“விடுதலை” நாளேடாகியது!

 

 

1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படி போட்டியிட்டு சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது என்ற உறுதிமொழியைக் கேட்டது. சில மாதங்கள் அமைச்சரவை அமைக்க மறுத்து நாடகமாடியது. ஆளுநர் உறுதிமொழி ஏதும் தராத நிலையிலேயே காங்கிரஸ் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைச்சரவை அமைக்க முன் வந்தது. எனவே இதற்கு “சரணாகதி” அமைச்சரவை என்று பெரியார் பெயர் சூட்டினார். சரணாகதி அமைச்சரவை நடத்திய பார்ப்பன ஆட்சியை எதிர்த்து பெரியார் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் போர் முரசு கொட்டிய காலம் இது. சரணாகதி அமைச்சரவையையும், காங்கிரசையும் – காங்கிரசிடம் அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்ட பார்ப்பனரல்லாதார்களையும் அனல் பறக்கும் விவாதங்களால் அம்பலப்படுத்தி, காங்கிரசின் சூழ்ச்சிக்குப் பலியாகி விடாதீர்கள் என்று பார்ப்பனரல்லாத மக்களை எச்சரிக்கும் பெரியாரின் தலையங்கங்களும் எழுத்துக்களுமே இத் தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன.

பெரியார் தனது இளமைக்கால வரலாற்றை தன் வரலாறாகப் பதிவு செய்துள்ள முக்கியத்துவமிக்க கட்டுரை – “சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

பல முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பெரியார், சுயமரியாதை இயக்கமும், முஸ்லீம் – ஆதி திராவிடர் – கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். “சுயமரியாதை இயக்கத்தை ஆதரிக்கவோ, தழுவவோ வரும் முஸ்லீம்களுக்கும், மற்றவர்களுக்கும் இயக்கத்தின் பேரால் நான் ஒன்று சொல்லுகிறேன். அதாவது சுயமரியாதை இயக்கத்துக்கு என்று வகுத்திருக்கும் கொள்கைகளில் நாஸ்திகம் ஒரு கொள்கையாகவோ, நிபந்தனையாகவோ குறிப்பிட்டிருக்க வில்லை” என்று கூறும் பெரியார், மூடநம்பிக்கைகளையும், சடங்குகளையும் ஒழித்து அனைத்து துறைகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே சுயமரியாதை இயக்கம் என்று வரையறுக்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சுழற்சி முறையின் கீழ், முதன் முதலாக சிவசண்முகம் என்ற ஆதி திராவிடர் மேயரானார். நீதிக்கட்சியில் வளர்ந்தவர் தோழர் சிவசண்முகம். அப்போது சென்னை மாநகராட்சி காங்கிரசிடம் இருந்தது. காங்கிரசில் ஆதி திராவிடர் உறுப்பினராக இல்லாத நிலையில், தோழர் சிவசண்முகம் காங்கிரசில் உடனே சேர்க்கப்பட்டு மேயராக்கப்பட்டார். காங்கிரசை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தாலும், பெரியார் இதை வரவேற்றார். “மேயர் தேர்தலில் காங்கரஸ் வெற்றி பெற்றதால் நாம் எவ்வித அதிருப்தியும் அடையவில்லை. ஏனெனில் ஒரு ஆதி திராவிடர் மேயரானது உலக சரித்திரத்தில் இதுவே முதல் தடவை” என்று எழுதினார். “எப்படி ஆனாலும் சரி; நம் காலத்தில் இரண்டு ஆதி திராவிடர்களை மந்திரிகளாகவும், ஒரு ஆதி திராவிடரை மேயராகவும் பார்த்து விட்டோம்” என்று பூரிப்போடு எழுதிய பெரியார் – இது, தாம் வலியுறுத்தி வந்த “வகுப்புவாத” உரிமைக்கு கிடைத்த வெற்றி என்றார். (“குடி அரசு” 14.11.37)

இதே தலையங்கத்தில் பெரியார் சுட்டிக்காட்டும் மற்றொரு கருத்து மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

“தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு நாம் ஆரம்பம் முதலே சொல்லி வந்திருப்பது என்னவென்றால் நன்றி விசுவாசம் காட்டக்கூடிய சவுகரியமான நிலையில் அவர்கள் இல்லை என்றும், எப்படியாவது தங்களுக்கு காரியமானால் போதும் என்கிற கொள்கையே இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்க வேண்டும் என்றும் சொல்லி வந்திருக்கிறோம். இப்போது நடைமுறையில் சொல்லப்படும் நன்றி விசுவாசம் என்பதும் ஒரு முதலாளித் தன்மையேயாகும்” – என்று குறிப்பிடுகிறார்.

“ஆதி திராவிடர் மகாநாடென்று ஒரு மகாநாடு அவசியமா? என்று பல தேச பக்தர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களை நான் ஒன்று கேட்கிறேன். அதாவது ஆதி திராவிடர் என்று ஒரு மனித சமூகம் இருக்க வேண்டியது அவசியமா என்று கேட்கின்றேன்” என்று கேட்கும் பெரியார்.

