கடற்கரைக் கூப்பாடு

 

தேர்தல் போர் ஆரம்பமாகிவிட்டது. அபேக்ஷகர் பெயர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே நாம் கூறியுள்ளபடி நமது கட்சிக்கு அபேக்ஷகர் பஞ்சம் ஏற்படவில்லை; ஏற்படவும் செய்யாது. காங்கரஸ் பகட்டு வெற்றியில் மயங்கி – காங்கரஸ் ஆர்பாட்டங்களுக்கு அஞ்சி – தன் காலில் நிற்க ஆண்மையின்றி – காங்கிரசில் சரணாகதி அடைந்து இச்சகம் பாடும் துடை நடுங்கிகள் சிலர் போனாலும், நம் கட்சிக் கொடிக் கீழ்நின்று போராடத் துணிவுகொண்டு நிற்கும் வீரர்கள் ஏராளமாக இருந்து வருவது மகிழத்தக்கதே. நமக்குப் பத்திரிகைகள் குறைவாக இருக்கலாம்; தொண்டர்கள் குறைவாக இருக்கலாம்; பிரசாரகர்கள் குறைவாக இருக்கலாம். எனினும் நாம் அஞ்சத் தேவையில்லை. ஏன்? அபிமானிகள் ஏராளமாயிருக்கிறார்கள். நமது கட்சியால் நலம் பெற்றவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள். நாம் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகளோ அனந்தம். நமது எதிரிகள் எதிர்பார்க்கிறபடி தமிழ் நாட்டார் முச்சூடும் அப்பாவிகள் அல்ல. அப்பாவிகளாயிருந்தால் நமது கட்சிப் பெயரால் அந்தஸ்துடையவர்கள் தேர்தலுக்கு முன்வரத் துணிவு கொண்டு இருக்க மாட்டார்கள். தென்னாட்டாருக்கு காங்கிரஸ் மீது இருந்துவரும் பக்திக்கு அறிகுறியாக கொஞ்சப் பேராவது போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி விரும்பினார். ஆனால் அவருடைய விருப்பம் நிறைவேறவில்லை. டாக்டர் சுப்பராயன் ஒருவரே இதுவரை போட்டியின்றி நிற்பதாகத் தெரியவருகிறது. டாக்டர் சுப்பராயனுக்கும் காங்கிரசுக்கும் உள்ள சம்பந்தம் குலாம் காதிருக்கும் கோகுலாஷ்டமிக்கும் உள்ள சம்பந்தந்தான். எனவே டாக்டர் சுப்பராயன் வெற்றி காங்கிரஸ் வெற்றியாக மாட்டாது. டாக்டர் சுப்பராயனைப் போலவே நமது தலைவர் ஒருவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படப் போவதனால் காங்கிரசுக்கு மட்டும் பெருமையடித்துக்கொள்ள உரிமையே இல்லை.

இருந்தாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம். காங்கிரஸ்காரர் பொய்ப் பிரசாரம் செய்வதில் நிபுணர்கள். சென்னையிலே சென்ற ஞாயிற்றன்றே (17-1-37) அவர்கள் பிரசாரத் திருவிழா ஆரம்பித்துவிட்டார்கள். இனி பிரதி தினமும் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஓயாது கூப்பாடு கேட்டுக்கொண்டே இருக்கும். அம்மட்டோ! நாடெங்கணும் காங்கிரஸ் கூச்சல் மயமாகவே இருக்கும். காங்கிரஸ் கூப்பாட்டுக்கு திருவல்லிக்கேணி கடற்கரை ஞாயிற்றுக்கிழமைக் கூப்பாட்டை ஒரு “சாம்பிளாக” எடுத்துக்கொண்டால் காங்கிரஸ்காரர் கூச்சல் எவ்வளவு விஷமத்தனமானது என்பது நன்கு விளங்கும். சென்ற ஞாயிற்றன்று கடற்கரையில் பேசிய ஒருவராவது யோக்கியப் பொறுப்பான காங்கிரஸ் பிரசாரம் செய்யவில்லை. எள்ளத்தனையாவது கூச்சமில்லாமல் பொய்ப் பிரசாரமே செய்தார்கள்.

