தேர்தல் தொல்லை

 

ஜஸ்டிஸ் இயக்கம் ஏற்பட்டு சுமார் 20 வருஷம் ஆகின்றது. அக்கட்சிப்பிரமுகர்கள் பதினாறு வருஷகாலமாய் அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள். அதன் பயனாக அக்கட்சியின் முக்கிய கொள்கைகளான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதிலும் அனுபவ சாத்தியமான கிளர்ச்சியால் தகுதியுள்ள அளவுக்கு அரசியல் முன்னேற்றம் பெறுவது என்பதிலும் சிறிதும் பிற்போக்கில்லாமல் கூடுமானவரை பலன் ஏற்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை. பதினாறு வருஷகாலம் அதிகாரத்தில் இருந்து வருகிற இயக்கம் எதுவானாலும் பாமரஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்தான்.

அதுவும் மக்களின் நித்திய வாழ்க்கைத் திட்டங்களில் கலந்துள்ள அதிகாரத்துவம் எப்படிப்பட்டதானாலும் எவ்வளவு நன்மை பயப்பதானாலும் பாமரமக்களின் மகிழ்ச்சிக்குப் பாத்திரமாவது என்பது மிக மிக கஷ்டமான காரியமேயாகும். அதுவும் முக்கியமாக நம் நாட்டில் அது முடியாத காரியம் என்றே தான் சொல்லித் தீரவேண்டும். ஏனெனில் பொது மக்களில் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாதவர்கள். மற்றும் பல மதம், பல ஜாதி, பல உள் வகுப்பு என்று சின்னா பின்னமாய்ச் சிதைந்து கிடப்பவர்கள். மேலும் வெகுகாலமாகவே தாழ்த்தப்பட்டு அடிமைப்பட்டு கிடந்ததோடு அதிகாரத்தின் பொறுப்பையும் நன்மையையும் அறியாதவர்கள் ஆவார்கள். ஆதலால் தான் இப்படிப்பட்ட மக்களை எவ்விதமான பொது நன்மை பயக்கும் நல்ல ஆட்சியும் திருப்தி அடையச் செய்வதென்றால் அது சிறிதும் முடியாத காரியமென்கின்றோம்.

சாதாரணமான நிலைமையிலே அதிகாரத்தில் இருப்பவர்களே மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பது கஷ்டம் என்றால் பொது ஜனங்களிடம் கூடிப் பழக முடியாதவர்களும் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாதவர்களும், பல காரணத்தால் தங்கள் சொந்த காரியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியவர்களும், சொந்தக் காரியங்களுக்காக பொதுஜன சேவைக்கு என்று அடைந்த பதவிகளையும் அதிகாரங்களையும் பயன்படுத்தித் தீரவேண்டிய அவசியமுள்ளவர்களும் தலைவர்களாகவோ, அதிகாரஸ்தர்களாகவோ இருக்க நேர்ந்து விட்டால் பிறகு அவ்வதிகார வாழ்க்கையின் ஆயுளை நாம் நிர்ணயிக்கவே தேவை இருக்காதென்றே சொல்லுவோம். ஏன் இப்படி சொல்லுகிறோம் என்றால் மேல்காட்டிய குணங்கள் இல்லாத தலைவர்கள் கிடைப்பது என்பது எந்த இயக்கத்துக்கும் சுலபமான காரியமல்ல.

இந்த லட்சணத்தில் தலைமைத் தலைவர் போட்டிக்கு ஒருவரையொருவர் காலை வாரிவிடக் கருதி விட்டால் என்ன ஏற்படும் என்பதை ஒருவர் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றோம். கிட்டத்தட்ட 10 வருஷகாலமாகவே ஜஸ்டிஸ் கட்சி சார்பாய் அதிகாரத்தில் இருந்த தலைவர்களின் நிலைமை இப்படியே இருந்து வந்திருக்கிறது என்பது பொதுமக்களில் பலர் அறியாததல்ல.

மேல் குறிப்பிட்ட காரியங்கள் எந்தக் கட்சிக்கும் இயற்கை என்றாலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு தானாகவே இயற்கையாக மாத்திரம் அல்லாமல் செயற்கையாகவும் ஏற்பட்ட அசெளகரியங்களாகும் என்பது ஒரு புறமிருக்க,

இனி எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளையும் அவற்றை லட்சியம் செய்யாமலும் அவற்றிற்கு பரிகாரம் தேடாமலும் இருந்து வந்தால் ஏற்பட்ட அசெளகரியங்களையும் பார்த்தால் அக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) இன்று எவ்வளவு நெருக்கடியான நிலைமையில் இருக்கவேண்டும் என்பது யோசிக்காமலே விளங்கும்.

