புறமுதுகு கொடுத்தோடிய ஆச்சாரியார்
மறுபடியும் போர் முனைக்கு வந்து விட்டார்
இதில் ஆச்சரியமொன்றுமில்லை
~cmatter
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் வட ஆற்காடு ஜில்லா போர்ட் தேர்தலிலும் திருச்சி முனிசிபல் தேர்தலிலும் காங்கிரஸ்காரர்களின் அயோக்கியத்தனம் வெளியாகி தலைவர்கள், மகா தியாகிகள், பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்றவர்களின் யோக்கியதையும் வெளியாகி காங்கிரஸ் என்றால் சீ என்னும்படியான நிலைமைக்கு வந்து விட்டவுடன் (தோழர் ராஜகோபாலாச்சாரியார்) மனம் நொந்து
“இன்றிலிருந்து சென்னையிலோ (சென்னை மாகாணத்திலோ ப-ர்) அல்லது வெளியிடங்களிலோ (வெளிமாகாணத்திலோ – என்றுதான் அப்போது காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர் களும் கருதி விசனப்பட்டிருக்கிறார்கள் ப-ர்) உள்ள எந்த காங்கிரஸ் கமிட்டி அலுவல்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை.”
என்று 11-8-36ந் தேதியில் ஒரு அறிக்கை எல்லா பத்திரிக்கைகளுக்கும் வெளியிட்டு விட்டு துறவு பூண்டுகொண்ட விஷயம் அந்த தேதி பத்திரிகை களில் இன்றும் யாவரும் காணலாம்.
நாம் அன்றைய தினமே மறுபடியும் ஆச்சாரியார் பார்ப்பன பிரசார அரசியலுக்கு வருவார் என்றும், இன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நாற்றத்தை சகிக்க முடியாமல் பலவீனத்தினால் விலகிக்கொண்டதாய் காட்டிக் கொண்டார் என்றும், காங்கிரஸ் இந்த நாற்றம் ஒழிந்ததும் முன்னணிக்கு வருவாரென்றும் எழுதி இருந்தோம். அது இன்று நிஜமாகி புறமுதுகு கொடுத்தோடியவர் மறுபடியும் போர்முனைக்கு வந்து பழயபடி வீரம் பேசுகிறார். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதையே “பல ஜன்மத்துக்கும்” தொண்டாய் கொண்டுவிட்டார். ஆனால் அக்கòயை ஒழிக்க முடியாது என்றும், அவரது இந்த எண்ணம் அவரது வாழ்வையே குட்டிச்சுவராக்கிவிட்டது என்றும் சொல்லி பரிதாபப்படுவதை விட அவருக்கு நாம் செய்யும் பணி வேறு ஒன்றும் இல்லாமல் போனதற்கு உண்மையிலேயே வருந்துகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 10.01.1937