காங்கிரஸ் என்றால் என்ன?
ஜெயிலுக்குப் போவது கல்லுளி மங்கன் வேலை
மொண்டி பிள்ளையை வாடகைக்கு வாங்கி காட்டி பிச்சை கேட்பதா?
தலைவரவர்களே! தோழர்களே!
இங்கு நாங்கள் வந்த சமயத்தில் எங்களுக்கு செய்த வரவேற்புக்கு மிகுதியும் நன்றி செலுத்த வேண்டியவன். ஊர்வலங்களும் வாத்தியங்களும் ஜே கோஷங்களும் வழி நெடுகச் செய்த வரவேற்பு ஆடம்பரங்களும் இந்த ஜஸ்டிஸ் இயக்கத்தில் உங்களுக்கு உள்ள பற்றுதலையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் காட்டுகின்றன.
நமது ஊக்கமும் உற்சாகமும் இப்படி செலவழிக்கப்படுவது எனக்கு விருப்பமில்லை. காரியத்தில் மக்களுக்குள் இயக்கத் தன்மையையும் அது செய்த வேலையும் எடுத்துச் சொல்லுவதில் செலவழிக்கப்பட வேண்டும்.
ஆச்சரியமில்லை
ஜஸ்டிஸ் இயக்கம் என்றால் தீண்டாமை போல் மக்கள் பாவிக்கிறார்கள் என்று தலைவர் எடுத்துக் கூறினார்.
அதற்கு பொது ஜனங்களும் நம் எதிரிகளுமே காரணமல்ல. நாம் பொது ஜனங்களுக்கு வேலை செய்கிறோம் என்கின்ற மமதையில் இருந்து விட்டோமே ஒழிய நமது வேலையை பாமர ஜனங்கள் உணர்ந்தார்களா என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. நமது எதிரிகள் செய்யும் விஷமப் பிரசாரத்துக்கு அவ்வப்போது பதில் சொல்லி தப்பபிப்பிராயம் வளர்த்தப்படுவதைத் தடுக்க முயற்சிக்கவில்லை.
பாமர மக்கள் 100க்கு 90 பேர் படிப்பு வாசனை அற்றவர்கள் என்பதை நாம் தெரிந்திருந்தும் அவர்களுக்காக நாம் பிரசாரம் செய்யவோ, பத்திரிகைகளின் மூலம் விஷயங்களை பரப்பவோ நாம் கவலை கொள்ளவில்லை. நமது எதிரிகள் முதலில் கோடிக்கணக்காய் பாமர மக்களிடம் பணம் வசூலித்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் நம்மைப்பற்றி பேசாமல் ஏதோ ஞானம் பேசி பணம் சம்பாதித்துக் கொண்டார்கள். அதைக்கொண்டு ஆட்களை சேமித்து பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து நம்மீது துவேஷ பிரசாரம் செய்து அநேக பழிகளை சுமத்தி விட்டார்கள். இந்த நிலையில் பாமர மக்களுக்கு நம்மீது சலிப்பு ஏற்பட்டிருந்தால் அதில் அதிசயமில்லை.
இந்தக் கூட்டம் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் கூட்டப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வரப்போகும் புதிய அரசியல் திட்டத்தின்படி நடக்கும் தேர்தலுக்கு ஆகவே இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
நான் வந்த காரியம்
நான் தேர்தலுக்கு எந்த தனிப்பட்ட நபருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்ல வரவில்லை. ஏனென்றால் இங்கு தேர்தலில் நிற்கப்போகும் அபேக்ஷகர்கள் உங்களுக்கு தெரியாதவர்கள் அல்ல. அன்றியும் உங்களைவிட எனக்கு அதிகமாய் தெரிந்தவர்களும் அல்ல. ஆகையால் எந்த நபருக்கு ஓட்டுப்போடுவது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
நான் வந்த காரியம் என்னவென்றால் தனிப்பட்ட நபர்கள் பலர் தங்கள் பெயர்களை சொல்லிக்கொள்ள யோக்கியதை இல்லாதவர்களும் பொதுஜனங்களால் தகுதி உள்ளவர் என்று கருத முடியாதவர்களும் இப்போது தேர்தல்களில் நிற்க ஆரம்பித்து விட்டதாலும் தகுதி உள்ளவர்கள் கிடைக்காததினாலும் அபேக்ஷகர் பெயர் சொல்லக்கூடாமல் கட்சிகளின் பெயர்களையும் காந்தியின் பெயரையும் சொல்லி நமது எதிரிகள் ஓட்டுக் கேட்பதோடு இந்த சாக்கில் ஜஸ்டிஸ் கட்சியை கேவலமாகப் பேசி வருவதால் அதைப் பற்றி கண்டித்தும் மறுத்தும் பேசவே வந்திருக்கிறேன்.