நம் நாட்டில் அதாவது தமிழ் நாட்டில் மேல் ஜாதிக்காரர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் சமூகமானது மதத்தின் காரணமாகவும் சமுதாயத்தின் காரணமாகவும் அரசியல் காரணமாகவும் மிகவும் பலமும் கட்டுப்பாடும் பெற்றுள்ள சமூகமாகும். அச்சமூகத்தின் ஆதிக்கத்திலும் அடக்குமுறையிலும் இருந்து விலகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதாகும். அவ்விடுதலையானது சமூகத் துறையிலும் மதத் துறையிலும் அரசியல் துறையிலும் பெற வேண்டியிருப்பதால் முன் குறிப்பிட்டது போல் இம்மூன்று துறைகளும் பன்னெடுங்காலமாகப் பார்ப்பனரின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்து வந்திருப்பதால் அதன் காரணமாகவே தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பார்ப்பனருக்கு அடிமைப்பட்டிருந்து வருவதால் ஜஸ்டிஸ் கட்சியின் நிலை மிகவும் எதிர் நீச்சமாகவும் தலை கீழ் ஏற்றமானதாகவும் இருந்து வருகிறது கொண்டு மேலும் மிக்க அசெளகரியமானதென்றே சொல்லலாம்.

இந்த நிலையில் பார்ப்பனர்களுடைய சர்வ வல்லமை உள்ள எதிர்ப்பிலும் தொல்லையிலும் அவர்கள் (பார்ப்பனர்கள்) காங்கிரஸ் என்னும் ஸ்தாபனத்தை ஏற்படுத்திக்கொண்டு அதை தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்துக்கொண்டு செய்த சூழ்ச்சிகளிலும் சளைக்காமல் இந்த 16 வருஷகாலமாய் ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்தில் இருந்து வந்தது ஆச்சரியமான காரணம் என்று சொல்லலாமானாலும் அதிகாரத்தில் இருந்த தலைவர்களும் இக் கட்சியினால் பட்டம், பதவி பயன் பெற்று வந்த தலைவர்களும் ஒழுங்காய் நடந்து வராத காரணத்தால் சமீபத்தில் நடக்கப்போகும் தேர்தல் அதிகமான கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கிறது என்பதை மறைக்காமல் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதற்கு ஆக யாரும் பயந்து விட வேண்டியதில்லை என்பதையும் கஷ்டம் எவ்வளவு இருந்த போதிலும் முடிவில் வெற்றி நமதே என்பதையும் நாம் உற்சாகத்துடனும் உறுதியுடனும் கூறுகிறோம்.

இன்றைய தேர்தல் என்பது விளையாட்டுக் காரியமல்ல. பொது தொகுதிகள் என்பவைச் சராசரி ஒவ்வொன்றும் 50ஆயிரம் ஓட்டர்களைக் கொண்டது என்று சொல்லலாம். இந்த ஓட்டர்களில் பெரும்பாலோருக்கு ஜஸ்டிஸ் கட்சி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வசதி இல்லை என்பதோடு தலைவர்கள் நடந்து கொண்ட அலட்சிய புத்தியால் கட்சியால் ஏற்பட்ட நன்மைகளை அறியாதவர்களாகவும் எதிரிகளின் விஷமப் பிரசாரத்தால் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த மக்கள் தீமைபுரிந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

