காங்கிரஸ் மிரட்டலுக்கு சர்க்கார் பதில்

 

காங்கிரசானது இதுவரை நாட்டில் பொய்ப் பிரசாரத்தாலும் காலித்தனத்தாலும் உயிர் வாழ்ந்து வந்தது என்பது அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். இப்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால் காங்கிரசின் காலித்தனத்தைப்பற்றி பொது ஜனங்களும் எதிர் அபேட்சகர் களும் அதிகமாகக் கூப்பாடு போட்டு அரசாங்கத்தாருக்கு தகவல் கொடுக்க ஆரம்பித்தார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கைகள் அனுப்பி பொதுக் கூட்டங்களில் காலித்தனம் நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் போலீசுக்காரரை மிரட்டி பலவிதமாகப் பயமுறுத்திப் பேசினார்கள்.

அதாவது, தேர்தலில் தாங்களே ஜெயிக்கப்போகிறார்கள் என்றும், போலீஸ் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்றும், அப்போது போலீசுக்காரர்கள் விஷயத்தில் கடினமான முறைகள் கையாளப்படும் என்றும், பல போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என்றும் பலவாறாகப் பேசினார்கள். சூசனை காட்டினார்கள். இதனால் உண்மையிலேயே சில போலீஸ்காரர்கள் பயந்து கொண்டேதோடு சில போலீசார் காங்கிரசுக்கு அனுகூலமாய் இருந்து காலித்தனத்துக்கு உதவி செய்தும் வந்ததானது அரசாங்க தகவலுக்கு எட்டியபின் அரசாங்கத்தார் 12-1-37ல் போலீசாருக்கு என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அவ்வறிக்கையில் (சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் விஷயத்தில்)

“1935-ம் வருஷத்திய இந்திய சர்க்கார் சட்டத்தின் 240-270வது பிரிவின்படி சர்க்கார் சிப்பந்திகளின் உரிமைகள் எவ்விதமும் பாதிக்கப்படமாட்டாது. கடமைகளை உண்மையுடன் செய்து வருபவர்களை நீக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

தாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் போலீஸ் படையைச் சேர்ந்த சிலரை வேலையில் இருந்து நீக்கிவிடப் போவதாய் சில அரசியல் வாதிகள் பயம் காட்டுவதைக் கண்டு எந்த அதிகாரியும் பயப்படவேண்டியதில்லை.

நாணயமாகவும் விஸ்வாசமாகவும் நடந்துகொள்ளும் எந்த சிப்பந்தியையும் யாராலும் அசைத்துவிட முடியாது என்று சர்க்கார் தங்கள் சிப்பந்திகளுக்கு உறுதி கூறுகிறார்கள்.” என்று கண்டிருக்கிறது.

இதனால் நமக்கு ஒன்றும் லாபமில்லை. ஆனால் இது தோழர்கள் பட்டேல், சத்தியமூர்த்தி ஆகியவர்களின் வாய்க்கொழுப்பு சீலையில் வடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். போலீசார் பெரிதும் பார்ப்பனர்களாய் இருந்தபடியால் சத்தியமூர்த்தியார் கோபத்திற்கு பெரும்பான்மையான போலீசார்கள் ஆளாகவில்லை. பார்ப்பனரல்லாத போலீசுக்காரர்கள் சிலர் சத்தியமூர்த்தியார் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அவர்களை மிரட்டவே தோழர் சத்தியமூர்த்தியார் தான் அதிகாரத்துக்கு வந்தவுடன் அப்படிச் செய்வேன் இப்படிச் செய்வேன் என்று அளந்து இருக்கிறார். தோழர் பட்டேலைக் கொண்டும் இம்மாதிரி கூறச் செய்து மிரட்டி இருக்கிறார். அதன் பயன் சர்க்கார் இவ்வித அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று. இதனாலேயே போலீசுக்காரர்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளுகிறார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. பொதுக் கூட்டங்கள் விஷயத்தில், 100க்கு 75 போலீசார் கவலை ஈனமாகவே இருக்கிறார்கள். கூட்டங்கள் நடப்பது தெரிந்தும் அதற்கு ஆஜராவதில்லை. பெரிய கூட்டத்திற்கு ஒருவர் இருவர் அதுவும் கான்ஸ்டேபிள்களே வருவது, அதிகாரியாய் இருப்பவர் வந்தாலும் காலித்தனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பதே ஒழிய ஏன் என்று கேட்பதில்லை. சில கூட்டங்களுக்கு போலீசாரையோ சின்ன அதிகாரியையோ அனுப்பும் போது போய் “பேசாமல் இருந்து பார்த்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டுவா” என்றும் “கலாட்டா நடக்குமானால் கூட்டத்தை நிறுத்திவிடு” என்றும் எச்சரிக்கை செய்து அனுப்புவதும், மற்றும் சில சமயங்களில் அதிகாரிகள் ஊரிலேயே இல்லாமல் போய்விடுவது இப்படி பல சூழ்ச்சிகள் வேண்டுமென்றே நடைபெறுகின்றன என்று சொல்லலாம். பொதுக் கூட்ட விஷயங்களில் கலகாஸ்பதமாகும்படி எவரையும் குறைவாய் திட்டாமலும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லவும் தங்கள் கட்சிக் கொள்கையை எடுத்து விளக்கவும் அரசியல் பிரசாரத்தில் இடமில்லையானால் சீர்திருத்தங்கள் எப்படி பயன்படும் என்று கேட்பதோடு உண்மையான – யோக்கியமான நாணையமான பிரதிநிதிகள் எப்படி வரமுடியும் என்றும் கேட்கின்றோம்.

