ஆச்சாரியார்
தோழர் ராஜகோபாலாச்சாரியார் போர் முனைக்கு வந்துவிட்டார். என்ன போர் என்றால் வீரப்போர் அல்ல, மற்றென்னவெனில் சூழ்ச்சிப்போர், வஞ்சப்போர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆச்சாரியார் என்றும் இதற்குத்தான் அருகதையானவர், ஏனெனில் அவருக்கு உடல் வலிமை கிடையாது. தோல்வியைச் சகிக்கும் மனவலிமையும் கிடையாது. ஆதலால் இப்படிப்பட்டவர்கள் என்றும் சூழ்ச்சியைத்தான் நம்புவார்கள். அவர்களுக்குத்தான் சூழ்ச்சித்திறமும் ஏற்படக்கூடும். ஆச்சாரியார் வெற்றிபெற்று மந்திரி ஆசனத்தில் அமர்வாரானால் மற்ற விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு மகிழ்ச்சியடைவதில் முதல்வராக இருக்க நாமே முயலுவோம். அம்மகிழ்ச்சி ஏதாவது ஒரு நன்மையை எதிர்பார்த்து என்று சொல்ல முடியாது. ஆனால் பரிதாபத்தால்.
ஆச்சாரியார் திடமான தியாகி, மகத்தான தியாகம் செய்தவர். அவர் மந்திரி பதவி ஏற்றால் அவர் விஷயத்தில் யாரும் பொறாமைப்பட வேண்டியதில்லை, அவரது சூழ்ச்சிக்குப் பலர் ஆத்திரப்படக்கூடும் தான். அப்படிப்பட்ட ஆத்திரங்கள் கூட தோல்வி அல்லது சக்தியற்ற தன்மையின் எதிரொலி என்றுதான் சொல்லுவோம். ஏனெனில் ஆத்திரப்படுகிறவர்களும் தங்களாலான சூழ்ச்சிகள் செய்து பார்த்துத்தான் முடியாமல் போய் ஆத்திரப்படுபவர்களாய் அநேகர் இருப்பார்கள். உலகம் சூழ்ச்சிக்கும் ஏமாற்றுதலுக்கும் அடிமை, அவ்வளவு மாத்திரமல்ல, சத்தியத்திற்கும் வீரத்துக்கும் எதிரி. அதனாலேயே காந்தி பிரசித்த புருஷராகவும் “மகா”புருஷராகவும் ஆனார்.
ஆகையால் ஆச்சாரியாரின் சூழ்ச்சிக்கு நாம் வெறுப்போ ஆத்திரமோ கொள்ளவில்லை. அவர் மந்திரியானாலும் நாம் பொறாமைப்படவில்லை. இந்தத் திருப்தியாவது அவருக்கு ஏற்படட்டும் என்றே ஆசி கூறுவோம்.
ஆனால் அது முடியுமா என்பது வேறு விஷயம். இவை ஒருபுறமிருக்க,
தோழர் ஆச்சாரியார் 17-1-37ந் தேதி மாலை சென்னை கடற்கரையில் பேசும் போது,
“ஜஸ்டிஸ் கட்சி உத்தியோகங்களை வகுப்புவாரியாகப் பிரித்துக் கொடுக்கவேண்டுமென்பதற்காக ஏற்பட்டது”
“வகுப்பு வாரியாக உத்தியோகங்களைப் பிரித்துக் கொடுத்து ஒரு ஏற்பாடு செய்துகொள்ள காங்கிரஸ் என்றும் மறுத்ததில்லை”
“ரம்ப நாளைக்கு முன்னமேயே ஜஸ்டிஸ் கட்சியைக் கலைத்திருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.
(இது 18-1-37ந் தேதி “தினமணி” 7ம் பக்கம் 2ம் கலம் 3வது வரி முதல் 12ம் வரி வரை உள்ள வாக்கியங்களாகும்) இந்த வாக்கியங்களை நாம் வரவேற்கவேண்டியதே கிரமமாகும்.
