ஐயோ, பட்டாபிஷேகம் நின்று விடுமே! பொம்மனுக்கும் – திம்மனுக்கும் சம்பாஷணை
– சித்திரபுத்திரன்
~cmatter
பொம்மன்:- ஐயோ! பட்டாபிஷேகம் நின்று விடுமே! இனி நமக்கு ராஜாவே இல்லாமல் போய் விடுமே! நாம் என்ன செய்கிறது?
திம்மன்:- ஏன் – ஏன் அப்படி அழுகிறாய்? அழாதே.
பொ:- இல்லே-ஏ காங்கிரசில் பட்டாபிஷேகத்தை பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்களே ராஜகுடும்பத்தார் இதை லட்சியம் செய்யாவிட்டாலும் பார்லிமெண்டார் இதை லட்சியம் செய்து பட்டாபிஷேகத்தை நிறுத்தி விடுவார்களே! பிறகு நமக்கு ராஜா வேண்டாமா? அதுதான் அழுகை ஆனந்தக்கண்ணீராய் வடிகிறது.
தி:- அட போடா மடையா! யாரோ பட்டாபிஷேகத்தை பஹிஷ்கரித்தால் யாரோ நிறுத்திவிடுவார்களா? உனக்கு புத்தியில்லையா? இதற்காக அழுகிறாயே.
பொ:- யாரோவா? ஜவஹர்லால் என்ன, சத்தியமூர்த்தி என்ன? கமலாதேவி என்ன இப்படிப்பட்ட தேசாபிமான ரத்தினங்கள் தீர்மானித்திருக்கிறார்கள்! அதுவும் 1000000000 இன்னம் எத்தனையோ சைபர் கொண்ட ஜனங்கள் கைதூக்கி இருக்கிறார்கள்! அப்படி இருக்க பட்டாபிஷேகம் எப்படி நடக்கும்?
பொ:- நமக்கு ஆகத் தீர்மானித்திருக்கிறார்களே ஒழிய பிரிட்டிஷாருக்கு ஆக தீர்மானிக்கவில்லை. அதற்கு உதாரணமாக அரசாங்கத்தாரால் கூப்பிடப்படாதவர்கள் போகப் போவதும் இல்லை. போவதானாலும் உள்ளே விடப்படப் போவதும் இல்லை. இது விஷயத்தில் ஏன் இவ்வளவு துக்கம்?
தி:- தேச ஜனங்கள் பஹிஷ்கரித்து விட்டால் பெரிய அவமானமல்லவா சர்க்காருக்கு?
பொ:- என்ன அவமானம்? பட்டாபிஷேகம் நடப்பதற்கு முன்பாகவும் சீர்திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவும் இந்தியமக்களின் சரியான பிரதிநிதிகளான சட்ட சபை அங்கத்தினர்களை இந்தியாவில் ஆங்காங்குள்ள அரசாங்க மாளிகைகளுக்கு கூப்பிட்டு அரசப் பிரதிநிதிகளின் ஆட்களின் முன்னிலையில் அரசர் பட்டாபிஷேகத்தையும் அரசரையும் அரசர் உத்திரவாகிய சட்டங்களையும் பகிஷ்கரிக்கிறீர்களா? பக்தி செலுத்துகிறீர்களா? சத்தியமாய்ச் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அப்பொழுது நமது பிரதிநிதிகள் தலைவர்கள் உள்பட அங்குள்ளவர்கள் முடி சூட்டிக்கொள்ளும் அரசரிடம் பக்தியாய் இருக்கிறோம், அரசர் அனுமதிக்கிற சட்டங்களிடம் பக்தியாய் கட்டுப்பட்டு நடக்கிறோம், அரசரின் பின் சந்ததியார்களிடமும் பக்தியாய் இருக்கிறோம், சத்தியமாய் – பிரமாணமாய் – எங்கள் இஷ்ட தேவதை சாட்சியாய் பக்தியாய் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள். அதற்கப்புறம் தான் பட்டாபிஷேகம் நடக்கும். நீ ஏன் வீணாய் அழுகிறாய்? துக்கப்படாதே! நமக்கு ராஜா உண்டு.
தி:- பின்னை ஏன் இப்படிச் செய்தார்கள்?
பொ:- எப்படிச் செய்தார்கள்? பட்டாபிஷேகத்தையும் சீர்திருத்த சட்டத்தையும் பகிஷ்கரித்தார்கள்.
தி:- அதெல்லாம் சும்மா எகப்சு எகேசு, உடான் விட்டுப்பார்க்கிறது.
பொ:- யாருக்காக இப்படி கப்சு கேசு, உடான் விடுகிறது?
தி:- உன்னைப்போல் முட்டாள்கள் நம்பி ஓட்டுப் போடுவீர்கள் என்பதற்கு ஆகத்தான். பக்கத்தில் எலக்ஷன் வருகிறதல்லவா? அதற்கு ஆகத்தான். வேறு என்ன?
பொ:- இதற்கு ஆகவா ஒரு காங்கிரசு நடத்துவது? “லட்சம்” பேர் கூடுகிறது. எவ்வளவு செலவு? எவ்வளவு தொல்லை? தோழர் சத்தியமூர்த்தி சொசைட்டி அங்கு குளிரில் எவ்வளவு கஷ்டம்?
தி:- இதுதானா பிரமாத கஷ்டம்? மாமாங்கத்துக்கு போய் இருக்கிறையா? எச்சில், மூத்திரம் கலந்த சேற்றுத் தண்ணீரை எடுத்துப் பூசிக் கொள்ள எத்தனை கஷ்டம்? எத்தனை ஜோடி கலைந்து போய் விட்டது? எவ்வளவு நஷ்டம்? இவற்றைப் பார்த்தால் காங்கிரசு ஒரு பெரிய கூட்டமா? அதன் லட்சியம் மகா பித்தலாட்டமா?
பொ:- சரி, சரி எனக்குப் புரிந்தது. நான் வெள்ளை ஆசாமி, கருத்ததெல்லாம் பாலு, வெளுத்ததெல்லாம் இங்கி என்று நம்பிக்கொண்டிருக்கிற சாது. அதனால் ஏமாந்து போய் விசனப்பட்டு விட்டேன். தேங்யூ!
குடி அரசு – உரையாடல் – 17.01.1937