எலக்ஷனுக்கு நிற்க ஓட்டர் லிஸ்டில் பெயர் வந்த 25 வயதுக்கு மேற்பட்ட யாருக்கும் உரிமை உண்டு. அப்படிப்பட்டவர்களில் கோவிலின் முன்னால் நின்று பிச்சை வாங்கி கஞ்சா அடித்துவிட்டு திண்ணையில் தூங்குகிறவனானாலும் தேர்தலுக்கு நிற்கலாம். அவனுக்கும் உரிமை உண்டு. எப்படி உரிமை உண்டு என்றால் அவன் கஞ்சா குடிப்பதில் சர்க்காருக்கு வரி செலுத்துகிறான்.
சீர்திருத்தம்
வரப்போகும் சீர்திருத்தம் பதவியும் சம்பளமும் அதிகாரமும் கொண்டது. அவற்றை நடத்தவும் பெறவும் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. தோழர் ஜவஹர்லால் கூறியது போல் கூன், குருடு, செவிடு, மொண்டி, முடம் ஆகிய யாராயிருந்தாலும் பரவா இல்லை என்று கூட ஆய்விட்டது. சீர்திருத்தம் என்றால் நம் இஷ்டப்படி நடப்பது என்பதல்ல. ஏற்கனவே இருந்து வரும் ராஜாவுக்கு பக்தி செலுத்தி “அவரால்” ஏற்பட்டுள்ள சட்டப்படி நடப்பதேயாகும். இதற்கு யார் இருந்தால்தான் என்ன?
அதற்கு விரோதமாய் நடப்பவர் நடப்பதாய்ச் சொல்லுபவர் யாராயிருந்தாலும் தோழர்கள் நேரு காந்தி உள்பட மற்றும் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு சீர்திருத்தத்தில் இடம் கிடையாது. சட்டசபையிலும் இடம் கிடையாது. இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலைமையில் யார் போனாலென்ன? தேர்தலில் வெற்றி பெற்று சர்க்கார் கட்டடத்துக்குள் நுழையும் போதே ராஜ பக்தி விஸ்வாசப் பிரமாணமும் – சட்டபக்தி – விஸ்வாசப் பிரமாணமும் செய்துவிட்டுத்தான் உள்ளே போக வேண்டும்.
கட்சிகள்
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களான சத்தியமூர்த்தி முத்துரங்க முதலியார் முதலிய எல்லோருமே ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்துவிட்டுத்தான் அசம்பிளியில் இருக்கிறார்கள். ஆதலால் சட்டசபைக்கு ஆட்கள் அனுப்புவதில் வீரனையும் சூரனையும் தேடுவதில் பயனில்லை. தமிழ்நாட்டில் காங்கிரசு, ஜஸ்டிஸ், ஜனநாயகம், லிபரல், வர்ணாச்சிரம சுயராஜ்யம், முஸ்லீம் முதலிய பல கட்சிகள் இருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலும் காங்கிரஸ் ஜஸ்டிஸ் என்ற இரண்டு கட்சிகளின் பெயர் அதிகமாக அடிபடுகின்றன. இதில் காங்கிரஸ் பிரசாரம் மிக்க பலமாக இருக்கிறது. ஆனால் அதற்கு பிரசாரத்தில் தனது கொள்கையை எடுத்துச் சொல்லி ஓட்டுக் கேட்க யோக்கியதை இல்லை. ஜஸ்டிஸ் கட்சியை வைவது, அதன் தலைவர்கள் அங்கத்தினர்களை இழிவாய்ப் பேசுவது, தேசத்துரோகிகள், சர்க்கார்தாசர்கள், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றெல்லாம் வசை பொழிவது முதலான முறைகளில் பிரசாரம் செய்கிறார்கள். ஒன்றிலும் முடியாவிட்டால் கடைசி முயற்சியாக காலித்தனம் வரையில் செய்ய முற்பட்டு விட்டார்கள். தாராளமாகப் பொய் பேசுகிறார்கள்.
இதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை கவலை எடுத்து தக்க பதில் சொல்லவே இல்லை. எலக்ஷன் நெருங்கிய பிறகே பிரசாரம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கொள்கைகள்
நீங்கள் காங்கிரஸ் என்றால் என்ன? ஜஸ்டிஸ் கட்சி என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். காங்கிரஸ் எப்போது ஏன் ஏற்பட்டது? அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? ஜஸ்டிஸ் கட்சி ஏன் எப்போது ஏற்பட்டது? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? என்பவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் உத்தியோக வேட்டைக்கும் சர்க்கார் தாசத்துவம் பாடவும், தேசத்துரோகம் செய்யவுமே ஏற்பட்டது. காங்கிரசின் முதல் கொள்கை “ராஜ விஸ்வாசமாயும், ராஜபக்தியாயும் இந்தியா என்றென்றும் இருக்க வேண்டும்” என்பது. இரண்டாவது கொள்கை “உத்தியோகங்கள் இந்தியர்களுக்கு கொடுக்க வேண்டும்” என்பது. மூன்றாவது காரியம் “உத்தியோகங்களை ஏராளமாய் உற்பத்தி செய்து சம்பளங்களை உயர்த்தி அதற்கேற்றபடி வரியை உயர்த்திக் கொண்டு வந்தது.” இந்த காரியம் தான் காங்கிரஸ் சுமார் 35 வருஷ காலம் செய்து வந்தது. இந்தக் கூட்டத்தில் யாராவது இல்லை என்று சொல்லட்டும்.
பிறகு, காங்கிரசினால் ஏற்பட்ட பலன் என்னவென்றால் காங்கிரசின் பலனாய் ஒரு கூட்டத்தாரே உத்தியோகம் பெற்று பெருஞ்சம்பளம் பெற்று வந்ததால் முஸ்லீம்கள் தங்கள் வகுப்புக்கு விகிதாச்சாரம் கேட்டார்கள், பிறகு கிறிஸ்தவர்கள் கேட்டார்கள், பிறகு பார்ப்பனரல்லாதார் கேட்டார்கள். அதற்காகவே காங்கிரசில் இருந்த முக்கியமான முஸ்லீம் தலைவர்களும், முக்கியமான கிறிஸ்தவ தலைவர்களும், பார்ப்பனரல்லாத “இந்து” தலைவர்களும் பிரிந்து வந்து தனிதனி சங்கங்கள் ஏற்படுத்திக் கொண்டு காங்கிரஸ்காரர்களைப் போலவே ராஜ விஸ்வாசத் தீர்மானம் செய்து உத்தியோகம், பதவி ஆகியவற்றில் பங்கு கேட்டார்கள். முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பங்கு கிடைத்துவிட்டது. ஆனால் பார்ப்பனரல்லாதார்களுக்கு அது இன்னமும் சரியாய்க் கிடைக்கவில்லை. காங்கிரசில் பெரும்பாலும் ஏகபோகமாய் இருந்த பார்ப்பனர்களுக்கு தங்கள் ஆதிக்கமும் அனுபவித்து வந்த உத்தியோக எண்ணிக்கையும் சிறிது சிறிது குறைய ஆரம்பித்ததும் அவர்கள் (பார்ப்பனர்கள்) வேறு உபாயம் கண்டுபிடித்தார்கள்.