இந்த பதினாறு வருஷ காலத்துக்கு கட்சிப் பத்திரிகைக்காக என்று மாதம் 4000 முதல் 5000 செலவாகி இருந்தபோதிலும் அப்பத்திரிகைகள் பாமர மக்களை உத்தேசித்து நடத்தப்படாமல் இருந்துவிட்ட காரணத்தாலும் 3, 4 வருஷகாலமாக சுதேச பாஷைப் பத்திரிகை இல்லாத காரணத்தாலும் பாமர மக்கள் உள்ளத்தில் எதிரிகளால் விஷம் பாய்ச்சப்பட்டதை பரிகரிக்க எவ்வித முயற்சியும் செய்யாமலே போய்விட்டது என்று சொல்வதில் கட்சித் தலைவர்கள் வருத்தப்படக்கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். அதோடு கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் மீதே பல தலைவர்களுக்கு அதிக கண் இருந்து அவர்களை (தொண்டர்களை) செல்வாக்கற்றவர்களாக ஆக்கும் வேலை சில தலைவர்களுக்கும் முக்கிய காரியமாய் அமைந்து விட்டதால் தொண்டர்கள் முயற்சியும் தக்க பலனளிக்க முடியாததாய் விட்டது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. சுயநலம் கோராமல் கட்சிக்கு என்று ஒத்துழைத்த பிரமுகர்கள் பலர் நடுநிலைமையும், நேர்மையும் கொண்டிருந்த காரணத்தாலேயே அவர்கள் மீது சந்தேகப்பட்டு அவர்களுக்கு போதிய ஆதரவளித்து வராத காரணத்தால் அப்படிப்பட்டவர்களது உற்சாகமும் குறைந்து கொண்டே வந்துவிட்டதுடன் புதிய மந்திரிசபை அமைப்பதில் “தனக்கு மந்திரி பதவி கிடைக்க வழியுண்டா” என்று சிலர் பார்க்கிறதைவிட கட்சி மெஜாரிட்டியாய் வரவேண்டும் என்கிற கவலை அதிகமாக இல்லாததால் கூட்டுப் பொறுப்பும் குறைந்து வருகிறது.

எதிரிகளாயிருப்பவர்கள் பொதுமக்களிடம் ஏராளமாகப் பணம் பறிக்கவும் ஒழுக்கமும் நேர்மையும் இல்லாத ஆட்களையும், ஜஸ்டிஸ் கட்சியில் தங்களின் சுயநலம் வெற்றிபெறவில்லை என்று கருதி அக்கட்சியின் மீது நிஷ்டூரப்பட்ட ஆட்களையும் யோக்கியம், அயோக்கியம், தராதரம் என்பவைகளைச் சிறிதும் கவனியாமல் சேர்த்துக் கொண்டு பணத்தை கண்மூடி இறைத்து பத்திரிகைகளையும் சரிகட்டிக் கொண்டு சரமாரியாய் பொய்யும் புளுகும் கலந்து பிரசாரம் செய்து வந்திருக்கிறதினாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாமர மக்களின் நல்லபிப்பிராயத்தைப் பெறுவது என்பது விளையாட்டான காரியமாக இருக்க முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்வளவு கஷ்டம் இருந்த போதிலும் வெற்றி நம்முடையதுதான் என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை. எப்படிப்பட்ட கஷ்டமான நிலைமையிலும் எவ்வளவு அசெளகரியத்திலும் எவ்வளவு எதிர்ப்புத் தொல்லையிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம் என்பதை எடுத்துக்காட்டவே இவைகளைக் குறிப்பிடுகிறோமே ஒழிய வேறில்லை.

தேர்தலில் பணச்செலவு இருக்கிறது என்பதையும் அதற்கு ஆகப் பயந்துவிடக்கூடாது என்பதையும் முதலிலேயே ஞாபகப்படுத்துகிறோம். அந்த பணச்செலவும் பணக்காரர் என்பவர்கள் நின்றால் அதிகச் செலவும் சாதாரண மக்கள் என்பவர்கள் நின்றால் குறைந்த செலவும் என்கின்ற முறையில் எதிர் பார்க்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜில்லாபோர்ட்மெம்பர் தேர்தல்களுக்கே ஒவ்வொன்றுக்கு 25ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய்கள் செலவாகி இருக்கின்றன. இந்த சட்டசபை தேர்தல்களும் இந்த செலவிற்கு இளைத்தல்ல என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு செலவழித்தும் தேர்தல் நடந்த பிறகு வெற்றி தோல்விதான் பிரதானமாகி விடுகின்றனவே ஒழிய செய்யப்போகும் காரியம், கொள்கை என்பவைகள் பெரிதும் எல்லாக் கட்சிக்குமே மறக்கப்பட்டு விடுகின்றன. மற்றும் சில தேர்தல் போட்டிகள் இன்று சமூக துவேஷங்களையும் தனிப்பட்ட பொறாமை குரோதம் ஆகியவைகளையுமே அடிப்படையாகக் கொண்டு நடைபெற வேண்டியதாகவும் ஏற்பட்டுவிடுகின்றன.