முதன் முதலில் பேசிய தோழர் சத்தியமூர்த்தி காங்கிரசுக்குத் தான் ஒரு வேலைத் திட்டம் உண்டு என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்கு வேலைத் திட்டமே இல்லை என்றும் கூறினாராம். இதைவிட அயோக்கியத்தனமான புளுகு வேறுண்டோ? ஜஸ்டிஸ் கட்சியார் சமீபத்தில் வெளியிட்ட புதுவேலைத் திட்டத்தைப்பற்றி தோழர் சத்தியமூர்த்தி பல கூட்டங்களில் பேசியதையும் பல பத்திரிகைகளில் எழுதியதையும் அவர் மறந்து விட்டாரா? 15-வருஷகாலம் நிர்வாகம் நடத்திய ஜஸ்டிஸ் கட்சியார் இப்பொழுது தான் ஒரு வேலைத்திட்டத்தையும் கொண்டு வெளி வந்திருக்கிறார்கள் என அவர் கேலிசெய்து வெகுநாள் ஆகவில்லையே! புதுக் கட்சிகளுக்கு வேலைத் திட்டம் அவசியம்தான்; 15-வருஷம் அமல் நடத்திய கட்சிக்கு வேலைத்திட்டம் எதற்கு? எனக்கேட்ட தோழர் சத்தியமூர்த்தியின் நாக்கு மரத்துப் போய்விட்டதா? தோழர் மந்திரி ராஜனுடைய வாடிப்பட்டிப் பிரசங்கத்துக்கு லாகூரிலிருந்து கொண்டு தோழர் சத்தியமூர்த்தி அளித்த பதிலில் “ஜஸ்டிஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என நான் கூறவில்லை. அவர்கள் எண்ணியிருந்தால் அதிகப்படியாகச் செய்திருக்கலாம் என்பதே எனது வாதம்” என தோழர் சத்தியமூர்த்தி கூறவில்லையா? கடற்கரைக் கூட்டத்திலே எது வேண்டுமானாலும் பேசலாம்; யார் கேட்கப் போகிறார்கள் என்ற துணிச்சலா? நாம் கடைசி முறையாக அவருக்கு ஒன்று கூறுகிறோம்.

ஒரு உருவான வேலைத் திட்டம் வகுத்துக்கொண்டே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. மாண்டுபோர்டு திட்டப்படி எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அவ்வளவு நன்மைகளையும் ஜஸ்டிஸ் கட்சி செய்தது. அதற்கு மெளலானா யாக்கூப் ஹாஸன் சேட் பொன்மொழிகளே அத்தாட்சி. இப்பொழுது மாகாண சுய ஆட்சி வரப்போவதினால் மந்திரி மாருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் கிடைக்கப் போகின்றன. ஆகவே, வரப்போகும் சீர்திருத்த அரசியலில் தாம் மேற்கொண்டு செய்யப்போவதை தேச மகா ஜனங்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டே சமீபத்தில் ஒரு புது வேலைத் திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியார் வெளியிட்டிருக்கிறார்கள். இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சியார் வேலைத் திட்டம் வெளியிட்டிருப்பதினால் இதற்கு முன் வேலைத் திட்டமே அவர்களுக்கு இருந்ததில்லையென ஏற்பட்டு விடாது.

கண்ணிருந்தும் பாராத, காதிருந்தும் கேளாத, மூளையிருந்தும் யோசியாத தோழர் சத்தியமூர்த்தி கூட்டத்தாரே ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை வேலைத் திட்டமின்றி வேலை செய்தார்கள் என உளறுவார்கள்.

