ஏமாற்றுந் திருவிழா

 

ஜவஹர் கதம்பம்

~cmatter

படித்த மக்கள் என்பவர்கள் பாமர மக்களை ஏமாற்றுந் திருவிழாவாகிய காங்கிரஸ் பெய்ஸ்பூரில் கூடிக் கலைந்தது. கும்பமேளா – மகாமகம் (மாமாங்கம்) என்கின்ற திருவிழாக்களுக்கு செய்யும் விளம்பரம் போலவே விளம்பரங்கள் செய்யப்பட்டு ஏராளமான மக்களைக் கூட்டுவித்து அவர்களுக்கு புரியாத பல விஷயங்களைப் பேசி அவர்களுக்கு சம்பந்தமில்லாத பல தீர்மானங்களைச் செய்து கலைந்தாகிவிட்டது. தேசியப் பத்திரிகைகளும், தேசியத் தலைவர்கள் என்று விளம்பரம் பெற்றவர்களும் இந்தப் பேச்சுக்களையும் தீர்மானங்களையும் புராணப் பிரசங்கம் போல் புகழ்ந்து பேசி காங்கிரசுக்கு போயிருக்காத பாமர மக்களையும் குழப்பி ஏமாற்றி ஆகிவிட்டது.

நமது நாட்டில் உள்ள மக்களில் 100க்கு 10பேர்களே படித்தவர்கள். இந்த பத்துப் பேர்களிலும் முக்காலே அரைக்கால்வாசிப் பேர்கள் அகவிலை அறிய முடியாத பெரிய ஜாதிக்காரர்களும் அகவிலை அறிய வேண்டிய அவசியமில்லாத வக்கீல்கள், டாக்டர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தண்டசோத்து ஆசாமிகளும் ஆகவே இருப்பார்கள். இந்தக் கூட்டத்தார்களே பிரதானமாய் இருந்து முக்கிய பங்கெடுத்து நடத்தும் இம்மாதிரி திருவிழாக்களில் என்ன காரியங்கள் நடக்கும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

இத்திருவிழாவின் தலைவரான தோழர் ஜவஹர்லால் ஒரு கூடை சங்கதி ஒரே மூச்சில் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு சுமார் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்பது ஒரு பிரச்சினையானாலும் அப்பேச்சில் உள்ள விஷயம் என்ன என்பதை யோசித்தால் அது ஒரு கதம்பம் (அதுவும் பல நாளையத்த ஊசிப்போன காய்கறி, குழம்பு, சோறு ஆகியவைகளை பிசைந்து உருட்டிப் போட்ட உருண்டைக் கதம்பம்) என்பதல்லாமல் அதில் தற்காலத்துக்கு ஏற்றதோ அல்லது பதினாயிரக்கணக்காக பல ஊர்களிலிருந்து செலவு செய்து கொண்டு வந்த மக்களுக்கு பயன்படத்தக்கதாகவோ ஒரு வார்த்தையாவது இருந்தது என்று சொல்லத்தக்க பாகம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தலைமை உபன்யாசத்தின் முதல் மூச்சில் எல்லாம் வெறும் அகில உலக பிரச்சினைகளையே ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டுக் குழப்பி முழுப் பேச்சிலும் அரைப்பாகத்துக்கு மேலாகவே பூலோகப் படலமாக முடிக்கப்பட்டிருக்கிறது. இவை பாமர மக்களுக்கு எப்படிப் புரியும்? இவற்றைப் பேசியதால் ஏற்படும் பயன் என்ன? என்பவைகளைப் பற்றி யோசித்துப்பார்த்தால் அப்பேச்சின் பயனற்ற தன்மை அறிவாளிகளுக்கு தெற்றென விளங்காமல் போகாது.

இந்தியாவானது 100க்கு 90 பாகம் விவசாயிகளையும் கூலிகளையும் கொண்ட நாடு. இவர்கள் தங்கள் நாட்டிலேயே அடுத்த பட்டணத்தில் என்ன நடக்கிறது என்பது தெரிய முடியாதவர்கள். கையாலான அளவுக்கு உழைத்துவிட்டு தங்களுக்கு கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு கிடைக்காததைக் கடவுள் செயல் என்று சொல்லிக்கொண்டு முடங்கிப் படுத்து விடியுமுன் எழுந்து உழைப்புக்கு போகிறவர்கள். இவர்கள் மூளையிலும், ரத்தத்திலும், மயிர்க்கால்களிலும் அடிமை வாழ்க்கையின் ஆனந்தமும் தலைவிதியின் ஆதிக்கமும் அல்லாமல் வேறு ஒன்றுமே காணப்படாத மக்களேயாவார்கள். ஆகவே இவர்களுக்கு பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் இவர்களைக் கரையேற்ற அவதார புருஷர்களாக வந்தோம் என்கின்றவர்கள் பூலோக புராணத்தைப் படிப்பதன் மூலம் என்ன நன்மையை உண்டாக்கி விடமுடியும்?