ஆனால் இது உண்மையான வாக்கியங்களா, உதட்டளவில் சொல்லும் வாக்கியங்களா என்பது கவனிக்க வேண்டாமா? ஜஸ்டிஸ் கò வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஆகத்தான் ஏற்பட்டது என்பதை ஆச்சாரியார் இன்று ஒப்புக்கொண்டது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதற்கு முன்னும் ஆச்சாரியார் இப்படியே பல தடவை நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் ஒப்புக்கொண்டிருக்கிறார். நெருக்கடி தீர்ந்த உடன் வகுப்பு வாதம் பேசும் கòயின் ஆதிக்கத்தை விட பிரிட்டிஷ் ஆதிக்கமே மேலானது என்று பேசி விடுகிறார். தோழர் சத்தியமூர்த்தியும் பல தடவை இப்படியே பேசி இருக்கிறார். உதாரணமாக 7,8 மாதங்களுக்கு முன் தஞ்சையில் அவர் பேசும்போது,
“ÿமான் ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் தானும் காங்கிரசில் சேருவதாகச் சொன்னாராம். அவர் சொன்னது மிகவும் சரியென்றே சொல்லுவேன். கூடிய சீக்கிரம் காங்கிரசின் மூலம் வகுப்பு வாரி உரிமை விஷயமாய் ஒரு அறிக்கை வெளியிடலாமென்று இருக்கிறேன்” என்பதாகப் பேசினார்? அதைக் கண்டித்துக் கூட தோழர் திரு.வி.க. அவர்கள் “சத்தியமூர்த்திக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தார்கள்” என்று தனது “நவசக்தி”யில் எழுதியிருந்தார்.
அவ்வளவு தூரம் போவானேன்? 1919ல் ஈரோட்டில் கூட்டப்பட்ட சென்னை மாகாணச் சங்க மகாநாடு என்னும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் கூட்டத்திலும், 1920ம் வருஷம் சென்னையில் கூட்டப்பட்ட அதிதீவிர தேசியவாதிகள் மகாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒப்புக்கொள்ளப்பட்டு 100க்கு 50க்குக் குறையாமல் அளிப்பது என்று தீர்மானம் செய்ததோடு காங்கிரஸ் வேலைத்திட்டத்திலும் இது குறிப்பிடப்பட்டும் இருந்தது.
1920ம் வருஷத்திய தேர்தல் முடிந்த உடன் வகுப்புவாதம் தேசியத்துக்கு விரோதமென்று பேசி சென்னை மாகாண சங்கத்தையும் அதிதீவிர தேசியவாதிகள் சங்கத்தையும் முறையே ஒருவருஷ குழந்தைப் பருவத்திலும் 6N குழந்தைப் பருவத்திலும் கழுத்தைத் திருகி கொன்றாய்விட்டது.
இன்னமும் இப்படி பல உதாரணங்கள் எடுத்துக்காட்டலாம்.
எப்படி இருந்தபோதிலும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அந்தரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் பேசும்போதெல்லாம் தெரியப்படுத்தின அபிப்பிராயத்தையே தான் இப்பொழுது 17ந் தேதி சென்னை கடற்கரையில் பேசி இருக்கிறார். தனிப்பட்ட முறையிலும் அந்தரங்கத்திலும் பேசியது புரட்டாயிருக்குமானால் 17ந்தேதி கடற்கரைப் பேச்சும் புரட்டாகவோ வஞ்சிப்பாகவோ இருக்கலாம்.
