காங்கிரஸ் அரங்கேற்றிய நாடகம்
1937 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜüன் முடிய “குடி அரசு” ஏட்டில் இடம் பெற்றிருந்த பெரியார் எழுத்து பேச்சுகளைக் கொண்டுள்ள இந்த முதல் தொகுதி 424 பக்கங்களைக் கொண்டுள்ளது. தலையங்கங்கள் உரைகளாக 117 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகள் பதிவாகியுள்ளன. “குடி அரசு” வார இதழாக வெளிவந்து கொண்டிருந்த இதே காலகட்டத்தில் “பகுத்தறிவு” மாத இதழாகவும், “விடுதலை” வாரம் இரு முறை இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தன.
1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்காக உருவாக்கிய அரசியல் சட்டத்தின் கீழ் காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். நீதிக்கட்சி தோல்வியை சந்தித்த காலகட்டம்; இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான பெரியார் எழுத்து – பேச்சுகள் – இந்த பின்னணியில் சுழலுவதால், பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த புதிய அரசியல் சட்டதிருத்தம் தொடர்பான சுருக்கமான ஓர் அறிமுகத்தை முன் வைக்கிறோம்.
1919 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்த இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 1935 இல் பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக உருவாக்கிய புதிய சட்டம் வழியாக மாநிலங்களில் சட்டமன்றம், மேலவைகளையும் மத்தியில் நாடாளுமன்றம், மேலவை களையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையுடன் நிறுவிக் கொள்ள உரிமை வழங்கியது. அப்போது இந்தியாவில் 11 மாநிலங்களும், ஆணையாளரின் நேரடி அதிகாரத்துக்கு உட்பட்ட 6 பகுதிகளும், 562 சிற்றரசுகளும் இருந்தன.
இதன்படி, சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 315 உறுப்பினர் களுக்கான தொகுதிகளில் 116 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகும். தாழ்த்தப்பட்டோருக்கு 30 தொகுதிகளும், பழங்குடியினருக்கு ஒரு தொகுதியும், இசுலாமியருக்கு 28 தொகுதிகளும், ஆங்கிலோ இந்தியருக்கு 2 தொகுதிகளும், அய்ரோப்பியருக்கு 3 தொகுதிகளும், இந்திய கிறிஸ்தவர் களுக்கு 8 தொகுதிகளும், தொழில் வணிக நிறுவனங்களுக்கு 6 தொகுதிகளும், பெருநிலக்கிழார்களுக்கு 6 தொகுதிகளும், பெண்களுக்கு 8 தொகுதிகளும் (இதில் ஒன்று கிறிஸ்தவருக்கும், ஒன்று இஸ்லாமியருக்கும்) பல்கலைக்கழகப் பிரதிநிதிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன. சட்டமன்றம் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கும்.
மேலவையில் 56 இடங்களில் 35 இடங்கள் பொதுவானவை. பத்து இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 7 இடங்கள் இசுலாமியருக்கும் 3 இடங்கள் இந்திய கிறிஸ்தவர்களுக்கும், ஓரிடம் அய்ரோப்பியருக்கும் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 10 இடங்களில் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார். மற்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவோர். இந்த மேலவை நிலையானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர் பதவி இழப்பார்கள். அவர்கள் இடங்கள் நிரப்பப்படும். சட்டசபை கொண்டு வரும் ஒவ்வொரு சட்ட வரைவையும் மேலவை விவாதித்து, ஒப்புதல் தந்த பிறகே சட்டமாக்க முடியும். இறுதியில் ஆளுநர் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். அதன் பிறகு வைஸ்ராய் ஒப்புதலும் பெற வேண்டும்.
மத்தியில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 150; இதில் தமிழகப் பிரதிநிதிகள் 20 பேர். 150 இடங்களில் பொது இடங்கள் 75; எஞ்சிய 75 இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 6 இடங்களும், சீக்கியருக்கு 4 இடங்களும், இசுலாமியருக்கு 49 இடங்களும், பெண்களுக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டன. மீதியுள்ள 10 இடங்களில் உறுப்பினர்களை வைஸ்ராய் நியமனம் செய்வார். இதே போல் நாடாளுமன்றத்துக்கான 250 இடங்களில் 105 பொதுவானது. தாழ்த்தப்பட்டோருக்கு 19 இடங்களும், இசுலாமியருக்கு 82 இடங்களும், தொழில் அதிபர்களுக்கு 11 இடங்களும், இந்திய கிறித்தவருக்கு 8 இடங்களும், அய்ரோப்பியருக்கு 12 இடங்களும், சீக்கியர்களுக்கு 6 இடங்களும், பெரு நிலக்கிழாருக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இரண்டு அவைகளின் காலமும் 5 ஆண்டுகள்.
மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் 56 துறைகளும், மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் 54 துறைகளும், மய்ய, மாநில அரசுகளுக்கு பொதுவாக 36 துறைகளும் நிர்வாகப் பங்கீடு செய்யப்பட்டன.
மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பின் கீழ் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முன் வந்தது. 1937 பிப்ரவரியில் சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, நீதிக்கட்சி தோல்வி யடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட மாட்டார் என்ற உறுதிமொழி தந்தால் மட்டுமே, பதவி ஏற்க முடியும் என்று கூறி, அமைச்சரவை அமைக்க மறுத்தது. காங்கிரசார் ஆட்சி அமைக்க மறுத்த நிலையில் நீதிக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். நீதிக்கட்சியினர் ஆட்சி அமைக்கக் கூடாது என்று பெரியார் அழுத்தமாக வலியுறுத்தினார். இதனால் ஆளுநரே ஒரு அமைச்சரவையை நியமித்தார். மூன்றரை மாத காலம் தான். இந்த அமைச்சரவை நீடித்தது. காங்கிரசார் அதிகாரப் பசியைப் பொறுக்க முடியாமல், தங்களது “ஆளுநர் எதிர்ப்பு” வேடத்தைக் கலைத்துக் கொண்டு அமைச்சரவை அமைக்க முன் வந்தனர். 1937 ஜüலையில் இராஜகோபலாச்சாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தோல்வியில் துவண்டு கிடந்த நீதிக்கட்சியினரைத் தட்டி எழுப்பியும், காங்கிரசை அம்பலப்படுத்தியும், பெரியார் ஆவேசமாகப் பேசினார். அனல் பறக்கும் தலையங்கங்களைத் தீட்டினார். கூர்மையான வாதங்களை முன் வைக்கும் அந்த கருத்தாக்கங்கள் இத்தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன.
நீதிக்கட்சிக்காக மக்கள் ஆதரவைத் திரட்டினார் பெரியார். அதற்காக அவர் நீதிக்கட்சியின் பலவீனங்களை மறைக்கவில்லை; ஒளிவுமறைவின்றி எழுதினார்; பேசினார். பார்ப்பனரல்லாத மக்களின் சமூக, கல்வி, அரசியல் உரிமைகளுக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற மய்யப் புள்ளியிலிருந்தே அவரது தேர்தல் அணுகுமுறைகள் இருந்ததை அவரது எழுத்தும் பேச்சும் வெளிச்சப்படுத்துகின்றன. காங்கிரசின் பார்ப்பன ஆதிக்க அரசியலுக்கு எதிராக களமிறங்கிய பெரியார் நீதிக்கட்சியின் வெற்றியை மட்டுமே மாற்றாக முன் வைக்கவில்லை. நீதிக்கட்சி தோல்வி அடைந்தாலும் கூட அது தனது கொள்கைக்கு மேலும் கூடுதல் பலத்தையே சேர்க்கும் என்கிறார்.
சென்னை கோடம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் நடத்திய பகுத்தறிவு சங்கம் ஆண்டு விழாவில் பெரியார் உரையாற்ற வந்தபோது, நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமா என்று கூட்டத்தில் கேள்வி கேட்டதற்கு, பெரியார் இவ்வாறு பதிலளித்தார்.
“ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் நான் மகிழ்ச்சி அடைவதோடு, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக் கூடும் என்கிற தன்மையில் இயக்கப் பிரச்சாரம் வளமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன்.”
