தர்மபுரி தேர்தல் வண்டவாளம் அழுவதற்கு வெட்கமில்லையா?
சேலம் ஜில்லா போர்டு பிரிவினையான விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். அதில் சேலம் ஜில்லா போர்டு என்பதற்கு காங்கிரஸ்காரர் பிரசிடெண்டாக வந்துவிட்டார். அதற்கும் நாமினேஷன் கொடுத்த பிறகுதான் தேர்தல் நடந்திருக்கிறது. அது போலவே சென்னை மாகாணத்தில் மற்றும் எவ்வளவோ ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டு நாமினேஷன்கள் கொடுக்கப்பட்ட பிறகே இதுவரை பெரிதும் பிரசிடெண்ட் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இனியும் நடக்கப்போகின்றன. கோயமுத்தூர் ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. ஈரோடு ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. முன் சொன்ன சேலத்திலும் அப்படியே நடந்தது. அதுபோலவே தான் தருமபுரி ஜில்லா போர்டும் நடந்திருக்கிறது.
இந்த நிலையில் பிரசிடெண்ட் தேர்தலில் காங்கிரஸ் அபேக்ஷகர் தோல்வி அடைந்துவிட்டதற்கு பார்ப்பன பத்திரிக்கைகள் ஜஸ்டிஸ் கட்சி மீது ஆத்திரத்தைக் காட்டி வசவு மாலை சூட்டுகின்றன.
தர்மபுரி நடவடிக்கையைப் பார்த்தவர்களுக்கு ஜில்லா போர்டுக்கு காங்கிரசிற்கு இயற்கையிலேயே மெஜாரட்டி கிடையாது என்பது விளங்கும். ஓட்டு ஒன்றுக்கு 2000, 3000, 4000 ரூபாய் கொடுத்து சில ஓட்டுகள் விலைக்கு வாங்கிய பிறகே காங்கிரஸ்காரர்களுக்கு 14 ஓட்டுகளாவது பெற முடிந்திருக்கிறது.
இந்த யோக்கியதையில் தேசீயப் பத்திரிகைகள் என்பவை ஜஸ்டிஸ் கட்சியின் நாணையத்தைப்பற்றி பேச முன்வந்திருப்பது “குச்சிக்காரி வரும்படி குறைந்தவுடன் கற்பு உபதேசம் செய்யப் புறப்பட்டாள்” என்பதுபோல் இருக்கிறது.
காங்கிரஸ்காரர்கள் ஓட்டர்களுக்குப் பணம் கொடுத்து மெம்பர் தேர்தல்களிலேயே வெற்றி பெற்றது ஒரு புறமிருக்க காங்கிரஸ் பிரசிடெண்ட் தேர்தலுக்குக்கூட சிலர் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரம் காட்டத் தயாராய் இருக்கிறோம்.
அதாவது 2, 3-ந் தேதிகளில் கத்தை கத்தையாய் கரன்சி நோட்டுகள் வைத்துக்கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து பணம் கொடுத்து மெம்பர்களைப் பிடித்துக்கொண்டு வந்து ஒவ்வொருவராக அறையில் போட்டுப் பூட்டிக் கொண்டார்கள். 4ந் தேதி தேர்தல் நடக்கும்போது மெம்பர்களைக் கைதிகள் போல் அறையைத் திறந்து வண்டியில் வைத்து ஆபீசுக்கு அழைத்துப் போகும்முன் கற்பூரம் பற்றி வைத்து ஒவ்வொருவரிடம் வெளிப்படையாய் ஓட்டுப்போட ஒப்பந்தம் பேசி சத்தியம் வாங்கிக் கொண்டு வண்டி ஏற்றினார்கள்.
பிறகு என்ன நடந்தது என்பதைக் கவனிக்க வேண்டுகிறோம். ஏனெனில் அதுதான் காங்கிரசின் யோக்கியதையைப் பட்டவர்த்தனமாய்க் காட்ட மிகவும் சரியான ஆதாரமாகும்.
