காங்கிரசின் தோல்வி

காங்கிரசானது எவ்வளவுதான் பொய்ப்பிரசாரங்கள் செய்து பாமர மக்களை ஏமாற்றி வந்த போதிலும் எவ்வளவுதான் கட்டுப்பாடாக எல்லாப் பார்ப்பனர்களும் எல்லா பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்து வந்திருந்த போதிலும் கடைசியாக புதிய சீர்திருத்தத் தேர்தலில் நல்ல பரிசுத்தமான தோல்வியை அடைந்து விட்டது என்பதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தத் தோல்வியை அறிவதற்கு யாரும் தேர்தல் வரை காத்திருந்து தேர்தல் முடிவைக்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமலே முடிவு வெளியாகிவிட்டது. இந்த விபரத்தை “தினமணி” பத்திரிகையில் கண்டபடியே மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம்.

அதாவது இந்தியாவில் உள்ள 11 மாகாணங்களுக்கும் உள்ள சட்டசபைகளின் அசம்பளி என்னும் கீழ் ஸ்தானங்களுக்கு மொத்த ஸ்தானங்கள் 1585 ஆகும். அவற்றிற்கு காங்கிரஸ்காரர்கள் போட்டி போட முன் வந்திருப்பது 758 ஸ்தானங்களுக்கு மாத்திரமேயாகும். 758 ஸ்தானங்களிலும் வெற்றி பெற்றாலும் அது மொத்த ஸ்தானங்களில் பகுதியைவிடக் குறைந்த ஸ்தானங்களேயாகும். ஆகையால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம்.

மொத்தத்தில் 11 மாகாணங்களில் 5 மாகாணங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் அபேக்ஷகர்களை நிறுத்தி இருக்கும் ஸ்தானங்கள் மிக மிகக் குறைவாகும்.

வங்காளத்தில் மொத்த ஸ்தானங்கள் 250க்கு 47 ஸ்தானங்களுக்கே போட்டி போட்டு 45 ஸ்தானங்கள்தான் எதிர் பார்க்கிறார்கள்.

அதுபோலவே பஞ்சாப் மாகாணத்திலும் 175 மொத்த ஸ்தானங்களில் காங்கிரஸ்காரர்கள் 30 ஸ்தானங்களுக்கே அபேக்ஷகர்களை நிறுத்தி 25 ஸ்தானங்கள்தான் வெற்றி பெறலாம் என்று கருதுகிறார்கள்.

சிந்து மாகாணத்தில் 60 மொத்த ஸ்தானங்களில் 14 அபேக்ஷகர்களை நிறுத்தி 12 ஸ்தானங்கள்தான் வெற்றி பெறலாம் என்று கருதுகிறார்கள்.

அஸ்ஸாம் மாகாணத்திலும் 108 பொது ஸ்தானங்களில் 40 ஸ்தானங்களுக்கே அபேக்ஷகர்களை நிறுத்தி 37 ஸ்தானங்களே எதிர்பார்க்கிறார்கள்.

மற்ற மாகாணங்களிலும் 100க்கு 4, 5, 6 ஸ்தானங்களே தாங்கள் மெஜாரிட்டியாய் வரலாம் என்று எதிர் பார்க்கிறார்களே ஒழிய தாராளமாகக் குறிப்பிடத் தகுந்த மெஜாரிட்டி ஒரு மாகாணத்திலும் எதிர்பார்க்கவில்லை. பீகார் ஒன்றில் மாத்திரம் ரூபாய்க்கு 10 அணா வீதம் வெற்றி கிடைக்கலாம் என்று கருதுகிறார்கள்.

நமது சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை மொத்தம் 215 ஸ்தானங்களுக்கு 140 ஸ்தானங்களுக்கே காங்கிரஸ்காரர்கள் போட்டி போட்டிருக்கிறார்கள். பாக்கி 75 ஸ்தானங்களுக்கு ஆட்களை நிறுத்தவேயில்லை. ஆகவே காங்கிரசுக்கு எதிராக இப்போதே 75 ஸ்தானங்கள் போட்டி இல்லாமல் வெற்றி பெற்றுவிட்டன. அவைகளுக்கு சிலவற்றிற்கு போட்டி இருக்கலாம் என்றாலும் அப்போட்டிகள் வகுப்புவாதத்தை ஒழிக்கவோ ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்கவோ, சீர்திருத்தத்தை உடைக்கவோ ஏற்பட்டவை அல்ல.

ஆதலால் இப்பொழுதே ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைக்கு அனுகூலமாக 75 ஸ்தானங்கள் கிடைத்துவிட்டன. பாக்கி உள்ள 140 ஸ்தானங்களிலும் காங்கிரசுக்காரர்கள் 120 ஸ்தானங்கள் தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த 120 ஸ்தானங்கள் அவர்கள் எதிர்பார்ப்பது போல் கிடைத்தாலும் 12லீ ஸ்தானங்கள்தான் மெஜாரிட்டி கிடைக்கலாம். ஆனால் இதுவாவது எதிர்பார்த்தபடி கிடைக்குமா? என்பது மிகவும் யோசிக்கத்தக்கதாகும்.