அப்பால், காங்கரசுக்குத் தான் உருவான வேலைத்திட்டம் உண்டெனக் கூறும் தோழர் சத்தியமூர்த்தியின் பிதற்றலைக் கவனிப்போம். பூரண சுயராஜ்யம் பெறுவதுதான் காங்கரஸ் வேலைத் திட்டமாம். பூரண சுயராஜ்யம் காங்கரஸ் லôயமாக இருக்கலாம். லôயத்துக்கும் வேலைத் திட்டத்துக்கும் வேற்றுமை காண முடியாத தோழர் சத்தியமூர்த்திக்கு அரசியலைப் பற்றிப் பேசவே உரிமையில்லை. ஜஸ்டிஸ் கட்சியாரிடம் சிறிது நாள் அரசியல் பால பாடம் கற்ற பிறகு அவர் அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேச முன்வந்தால் நலமாயிருக்குமென்று எண்ணுகிறோம். பூரண சுயராஜ்ய லôயம் நல்லது தான். ஆனால் அதை அடையும் வழி என்ன? வேலைத் திட்டம் என்ன? எந்த காங்கரஸ் வாதியாவது பூரண சுயராஜ்யம் அடையும் மார்க்கத்தைக் குறிப்பாக எடுத்துக்காட்டியதுண்டா? பிரதிநிதித்துவ சபை, நேஷனல் கன்வென்ஷன் எனப் பலர் கிளிப்பிள்ளை மாதிரி கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அவை யாவும் உதவாக்கரைப் பேச்சென பிரபல ராஜ்ய தந்திரியான ஸர்.டெஜ் பகதூர் சாப்ரூவே கூறியிருக்கிறார். சென்னை சட்டசபை காங்கரஸ் கட்சித் தலைவர் தோழர் ஸி.ஆர். செட்டியாரும் அவ்வாறே அபிப்பிராயப் படுகிறார். தேச மக்கள் அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பிறகே பிரதிநிதித்துவ சபைத் தீர்மானங்களுக்கு மதிப்புண்டு என “ராஷ்டிரபதி” ஜவஹர்லால் கூடக் கூறுகிறார். இந்நிலையில் பூரண சுயராஜ்யத்தைப் பற்றி தோழர் சத்தியமூர்த்தி புலம்புவதற்கு அர்த்தமுண்டா? கடற்கரைப் பிதற்றல்களினால் சுயராஜ்யம் பெற முடியுமா? அரசியலைத் தகர்ப்போம், முட்டுக்கட்டை போடுவோமென ஆர்ப்பரிப்பதினால் சுயராஜ்யம் பெற முடியுமா?

சட்டசபைக்குப் போகிறவர்கள் தாம் செய்யப் போகும் வேலைகளை வாக்காளர்களுக்குத் தெளிவாகக் கூறவேண்டும். அவ்வாறு கூறாமல் “காந்திக்கு வோட்டுப் போடு; சுயராஜ்யத்துக்கு வோட்டு போடு; விடுதலைக்கு வோட்டுப் போடு” எனக் கூறுவோரை பகல் வேஷக்காரர் என்று தானே கூறவேண்டும்? சர்க்காரோடு போராடி பூரண சுதந்தரம் பெற முடியாதவர்களா சட்ட சபைக்குச் சென்று முட்டுக்கட்டை போட்டு சுயராஜ்யம் பெறப் போகிறார்கள்? அது காசுபெறாத ஹம்பக் பேச்சென்பதைப் பச்சைக் குழந்தைகளும் அறியுமே. எனவே, வாக்காளர்களே! ஜாக்கிரதையாக இருங்கள். பொய்யும் புளுகும் அளந்து பொது ஜனங்களை ஏமாற்றும் புரட்டர்களை நம்பாதீர்கள்! நாட்டுக்கு நன்மை செய்து மதிப்பும், அனுபவமும் பெற்ற ஜஸ்டிஸ்கட்சியாரையே ஆதரியுங்கள்.

– “விடுதலை”

குடி அரசு (மறு பிரசுரம்) – கட்டுரை – 24.01.1937

You may also like...