மோட்சமும் நரகமும்

மனிதன், உடல், உயிர், மாயை எனும் முப்பொருளாக ஆக்கப் பட்டிருக்கின்றான் என்று சைவர்களும், பிரம்மமே மாயா சம்மந்தப்பட்டு இவ்வுலகில் ஜீவர்களாய்த் தோன்றியிருக்கிறது என்று ஸ்மார்த்தர்களும் “ஆன்மா” என்றொரு பொருளை இறைவன் சிருஷ்டித்து மனித உடலுக்குள் புகுத்தியிருக்கிறான் எனச் சில மதங்களும், இவ்வாறு ஒன்றிற்கொன்று முரணாக, நாம் முன் அதிகாரங்களில் விளக்கிக் காட்டியபடி கூறிவருகின்றன. ஆனால் எல்லா மதங்களும் “ஆன்மா” செய்த நன்மை தீமைக்குத் தகுந்தவாறு மோட்சமும் நரகமும் எய்துமென்பதை அபிப்பிராய பேதமின்றி ஒத்துக் கொள்கின்றன. ஆனால் மோட்சமும் நரகமும் எவ்வாறு இருக்கும் என்றால் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகவே வர்ணிக்கின்றது. எந்த நாட்டான் நரகத்தைப்பற்றி எழுதியிருந்தாலும் தத்தம் நாட்டிலுள்ள கொடிய பிராணிகளும், பயங்கர உருவங்களும், கஷ்டமான அனுபவங்களும்தான் நரகத்திலேயிருப்பதாகவும், அவ்வாறே மோட்சத்திலும் தத்தம் நாட்டிலுள்ள உயர்ந்த பிராணிகளும், மரஞ் செடி, கொடி, பழ வர்க்கம், உணவு, பெண்கள் முதலிய போக போக்கியங்களுமிருப்பதாகவே எழுதி வைத்திருக்கின்றான்.

நரகமும் மோட்சமும் பணம் பறிப்பதற்குப் புரோகிதர்களால் கட்டப்பட்ட ஓர் கற்பனை உலகம் என்றே யாம் கருதுகின்றோம். சிறு பிள்ளைகளை ஐந்து கண்ணன் வருகிறான், பூச்சாண்டி வருகிறான், அழாதே! அப்படிச் செய்யாதே, இப்படி நடவாதே என்று ஏமாற்றுவது போலவே மனிதர்களை நரகத்தைக்காட்டிப் புரோகிதர்கள் மிரட்டுவதும், சிறு பிள்ளைகளுக்கு மிட்டாய், சாக்லெட் முதலியவைகளைக் காட்டி தத்தம் வழிக்குத் திருப்புவதுபோல மக்களிடம் மோட்சத்தைக் காட்டி பணம் பறித்து வருகிறார்கள். மேலும் முதலாளிகள் தொழிலாளிகளையும்; அரசன் குடிகளையும் விளித்து, ஜாக்கிரதை! நீ எஜமானத் துரோகம் ராஜத்துரோகம் செய்தால் என்றும் மீளாத கொடு நரகிலே வீழ்ந்து என்றும் துன்புறுவாய் என்று மிரட்டி அவர்களுக்குத் தங்களின் நியாயமான உரிமைகளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் உதிக்காமலே ஏமாற்றி விடுவதற்குத் தக்க பேராயுதமாய் நரகம் விளங்கிவருகிறது.

பொதுவாக எம்மதத்தை உற்று நோக்கினாலும் மோட்சத்தை, பணம், சாம்பல் (விபூதி,) சிலுவை, குருபக்தி, பிரார்த்தனை முதலியவைகளினால் எளிதில் பெறவழி காணலாம்.

மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச – நரக பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகிறது என்பது மறுக்க முடியா உண்மையாகும்.

மோட்சமும் சுவர்க்கமும்; இன்றயை கள்ளுச் சாராயக் கடைகளைவிட, தாசி வேசிகள் வீடுகளைவிட மோசமானது என்பதை மக்கள் உணரும்படி செய்யவேண்டும். மோட்ச நரகம் என்பது, எப்படி திருடர்கள் பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்கு தனி வழியில் ஆள் அடையாளம் தெரியாமல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வழி மறித்து மண்டையை உடைக்க தடிக் கம்பையும், ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பொருள் பறித்துச் செல்லுகின்றார்களோ, அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழிமறித்துப் பொருள் பறித்துப் போகச் செய்து கொண்ட ஆயுதங்களேயாகும். ஆகையால் அதை மனிதன் முதலில் மறந்தாகவேண்டும். இந்த உலக வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும் மக்களுக்கு உதவி செய்வதையும், தனது அளவுக்கும் தேவைக்கும் மேற்பட்டதை அடைய ஆசைப்படாமலிருக்க வேண்டியதையே மோட்சம் என்று மக்கள் கருதவேண்டும். இந்தப்படி அளவுக்கும், தேவைக்கும் மேல் மக்களை அடையச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுவதையே மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் வேலையென்று நாம் கருதவேண்டும். மனிதன் இந்த நாட்டில் எப்படி தனது தேவைக்கும், அளவுக்கும் தகுதிக்கும் மேல் அடைய ஆசைப்படுகின்றானோ அதற்கு ஆதரவாய் இருப்பதற்காகவே மூடர்களுக்கு மேல் உலகத்தில் அவரது தகுதிக்கும், அளவுக்கும், தேவைக்கும் மேலாக அனுபவிக்க ஆசை காட்டி இங்கு தட்டிப் பிடுங்கிக் கொள்ளு கின்றார்கள். மூடர்களும், பேராசைக்காரர்களுந்தான் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றி பாமர மக்களுக்குக்குச் சொல்லப்படும் கருத்துக்களை சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக்கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்து இருக்கிறார்கள்.