உண்மையாகவே பேசினார் என்றாலும் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்கக்கூடுமா என்பதும் யோசிக்கத் தகுந்ததாகும். ஏனெனில் சில விஷயங்கள் ஞாயம் தான் என்று பட்டாலும் செய்கையில் செய்யவேண்டிய அவசரம் வரும்போது அதனால் தங்கள் சமூகத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்று தோன்றினால் பிறண்டு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. ஆதலால் தான் இப்படியே பல தடவை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இந்த ஏமாற்றங்களினால் நமக்கு ஏற்பட்டு வரும் பலன்கள் என்னவென்றால் தேர்தல்களின் பலன் என்னவானாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் நியாயமும் பலப்பட்டுக் கொண்டே வருகிறது. நாம் இன்று பதவிக்காகவே இருக்கவில்லை. நமக்கு சொந்தத்தில் அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கு சொந்தத்தில் ஒன்று இரண்டு பதவிகள் தேவையானால் அது கிடைப்பது அசாத்தியமானதல்ல. அல்லது தனிப்பட்டவர்களுடன் போட்டிக்குப் புறப்பட்டு விடுவதினாலும் பிரமாதமான வெற்றி தோல்விகள் ஏற்பட்டுவிடாது. நாம் வாதாடுவதும் உழைப்பதும் ஒரு சமூக நன்மையைக் கோரியிருப்பதாலும் அதுவும் அவசியம் செய்யவேண்டிய காரியமாயிருப்பதாலும் அது மற்றொரு சமூகத்தின் பேராசைக்கும் ஏக போக ஆதிக்கத்திற்கும் கேடாயிருப்பதாலும் இவ்வளவு தொல்லைப்பட வேண்டி இருக்கிறது.
ஆனால் ஒரு விசேஷம் என்னவென்றால் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் அந்தரங்கத்தில் பிரஸ்தாபித்தது போலவே கடற்கரைக் கூட்டத்திலும் பேசி இருப்பதால் உண்மை நிலையையும் அதனால் ஏற்பட்டுவரும் பயனையும் உணர்ந்துதான் பேசி இருப்பார் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. என்னவெனில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதியில் எதிர்த்ததே தப்பு என்றும், எதிர்த்ததாலேயே காங்கிரசுக்கு விரோதமாகப் பல கட்சிகள் தோன்ற வேண்டிய அவசியமும் அவை பலப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டன என்றும், முன்னமேயே ஒப்புக்கொண்டிருந்தால் ஜஸ்டிஸ் கட்சி வெகு நாளைக்கு முன்னமேயே மறைந்திருக்கும் என்றும் பேசினதைத்தான் கடற்கரையிலும் பேசியிருக்கிறார்.
ஆதலால் இனியாவது உணர்ந்து அவர் பேசியபடி அதுவும், “வகுப்புவாரியாக உத்தியோகங்களைப் பிரித்துக்கொடுத்து ஒரு ஏற்பாடு செய்துகொள்ள காங்கிரஸ் என்றும் மறுத்ததில்லை” என்கிறதைக் காரியத்தில் காட்டி ஒரு ஏற்பாடு செய்து விடுவாரேயானால் வகுப்பின் பேரால் நடக்கும் கிளர்ச்சிகளுக்கு உண்மையிலேயே சாவுமணி அடிக்கப்பட்டாய் விடலாம் என்பது நமது கெட்டியான அபிப்பிராயம். ஆச்சாரியாரும் அவர் ஒரு பக்கா வகுப்புவாதி என்கின்ற பொது ஜன அபிப்பிராயத்தில் இருந்து விலக்கப்பட்டவராகக்கூடும். அப்படிக்கு இல்லாதவரை ஆச்சாரியார் வெற்றி பெற்றாலும் மந்திரி ஆகப்போவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் மந்திரி ஆனாலும் மானமிழந்து தற்கொலை செய்து கொண்ட நிலைமையை அடைவதைத் தவிர சர்க்காரை ஏதோ செய்து விட்டதாகவோ ஜனங்களுக்கு ஏதாவது சாதித்துவிட்டதாகவோ சிறிதும் ஆகப்போவதில்லை என்பதை இப்போதே “தீர்க்கதரிசனம்” கூறுவோம்.
ஆச்சாரியாரின் 17ˆ கடற்கரைப் பிரசங்கத்தை பத்திரிக்கைகளில் சிறப்பாக “தினமணி”யில் பார்த்த நமது நண்பர்கள் சிலர் “அப்பாகத்தைக் கத்தரித்து அனுப்பி ஆச்சாரியாருக்கும் உங்களுக்கும் ஏதாவது ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதா?” என்று எழுதிக் கேட்டிருக்கிறார்கள்.