அதென்னவென்றால் எலக்ஷன் ஸ்தலத்தில் சேலம் ஜில்லா கலைக்டர் தோழர் எஸ்.வி. ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் எலக்ஷன் நடக்கும்போது காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட 14 மெம்பர்களும் பாரிஸ்டர், வக்கீல்கள், பெரிய மிராசுதாரர்கள் உள்பட எல்லோருமே கலைக்டரையே ஓட்டுச் செய்யும்படி சொல்லி வெளிப்படையாக (ஓப்பன் ஓட்டாகவே) ஓட்டுப் போட்டார்கள். இந்த சமயத்தில் கலைக்டர் ஒருவரை “நீர் பாரிஸ்டராயிற்றே, நீர் ஏன் ஓப்பன் ஓட்டுப் போடுகிறீர்?” என்று கேட்டாராம். மற்றொருவரை “நீர் வக்கீலாயிற்றே, உமக்குக்கூடவா எழுதப்படிக்கத் தெரியவில்லை?” என்று கேட்டாராம்.
இப்படியே ஒவ்வொருவரையும் கலைக்டர் கேட்கும்போது ஒருவர் “மயக்கமாய் இருக்கிறது” என்றும், ஒருவர் “தலை சுற்றுகிறது” என்றும், ஒருவர் “கண் மப்பாயிருக்கிறது” என்றும், ஒருவர் “மனம் சரியாயில்லை” என்றும் இப்படியே இன்னும் பலரும் பல விதமாய் சமாதானம் சொல்ல கலைக்டர் சிரித்துக்கொண்டே ஓட்டு (மார்க்கு) செய்தாராம்.
ஆகவே காங்கிரஸ் மெஜாரிட்டி அதாவது பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் இந்த 14 பேர்களுடையதுதான் என்பதாய் இருந்தால் இந்த பதினான்கு பேரும் பொதுஜனப் பிரதிநிதிகளாக யோக்கியமுடையவர் களாவார்களா என்று கேட்பதோடு காங்கிரசுக்கு உண்மையிலேயே மெஜாரிட்டி இருந்திருக்கிறதா என்று கேட்கிறோம்.
“மடியில் கனமில்லாதவர்கள் வழியில் ஏன் பயப்படவேண்டும்?” இவர்கள் பணத்துக்கோ அல்லது வேறு சுயநலத்துக்கோ பிரதிநிதிகளாய் இல்லாமல் பொதுஜனங்களுக்கு உண்மையான பிரதிநிதிகளாய் இருந்திருந்தால் தோழர் M.எ. நடேச செட்டியாரைத் திருப்தி செய்யச் சத்தியமும் செய்து கொடுத்துவிட்டு ஓப்பன் ஓட்டாய் ஓட்டுப் போடக் காரணம் என்ன என்று கேட்கின்றோம்.
ஜஸ்டிஸ் கட்சிக்கு “அந்திய காலம்” ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்திய காலத்துக்கு ஆரம்பகாலம் ஏற்பட்டில்லாமல் காங்கிரசுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்க முடியுமா?
இன்னமும் நமக்கு வந்துள்ள செய்தியில் ஆசாமிகள் பேரும் அவர்கள் ஆள் ஒன்றுக்கு இத்தனை ரூபாய் கொடுத்து வெளிப்படையாய் ஓட்டுப் போட இத்தனை ஓட்டர்களிடம் கண்டிஷன் வாங்கப்பட்டது என்ற விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் உண்மையாயிருக்குமா என்று சந்தேகப்பட்டே நாம் அதை பிரசுரிக்கவில்லை.