புது உபாயம்
அது என்னவென்றால் “ராஜபக்தி வேண்டியதில்லை; தேச பக்திதான் வேண்டும்” என்று சொல்லியும் “உத்தியோகம் பெறுவது சர்க்கார் அடிமைத்தனம்” என்றும் பேச ஆரம்பித்தார்கள். இந்திய சரித்திரத்திலேயே ராஜபக்தி வேண்டியதில்லை என்றும் உத்தியோகம் அடிமைத்தனம் என்றும் சொன்னதானது அப்போதுதான் ஏற்பட்டது. ஆனால் தேசபக்தி பேசும் பார்ப்பனர்களிலும் உத்தியோகம் அடிமைத்தனம் என்று பேசும் பார்ப்பனர்களிலும்தான் அன்றைய தினமும் 100க்கு 75 பேர், 100க்கு 95 உத்தியோகங்களை அடைந்திருந்தார்கள். அதில் மீதி உள்ள சில பார்ப்பனர்கள் காங்கிரசை சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதார்களில் 100-க்கு ஒருவருக்குக் கூட உத்தியோகம் கிடைப்பதற்கு மார்க்கமில்லாமல் தொல்லைப்படுத்தி வந்தார்கள். இன்றும் அப்படியே செய்து வருகிறார்கள். இந்தத் தொல்லைதான் இன்று சுயராஜ்யமாகவும், தேசீயமாகவும், தேசபக்தியாகவும் இருந்து வருகிறது.
மற்றபடி காங்கிரசுக்கும் மற்ற ஜஸ்டிஸ் கட்சி முதலியவற்றிற்கும் இன்று கொள்கையில் என்ன வித்தியாசம்? காங்கிரசின் பேரால் பதவி வேட்டையாடுகிறவர்களை விட – அதாவது சட்டசபைக்கு போகவேண்டும் என்பவர்களை விட கொள்கையிலோ, தனிப்பட்ட முறையிலோ, முன் பின் நாணையத்திலோ மற்ற கட்சிக்காரர்கள் எதில் மோசமானவர்கள் என்று யாராவது சொல்லட்டும். வீணாக ஒரு கட்சியையும் ஒரு கட்சி தலைவர்களையும் ஒரு கட்சி கொள்கைகளையும் திரித்துக் கூறி மக்களை ஏமாற்றுவது யோக்கியமாகுமா? என்று கேட்கின்றேன்.
உருப்படியான திட்டம்?
காங்கிரசுக்கு உருப்படியான திட்டம் ஒன்றும் கிடையாது. மக்கள் ஏமாறும்படியும் குழப்பம் அடையும்படி பேசுவதை தவிர ஒரு காரியமும் செய்தது கிடையாது. யாராவது அதன் கொள்கையைப்பற்றியோ அது மக்களுக்கு செய்துள்ள வேலையைப் பற்றியோ எடுத்துச் சொல்லட்டும், அல்லது ஜஸ்டிஸ் கட்சி ரோட்டு, சுகாதாரம், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், தீண்டாமை விலக்கு, சகல வகுப்பாருக்கும் உத்தியோக விகிதம் ஆகிய காரியங்கள் செய்ததையும், மற்றும் தேவஸ்தான நிர்வாகச் சட்டம், நாட்டுவைத்திய சட்டம், இனாம் பூமி சட்டம், குடிவாரச் சட்டம், விவசாரி ஒழிப்புச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்மக்களுக்கு ஓட்டு, தீண்டாதார் என்பவர்களுக்கு பிரதிநிதித்துவம், வரி குறைப்புக்கு வாதாடி குறைக்கச் செய்தது, சுங்கம் எடுக்கச் செய்தது முதலிய காரியங்கள் செய்ததை இல்லை என்றாவது மறுக்கட்டும் என்று கேட்கின்றேன்.
மற்றும் ஜஸ்டிஸ் கò பொது மக்களிடம் ஏதாவது பொய் சொல்லி ஓட்டு வாங்கியதாகவோ, ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீறியதாகவோ பொது ஜனங்களை தப்பு வழியில் நடத்தியதாகவோ எடுத்துக்காட்டட்டும். அக்கிரமமாக வேண்டுமென்றே பொய்யும் பித்தலாட்டமும் பேசி மக்களை ஏமாற்றி பணம் பறித்து ஓட்டுப் பறித்து விஷமப் பிரசாரம் செய்து மற்ற கòயையும் மக்களுக்கு முழு நன்மை செய்யவொட்டாமல் முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டதல்லாமல் காங்கிரஸ் வேறு என்ன செய்தது என்று யாராவது சொல்லட்டும்.
காங்கிரசின் “தியாகம்”
காங்கிரசு தான் செய்த தியாகத்தை பெரிதாகச் சொல்லி ஓட்டுக் கேட்கிறது.