“ஜாதி பேதம் ஒழிவதாலும், மேல்ஜாதி – கீழ் ஜாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசீயம் கெட்டுப் போகுமானால், சுயராஜ்யம் வருவது தடைபட்டுப் போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராஜ்யமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல் என்று சொல்லுவேன்” (குடி அரசு 18.07.1937) என்கிறார்.

முஸ்லீம்கள் மாநாட்டில் பங்கேற்று பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் தொடங்கிய அய்ந்தாண்டு காலத்திலேயே அதன் பார்ப்பனப் போக்கை புரிந்து கொண்ட முஸ்லீம்கள் முதன்முதலாக தங்களது உரிமைக்கு போர்க்கொடி உயர்த்தி போராடி வெற்றி பெற்ற வரலாற்றை குறிப்பிடும் பெரியார் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவானதற்கு முன்னோடியாக விளங்கியதே முஸ்லீம்கள்தான் என்று சுட்டிக் காட்டுகிறார். முஸ்லீம்கள் அரசியல் உரிமையைப் பெற்றதால் தான், வங்காளத்தில் காங்கிரசார் கிளர்ச்சிகளைத் தொடங்கினர் என்று கூறும் பெரியார், ஜின்னாவின் பெருமைகளை எடுத்துக் கூறி, அவரை குறை கூறும் காங்கிரசார் அவரது கால் தூசிக்குக் கூட சமமாக மாட்டார்கள் என்கிறார். (குடி அரசு, 24.11.1937)

நாமக்கல் வட்ட சுயமரியாதை மாநாட்டில் பெரியார் நிகழ்த்திய உரை இத்தொகுப்பில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், காங்கிரசின் பார்ப்பன ஆதிக்க அரசியலையும் படம் பிடிக்கும் கருத்துக் கருவூலமாக அந்த உரை திகழ்வதை வாசகர்கள் உணர முடியும்.

“விடுதலை” நாளேடாக வெளிவரத் தொடங்கியது, இதே காலகட்டத்தில்தான். “விடுதலை”யின் முக்கிய தலையங்கங்கள் “குடி அரசில்” மறு வெளியீடு செய்யப்பட்டிருப்பதை, வாசகர்கள் கவனிக்கலாம்.

குடி அரசு – பொதுவுடைமைக் கொள்கைகளை கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் பெரியார், “அந்த எண்ணத்திலிருந்து “குடி அரசு” சிறிதும் மாற்றமடையவில்லை” என்று தெளிவுபடுத்துகிறார். இப்படி “குடி அரசு” மீது குற்றம் கூறும் தோழர்கள் பொது உடைமை கொள்கையை ஒழிப்தையே முக்கிய கவலையாகக் கொண்ட தலைவர்களுக்கு “ஜே” போட்டுக் கொண்டிருப்பதை பெரியார் சுட்டிக் காட்டுகிறார். (குடி அரசு 15.8.37)

தோழர்கள் சிங்காரவேலரும், ஜீவானந்தமும் 1936 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசில் இணைந்து அக்கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்திய கட்டாய இலவசக் கல்வியை ஒழிக்கும் காங்கிரசின் திட்டம், பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பு, சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தியதற்காக பள்ளிக் கூடங்களை மூடியது போன்ற ஆச்சாரியார் ஆட்சியின் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் அரிய தலையங்கங்கள் இத் தொகுப்பு முழுதும் விரித்துள்ளன.

சட்டசபைக் கூட்டத்தில் “வந்தே மாதரம்” பாட வேண்டும் என்ற காங்கிரஸ் ஆட்சியின் முடிவை எதிர்த்த முஸ்லீம் உறுப்பினரை சட்டமன்றத்தில் காங்கிரசார் மன்னிப்பு கேட்க வைத்தார்கள். “வந்தே மாதரம்” முழக்கம் இந்து வெறியுடன் முன் வைக்கப்பட்டதை “ஆனந்த மடம்” நாவலிலிருந்து “குடி அரசு” எடுத்துக்காட்டி கண்டித்தது.

பாரதியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றும் (குடி அரசு, 17.10.1937) “பாரதி ஆராய்ச்சி” எனும் தலைப்பில் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

தொடர் வண்டிப் பயணத்தில் பெரியாரும் – கண்ணப்பரும் பயணம் செய்தபோது, பார்ப்பனர் ஒருவர் குறுக்கிட்டுப் பேசிய சுவையான நிகழ்ச்சி ஒன்று இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. (குடி அரசு 12.9.1937)

சுயமரியாதை வீரர் மாயவரம் நடராசன் மறைந்ததும் “விடுதலை” நாளேடாக மலர்ந்ததும், “குடி அரசு” 13 – வது ஆண்டின் பயணத்தைத் தொடங்கியதும் இதே காலகட்டம்தான்

352 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பில் 77 தலைப்புகளில் பெரியாரின் கருத்தாழமிக்க எழுத்துகளும் – பேச்சுகளும் அலங்கரிக்கின்றன.

– பதிப்பாளர்

You may also like...