எல்லா மாகாணங்களிலும் காங்கிரசிற்குத் தோல்வி
சட்டசபை எலக்ஷன் நாள் நெருங்கிவிட்டது. காங்கிரஸ்காரர்களின் பிரசாரம் அளவிட்டுச் சொல்ல முடியாத மாதிரியில் நடைபெறுகின்றது. இன்னது தான் பேசுவது, இன்ன கொள்கையைத்தான் சொல்லுவது என்று இல்லாமல் குடிகாரர்கள் வெறிகாரர்கள் போல் வாயில் வந்ததை எல்லாம் உளறிவருகிறார்கள். எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்கின்ற கவலையால் எதை வேண்டுமானாலும் சொல்லவும் என்ன வேண்டுமானாலும் செய்யவும் காங்கிரசுக்காரர்கள் துணிந்து விட்டார்கள். தோழர்கள் சத்தியமூர்த்தியாரும் ராஜகோபால ஆச்சாரியாரும் தங்களால் கூடுமான அளவு எல்லாவித தந்திரங்களையும் கையாண்டு பார்த்து விட்டார்கள். பஞ்ச தந்திரத்தையும் கையாண்டுவிட்டார்கள். பார்ப்பனர்கள் கட்டுப்பாடாய் கூடி சகல முயற்சியும் செய்துவிட்டார்கள். இனிச் செய்ய வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை என்று சொல்லத்தக்க வண்ணம் செய்து இப்போதே ஓய்வடைந்துவிட்டார்கள் என்று கூடச் சொல்லலாம்.
இதன் பலன் மாத்திரம் சைபர் (0) என்பதை நாம் உணர்ந்து விட்டோம். அவர்களும் ஒரு அளவுக்கு உணர்ந்து தங்கள் ஸ்வரத்தை குறைத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த ஆத்திரத்தில் செய்வது இன்னது என்று தோன்றாமல் அலைகிறார்கள். இன்று வரை காங்கிரசுக்கு அனேக மாகாணங்களில் வெற்றிக் குறி கிடையவே கிடையாது; படுதோல்வியே ஏற்பட்டுவிட்டது.
அதாவது இந்தியா பூராவிலும் முக்கிய மாகாணங்களில் எல்லாம் இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டு விட்டது. தெளிவாக விளக்க வேண்டுமானால்,
வங்காளத்தில் 250 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு 45 ஸ்தானங்களே கிடைத்திருக்கின்றன.
பாஞ்சாலத்தில் – பஞ்சாபில் 175 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு தேர்தல் முடிவில் 10 ஸ்தானங்களே கிடைத்திருக்கின்றன.
அஸ்ஸாம் மாகாணத்தில் 108 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு 35 ஸ்தானங்களே கிடைத்திருக்கின்றன.
சிந்து மாகாணத்தில் 60 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு 12 ஸ்தானங்களே கிடைத்து இருக்கின்றன. காங்கிரஸ்காரர்கள் அவ்வளவுதான் எதிர்பார்த்தார்கள்.
ஐக்கிய மாகாணத்தில் 228 ஸ்தானங்களில் காங்கிரசு தங்களுக்கு 115 கிடைக்கும் என்று தான் சொல்லுகிறார்கள். ஆகவே அதுவும் எதிர்பார்ப்பதற்கு 2 ஸ்தானம் குறைந்தாலும் தோற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் காங்கிரஸ் பத்திரிக்கைகளே 12.2.37ந் தேதி “சுதேசமித்திர”னில் ஐக்கிய மாகாண தேர்தலில் முடிவு கூறப்பட்ட 18 ஸ்தானங்களுக்கு 13 ஸ்தானங்கள் தான் காங்கிரசுக்கு கிடைத்திருப்பதாய் குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே மற்ற எல்லா ஸ்தானங்களும் காங்கிரஸ் ஜெயித்தாலும் காங்கிரசுக்கு தோல்வியேயாகும். ஆனாலும் மொத்தத்தில் 228க்கு 100 ஸ்தானங்கள் கூட காங்கிரசுக்கு கிடைக்காது என்பது காங்கிரஸ் பத்திரிகைகளாலேயே ஜாடை காட்டப்பட்டுவிட்டது.