இது சந்தைகளில் கல்லுளி மங்கன்கள் நெற்றியை கல்லால் கிழித்து காயம் பண்ணி ரத்தம் ஒழுக்கிக் கொண்டு காசு கேட்பது போல்தான் இருக்கிறது. முதலாவதாக காங்கிரஸ் தியாகத்தால் ஆன காரியம் என்ன என்று கேட்கிறேன்.
ஒவ்வொரு தியாகம் என்பதையும் தப்பு, தப்பு என்று ஜஸ்டிஸ் காரர்களும் மிதவாத லிபரல் கட்சியாரும் மற்றும் பல கட்சியாரும் சொல்லி மக்களுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். காங்கிரசு பணத்தாலும் பார்ப்பன பத்திரிகையின் வஞ்சக பிரசாரத்தாலும் பாமர மக்கள் ஏமாந்து காங்கிரசுக்கு கோவிந்தா போட்டே வந்தார்கள். கடசியில் காங்கிரசுக்காரருக்கே புத்தி வந்து மாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். காங்கிரசிலும் இனிமேல் சட்டம் மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை, ஒத்துழையாமை செய்வதில்லை என்று தீர்மானித்து விட்டார்கள். சர்க்காருக்கும் எழுதி கொடுத்துவிட்டார்கள். காந்தியாரும் நேற்று பெய்ஸ்பூர் காங்கிரசில் “நான் பனியா (வியாபாரி) ஆனதால் ஒரு வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் வேறு வியாபாரம் ஆரம்பிப்பேன்” ஆதலால் பழய (தியாக) வியாபாரங்களை விட்டு விட்டு இப்போது சட்டசபை வியாபாரங்களை ஆரம்பித்து இருக்கிறேன் என்பது ஆகப் பேசியிருக்கிறார். ஆகவே தியாகத்தைப் பற்றிப் பேசி ஓட்டுக் கேட்பது அவரவர்கள் முட்டாள் தனத்தைப் பற்றிப் பேசி ஓட்டுக்கேட்பது போல் இல்லையா என்று கேட்கின்றேன். அப்படித்தான் இப்போது காங்கிரசால் நிறுத்தப்பட்டிருக்கும் உங்கள் ஜில்லா போர்டு தலைவர்களும் உங்கள் ஜில்லா போர்டு மெம்பர்களும் சட்டசபைக்கும் மேல் சபைக்கும் நிறுத்தப்பட்டிருக்கும் தோழர்கள் நாடிமுத்து பிள்ளை, பூவராக அய்யங்கார், சுப்பராய செட்டியார், மைதீன் மரைக்கார் முதலியவர்களும் என்ன தியாகம் செய்தவர்கள்? தோழர் நாடிமுத்துபிள்ளை அவர்களின் குருவும் நண்பர்களுமான தோழர்கள் டாக்டர் சுப்பராயன் ராமலிங்க செட்டியார், வெள்ளியங்கிரி கவுண்டர் முதலிய 100க்கு 75 பேர்கள் என்ன தியாகம் செய்தவர்கள்? யாரோ பெற்ற மொண்டிப் பிள்ளையை வாடகைக்கு வாங்கி வந்து காட்டி பிச்சை கேட்பது போல் யாரோ ஜெயிலுக்கு போனதைச் சொல்லி உங்களை ஓட்டுக் கேட்டால் அதற்கு ஏமாறுவதா?
ஜெயிலுக்குப் போவது கல்லுளி மங்கன் வேலை
இந்தக்காலத்தில் ஜெயிலுக்குப் போவது என்பது வாஸ்தவத்திலேயே ஒரு தியாகமா என்று கேட்கிறேன். ஜெயிலில் ஜாதியும் மதமும் பார்ப்பனர்களுக்கு நன்றாய் காப்பாற்றப்படுகிறது. ஜெயிலில் ஏ, பி, கிளாஸ் பதவிகள் இருக்கின்றன. அங்கு பச்சரிசி சாதம், பருப்பு நெய், சாம்பார், ரசம், பால், தயிர், காப்பி, ரொட்டி, வெண்ணெய், கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, மாம்சம் சாப்பிடுபவர்களுக்கு மாம்சம் முதலிய சப்ளை உண்டு. ஏ – கிளாஸ் காரருக்கு பங்காகூட வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சமையல் ஆள், பியூன் ஆகியவைகூட அனுமதிக்கப்படுகிறது. ஜெயில்வாசம் உண்மையிலேயே தியாகமா, பெருமையா என்று கேட்கிறேன். தொண்டர்கள் பெரும்பாலோருக்கு சம்பளம் உண்டு. ஜெயில் வாசத்தின் போது குடும்பத்தாருக்கு அலவன்சு உண்டு. இதற்கென்றே பொது மக்களிடமிருந்து அவ்வப்போது பணம் வசூலிக்கப்படுகிறது.
