையும் 3-ம் தரம் 4-ந் தரம் ஆட்களையுமே கொண்டு அரசியலைக் கைப்பற்ற காங்கிரஸ்காரர்கள் – (பச்சையாய் சொல்லவேண்டுமானால்) பார்ப்பனர்கள் செய்துவரும் கொடுமை சகிக்க முடியாததாக இருந்து வருகின்றது.

ஆகவே ஷெட்யூல் வகுப்புக்குத் தனித்தொகுதி இருக்குமானால் பெரும்பாகம் பேர்கள் உண்மையாக அச்சமூக நலன் கோருபவர்கள் வரக்கூடும். சமூகநலன் கோருவது ஒரு நாளும் கயவர் தன்மை ஆகவே ஆகாது. தனது தாய் தகப்பன் இன்னார் என்று உணர்ந்து, தனது சமூகம் இன்னது என்றும், மார்க்கம் இன்னது என்றும் அறிய சவுகரியமுள்ள எவனும் தனது சமூக நலனையோ, சுயமரியாதையையோ காப்பாற்ற தனி உரிமை கேட்பதை கயமை என்று ஒருநாளும் சொல்லமாட்டான். மெளலானாக்கள் மகமத்தலி, ஷவ்கத்தலி ஆகிய தேசீய வீரர்களே ஒரு சமயத்தில் “நாங்கள் முதலில் முஸ்லீம்கள், இரண்டாவதும் முஸ்லீம்கள், மூன்றாவதுதான் இந்தியர்கள்” என்று சொன்னார்கள். அதனால் அவர்களை யாரும் கயவர்கள் என்று சொல்லவில்லை. தோழர் ராமசாமியும் அனேக சந்தர்ப்பங்களில் “நான் முதலாவது மனிதன், இரண்டாவது சுயமரியாதைக்காரன், அப்புறம்தான் இந்தியனோ, ரஷ்யனோ, துருக்கியனோ, பிரிட்டிஷானோ எவனோ” என்று கூறுகிறார். தாய் தகப்பன் சமூகம் கூட மனிதத் தன்மைக்கும் சுயமரியாதைக்கும் பிறகுதான் என்கின்றார். அப்படி இருக்க, கல்லையும் மண்ணையும் கழுதை விட்டைகளையும் கொண்ட மனிதத்தன்மையும் சுயமரியாதையும் அற்ற ஜீவன்களைக் கொண்ட நாட்டைப் பிடித்துக்கொண்டு நாட்டைப்பற்றிப் பேசுவதில் பயன் என்ன என்று கேட்பதோடு இப்படி கேட்பதனால் ஒருவரோ ஒரு சமூகமோ கயவர்களாவார்களானால் அப்படிப்பட்ட கயவர்கள் அல்லாதவர்கள் வாழும் நாட்டில் கழுதைகள், பன்றிகள், நாய்கள் போன்ற ஜீவன்களைவிட மக்களுக்கு இடமில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

இன்று ஷெடியூல் வகுப்பார் காந்தியாரின் பட்டினிப் பாசாங்கின் பயனாய் “கழுதை விட்டையானாலும் கை நிறைய கிடைத்தால் போதும்” என்ற பழமொழிக்கு இலக்காகி விட்டார்கள். தங்கள் சமூகத்துக்கு என்பதாக அரசாங்கத்தார் கொடுத்த 18 பவுன் (பொன்)களுக்கு பதில் 30 தம்பிடிகளை பெற்றுக்கொண்டார்கள். எண்ணிக்கையைப் பார்த்து ஏமாந்து விட்டார்கள். காங்கிரஸ்காரர்கள் தம்பிடியைக் கொடுத்து பவுனை பிடிங்கிக் கொண்டதோடு அந்தத் தம்பிடிகளையும் செல்லாத தம்பிடிகளாக்கப் பார்க்கிறார்கள். தம்பிடியைத் தட்டி நோட்டம் பார்த்தால் கயவர்கள் என்கிறார்கள்.

நிற்க, கோயமுத்தூர், சேலம், நீலகிரி தொகுதிக்கு முஸ்லீம் லீக்கின் சார்பாக நிறுத்தப்பட்ட ஈரோடு சேர்மெனும் ஜில்லா போர்டு மெம்பருமான தோழர் கான் சாயபு கே.ஏ.ஷேக்தாவுது சாயபு அவர்களுக்கு எதிரியாக காங்கிரஸில் தோழர் ஏ.கே.அப்துல் ரஹீம் சாயபு அவர்களை ஏன் நிறுத்தினார்கள் என்பதை முஸ்லீம் தோழர்கள் யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

ஜனாப் அப்துல் ரஹீம் அவர்கள் சமீப காலம்வரை ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாளராய் இருந்தவர், தனித்தொகுதி விரும்பாத “கயவர்” அல்லாதவரும் அல்ல. அத்தொகுதிக்கு ஜஸ்டிஸ் கட்சியோ, வேறு முஸ்லீம் அல்லாதவர்கள் கட்சியோ அபேக்ஷகரை நிறுத்தவும் இல்லை. அப்படி இருக்க முஸ்லீம் லீக்கையும் ஒழிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஏன் கங்கணம் கட்டுகின்றது என்று கேட்கின்றோம். ஆகவே சுயமரியாதையும் சமூக பக்தியும் உள்ள முஸ்லீம் ஓட்டர்கள் தங்கள் சமூகத்தையும் முஸ்லீம் லீக்கையும் காட்டிக் கொடுக்காமல் கான்சாஹிப் ஷேக்தாவுது அவர்கள் தேர்தலில் காங்கிரசுக்கு நல்ல புத்தி கற்பிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்வதோடு முஸ்லீம் சமூகத்தில் தனித்தொகுதி விரும்புகிறவர்களை பதவி வேட்டைக்கார கயவர்கள் என்று சொன்னதற்கும் பரிகாரம் தேடி சுயமரியாதை அடைவார்கள் என்று நம்புகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 07.02.1937

You may also like...