பம்பாயில் கண்டிப்பாக தோல்வி ஏற்படப் போகிறது. ஏனெனில் 26-1-37ந்தேதி “தினமணி”யில் தங்களுக்கு வெற்றி ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்ட மாகாணங்களில் பம்பாய் மாகாணத்தைச் சேர்க்காமல் விட்டுவிட்டிருக்கிறது.
சென்னை மாகாணத்தில் 215 ஸ்தானங்களுக்கு காங்கிரசுக்காரர்கள் 120 ஸ்தானங்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலைமையில் தமிழ் நாட்டைப் பொருத்தவரை காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர்கள் ஆகியவர்கள் ஸ்தானங்களில் 100க்கு 25 வீதம் கூட காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்லுவதற்கு இல்லாமல் இருக்கிறது. அவைகளில் கண்டிப்பாகப் பகுதிக்குக் குறையாமல் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடும் என்பதை இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம்.
இவற்றைத்தவிர, நிலச்சுவான் தொகுதிகளில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களிலும் 100க்கு 25 கூட கிடைக்க மார்க்கமில்லை என்பதை காங்கிரசே உணர்த்திவிட்டது.
இனி பொது தொகுதிகளில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட ஸ்தானங்களில் 100க்கு 75 வீதம் காங்கிரஸ் ஜெயிப்பதாகவே வைத்துக்கொண்டாலும் காங்கிரசுக்கு மொத்த 215 ஸ்தானங்களில் 80, 90 ஸ்தானங்கள் கிடைப்பது கூட மிக மிக கடினமாக ஆகிவிடும் என்பது குருடனும் அறியக்கூடிய சேதியாகும்.
இந்த நிலையில் தோழர் சத்தியமூர்த்தியார் செல்லுமிடங்களில் எல்லாம் தாங்களே ஆட்சிக்கு வரப்போவதாகவும் தானே கவர்னர் ஆகப்போவதாகவும் போலீசார்களை தூக்கில் போடப் போவதாகவும் அதிகாரிகள் பல்லைப் பிடுங்கப்போவதாகவும் ஜில்லாபோர்டுகள் பிரிக்கப்பட்டவைகளை ஒன்று சேர்த்து விடுவதை முதல் வேலையாய் பார்க்கப்போவதாகவும் மனதார உடான் விட்டு மக்களை மிரட்டி ஏமாற்றி கொண்டு வருகிறார்.
காங்கிரஸ்காரர்கள் சில அதாவது ஒன்று இரண்டு மாகாணங்களில் வெற்றி பெறுவதாகவே வைத்துக்கொள்ளுவோம். மந்திரி பதவி ஏற்பார்களா இல்லையா என்பது இன்னம் முடிவு செய்யவில்லை.