மற்றும் கோவை ஜெயில்வாசத்தின் போதும் குற்றாலத்திலும் ஆச்சாரியாரை தோழர் ஈ.வெ.ரா. சந்தித்து நேர்ந்தவைகளைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டதையும் ஆச்சாரியாரின் இந்த பேச்சு உறுதிப்படுத்தக் கூடியதாயும் ஏற்பட்டுவிட்டது என்றாலும் நாம் இதை உண்மையான – காரியத்திற்கு செய்ய வேண்டும் என்கின்ற கருத்தில் பேசியதாக முடிவு செய்துகொள்ளவில்லை. அல்லது தோல்வி ஏற்படுமே என்று பயந்து ஏதாவது ஒரு சந்தில் நுழைந்து கொள்ள இதை பயன்படுத்திக் கொள்ளவும் நாம் கருதவில்லை.
காங்கிரசோ ஆச்சாரியாரோ வெற்றி பெற்று சென்னை அரசாங்க கோட்டைக்குள் நுழைந்து மந்திரி ஆசனங்களில் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டால் அதற்கு ஆக ஒரு சிறிது கூட மனங் கலங்கவோ வெட்கப்படவோ மாட்டோம். அதற்கு மாறாக “அப்பாடா நமது தலைச் சுமையை சற்று கீழே இறக்கி வைத்து இளைப்பார ஒரு சுமைதாங்கி ஏற்பட்டதே” என்றுதான் கருதுவோம். நிற்க,
“நல்ல” சமயத்தில் அதுவும் தங்களுக்கே வெற்றி, தனக்கு மந்திரி பதவி நிச்சயம் என்று கருதி தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் உயரத்திலும் அகலத்திலும் கனத்திலும் பெருகி இருக்கும் சமயத்தில் அவர் காலைவாரி விடப்பட்டு “இன்று முதல் இந்த மாகாணத்திலோ வெளியிடங்களிலோ நடக்கும் காங்கிரஸ் கமிட்டி காரியங்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை” என்று சொன்ன தோழர் ஆச்சாரியார் அவர்கள் திடும் பிரவேசமாய் நுழைந்து உரிமையாக்கிக்கொண்டது பலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். சத்தியமூர்த்தியின் “மகத்தான தியாகமாய்” இருக்கலாம். ஆச்சாரியார் ஒப்புக்கொண்டதும் பொது ஜனங்களின் “பூர்வபுண்ணிய அதிர்ஷ்டவசமாய்” இருக்கலாம். ஆனால் இப்படி ஏற்பட்டதற்கு காரணம் ஒன்று வேண்டாமா? என்று கேட்கிறோம். எவ்வளவு தான் “பலமான தலைவிதி”ப்படி ஒருவன் செத்திருந்தாலும் செத்ததற்கு ஒரு காரணம், பேதியோ, பிளேக்கோ, கொலையோ, குத்தோ, நெஞ்சடைப்போ, தண்ணீர்முரண்டலோ, சாதம் விக்கலோ என்பதைப் போன்ற ஏதாவது ஒரு காரணம் காட்டித் தான் மரண ரிஜிஸ்டரில் பதிவார்களே ஒழிய “தலைவிதி முடிந்தது” என்று எந்த ஆஸ்திகனும் பதியமாட்டான். ஆகவே மூர்த்தியார் கழிதலுக்கும் ஆச்சாரியார் புகுதலுக்கும் காரணவகை ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அது என்னவென்றால் வெள்ளைக்காரர்கள் கூட்டத்தில் சத்தியமூர்த்தியாரைப் பற்றி கேவலமாய் பேசப்பட்டு அவர் பின்னால் தாங்கள் உட்கார முடியாது என்றும் கண்டிப்பாய் சொல்லப்பட்டு விட்டது. அதோடு ஜஸ்டிஸ் கட்சியைத்தான் ஆதரிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டு விட்டது. “110 பேர்கள் காங்கிரசின் பேரால் (முடியாது) வந்தால் கூட சத்தியமூர்த்திக்கு மந்திரி பதவி கிடையாது என்று கவர்னர் சொன்னார்” என்ற வாசகம் மெய்யாகவோ பொய்யாகவோ பரவி விட்டது.
