காந்தியார்
இனியும் உங்களுக்கு காந்தி பைத்தியமா?
இன்று காங்கிரசின் பேரால் தேர்தலில் நிற்கும் பித்தலாட்டக்காரர்கள் காந்தி பெயரைச்சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள்.
ஆனால் நாம் இந்த 3 வருஷ காலமாகவே காந்தியாருக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி வருகிறோம். அதை பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் மறைத்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் – வருகிறார்கள்.
அப்படிப்பட்ட புரட்டுகளை வெளியாக்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். அதாவது 22.1.37ந் தேதி தோழர் காந்தியாரை சென்னையில் “சுதேசமித்திரன்” நிருபர் பேட்டி கண்டு பேசியபோது அவர் சொன்னதாவது:-
“ராஜீய விஷயத்தில் எனக்கு சிரத்தை கிடையாது.” “அவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு இஷ்டம் இல்லை.” “உண்மை சத்தியாக்கிரகி என்கிற முறையில் இதை சொல்லுகிறேன்.”
“வரப்போகும் தேர்தல் முடிவுகள் உத்தியோக பிரச்சினைகள் முதலிய விஷயங்களில் எனக்கு எவ்வித அபிப்பிராயமும் இல்லை” என்று பேசி இருக்கிறார்.
(இவ்வாக்கியங்கள் 22.1.37ந் தேதி “சுதேசமித்திரன்” 6-வது பக்கம் 3-வது கலம் “சென்னையில் காந்திஜீ”, “அரசியல் விஷயங்கள்” என்கின்ற தலைப்பில் இருக்கிறது.)
காந்திக்கு ஜே சொல்லியோ, காந்திஜீ பேர் சொல்லியோ அவர் ஓட்டுக்கேட்டதாகச் சொல்லியோ ஓட்டுக் கேட்பவர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் மோசக்காரர்கள் என்பதை உணர்ந்து உங்கள் ஓட்டுகளை பயன்படுத்துங்கள் என்று என்பதை ஞாபகப்படுத்தவே இதை “சுதேசமித்திர”னில் கண்டபடி எடுத்துக் காட்டுகிறோம்.
மற்றும் பேசியதாவது:-
அரசியலுக்கு திரும்பும் உத்தேசம் தனக்கு இப்போது இல்லை என்றும், அரசியல் போராட்டத்தை சட்ட சபையிலோ வெளியிலோ நடத்தவும் சட்ட மறுப்பை மறுபடியும் ஆரம்பிக்கவும் அவருக்கு உத்தேசமுண்டா? என்று நிருபர் கேட்டதற்கு காந்தியார் நான்(தான்) 4 அணா அங்கத்தினராகக்கூட இல்லை என்றும் அதைப்பற்றிப் பேச தனக்குத் தகுதி இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
இந்த தகவலும் 22.1.37ந் தேதி “சுதேசமித்திரன்” 3-வது கலம் கடசி வாக்கியமாகவும், 4-வது கலம் தொடர்ச்சி வாக்கியமாகவும் காணக்கிடக்கின்றது.
குடி அரசு – செய்தி விமர்சனம் – 24.01.1937