தாம் ஆதரித்த கட்சி, வெற்றி பெறுவதால் மட்டுமே தமது கொள்கைகள் வெற்றி பெறும் என்று பெரியார் கருதவில்லை. கட்சி வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் கட்சிகளைக் கடந்து கொள்கைக்கு வலிமை சேர்த்திட முடியும் என்பதே பெரியார் பார்வையாக இருந்திருக்கிறது. “இந்தத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் தோற்றால் தமக்கு கூடுதல் பலம் கிடைக்கும்; பார்ப்பனர் என் முன் முழங்கால் படியிட்டு வணங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை” என்று கூறிய பெரியார், அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டுகிறார். “ஏன் என்றால் நமது கொள்கை அப்படிப்பட்டது. வெற்றி தோல்விக்கும், கொள்கைக்கும் சம்பந்தமில்லை. பார்ப்பனர்களுடன் நாம் போரிடும் கொள்கை இந்த தேசத்தை யார் ஆள்வது என்பதல்ல; இந்த தேச ஆட்சியில் நமக்கு பங்கு வேண்டும் என்பதே” – என்று தெளிவு படுத்துகிறார். உத்தியோகத்தில் வழங்கப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரசார் பதவிக்கு வந்து ஒழித்தால்கூட, அதுவும் நன்மைக்குத்தான் என்று கூறும் பெரியார், அதற்குப் பிறகு, ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் குறைந்த எண்ணிக்கையான பிரதிநிதித்துவம் அதிகரிக்கவே செய்யும் என்று உறுதிபடக் கூறுகிறார். பார்ப்பனரல்லாதாரின் உரிமை என்ற தளத்தின் மீது தான் பெரியாரின் அரசியல் பார்வையும், தேர்தலில் அவர் பின்பற்றிய அணுகுமுறையும் இருந்திருக்கிறதே தவிர, கட்சிகளுக்கான ஆதரவு என்ற குறுகிய எல்லைக்குள் முடங்கிடவில்லை என்பதை அவரது பேச்சும் எழுத்தும் உணர்த்துகின்றன.
இத் தொகுப்பில், “தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சுற்றுப் பயணம்” எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பெரியாரின் உரை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
முரண்பாடுகளை பெரியார் எப்படிப் பார்த்தார்? இது பற்றிய அவரின் தெளிவான புரிதலை கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலிலிருந்து அறிய முடிகிறது. காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலுகிறது என்றால், நீதிக்கட்சியோ, ஜமீன்தார்கள் கட்சியாக இருக்கிறது. இதில் நமக்கென்ன வேலை? என்ற கேள்வி, பொதுக்கூட்டம் ஒன்றில் கேட்கப் பட்டபோது பெரியார் இவ்வாறு பதில் அளித்தார்.
“நம் கொள்கை “உண்மை சுதந்திரத்துக்கும் சுயமரியாதைக்கும் புரோகிதனும் செல்வனும் இருவரும் ஒழிய வேண்டும்” என்பது தானே? இருவரையும் ஒருங்கே எதிர்க்க நம்மால் முடியுமா? எனவே அவர்களே ஒருவருக்கொருவர் போராடிக் கொள்ளும்போது நம் கடமை என்ன? இவர்கள் இருவர்களில் யார் அதிக அபாயமானவர்களோ அவர்கள் ஆதிக்கம் ஒழிவதற்கும் மற்றவர்களுடன் சேர வேண்டியது தானே அறிவுடைமையாகும்? ஆதலால் புரோகிதக் கூட்டத்தின் ஆதிக்கத்தைப் புதைப்பதற்கு ஒவ்வொருவரும் தங்களால் ஆன காரியத்தைச் செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆன காரியமாகும்.” (குடி அரசு, 24.1.37)
– என்ற பதிலின் மூலம், முரண்பாடுகளைக் கையாளும் முறையை முன் வைக்கிறார்.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சில முக்கிய எழுத்து, பேச்சுகளில், இராஜகோபாலாச்சாரியாரை துல்லியமாக மதிப்பீடு செய்யும் “ஆச்சாரியார்”;
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் 15 ஆண்டு சாதனைகளை படம் பிடிக்கும் “பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?”;
காந்தியார் பட்டினி மிரட்டலுக்கு பணிந்துவிடக் கூடாது என்று அம்பேத்கருக்கு அய்ரோப்பிய சுற்றுப்பயணத்திலிருந்து பெரியார் தந்தி கொடுத்த வரலாற்றைப் பதிவு செய்யும் “தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை”;
கும்பகோணத்தில் வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து பார்ப்பனர் நடத்திய மாநாடுகளை விளக்கி எழுதப்பட்ட “பார்ப்பன மகா நாடுகள்”;
மீண்டும் சேரன்மாதேவியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்பன “குருகுலம்” புத்துயிர் பெற்றதைத் தொடர்ந்து, குருகுலப் போராட்ட வரலாற்றைப் பதிவு செய்யும் “குருகுலம் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கமே” போன்றவை ஊன்றிப் படிக்க வேண்டியவையாகும்.
– பதிப்பாளர்