ஆனால் 14 ஓட்டர்களும் பாரிஸ்டர், வக்கீல்கள், மிராசுதாரர்கள் ஆகியவர்கள் சட்ட விரோதமாய் வெளிப்படையாய் ஓட்டுப் போடக் காரணம் என்ன? சட்டப்படி ரகசியமாய் ஓட்டுப் போடுவதில் இவர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியம் என்ன? என்று கேட்கின்றோம்.
சில ஜில்லா போர்டு மெம்பர்களின் தேர்தல்களில் சில விஷயங்கள் நேரிலேயே நாம் பார்த்திருக்கிறோம். என்னவென்றால் ரகசிய ஓட்டுக்கு ஒரு ரூபாய், ஓப்பன் ஓட்டுக்கு இரண்டு ரூபாய் என்று பேரம் பேசப்படுவதையும், வெளிப்படையாய் ஓட்டுப் போட்டுவிட்டு பொது மனிதரிடம் பொதுக் கட்டிய பணத்தை வாங்கிப் போவதையும் பார்த்திருக்கிறோம்.
தர்மபுரி காங்கிரஸ் மெம்பர்கள் விஷயத்தில் இது பொருந்தாது என்று சொல்வதானாலும் சேலத்தில் வெகு நாளாய் ஆதி முதல் காங்கிரஸ்வாதியாயிருந்தவரான தோழர் வெங்கிட்டப்ப செட்டியார் அவர்கள் குமாரரும் சீமைக்குப் போய் பாரிஸ்டர் பாஸ் செய்து ஆங்கில நாகரீகத்தையும் நாணயத்தையும் படித்து வந்தவருமான பாரிஸ்டர் தோழர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் கூட இம்மாதிரி ஓப்பன் ஓட்டுப் போட சரியான காரணம் சொல்லாவிட்டால் அதில் காங்கிரசு, தேசாபிமானம், பொதுஜனப் பிரதிநிதித்துவம் என்பவைகள் அல்லாமல் வேறு என்னமோ ஒன்று ஒளிந்து கொண்டு இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டாமா என்று கேட்கின்றோம்.
தலைமை வகித்த கலைக்டர் தோழர் ராமமூர்த்தி ஐ.இ.கு. அவர்கள் இவ்விஷயங்களை அதாவது இன்ன இன்னார் இத்தனை பேர் காங்கிரஸ் பிரசிடெண்ட் அபேக்ஷகருக்கு இன்ன இன்ன காரணம் சொல்லி (ஓப்பனாய்) வெளிப்படையாய் நடேச செட்டியாருக்குத் தெரியும் படியாக ஓட்டுப் போட்டார்கள் என்று கவர்ன்மெண்டுக்கு ரிபோர்ட் செய்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றோம். இந்த ரிப்போர்ட்டையும் கவர்னர் பிரபு பார்ப்பார் என்றே கருதுகிறோம். இவற்றைப்பற்றி அடுத்து வரும் சட்டசபையில் இருகட்சி அங்கத்தினர்களும் கேள்வி கேட்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட யோக்கியர்களைக் கொண்ட காங்கிரஸின் சார்பாய் நிறுத்தப்பட்ட தலைவர் – அதுவும் வெளிப்படையாய் ஓப்பன் ஓட்டு போடும்படி ஏற்பாடு செய்து கொண்ட தலைவர் வெற்றி பெறவில்லை என்று காங்கிரஸ் பத்திரிக்கைகள் அழுவதற்கு வெட்கமில்லையா என்று கேட்கின்றோம். இந்த லக்ஷணத்தில் ஜஸ்டிஸ் கò மந்திரி மீது குறை கூற வெட்கமில்லையா என்றும் கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்களின் ஜனநாயகத்துவமும் தேர்தலில் வெற்றி பெறும் யோக்கியதையும் அவர்களது பிரதிநிதித்துவமும் தான் சுயராஜ்யத்திற்கு பாதை என்றால் அப்பாதையை கல்லும் முள்ளும் படைக் கத்தாழையும் போட்டு மூடி விடுவதே மேல் என்று சொல்லுவோம்.