மந்திரி பதவி ஏற்பதாகவே வைத்துக்கொள்ளுவோம். அப்பதவியின் மூலம் செய்யக்கூடிய காரியம் என்ன என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம். சர்க்கார் (கவர்னர்) இஷ்டத்துக்கு விரோதமாய் எந்தக் காரியமும் செய்ய முடியாது என்பதை காங்கிரஸ்காரர்களே பல தடவை சொல்லி இருப்பதோடு அதன் பயனாகவே “சீர்திருத்தம் பயனில்லை” என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலைமையில் காங்கிரசுக்காரர்கள் நாட்டில் இவ்வளவு பெரிய குழப்பம் உண்டாக்கியதில் என்ன பயன் ஏற்படப்போகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
காங்கிரசு இதுவரை இந்த 50 வருஷகாலமாக நாட்டுக்கு உண்டாக்கிய நன்மை இன்னது என்று ஒரு விரல் விடக்கூடுமா என்று கேட்கின்றோம். காங்கிரஸ் மகத்தான தொண்டு செய்தது, தியாகம் செய்தது என்று தான் “சுதேசமித்திரன்” 4,5 தலையங்கம் தொடர்ந்து எழுதிற்றே ஒழிய ஒரு சிறு நன்மையாவது காங்கிரசு செய்ததாகவோ காங்கிரசால் ஏற்பட்டதாகவோ எடுத்துக்காட்டவில்லை. மக்களைக் கிளப்பிவிட்டு வெறும் தொல்லையை உண்டாக்கி அதிகாரிகளுக்கு அதிக அதிகாரமும் சம்பளப் பெருக்கமும் ஏற்படுத்தியதல்லாமல் ஒரு ஏழைக்கோ ஒரு குடியானவனுக்கோ ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனாவது ஏற்படும்படி செய்திருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
காங்கிரசின் பயனாய் வக்கீல்கள் (பார்ப்பனர்கள்) ஏராளமாய் உண்டானார்கள். அவர்கள் தாராளமாய்ப் பிழைக்கிறார்கள். அவர்கள் பிள்ளை குட்டிகளுக்கு ஏராளமாக உத்தியோகமும் சம்பளமும் கிடைத்து வந்தன என்பதல்லாமல் படித்தவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) உத்தியோகமும் பெரும் சம்பளமும் கிடைத்தது என்பதல்லாமல் வேறு என்ன பலன் ஏற்பட்டது என்று யார்தான் சொல்லமுடியும்?
1920ல் காந்தியார் வக்கீல்கள் பொது நல சேவை செய்ய அருகதை அற்றவர்கள் என்று சொல்லி அவர்களை காங்கிரசில் சேர்க்கக்கூடாது என்றும் பொது நல சேவைக்கு ஒரு வக்கீலை விட ஒரு சக்கிலி மேலானவன் என்றும் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்க, இப்போது மறுபடியும் அந்த வக்கீல் கூட்டங்களே காங்கிரசில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஓடி ஓடி ஓட்டு வேட்டை ஆடுகின்றன. ஓட்டு அறிக்கை வெளியிடுகின்றன. இதன் பயனாய் ஏற்படும் வெற்றி என்ன காரியத்திற்குப் பயன்படக்கூடும் என்பதை அறிவுள்ள மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டியதாகும்.
இவை ஒருபுறமிருக்க இந்த தேர்தல் பிரசாரத்தில் இருந்து வரும் பார்ப்பன சூழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை மானமுள்ள பார்ப்பனரல்லாதார் உணரவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
அதாவது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தோழர் டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரியாருக்கு ஓட்டு வேட்டை ஆடிவருகிறார். தஞ்சை ஜில்லாவில் அவர் செல்லுமிடங்களில், எல்லாம் தோழர் டி.ஆர்.வி. சாஸ்திரிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லி வருகிறார். சாஸ்திரியார் எந்தக் கட்சியை சேர்ந்தவர்? அவர் காங்கிரசுக்காரரா? என்று பார்த்தால் காங்கிரசுக்கு மாறுபட்ட எதிரான மிதவாதக்கட்சி என்பதும் ஒத்துழைப்புக் கட்சி என்பதும் விளங்கும். அவர் மிதவாத மகாநாட்டுக்கு இவ்வருஷம் கூட தலைமை வகித்து காங்கிரசின் கொள்கைகளைக் கண்டித்தவர். அப்படி இருக்க அவரை ஆதரிக்க வேண்டும் என்று தோழர் சி.ஆர். ஆச்சாரியார் பிரசாரம் செய்வதற்கு காரணம் அவர் பார்ப்பனர் என்பதற்கு அல்லாமல் வேறு என்ன காரணம் என்று கேட்கின்றோம். மேல் சபைக்கு தஞ்சை ஜில்லாவில் 3 ஸ்தானங்களுக்கு 2 ஸ்தானங்களுக்கு மாத்திரம் காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்தி ஒரு ஸ்தானம் காலியாகிவிட்டதற்குக் காரணமே தோழர் ஆர்.வி. சாஸ்திரியாருக்கு ஒரு ஸ்தானம் ஒதுக்குவதற்கு ஆகவே என்று யாவரும் எளிதில் உணரலாம். மற்றபடி தஞ்சை ஜில்லாவில் அந்த ஸ்தானத்துக்கு தகுதியுள்ள காங்கிரஸ்காரர் இல்லை என்று சொல்லி விட முடியுமா என்று யோசித்தாலும் விளங்காமல் போகாது.