தெலுங்கு நாட்டில் அவர்கள் நிறுத்திய அபேக்ஷகர்களில் பாதிப்பேர்கள் கூட எதிர்பார்க்க முடியாது என்பதை தெலுங்கு தேசத்துக் காங்கிரஸ்வாதிகளே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். மலையாளத்தில் நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களில் பகுதியே கிடைக்கலாம்.

தமிழ்நாட்டில் 2 ஜாயிண்டு ஓட்டுகள் உள்ள இடங்களில் எல்லாம் காங்கிரசுக்கு எதிரான ஜஸ்டிஸ் கட்சிக்கோ வேறு கட்சிக்கோ ஒரு ஸ்தானம் கிடைத்துவிடும். மற்ற ஸ்தானங்களிலும் மொத்தத்தில் ஒவ்வொரு ஜில்லாக்களிலும் பகுதிக்குக் குறைவில்லாமல் காங்கிரசின் எதிர்க்கட்சிகளுக்கு ஜெயம் கண்டிப்பாய் கிடைக்கக்கூடும்.

உதாரணமாக கோயமுத்தூர் ஜில்லாவை எடுத்துக்கொண்டால் ஈரோட்டில் பட்டக்காரருக்கு ஜெயம் என்று இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம். கோவையில் சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கும் கோபியில் சுப்பிரமணிய கவுண்டர் அவர்களுக்கும் முஸ்லீம்களில் கான்சாகிப் ஷேக்தாவுது சாயபு அவர்களுக்கும் அவ்வபேக்ஷகர்கள் தூங்கிக்கொண்டிருந்தாலும் ஜெயம் கிடைக்குமென்று சொல்லலாம். இது போலவே திருநெல்வேலி முதல் சென்னை வரையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் பகுதிக்கு மேல் இப்போதே உறுதி சொல்லக்கூடிய நிலையில் தேர்தல் முடிவு இருந்து வருகிறது.

போட்டியில்லாமல் வெற்றி பெற்ற ஸ்தானங்கள் என்பவைகளிலும் காங்கிரஸ் அல்லாத கட்சிக்கு மொத்தத்தில் எவ்வளவு ஸ்தானங்களுக்குப் போட்டி இல்லையோ அவ்வளவு ஸ்தானங்களுக்குத்தான் காங்கிரசிலும் போட்டி இல்லாமல் வெற்றி கிடைத்திருக்கிறது.

காங்கிரசுக்கு இந்த தேர்தல்களில் என்ன வெற்றி என்றால் 140 ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் போட்டி போட்டதில் 40 ஸ்தானங்களுக்கு மேல் பார்ப்பனர்களை காங்கிரஸ் நிறுத்திவைத்து பெரும்பாலும் மற்றவர்கள் பணத்தில் போட்டி போட்டு பார்ப்பனர்கள் எல்லோரும் வெற்றி பெறும்படியாக முயற்சிக்கிறது. இதுதான் காங்கிரசுக்கு நல்ல வெற்றியாகும். இதைப்பற்றி முன்னமேயே சென்ற வாரத்திற்கு முன்பே குறிப்பு காட்டியிருக்கிறோம். அதாவது 100க்கு 3 வீத உரிமையுள்ள ஜனத்தொகைக்காரர்கள் 140க்கு 40 என்றால் 100க்கு 30 வீதம் நின்று இருக்கிறார்கள். வெற்றி விஷயத்திலும் பார்ப்பனர்கள் ஏறக்குறைய முக்காலே அரைக்கால் வாசிப்பேர்கள் வெற்றி பெற சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

பார்ப்பனர்கள் ஓட்டுகளே ஏராளமாய் மெஜாரிட்டியாய் உள்ள யூனிவர்சிட்டி தொகுதிக்கு தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அபேக்ஷகராய் நின்றுகொண்டு அறிக்கை விடுகிறார்.

அதாவது தான் ஏழை என்றும், வீடுவீடாய் வந்து ஓட்டுக் கேட்க முடியாதென்றும், தபால் கார்டு போட்டாலும் அதிகப் பணம் செலவாகும் என்றும், பத்திரிகை அறிக்கையைப் பார்த்து தனக்கு எல்லாரும் ஓட்டுப்போட வேண்டும் என்றும், காங்கிரசானது அப்பேர்ப்பட்ட மகத்தான சபை ஆனதால் ஒவ்வொருவரும் அப்படியே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் கருத்து என்ன என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். அதாவது தானும் பார்ப்பனர், ஓட்டர்களும் மெஜாரிட்டி பார்ப்பனர்கள், எதற்கு ஆக நேரில் சென்று ஓட்டு கேட்க வேண்டும், காங்கிரசு பார்ப்பனர்கள் சொத்துதானே என்கின்ற அஹம்பாவத்தின் பிரதிபிம்பமே அல்லாமல் இவ்வறிக்கையின் தத்துவம் வேறு என்ன? என்று கேட்கிறோம்.