அதாவது இங்குள்ள மனிதனுக்குப் பொருள் வேண்டும், பெண் வேண்டும், தேவையானதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் கிடைக்கவேண்டும், நல்ல வாலிபப் பருவம் வேண்டும், சதா இடைவிடாத போக்கியம் பெறவேண்டும், சாகாமலிருக்க வேண்டும். இந்த விஷயங்கள் மனிதனுக்கு சாகும் வரையிலும், செத்த பிறகும் அனுபவிக்கக் கூடியதாய் ஆசைப்படக்கூடியதாயிருக்கிறது என்பது யாரும் அறிந்ததாகும்.

ஆகவே இந்தக் காரியங்களையே மேல் உலகத்தில் இருப்பதாகவும், அதை அடையக்கூடும் என்றும் ஆசையுண்டாகும்படி அதாவது மேல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் பொன்னும், ரத்தனங்களும் நிறைந்து கிடைக்குமென்றும், உலகமே பொன்னுலகமென்றும் அங்கு அரம்பை, ஊர்வசி முதலாகிய தேவ கன்னிகைகள் என்பவர்கள் என்றைக்கும் வாலிபமாய் நம் பக்கத்தில் இருந்துகொண்டு நமக்கு சதா போகங் கொடுத்துக்கொண்டிருப்பார்களென்றும், காமதேனு, கற்பக விருட்சங்கள் நமக்கு எது தேவையோ அதை உடனே கொண்டு வந்து கொடுக்குமென்றும், நரை, திரை, மூப்பில்லை யென்றும் நாம் சாகாமல் சிரஞ்சீவியாய் இருப்போமென்றும் சொல்லி எற்பாடு செய்துவிட்டதால், அவைகளை மனிதன் நித்தியமாய் நம்பி இந்த உலகத்தையும், இங்குள்ள போக போக்கியங்களையும் அநித்தியமாய் எண்ணி கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களையெல்லாம் இந்த மோக்ஷத்திற்கு என்றே செலவு செய்வதுடன் நில்லாது இதற்காகவென்று பலவிதமான அக்கிரமமான வழிகளிலும் மற்ற மக்களை வஞ்சித்தும், பட்டினி போட்டும் பொருள் பறித்தும்கூட இதற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. உதாரணமாக ஏழை மக்கள் கஞ்சிக்கு அலையும்போது குடம் குடமாய்ப் பால் குடங்களைத் தினமும் கல்லின் தலையில் கொட்டி அவற்றை நாற வைப்பதின் கருத்து என்ன என்று பாருங்கள். குடியிருக்க நிழல் இல்லாமல் மக்கள் திரியும்போது மலைகளையும், பாறைகளையும் உடைத்துக் கோட்டைகள் போல் சந்திரகாந்த மண்டபங்கள் போல், மக்கள் கோவில்கள் கட்டுவதின் கருத்து என்னவென்று பாருங்கள். எவ்விதத் தொழிலும் செய்வதற்கு மூலதனம் இல்லாமலும், தொழிலில்லாமலும் மக்கள் வயிறு வளர்க்கக் கப்பலேறி வேற நாட்டிற்குக் கூலிகளாய்ப்போய் சொத்துப் பொத்தென்று மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போது, பொம்மைகளை வைத்து உற்சவம் செய்வதும், அவற்றிற்கு பத்து லக்ஷம், ஒருகோடி பத்துக்கோடிக் கணக்காக நகைகளும், பாத்திரங்களும், வாகனங்களும், துணிகளும், சொத்துகளும் சேர்த்து வைப்பதின் கருத்தென்னவென்று பாருங்கள். நாளுக்குநாள் வாழ்க்கை துன்பகரமாய் மாறி, ஏழைகள் மலிந்து வரும்போது ஆயிரக்கணக்காய் – ஏன் – லக்ஷக்கணக்காய் ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகங்கள் செய்வதின் கருத்து என்னவென்று யோசித்துப்பாருங்கள். பூமியை உழுது கஷ்டப்பட்டு பயிர் செய்யும் குடியானவர்கள் அரை வயிற்றுக்குக்கூட போதுமான ஆகாரமில்லாமல் கஷ்டப்படும்போது, குளவிக் கல்லுக்கும், செம்பு, பித்தளை பொம்மைகளுக்கும் தினம் பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிகள் போட்டுப் பொங்கி நைவேத்தியம் செய்து பாடுபடாத சோம்பேறிகளுக்குக் குடும்பத்துடன் போட்டுக்கொண்டிருக்கும் கருத்து என்ன என்று எண்ணிப்பாருங்கள். மக்களில் நூற்றுக்கு 10 – பேர்களுக்குக்கூட அதாவது சராசரி படிப்பு – எழுத்து வாசனைகூட இல்லாமல் இருக்கும்போது வேத பாடசாலை, தேவாரப் பாடசாலை முதலியவைகளுக்கும், கல்லுகள், பொம்மைகள் பின்னால் நின்றுகொண்டு ஆயிரத்திற்கு ஒருவருக்குக் கூடப் புரியாத வேதபாராயணம் முதலியவைகள் செய்யப்படுவதற்கும் லட்சக்கணக்காய் செலவு செய்ததையும், செய்யப்படுவதின் நோக்கம் என்ன என்பதையும் யோசித்துப் பாருங்கள். இப்படியாக நமது நாட்டில், இதுபோலவே எவ்வளவு காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நோக்கினால் மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுத்தியாவது, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலாவது சிறிதும் லòயம் செய்யாது – நாம் மோக்ஷத்திற்குப் போகவேண்டும்; நாம் பிரபுவாய் இருக்க வேண்டும். லக்ஷுமி புத்திரராய் – ராஜாவாய் – நிரந்தர செல்வனாய் – சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்கிற பேராசையல்லாமல் வேற தத்துவம் அதில் என்ன இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி மோக்ஷம் கற்பிக்கப்பட்டு அதை அடைவதே மனிதனின் முக்கிய லòயம் என்று போதிக்கப்படுகின்ற பேராசை ஜனங்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் இந்த உணர்ச்சியை அழிக்காமல் என்ன காரியம் நம்மால் செய்ய முடியும் என்பதையும் யோசித்துப்பாருங்கள். ஆதலால்தான் முதலில் மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்படவேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம்.