குடி அரசு – கட்டுரை – 10.01.1937″இந்து”வின் நொண்டிவாத அழுகை
ஸ்தல ஸ்தாபன நாமினேஷன்
அதற்குள் அழுகை முடிந்துபோகவில்லை
“இந்து” பத்திரிகையானது தர்மபுரி ஜில்லாபோர்டு பிரசிடெண்டு எலக்ஷனில் காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டுப் போனதின் காரணமாய் ஜஸ்டிஸ் கò மீது பழி சுமத்துகிறது. அதாவது தோல்விக்கு காரணம்,
- சர்க்கார் நாமினேஷன் செய்த கெஜட் விளம்பரம் ஞாயிற்றுக்கிழமை (லீவு நாளில்) வெளியாக்கப்பட்டதாம்.
- எலக்ஷன் நடத்தப்படுவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட போர்டுக்கும் மொத்த மெம்பர்கள் எவ்வளவு என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்கின்ற சட்டத்தை அனுசரிக்கவில்லையாம்.
- எலக்ஷன் மெஜாரிட்டியை நாமினேஷன் கெடுத்துவிட்டதாம்.
இந்த மூன்று காரணங்களும் நொண்டி வாதமான காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்படி எனில் முதலாவது காரணமான லீவு நாளில் நாமினேஷன் பெயர்கள் கெஜட் ஆனதினால் எலக்ஷனை எப்படி பாதித்து விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
இது “ஆடத் தெரியாத தேவடியாள் கூடம் போதாது” என்று சாக்குச் சொல்லுவது போல் இருக்கிறது.
சர்க்கார் காரியாலயங்களுக்கு டிசம்பர் 23ந் தேதியில் இருந்து ஜனவரி 3ந் தேதி வரையில் விடுமுறை நாளாகும். பிரசிடெண்ட் தேர்தல்களோ சேலத்துக்கு ஜனவரி N நாலாந் தேதியும் தர்மபுரிக்கு 5ந்தேதியும் ஏற்கனவே கலைக்டரால் குறிப்பிடப்பட்டாய் விட்டது. ஆதலால் தேர்தலுக்கு முன்பாகவே நாமினேஷன் ஆனவர்களின் பெயர்கள் வெளியாக்க வேண்டியதின் நிமித்தம் 3ந்தேதி விசேஷ கெஜட் மூலம் வெளியாக்கப்பட வேண்டியதாயிற்று. இது அனேக தடவைகளில் சாதாரணமாக அரசாங்கத்தாரால் செய்யப்பட்டு வரும் காரியமே ஒழிய தர்மபுரிக்கு மாத்திரம் செய்யவில்லை. சேலம் போர்டு பிரசிடெண்ட் தேர்தலில் ஓட்டுச் செய்த நாமினேஷன் மெம்பர்களும் லீவு நாளில் வெளியான கெஜட்டில் பிரசுரிக்கப்பட்டவர்களேயாவார்கள். இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் லீவு நாளில் கெஜட் வெளியானதை “இந்து” பத்திரிகையோ, வேறு காங்கிரஸ்காரர்களோ குற்றம் சொல்லவோ அல்லது எடுத்துக் காட்டவோ கூட இதுவரை முன் வரவில்லை.
சட்ட சம்பந்தமாக கூறப்படும் குற்றமும் ஆதாரமற்றது என்றே சொல்ல வேண்டும். அல்லது வேண்டுமென்றே குரோதக்கண்ணில் பார்த்து குரைப்பது என்றுதான் சொல்ல வேண்டும். சட்டத்தில் ஒரு போர்டுக்கு மொத்த மெம்பர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கும் பிரிவானது:-
“போர்டுக்கு இவ்வளவு பேர்கள் மெம்பர்களாயிருக்கவேண்டும் என்பதை கவர்ன்மெண்டார் விளம்பரத்தின் மூலம் வெளியிடவேண்டும்” என்றுதான் சொல்லுகிறதே தவிர “இந்து” பத்திரிகை சொல்லுகிறபடி “தேர்தலுக்கு வேண்டிய காரியம் துவக்குமுன்னமே வெளிப்படுத்த வேண்டும்” என்பதாக இல்லை.