இன்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மிதவாதக் கட்சித் தலைவர்களும் மற்றும் பலரும் காங்கிரஸ் காலிகளின் காலித்தனத்துக்குப் பயந்து கொண்டே வெளியில் பிரசாரத்துக்கு வரப் பயப்படுகிறார்கள் என்பது நமக்கு நன்றாய்த் தெரியும்.

மந்திரி கனம் குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மதுரையிலும் ராஜபாளையத்திலும் திருச்சியிலும் பேசும்போது கூச்சல் போட்டு கலகம் செய்ததும், மந்திரி கனம் பி.டி. ராஜன் அவர்கள் ஆஜராய் இருந்த சேலம் கூட்டத்திலேயே காங்கிரஸ் காலிகள் குழப்பம் செய்ததும், திருச்செங்கோட்டில் முதல் மந்திரி கனம் பொப்பிலி ராஜா அவர்கள் ஆஜராய் இருந்த கூட்டத்திலேயே சில காங்கிரஸ் காலிகள் குழப்பம் செய்ததும் ஆகிய காரியங்கள் அரசாங்கத்துக்கு தெரிந்ததேயாகும். இதிலிருந்தே போலீஸ் இலாக்கா எவ்வளவு தளர்ந்து இருந்தது என்பதும், காங்கிரஸ் காலிகளுக்கு இடம் கொடுக்கக் கூடியதாய் இருந்தது என்பதும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

போலீசுக்காரருக்கு இவ்வளவு தூரம் அவர்கள் வேலைக்கு உத்திரவாதம் கொடுத்து அறிக்கை விடுவதை விட அவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால் கண்டிப்பான நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும் என்று காலாகாலத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தால் தோழர் சத்தியமூர்த்தி முதலியவர்கள் இவ்விதம் பூச்சாண்டி காட்டும் படியான நிலைமையே ஏற்பட்டிருக்காது என்று சொல்லுவோம். ராசீபுரம், மாயவரம், நாகபட்டணம், லால்குடி, நீடாமங்கலம் முதலாகிய இடங்களில் போலீசார் ஜஸ்டிஸ் கòயின் சார்பாகப் பணியாற்றிய சில பிரபலஸ்தர்களையும் தொண்டர்களையும் எவ்வளவு கேவலமாக நடத்தினார்கள், நடத்துகிறார்கள் எவ்வளவு தைரியமாக காங்கிரசை ஆதரித்தார்கள் என்பதை போலீஸ் இலாக்கா மேல் அதிகாரிகள் கவனித்துப் பார்த்தால் விளங்கும்.

சில பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் ஜஸ்டிஸ் கòயார்கள் என்றாலே கொடிய பகையாளியைப் பார்ப்பது போல் பார்க்கின்றார்கள்.

பெரிய ஜில்லா போலீஸ் ஆபீசரும் டிப்டி சூப்ரண்டுமே பார்ப்பனரல்லாத சப் இன்ஸ்பெக்டர்களை “நீ ஜஸ்டிஸ் கòயா” என்று அதட்டுகிறார்களாம். இந்த நெருக்கடியான சமயத்தில் போலீசாருக்கு இப்படி மொட்டையான சிபார்சு அறிக்கை விடாமல் அவர்களது கடமையை வலியுறுத்தி பொதுஜன பேச்சுரிமையை காப்பாற்றும் பொறுப்பை விளக்கி அறிக்கை வெளியிட்டால் அனுகூலமாய் இருக்கும் என்று எண்ணுகிறோம். அதுவும் உடனே அறிக்கை வெளியிட்டால் நல்லது என்று சொல்லுவோம்.

இனி எங்கு ஜஸ்டிஸ் கò மீட்டிங்கு கூட்டப்படுவதானாலும் அங்கு எழுத்து மூலமாக போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு கூட்டுவது நலம் என்றும், அங்கு அந்தப்படி தெரிவித்து விட்டு நடத்தப்படும் கூட்டங்களில் காலித்தனம் ஏற்பட்டால் அதற்கு சர்க்காராரே பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி விடலாம் என்றும் யோசனை கூறுகிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.01.1937

You may also like...