சகோதரர்களே இந்த மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியதைப் போலவே நரக உணர்ச்சியும் அழிக்கப்படவேண்டும். மோக்ஷ உணர்ச்சி எப்படிப் பேராசையின் பிரதிபிம்பமோ அதுபோலவே நரக உணர்ச்சியும், அடிமைத்தனத்தினுடையவும், பயங்காளித் தனத்தினுடையவும், பிரதி பிம்பமாகும். நரகத்திற்கு பயப்படுவதாலேயே அநீதிகளுக்கு மனிதன் ஆளாகின்றான். தைரியமில்லாத கோழையாயிருக்கின்றான். இவைகளை யெல்லாம் விட மனிதன் சிறிதாவது முற்போக்கடைய வேண்டுமானால் சிறிதாவது இயற்கையின் இன்பத்தை நுகரவேண்டுமானால் எல்லாவற்றையும் விட மனிதனுக்கு விதி கர்மபலன் என்கின்றதான உணர்ச்சிகள் கண்டிப்பாய் ஒழிய வேண்டும். விதி கர்மபலன் என்கின்றவைகளான உணர்ச்சி இந்திய நாட்டிற்கு ஏற்பட்டிருக்கவில்லையானால் இன்றைய தினம் இந்தியா அநேக விஷயங்களில் ருஷியர்களுக்கு – ஏன் இந்த உலகத்தில் உள்ள மற்ற எந்த நாட்டு மக்களின் நிலைமைக்கும் மேலாக இருந்து அநேகமாக உலக மக்களுக்கே சமத்துவத்தையும் சம இன்பத்தையும் இயற்கை இன்ப நுகர்ச்சியையும் கொடுத்து சர்வ சுதந்திரத்துடன் வாழச் செய்திருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவேன். ஆகையால் இந்த கர்ம பலனின் உணர்ச்சி, மோட்ச நரக நம்பிக்கைகள் மனிதத்தன்மைக்கு மிகவும் கேடான எதிரி என்பதை நீங்கள் நன்றாய் ஞாபகத்தில் வைக்கவேண்டும். நான் மேலே காட்டிய இந்தக் காரணங்கள் தான் இந்த உலகத்தில் நமது நாட்டை மாத்திரம் இந்த இழிவான நிலையிலும், மீளா அடிமைத்தனத்திலும் வைத்திருக்கின்றன. இவைகள் ஒழிந்தால் தாமாகவே இந்தியா சுயமரியாதை பெற்றுவிடும்; மனிதத் தன்மை அடைந்து விடும். ஆகையால் சகோதரர்களே நீங்கள் இந்திய நாட்டின் முற்போக்கிற்கும், விடுதலைக்கும் மனிதத் தன்மைக்கும் பாடுபடவேண்டுமானால் மேற்கண்ட காரியங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

பகுத்தறிவு (மா.இ.) – சொற்பொழிவு – சனவரி 1937

You may also like...