போர்டு மெம்பர் தேர்தல் மெம்பர்கள் எலக்ஷன் நடந்து அதில் வராத ஒதுக்கி வைக்கப்பட்ட வகுப்பார்களை அறிந்து அவர்கள் ஜனத்தொகை வீதாச்சாரத்துக்கும் எத்தனை மெம்பர்கள் வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து சட்டத்தையும் அனுசரித்து நியமனம் செய்ய வேண்டியிருப்பதால் மெம்பர்கள் தேர்தலுக்கு பின்னால் தான் மொத்த எண்ணிக்கை நிர்ணயிக்க முடிகிறது. ஆதலால் கவர்ன்மெண்டார் இவ்விஷயத்தில் சட்டத்தை மீறி சட்ட வாசகத்துக்கு விரோதமாய் ஒன்றும் செய்து விடவில்லை.
கடசியாக எலக்ஷன் மெஜாரிட்டியை நாமினேஷன் கெடுத்து விட்டது என்பது.
இது அடியோடு வேண்டுமென்றே சுமத்தும் பழியாகும். ஏனெனில் தர்மபுரி ஜில்லா போர்ட் அதாவது வடக்கு சேலம் ஜில்லா போர்டு மெம்பர்கள் தேர்தல் நடந்தவுடன் காங்கிரஸ்காரர்கள் 24 மெம்பர்களில் தங்களுக்கு 18 மெம்பர்கள் என்று அவர்களே விளம்பரப்படுத்தினார்கள். அது ஒரு புறமிருக்க மேல் குறிப்பிட்ட மொத்த மெம்பர்கள் 24 பேர்களில் தோழர் கிருஷ்ணமூர்த்தியை பிரசிடெண்டாக்குவதற்கு அதாவது “கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் போர்டில் தொண்டாற்றுகின்றோம்” என்று 14 பேர்கள் கூடி தங்களை ஒரு கமிட்டியாய் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் ஜில்லா மக்களுக்கு ஆக உழைப்பதாய் சில கொள்கைகளையும் வகுத்து ஒரு அறிக்கை தயார் செய்து தங்கள் கையெழுத்துக்களையும் போட்டு வெளியிட்டிருக்கிறார்கள். அவ்வறிக்கை சர்க்கார் அதிகாரிகள் பார்வைக்கும் தென்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரசுக்கு 10 மெம்பர்கள் தான் உண்மையாய் இருந்திருக்க வேண்டும் என்பதை சர்வ முட்டாளும் ஒப்புக்கொள்வான்.
இது எப்படியோ இருக்கட்டும். காங்கிரஸ்காரர்கள் வெளியிட்டிருக்கிற படியே பார்த்தாலும் காங்கிரசின் பேரால் காங்கிரஸ் ஆதரவால் மெம்பரான 18 பேர்கள் அன்று எலக்ஷனின் போது எங்கு போய்விட்டார்கள் என்று கேட்கின்றோம்.
மறுநாள் 6-ந் தேதி சேலத்தில் காங்கிரஸ்காரர் தோல்வி துக்கம் கொண்டாடிய ஒரு துக்க மீட்டிங்கில் தோழர் பாரிஸ்டர் கு.ங. ராமசாமி அவர்களும் அவர் தகப்பனார் வெங்கட்டப்ப செட்டியாரும் சேலம் காங்கிரஸ் காரியதரிசியும் டாக்டர் சுப்பராயன் அவர்களும் பேசியிருப்பதில் ஒரு விஷயம் வெளியிட்டிருப்பதைக் காணலாம். (அது 7-1-37தி “சுதேசமித்திரன்” 9ம் பக்கம் 2,3, கலங்களில் காணப்படுகிறது.)