தோழர்கள் சத்தியமூர்த்தி முதல் குப்புசாமி வரை உள்ள பல தேசபக்தர்கள் தேசபக்தர்களான பிறகே தியாகமூர்த்திகள் ஆன பிறகே பதினாயிரக்கணக்காக ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள். இவை தவிர வேறு என்ன தியாகம் செய்தார்கள் என்று நீங்களாவது சொல்லுங்கள்.
ஜஸ்டிஸ் கட்சியார்கள் பிரசாரம் இல்லாததாலேயே காங்கிரசுக்காரர்கள் மக்களை இவ்வளவு ஏய்க்க முடிந்தது.
தாழ்த்தப்பட்டவருக்கு உரிமை மறுப்பது தேசீயமா?
இன்றும் நாம் காங்கிரஸ் எவ்வளவு தீவிர கொள்கை கொண்டாலும் நாமும் பின்பற்றத் தயாராய் இருக்கிறோம். ஆனால் நமக்கு சுயராஜ்யம் முழு சுயராஜ்யம் என்பது கிடைத்த பிறகு நமக்கும் சண்டையில்லாமல் இருக்க வேண்டாமா? நம்மில் பிற்பட்டு தாழ்த்தப்பட்டு அரசியலிலும், சமூக இயலிலும் பிறவி காரணத்தாலேயே ஒதுக்கப்பட்டு கிடக்கும் வகுப்புகளுக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்ல வேண்டாமா? அவர்களுக்கு சரிபங்கு கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டாமா? என்று நான் கேட்கிறேன். அப்படிப் பங்கு கொடுப்பதாக வாயால் சொல்லுவதே தேசத் துரோகமாகவும் தேசீயத்துக்கு மாறானதாகவும் ஆகிவிட்டால் பிறகு பங்கு கொடுப்பது மிகவும் பெரிய தேசத்துரோகமாகவல்லவா ஆகிவிடும்? ஆகவே மதத்தால் ஜாதியால் பிரிந்தது மாத்திரம் அல்லாமல் தாழ்த்தப்பட்டு கிடக்கும் மக்கள் மலிந்து இருக்கும் இந்த நாட்டில் அவர்களுக்கு பங்கு கொடுப்பது நாட்டுக்குக் கேடு என்று சொன்னால் அப்படிப்பட்ட தேசீயத்தை வளரவிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகவே ஜஸ்டிஸ் கòயானது வாயில்லாத பூச்சிகளான பாமர மக்களுக்கும் தாழ்த்தப்பட்டு கிடக்கும் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அரசாங்கத்தினிடமும் மேல் ஜாதியாரிடமும் வாதாடி பங்கு வாங்கிக் கொடுத்து முன்னணிக்கு கொண்டு வருவதற்கு ஆகவே இருக்கிறது. அந்தக் காரியத்தை இந்த 15 வருஷமாக அனேக தொல்லைகளுக்கிடையில் செய்து வந்திருக்கிறது.
ஆகையால் நீங்கள் எந்த விஷயங்களையும் யார் சொல்வதையும் தீர யோசித்து உங்கள் ஓட்டுகளை அளியுங்கள். ஏமாந்து போகாதீர்கள். உங்களுக்கு சுயபுத்தி இருக்கிறது என்று கருதித்தான் ஜஸ்டிஸ் கòயார் உங்களுக்கு ஓட்டுகள் அளிக்க சிபார்சு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை மோசம் செய்து விடாதீர்கள்.
குறிப்பு: 10.01.1937 திருவாரூர் கமலாலய தெப்பக்குளத்துக் கரையிலும், 11.01.1937 திருவாரூர் கருணாநிதி திரையரங்கிலும், 11.01.1937 திருத்துறைப்பூண்டியிலும் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு – சொற்பொழிவு – 17.01.1937