“அவர் பின்னால் கூட உட்காருவது அவமானம்” என்று சில காங்கிரஸ் அங்கத்தினர்கள் கூறினதாகவும் “தலைமை மந்திரி பதவி அவருக்கு கொடுக்கக்கூடாது” என்று பலர் ஆக்ஷேபித்து போட்டி போட தயார் செய்து கொண்டதாகவும் தெரிந்தது. மேலும் இவ்வளவு குளறுபடியில் “காங்கிரசுக்காரர்கள் மந்திரி ஆனாலும் ஒரு வருஷம் நிலைக்க மாட்டார்கள்” என்ற பொது ஜனவாக்கை மறுக்க சக்தியில்லாமல் காங்கிரஸ்காரர்களே “நாங்கள் மந்திரியானால் அங்கேயே ஒட்டிக்கொண்டிருக்க மாட்டோம்” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதாகவும் ஆகிவிட்டது.
இந்தக் காரணங்கள் தான் சத்தியமூர்த்தியார் “மகத்தான தியாகம்” செய்ய வேண்டியதற்கும் பொது ஜனங்கள் “அதிர்ஷ்டசாலி” ஆவதற்கும் இடம் கொடுத்தது. அதாவது “மேலே இருந்த முடவனுக்கு வெளிக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சுமந்து சென்ற எருதுக்கு அதன் திமிரால் துள்ளிக் குதிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் முடவன் கீழே விழுந்தான். விழுந்த வலியை விட வெளிக்கு போகக்கிடைத்த வசதியை முடவன் திருப்தியாக கொண்டான்” என்பது போல் நிலைமை ஏற்பட்டு விட்டது.
இது இவ்வளவுடன் நிற்க தேர்தல் விஷயத்தில் ஆங்காங்கு நடக்கும் போட்டியைப் பார்த்தால் பொதுத் தொகுதிகளில் காங்கிரஸ்காரர்களுக்கு சில ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைக்கலாம். இது முன்னமே எதிர்பார்த்தது தான். அதனாலேயே காங்கிரஸ்காரர் மொத்தத்தில் 215 ஸ்தானங்களில் மெஜாரிட்டியாக 108 ஸ்தானங்கள் அடைந்து விடுவார்கள் என்று சொல்லுவதற்கில்லை. பலமான எதிர்ப்பாளர்களாக ஆகலாம். அல்லது “தங்களுக்கும் ஒன்று இரண்டு மந்திரி ஸ்தானங்கள் கொடுத்தால் கிரமமாக நடத்திக் கொடுக்கிறோம்” என்று கேட்பதன் மூலம் ஒன்று இரண்டு மந்திரி பதவி பெறலாம். ஆனால் அதுவும் மந்திரி பதவி பெற்று அரசியலை சட்டப்படி நடத்திக்கொடுப்பதாக ஒப்புக்கொண்டால்தான் அவை கிடைக்கக்கூடும். அல்லது மந்திரி பதவி அடைந்து அரசியலை சட்டப்படி நடத்திக் கொடுத்தால் அவை நிலைக்கும் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய முட்டுக்கட்டை போடுவதோ அரசியலை உடைப்பதோ என்பது கடுகளவும் முடியாத காரியம் என்று சொல்லுவோம்.
மொத்தத்தில் இந்தத் தேர்தல் முடிவானது இதுவரை நடந்தவைகளைப் போல் அல்லாமல் அரசாங்கத்துக்கு அதிக நிம்மதியையும் செளகரியத்தையும் கொடுக்கக்கூடியதாக ஏற்படும் என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் காங்கிரஸ்வாதிகளுக்கு ஒரு மந்திரி கொடுப்பதானாலும் அடிமை முறிசீட்டு எழுதி வாங்கிக்கொண்டுதான் கொடுப்பார்கள்.