இதைப்பார்த்து தோழர் சிவகாசி சொக்கலிங்கம் காப்பி அடிக்கிறார். பயன்படுமா என்பதை கடைசியில் பார்க்க இருக்கிறோம். இதே தோழர் ராஜகோபாலாச்சாரியார் தன் விஷயத்துக்கு மாத்திரம் ஏழையானால் மற்ற ஏழை அபேக்ஷகர்கள் விஷயத்தில் ஏன் அறிக்கை இட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது என்று கேட்டால் என்ன மறுமொழி சொல்லுவார்? மற்ற எத்தனை ஏழை அபேக்ஷகர்களுக்கு இவர் ஏன் ஊர் ஊராய்ச் சுற்றி பிரசாரம் செய்யவேண்டும்?

ஆகவே “உங்கள் சொத்து எங்கள் சொத்து, எங்கள் சொத்து எங்கள் சொத்து” என்று ஒரு வைசிய பழமொழி உண்டு. அதுபோல் பார்ப்பனர் ஓட்டுகள் பார்ப்பனர்களுடையது, பார்ப்பனரல்லாதார் ஓட்டுகள் பார்ப்பனருடையது என்றுதான் நம் பார்ப்பனர்களும் கருதி இருக்கிறார்கள்.

எப்படி இருந்த போதிலும் பொது நிலைமையை நோக்கின் இன்று காங்கிரசுக்கு வெற்றி இல்லை என்பதை இப்போதே எழுதி வைத்துவிடலாம். இதை 4, 5 வாரத்துக்கு முன்பாகவே “குடியரசு” தலையங்கம் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறோம். 110 ஸ்தானங்கள் காங்கிரசின் பேரால் பெற்று “காங்கிரஸ் கொள்கைப்படி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அரசியலை உடைப்பதற்கு சட்டசபைக்கு போக வந்தோம்” என்று அவர்கள் எல்லோரும் சொல்லிவிட்டு “இந்த அரசாங்கத்துக்கும் அரசருக்கும் அரச சந்ததிக்கும் அரசாங்க சட்டத்துக்கும் கீழ்ப்படிந்து பக்தி விசுவாசமாய் நடக்கிறோம்” என்று சொல்லி காங்கிரஸ்காரர்கள் மந்திரிபதவி அடைந்து சிம்மாசனத்தில் உட்காருவது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பதை ஒத்தது என்று எழுதியிருக்கிறோம்.

அதை மெய்ப்பிக்க இன்று காங்கிரஸ் பத்திரிகையே தெரிந்தோ தெரியாமலோ தங்கள் நிலைமையை குறிப்பிட்டு விட்டதானது குறிப்பிடத்தக்கதேயாகும்.

இந்த நிலையில் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தங்கள் கைக்கு ராஜாங்கம் இன்னும் இரண்டு மாதத்தில் வந்துவிடப் போவதாகவும் எல்லா அதிகாரங்களையும் தாங்களே கைப்பற்றிப் பார்ப்பனரல்லாத அதிகாரிகளைத் தூக்கில் போடப்போவதாகவும் சவடால் அடிக்கிறார். சொன்ன வாய் மூடுவதற்குள் தோழர் சத்தியமூர்த்தியாரைத் தோழர் ராஜகோபாலாச்சாரியார் மறைந்திருந்து அம்பு எய்து ஒழித்தே விட்டார். தோழர் முத்துரங்க முதலியாரும் காங்கிரஸ் கமிட்டித் தலைவரே ஒழிய, அவர் விலாசம் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் கிடைக்க முடியாததாகப் போய் விட்டது. இவ்வளவும் ஒருபுறமிருக்க எந்தக் காரணத்துக்காக ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று சத்தியமூர்த்தியாரும் ஆச்சாரியாரும் சொன்னார்களோ, அந்தக் காரணத்தை அதாவது உத்தியோகங்களையும் பதவிகளையும் சகல வகுப்புகளும் அடையும்படி செய்யவேண்டும் என்பதற்காக ஒழிக்க வேண்டும் என்றார்களோ அதை இப்பொழுது மாற்றிக்கொண்டு காங்கிரஸ் எப்போதும் இந்தக் கொள்கைக்கு அதாவது “வகுப்புவாரியாக உத்தியோகங்களைப் பிரித்துக்கொடுத்து ஒரு ஏற்பாடு செய்துகொள்ள காங்கிரஸ் என்றும் மறுத்ததில்லை” என்று ஆச்சாரியாரே சொல்ல வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது.

ஆகவே காங்கிரஸ் தனது கொள்கைகளையெல்லாம் விட்டுக் கொடுத்து கீழே இறங்கிவிட்டது என்றாலும் அப்படியாவது தேர்தலில் வெற்றி பெறுதலோ பதவி அடைவதோ என்பது எதிர்பார்க்க முடியாததாகவே போய்விட்டது.

குடி அரசு – தலையங்கம் – 31.01.1937

You may also like...