சீர்திருத்தத்தை உடைப்பது சம்பாஷணை

 

– சித்திரபுத்திரன்

~cmatter

சுப்பு:- மணி என்ன விஷேசம்? சும்மா யோசிக்கிறாயே?

மணி:- ஒன்றும் இல்லை, இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டுமே என்று பார்க்கிறேன்.

சுப்பு:- அதற்கு ஆக என்ன செய்யப் போகிறாய்?

மணி:- நம்ம பெண்களுக்கெல்லாம் பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடலாம் என்று யோசிக்கிறேன்.

சுப்பு:- என்ன முட்டாளாய் இருக்கிறாயே? தேவதாசி முறையை ஒழிப்பவன் பொட்டுக் கட்டுவதை நிறுத்துவானா? தன் பெண்களுக்கும் பொட்டுக் கட்டுவானா?

மணி:- இல்லைய்யா, அப்படிச் செய்யாவிட்டால் வேறு சிலர் தங்கள் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிடுவார்கள். ஆதலால், நாம் நம் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிட்டால் அவர்களது பொட்டுக் கட்டும் தொழிலும் அவர்கள் தேவதாசித் தொழில் செய்வதும் தடுக்கப்பட்டுவிடாதா?

சுப்பு:- அதனால் நமக்கு என்ன லாபம்? எப்படியாவது அந்தத் தொழிலை நிறுத்துவதா அதை நாம் மேற்கொள்ளுவதா?

மணி:- நாம் பொட்டுக்கட்டி நம்ம பெண்களை விவசாரித்தனம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அந்தத் தொழில் நின்றுவிடாதா?

சுப்பு:- இது என்ன முட்டாள்தனமான யோசனை? நம்ம பெண்களுக்கு பொட்டு கட்டுகிறோம். விவசாரித்தனம் செய்ய வேண்டாம் என்று சொல்லுகிறோம். அதனால் விவசாரித்தனம் நின்று போகுமா? அப்புறம் பொட்டுக்கட்டிய நம்ம பெண்கள் புருஷர்கள் தேடாமல் இருக்க வேண்டுமே.

மணி:- ஏன்? புருஷன் வேண்டும் என்பது கட்டாயமா?

சுப்பு:- விதவை ஆனவர்களே புருஷனுக்கு அவஸ்தைப்படுகிறார்கள். பொட்டுக்கட்டி அலங்காரம் செய்து கொள்ள அனுமதித்து தாராளமாய் தேர்திருவிழாக்களுக்கு கோவிலுக்கு போய் வருகிறவர்களை புருஷன் வேண்டும் என்பது கட்டாயமா என்று கேட்கிறாயே, உனக்கு உலக அனுபவமோ, இயற்கையின் சக்தியோ தெரிந்திருந்தால் இப்படி பேசுவாயா?

மணி:- நீ என்ன அப்படிச் சொல்லுகிறாய்? புதிய சீர்திருத்தத்தை உடைக்க நமது காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் சட்டசபைக்கு போய் மந்திரி உத்தியோகம் ஏற்க வேண்டும் என்கின்றாரே. மந்திரி உத்தியோகம் ஏற்பதால் சீர்திருத்தம் உடைபடும்போது பொட்டுக் கட்டுவதால் விவசாரம் ஒழியாதா?

சுப்பு:- அட பைத்தியமே! அது சத்தியமூர்த்தி கோஸ்டியார் மந்திரி பதவி ஏற்காவிட்டால் ஜஸ்டிஸ் கோஸ்டியார் மந்திரி பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால் அப்பதவியில் இவர்கள் உட்கார்ந்து கொண்டால் ஜஸ்டிஸ் கோஸ்டியார் என்ன செய்வார்கள்? என்று கருதி அவர் அப்படிச் சொன்னார். அதில் என்ன தப்பு?

மணி:- அதுபோல் தான் நானும் சொல்லுகிறேன். நமது பெண்கள் பொட்டுக் கட்டிக்கொண்டால் தேவதாசிகள் என்ன செய்யமுடியும்? இல்லாவிட்டால் அவர்கள் பொட்டுகட்டிக் கொள்ளுகிறார்கள்.