எவ்வளவோ கஷ்டப்பட்டு தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெற்றி பெற்ற பிறகு ஏதோ இரண்டொருவருக்கு மந்திரிவேலையும் ஏதோ இரண்டொருவருக்கு உத்தியோக சிபார்சு வெற்றியும் அல்லாமல் மற்றபடி சுதந்திரமோ, சொந்தப் புத்தியோ இல்லாமல் தலைவர்கள் என்பவர்களுக்கு கைதூக்க வேண்டியதைத் தவிர வேறுகட்சித் தொல்லைகளின் பயனாய் நல்ல பலன்கள் உண்டாக்க முடிவதில்லை என்பதும் அனுபவத்தில் கண்ட காரியமேயாகும்.

பொது ஜனங்களிடம் இருந்து வசூலித்த பணத்தை காங்கிரசு அபேட்சகர்கள் என்பவர்களுக்காக செலவழிக்கப்படுவதாலும் கட்சித் தலைவர்கள் என்பவர்களின் சொந்தப்பணம் கட்சி அபேட்சகர்கள் என்பவர்கள் பலருக்கு செலவு செய்யப்போவதாய் தெரியவருவதாலும் சொந்தப்பணம் செலவு செய்து வெற்றி பெறுகின்ற மற்றவர்களுக்கு இரு கட்சியிலும் மதிப்பிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆதலால் ஒரு பொது கெளரவத்துக்கு ஆசைப்படுகின்றவர்களுக்கும் தனிப்பட்ட சுயநலத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும்தான் சட்டசபை வெற்றி பெரிதும் பயன்படுமே ஒழிய கொள்கைகளுக்கு அதிகம் பயன்படுமா என்பது நமக்கு மயக்கமாகவே இருந்து வருகிறது.

ஏனெனில் கொள்கை இல்லாததும் சுயநல வகுப்பு ஆதிக்கத்துக்குப் பாடுபடுவதுமான காங்கிரசானது தேர்தலுக்கு கொள்கை தேவை இல்லை என்றும் அபேட்சகர்களின் தகுதி கவனிக்கப்பட வேண்டியதில்லை என்றும் பிரசாரம் செய்வதைப் பொது மக்கள் அனுமதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடக்கூடும் என்பதை இதிலிருந்தே அறியலாம்.

அது போலவே ஜஸ்டிஸ் கட்சியும் தனிப்பட்ட தலைவர்கள் தங்கள் தங்கள் பலத்துக்கு என்று ஆட்கள் சேர்க்க ஆரம்பித்தால் அதனால்தான் என்ன காரியம் பலத்தோடு செய்ய முடியும் என்பதும் ஒரு யோசிக்கத்தக்க விஷயமாகும்.

இத்தேர்தல்களுக்கு பெருவாரியாகப் பணம் செலவழிக்கப்படுவதானது நமக்கு இஷ்டமில்லாத காரியம் என்பதோடு பணத்தால் பெறும் வெற்றி பணத்தின் பிரதிநிதித்துவமாகத்தான் விளங்குமே ஒழிய மக்கள் பிரதிநிதித்துவமாக விளங்காது. அது போலவே காலித்தனத்தாலும், பொய் பித்தலாட்டம் ஆகியவைகளால் பெறும் வெற்றி காலித்தனத்துக்கும் பொய் பித்தலாட்டத்துக்கும் பிரதிநிதித்துவமாய் விளங்குமே தவிர மக்களுக்கும் பிரதிநிதித்துவமாய் விளங்காது. ஆகையால் பணச் செலவில்லாமலும் பொய் பித்தலாட்டம் பிரசாரமில்லாமலும் தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்பது நமது ஆசை.

பணச்செலவும் காலித்தனமும் பொய் பித்தலாட்ட பிரசாரமும் இல்லாமல் எலக்ஷன் காரியங்களும் வெற்றி தோல்விகளும் நடக்குமா? நடக்கும் காலம் வருமா என்பது இன்றைய எலக்ஷன் வெற்றி தோல்வியைவிட நமக்கு அதிக கவலையைக் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் பார்ப்பனரல்லாத மக்கள் இந்தச் சமயம் தங்களுக்குள்ள சகல அபிப்பிராய பேதங்களையும் சுயநலங்களையும் சொந்த விருப்பு வெறுப்புகளையும் மறந்து வஞ்சகமில்லாமல் உண்மையோடு உழைக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 17.01.1937

You may also like...