அதாவது,
காங்கிரசின் சார்பாக வெற்றி பெற்ற மெம்பர்களான தோழர்கள் வெங்கிட்டே கவுண்டர், ஹரூர் தீர்த்தகிரி கவுண்டர், ஊத்தங்கரை சென்ன கிருஷ்ண செட்டியார் ஆகியவர்கள் காங்கிரஸ் நிபந்தனை பத்திரத்தில் கையெழுத்து போட்டு காங்கிரசின் பேரால் வெற்றி பெற்று விட்டு பிரசிடெண்ட் தேர்தலில் காங்கிரசை மோசம் செய்துவிட்டதால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று பேசி தீர்மானங்களும் செய்திருக்கிறார்கள்.
மற்றும் ÿமான் கு.இ. வெங்கட்டப்ப செட்டியார் “ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான தர்மபுரி டாக்டர் கு.கீ. தர்மலிங்கம் அவர்கள் தர்மபுரி ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸ் பிரதிநிதியான ÿமான் M.எ. நடேசம் செட்டியாருக்கு விரோதமாக வேலை செய்ததை கண்டித்து இம்மாதிரி காங்கிரசுக்கு விரோதமாக நடந்து கொண்டதற்கு ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை கேட்டுக் கொள்ளுகிறது” என்று ஒரு பிரேரேபணை கொண்டு வந்திருக்கிறார்.
ÿமான் சாமண்ணா இதை ஆமோதித்திருக்கிறார். அதன் பின் ஏகமனதாக இது நிறைவேறி இருக்கிறது.
மற்றும் “வேலூரில் நடந்தபடியே இங்கும் சம்பவம் நடந்துவிட்டது. வருத்தகரமான விஷயம்” என்று சேலம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியே பேசி இருக்கிறார்.
கடசியாக டாக்டர் சுப்பராயன் அவர்கள் அக்கூட்டத்தில் பேசுகையில் “காங்கிரஸ் மெம்பரான ÿமான் வெங்கிட்டே கவுண்டர் (பிரசிடெண்டு அபேக்ஷகரான தோழர் கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்) தன் ஜாதியை சேர்ந்தவர் என்கின்ற காரணத்தால் ஜஸ்டிஸ் கòயை சேர்ந்த ஒருவருக்கு தலைவராகும்படி ஓட்டுச் செய்திருப்பதால் காங்கிரசில் இம்மாதிரி வகுப்புவாதம் இருந்து வருவது விசனப்படத் தக்கதாகும்” என்று பேசி அழுது இருக்கிறார்.
ஆகவே வாஸ்தவத்தில் ரிக்கார்ட்டுப்படி பார்க்கவேண்டுமானால், தர்மபுரி ஜில்லா போர்டு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் அபேக்ஷகர் காங்கிரஸ் மெம்பர்களின் நடத்தையாலும் “துரோகத்தாலும்” தோல்வி அடைந்ததே தவிர ஜஸ்டிஸ் கòயால் தோல்வி அடையவில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
அன்றியும் தோழர் கிருஷ்ணமூர்த்தி கவுண்டரை ஆதரிப்பதாக வாக்களித்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்த 14 மெம்பர்களில் 5, 6 பேர்களை காங்கிரஸ்காரர் பணம் கொடுத்தும் வைஸ் பிரசிடெண்டு கொடுப்பதாகச் சொல்லியும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் காங்கிரஸ் மெம்பர்கள் எழுதப்படிக்க தெரிந்த பெரிய மனிதர்கள் என்பவர்களாய் இருந்தும் வெளிப்படையாய் ஓட்டுப் போட்டிருப்பதே போதுமானதாகும். விஷயம் இப்படி இருக்க, தோல்விக்கு ஆக ஜஸ்டிஸ் கòயை வைவதும் அதற்கு அந்திய காலம் வந்து விட்டது என்று சொல்லுவதும் எப்படி சமாதானமாகிவிடும்?