நம் பாமர மக்கள் சிரம் வணங்கி கைகட்டி வாய் பொத்தி தலைவர்கள் உபன்யாசங்களை கேட்பதாலேயே அவைகளை உணர்ந்து கொண்டவர்களாக ஆகிவிடுவார்களா? கோவில்களில் அர்ச்சகர்களும் சடங்குகளில் புரோகிதர்களும் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனைகளும் சுலோகங்களும் சொல்லும்போது பாமர மக்கள் மாத்திரமல்லாமல் அங்கு கூடியுள்ள பண்டிதர்களும் பெரும் செல்வந்தர்களும் கைகூப்பி கண் மூடி ஏகாக்கிரஹிகளாய் இருந்து பயபக்தியுடன் கேட்கிறார்கள் கவனிக்கிறார்கள் என்றாலும் அவற்றில் ஒரு சிறு பாகமாவது அவர்களால் அறியமுடிகிறதா என்பதை அறியாதவர்கள் யார்? ஆகவே ஜவஹர் கதம்பமானது முதல் பகுதி பாகம் வெறும் உலக புராணமாக இருந்தது என்பதோடு மக்களுக்கு தேவையில்லாததும் புரியாததுமாகவே முடிந்துவிட்டது.

மற்ற பகுதி பாகமோவெனில் அதிற் பகுதி பழங்கதையாகவே முடிந்ததேயல்லாமல் புதிதாக தற்கால நிலைக்கு எல்லா மக்களுக்கு உள்ள பொது குறைகளுக்கு பாமர மக்களுக்கு உள்ள பாரம்பரியமான கஷ்டங்களுக்கு எவ்வித பரிகாரமும் கிடைக்கும்படியான மார்க்கமோ பேச்சோ ஒருவரி கூட கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டது.

குறிப்பாக காங்கிரஸ் தலைவர் வறுமையைப் பற்றியும் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் பற்றியும் பேசும் போது “இன்று உலகத்தில் எங்குமே, துன்பத்தைத் தரும்படியான ஏற்றத்தாழ்வுகள், கொடுமைகள் இருந்து வருகின்றன. ஆனால் இந்தியாவைப் போல் இவ்வளவு அதிகமாக இல்லை” என்று சொல்லுகிறார். இப்படிச் சொல்லும்போது மற்ற நாட்டைவிட இங்கு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை ஜவஹர்லால் உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் இதற்கு காரணம் ஏகாதிபத்தியமும் இந்திய அரசியலமைப்பும்தான் என்று அடிக்கடி பல்லவி பாடுகிறார். நாம் இதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏகாதிபத்தியம் இல்லாத சுதந்திர நாடுகள் என்பவைகளிலும் இந்திய அரசியலமைப்பு இல்லாத தேசத்திலும் “ஏற்றத்தாழ்வு, வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம்” என்பவைகள் இருந்துதான் வருகின்றன. ஆனால் இந்தியாவில் சற்று அதிகம் என்பதற்கு இந்தியர்களின் மதமும் ஜாதியுமே ஒழிய ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய வறுமைக்கும் அதிக சம்பந்தம் கிடையாது. உதாரணம் வேண்டுமானால் மதத் தலைவர்களுக்கும் மதத் தர்மகர்த்தாக்களுக்கும் மேல் ஜாதிக்காரர்களுக்கும் எங்காவது வறுமையோ, வேலை இல்லாத் திண்டாட்டமோ இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

டில்லி நகரைப் பார்த்து ஜவஹர்லால் மனம் புழுங்குகின்றார். ஆனால் இதே ஜவஹர்லால் ÿரங்கம், மதுரை, ராமநாதபுரம் கோவில்களையும் “சுவாமி” நகைகளையும் பூஜை போக்கியங்களையும் பார்த்து தலை வணங்கி பிரசாதம் பெற்று மனமகிழ்கின்றார். ஆகவே வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் காரணமும் மருந்தும் கண்டு பிடிப்பதில் ஜவஹர்லால் புத்தி எவ்வளவு தீக்ஷண்ணியமுள்ளது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்றோம்.