மற்றும் சில குறிப்பிட்ட பார்ப்பனரல்லாதார் அபேட்சகர்கள் விஷயத்தில் காங்கிரசின் பேரால் செய்து வரும் எதிர்ப்பிரசாரத்தின் யோக்கியதையை பார்த்தாலும் அதன் உள் கருத்து என்ன என்பது விளங்கும். உதாரணமாக தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்கள் விஷயத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பலமான எதிர்ப்பிரசாரம் செய்கிறார். முதலியார் அவர்கள் உத்தியோகத்தில் வகுப்புவாரி முறை ஏற்படுத்திய காரணத்தை வெளிப்படையாக எடுத்துச் சொல்லி சகல பார்ப்பனர்களையும் விரோதமாய்க் கிளப்பி விடுகிறார். ஆனால் அதே சமயத்தில் டாக்டர் சுப்பராயன் அவர்களுடன் குலாவுகிறார். டாக்டர் சுப்பராயன் அவர்களும் காங்கிரஸ்காரர்களால் மந்திரி ஆகி காங்கிரஸ் முழு ஆதரவில் ஒரு வருஷம் மந்திரியாக இருந்து தோழர் முத்தையா முதலியாருடன் கூட்டு மந்திரியாய் முதல் மந்திரியாய் இருந்து வந்தவர். அவருக்கு இப்போது மறுபடியும் மந்திரிவேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து சேர்த்துக்கொண்டார்கள். அப்படி இருக்க முத்தையா முதலியார் அவர்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுக்க காரணம் என்ன என்று யோசித்து பார்க்க வேண்டுகிறோம். தோழர் முத்தையா முதலியாரைத் தோற்கடித்துவிட்டால் சட்ட சபையில் எப்படியாவது பாடுபட்டு பார்ப்பனர்கள் தங்கள் அடிமைகளை வைத்துக்கொண்டு வகுப்பு வாரிமுறை உத்திரவை ஒழித்துவிடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இவ்வளவு பாடுபடுகிறார்கள். இதை நமது பார்ப்பனரல்லாத மக்கள் உணராமல் பார்ப்பனர்கள்கூட கோவிந்தா போடுவது நமது சமூகத்தில் உள்ள இழி மக்கள் – சமூகத்துரோகிகள் – சமூகத்தை காட்டிக்கொடுத்து வாழவேண்டிய மக்கள் இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எப்படியான போதிலும் எவ்வளவு தான் பார்ப்பனரல்லாதார்களே காட்டிக்கொடுத்து எதிரிகளுக்கு ஆயுதமாக “விபீஷணர்” போலவும் “அனுமார்” போலவும் நடந்து கொண்டாலும் காங்கிரசுக்கு (பார்ப்பனர்களுக்கு) படுதோல்வியும் காங்கிரஸ் அல்லாதவர்களுக்கு (பார்ப்பனரல்லாதார்க்கு) வெற்றியும் ஏற்படப்போகிறது என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் எப்படியோ பித்தலாட்டம் செய்து ஜெகஜாலம் செய்து சுமார் 40, 50 பார்ப்பனர்கள் வரையில் சட்டசபைக்குள் புகுத்த சூழ்ச்சி செய்து விட்டார்கள் என்பது தான் பார்ப்பனருக்கு வெற்றியாகச் சொல்லிக்கொள்ளக் கூடியதாகும்.
குடி அரசு – தலையங்கம் – 14.02.1937