அதோடுகூடவே நமக்கும் (ஒரு நிம்மதியைக் கொடுக்காவிட்டாலும் இயங்குதல் அடங்கும்வரை ஒரு நாளும் கொடுக்காது என்றாலும்) அடுத்தபடிக்குச் சென்று தொண்டாற்றவாவது உதவும் என்று கருதுகிறோம்.
இத்தேர்தலில் நம்மவர் சிலர் தங்கள் கவலையையும் பொறுப்பையும் கட்டிவைத்துவிட்டு அலட்சியமாய் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிவிக்கப்படுகிறது. காரணம் என்னவென்றால், “காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குப் பாடுபடுகிறார்கள். அதற்குப் போட்டியாக ஜமீன்தாரர்களும் இரண்டொரு பெருஞ்செல்வர்களும் தங்கள் தனிப்பட்ட ஆதிக்கத்துக்குப் பாடுபடுகிறார்கள். இதில் நமக்கு என்ன வேலை? நம் செல்வமும் ஊக்கமும் நேரமும் ஏன் வீணாக வேண்டும்?” என்று கருதி இருக்கிறார்களாம்.
இது உண்மையாக இருக்கலாம். அல்லது இதில் பகுதி உண்மை இருக்கலாம். உலக போராட்டமே இதுதான். அதாவது புரோகிதர்களும் பெரும் செல்வவான்களும் உலகைக் கட்டியாள்வதற்குச் செய்யும் வெளிப்படையான காரியம்தான் மக்கள் சுதந்திரப் போராய் விளங்குகின்றது. நல்ல சம்பவமாக நம் நாட்டில் இன்று புரோகிதனுக்கும் பெருஞ்செல்வவானுக்கும் ஏற்பட்ட சண்டையானது வரவேற்கக்கூடியதாகும். ஏனெனில் அதுவே உலக பாமர மக்கள் சுதந்திரத்துக்கு மார்க்கம் செப்பனிடக்கூடியதாகும். இந்தப் போராட்டம் காரணமாகவேதான் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனிதத்தன்மை ஏற்பட மார்க்கம் ஏற்பட்டு வருகிறது. இதை விட்டு விட்டால் – புரோகிதனும் செல்வவானும் ஒன்றாகிவிட்டால் பாமர மக்கள் அடிமைப்பிராயத்துக்குப் போக வேண்டியதுதான் – தாழ்த்தப்பட்ட மக்கள் மிருகப்பிராயத்துக்குப் போக வேண்டியதுதான். ஆதலால் யாருடைய தனிப்பட்ட நன்மைக்கு போராட்டம் ஏற்பட்டாலும் அதன் பயன் நமக்குக்கிடைக்க வழி இருக்கிறது. பலர் புகழும் ரஷ்யர்களுக்கு எப்படிப்பட்ட போராட்டத்தால் பயன் ஏற்பட்டது என்பதை யோசித்தால் நாம் கூறுவதில் இருக்கும் தத்துவம் விளங்காமல் போகாது. நம் கொள்கை “உண்மை சுதந்திரத்துக்கும் சுயமரியாதைக்கும் புரோகிதனும் செல்வனும் இருவரும் ஒழியவேண்டும்” என்பதுதானே? இருவரையும் ஒருங்கே எதிர்க்க நம்மால் முடியுமா? எனவே அவர்களே ஒருவருக்கொருவர் போராடிக் கொள்ளும்போது நம்கடமை என்ன? இவர்கள் இருவர்களில் யார் அதிக அபாயமானவர்களோ அவர்கள் ஆதிக்கம் ஒழிவதற்கும் மற்றவர்களுடன் சேரவேண்டியதுதானே அறிவுடைமையாகும்? ஆதலால் புரோகிதக் கூட்டத்தின் ஆதிக்கத்தைப் புதைப்பதற்கு ஒவ்வொருவரும் தங்களால் ஆன காரியத்தைச் செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆன காரியமாகும்.
குடி அரசு – தலையங்கம் – 24.01.1937