இதுவரை காங்கிரஸ்காரர்கள் எந்த ஊர் தேர்தலிலாவது யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்று “இந்து” பத்திரிகை ஒரு விரலையாவது விட முடியுமா என்று கேட்கின்றோம்.
திருநெல்வேலி, திருச்சி, தென் ஆற்காடு, வட ஆற்காடு, திருவண்ணாமலை முதலிய இடங்களில் காங்கிரசின் பேரால் வந்த மெம்பர்கள் எவ்வளவு காங்கிரசுக்கு ஓட்டுப் போட்ட ஆட்கள் எவ்வளவு என்று கணக்கு பார்த்தால் காங்கிரசின் யோக்கியதை விளங்கிவிடும். இல்லாவிட்டால் தோழர் ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டாலும் அவரது துறவை கேட்டாலும் சுலபத்தில் புரிந்துவிடும்.
இப்பொழுதுதான் ஆகட்டும் ஒரு ஜோசியம் கூறுகிறோம். காங்கிரசு தலைவர்கள் சட்டசபைத் தேர்தலுக்கு இதுபோலவே ஆட்களை நிறுத்தி இருக்கிறார்கள். (முக்கிய கருத்து தாங்கள் மந்திரிகளாக வரலாம் என்று கருதியே) இவர்கள் ஜெயித்து மெஜாரிட்டி ஆகப்போவதில்லை என்பது உறுதி. ஒரு சமயம் மெஜாரிட்டியாக வந்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் இதுபோல்தான் எதிர்க்கட்சிக்கு கையெழுத்துப்போட்டு கொடுத்து காங்கிரசை வெட்கப்படும்படி தோற்கடிக்கப் போகிறார்கள் என்பதாகச் சொல்லி வைக்கிறோம்.
டாக்டர் சுப்பராயன் அவர்கள் சொன்னது போல் காங்கிரசில் பரிசுத்தமான கலப்படமில்லாத வகுப்பார்கள் எல்லாம் வகுப்பு வாதம் பேசித்தான் தீருவார்கள். யோக்கியமாகப் பணம் சம்பாதிக்காத பணக்காரர்கள் இடத்திலெல்லாம் உண்மையான ஏழை மெம்பர்கள் பணம் வாங்கித்தான் தீருவார்கள்.
பணமிருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களுக்கு மேல் அதிகப்பணம் வைத்திருப்பவர்களிடத்தில் எல்லாம் “சமதர்மிகள்” பணம் கேட்டுத்தான் தீருவார்கள். இன்னும் பலவும் செய்வார்கள்.
“இந்து” “சுதேசமித்திரன்” “தினமணி” ஆகிய பத்திரிகைகள் எல்லாம் அப்போது ஒரு தரம் “காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டார்கள்”, இனி வரப்போகும் தேர்தலிலாவது தேசத்தைப் பாராமல் யோக்கியர்களாக பார்ப்பனர்களாகவே அவர்களது உண்மையான “சூத்திரர்”களாகவே பார்த்து நிறுத்த வேண்டும், “கலப்பட சூத்திரர்கள்” கூடாது என்று தலையங்கம் எழுதி தங்களது துக்கக் கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ளப் போகிறார்கள். இதன் மூலம் காங்கிரசின் வெற்றி மேல் வெற்றி கோவிந்தா ஆகப்போகிறது என்பதை முடிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
“இந்து”வே உன்னுடைய தோல்வி அழுகை அதற்குள் முடிந்து போகவில்லை.
“ஏன் துள்ளுகிறாய் ஆட்டுக்குட்டி? என்னிடம் இருக்கிறது சூரிக்கத்தி”.
குடி அரசு – கட்டுரை – 10.01.1937