சுப்பு:- பொட்டுக்கட்டிக்கொண்ட நமது பெண்கள் புருஷன்களை தேடாமல் இருக்க முடியுமா என்று முன்னமே சொன்னேனே? மந்திரி பதவி ஏற்றுக்கொண்டால் அங்கு மந்திரிகளுக்கு உள்ள பொறுப்புப்படியும் சட்டப்படியும் நடக்காமல் இருக்க முடியுமா? மந்திரி பதவி ஏற்பதற்கு முன்பே சட்டசபைக்குள் நுழையும்போது தேவதாசிகள் எப்படிப் பொட்டுக்கட்டிக்கொள்ள கோவிலுக்குள் நுழையும்போதே அந்த சாமிக்கும் சாமியின் பக்தருக்கும் அடி ஆளாய் அதாவது கீழே இருப்பவளாய் சொல்லியே கடவுளை வேண்டி பொட்டுக்கட்டிக் கொள்வதுபோல் சட்டசபை மெம்பர்கள் சட்டப்படி நடக்கிறேன் என்று சத்தியம் செய்துவிட்டுத்தானே ஏற்றுக்கொள்ளவேண்டும்? அங்கு மந்திரி ஆனவுடன் செகரட்டரி சொன்னபடி கேட்காவிட்டால் கவர்னரிடம் புகார் போகும். கவர்னர் செகரட்டரி சொல்கிறபடி நடக்கச் சொல்லுவார், நடக்கா விட்டால் தன்னுடைய விஷேச அதிகாரத்தையும் பாதுகாப்பு அதிகாரத்தையும் பயன்படுத்தி சொந்த முறையில் உத்தரவு போடுவார். அப்புறம் மந்திரிகள் கவர்னரை மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லா விட்டால் ராஜினாமா கொடுக்க வேண்டும். ராஜினாமா கொடுத்த பிறகு என்ன செய்ய முடியும்? பேசாமல் இருக்க வேண்டியதுதான். கவர்னர் வேறு (கட்சியாருக்கு) கூட்டத்தாருக்கு மந்திரி பதவி அளித்துப் பார்ப்பார். அதற்குள் காங்கிரசிலிருந்து சிலர் பிரிந்து அந்தக் கூட்டத்தில் சேர்வார்கள். பிறகு “உளி முறிந்த சக்கிலி மாதிரி” பழய மந்திரிகள் பேந்தப் பேந்த முழிக்க வேண்டியதுதான்.

மணி:- அதெப்படி காங்கிரஸ்காரர்கள் மற்ற கூட்டத்தாருடன் சேருவார்களா?

சுப்பு:- ஏன் சேரமாட்டார்கள்? வேலூர், திருச்சி, தர்மபுரி ஆகிய காங்கிரஸ்காரர்களை நினைத்துப் பாரேன். அவர்கள்தானே, அவர்களைப் போன்ற மனித வர்க்கத்தார்தானே காங்கிரஸ் சட்டசபைக்காரர்கள். உனக்கு உலக அனுபவமும் இயற்கையின் சக்தியும் தெரிந்திருந்தால் நீ இப்படிப் பேசுவாயா?

அதோடு கூட சத்தியமூர்த்தியாரின் கோஷ்டியாரின் யோக்கியதையும் அவர்களது முன்பின் நடவடிக்கைகளும் நாணயமும் தெரிந்திருந்தால் இப்படிப் பேசுவாயா?

மணி:- சரி மந்திரிகள் ராஜினாமா கொடுத்துவிடுகிறார்கள். வேறு யாரும் மந்திரி பதவி ஏற்க மெஜாரிட்டி இல்லாமல் செய்துவிடுகிறார்கள், அதனால் சீர்திருத்தம் முறிந்துவிடாதா?

சுப்பு:- அதனால் தான் எப்படி சீர்திருத்தம் முறிந்துவிடும்? கவர்னர் சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு எலக்ஷன் போட்டுவிடுவார். அப்போது காங்கிரசின் பேரால் நின்ற பழய ஆட்கள் வேறு கòயின் பேராலோ சுதந்திரமாகவோ நிற்பார்கள். அப்புறம் தனித்தனியாகவோ, கூட்டாகவோ மந்திரிகள் வந்து யாருக்கும் பொறுப்பில்லாமல் தனக்கே, சர்க்கார் சட்டத்திற்கே, பணத்துக்கே பொறுப்பாய் இருந்து வேலை நடத்துவார்கள்.

மணி:- ஆனால் சீர்திருத்தத்தை உடைக்க முடியாதா?

சுப்பு:- நீதான் சொல்லே பார்ப்போம், எங்காவது எப்போதாவது இந்த சர்க்காரின் சட்டத்தை மீறி ஒரு காரியமாவது செய்யப்பட்டிருக்கிறதா? என்று பார். அடிபட்டாய், உதைபட்டாய், சட்டம் மீறினாய், மறியல் செய்தாய், ஜெயிலுக்கு போனாய், கொடியேற்றினாய், மகாத்மா பட்டம் கொடுத்தாய், சர்தார் பட்டம் கொடுத்தாய், தேசபந்து ஆனாய், ராஷ்டிரபதி ஆனாய், ராஜாஜி ஆனாய், வெங்காயம் ஆனாய், கருப்பட்டி ஆனாய், விளக்கெண்ணெய் விளக்கெரித்தாய், குரங்கு குல்லாப் போட்டாய், செருப்பெறிந்தாய், அழுகு முட்டை போட்டாய், கடசியாக வெள்ளைக்காரர்களில் சிலபேரை சுட்டாய், முடிவில் ஆனதென்ன? ஆளுக்கொரு கல்லுப் போட்டால் வெள்ளையர்கள் செத்துப் போவார்கள், அதை நான் தடுத்தேன் என்று காந்தி சொன்னார். நான் தூக்கு மேடைக்குப் போகத் தயார் ஜவஹர்லால் தூக்கு மேடைக்குத் தயார் என்று சொன்னார். அவ்வளவோடு தீர்ந்தது பாரத யுத்தம் பிறகு செய்யப்போவது என்ன?

குடி அரசு – உரையாடல் – 10.01.1937

You may also like...