மற்றும் ஜவஹர்லால் டெல்லிக்கு சில மைல் தூரத்தில் பட்டினி கிடக்கும் விவசாயிகளைப் பார்த்து மனம் பதைத்தாராம். ஆனால் மேல்கண்ட கோவில்களுக்கு பல அங்குல தூரத்திற்குள் மொண்டி, முடம், கூன், குருடு, பெரு வியாதியஸ்தர்கள் ஆகியவர்களும் கும்பல் கும்பலான பிச்சைக்காரர்களும் வயிறொட்டி உடல் மெலிந்து வறுமை! வறுமை!! பட்டினி!!! பட்டினி!!!! என்று கூப்பாடு போட்டு போகிறவர்கள் வருகிறவர்கள் காலைத் தொட்டு கண்ணில் ஒத்தவைத்துக்கொண்டு இரண்டு கையையும் ஏந்தி பிச்சை கேட்பதை இவர் பார்க்கவில்லையா என்று கேட்கின்றோம்.

ஆகவே இந்த வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஜவஹர்லால் விடும் கண்ணீர் மாய்மாலக் கண்ணீரா, வெங்காய ரசம் தடவிக்கொண்டு விடும் கண்ணீரா, அல்லது முட்டாள் தனமான சோம்பேறி அழுகைக் கண்ணீரா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

ஏழ்மை எல்லா நாட்டிலும் இருக்கிறது, தரித்திரமும் எல்லா நாட்டிலும் இருக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டமும் எல்லா நாட்டிலுமே இருக்கிறது. டில்லி மாளிகைகளும் கோட்டைகளும் சந்திர காந்த மேடைகளும் கூட எல்லா நாட்டிலும் தான் இருக்கின்றன. ஆனால் கோபுரங்களும் கோவில்களும் “சாமி”களுக்கு தங்க வைர கோமேத மரகத ஆபரணங்களும் “சாமி”க்கு 5000, 10000 கணக்கான நஞ்சை பூமிகளும், வெள்ளி தங்க வாகனங்களும், வருஷம் 10 லட்சக்கணக்கான ரூபாய்கள் காணிக்கைகளும், பாமர தொழிலாளிகளும் ஏழை குடியானவர்களும் பாடுபட்ட பயனை பாழுங்குழியில் போடுவது போல் கோயில் குளங்களுக்கு அழுதுவிட்டு விரதமிருப்பதும் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை என்பதையும் அதனாலேயே மற்ற நாடுகளை விட இந்தியாவில் சற்று அதிகமாக கொடுமைகள் காணப்படுகின்றன என்பதையும் ஜவஹர்லால் உணராவிட்டாலும் அல்லது அவர் வேண்டுமென்றே மறைத்தாலும் மற்ற மக்களாவது உணர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஏகாதிபத்தியம் என்பதும் நம்முடைய இந்தியாவுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதோடு அது இந்தியாவில் மாத்திரமில்லை என்றும் தெரிவிப்பதோடு இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் அதுவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விட கொடுமையான ஏகாதிபத்தியம் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் ஜமீன் மானியம் ஆகியவற்றின் பேராலும் இருந்து வருகின்றது என்பதையும் உணர வேண்டுமாய் விரும்புகிறோம்.

மற்றும் ஜவஹர்லால் இந்திய அரசியல் திட்டத்தைப்பற்றியும் குறைகூறுகிறார். அது குறையானது என்றே வைத்துக்கொள்ளுவோம். இதற்கு பதிலாக ஜவஹர்லால் அரசியல் திட்டம் என்ன? அல்லது காந்தியாரின் அரசியல் திட்டம் என்ன? அல்லது காங்கிரசின் அரசியல் திட்டம்தான் என்ன என்று கேட்கின்றோம். பிரதிநிதித்துவ சபை கூட்டி ஒரு அரசியல் திட்டத்தை வகுக்கப் போவதாக இந்த 10, 12 வருஷ காலமாய் ஜவஹர்லால் அவர்களின் தகப்பனார் காலம் தொட்டே சொல்லப்பட்டு வருகிறது.

சென்ற 16 வருஷத்துக்கு முந்திய சீர்திருத்தம் வரும்போதும் சொல்லப்பட்டது. சென்ற எம்.எல்.ஏ. (இந்திய சட்டசபை) தேர்தலிலும் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை ஒன்றையுமே காணோம்.

இன்றைய சீர்திருத்தம் ஜஸ்டிஸ் கட்சியார், மிதவாதக் கட்சியார், மற்றும் காங்கிரஸ் அல்லாதார் முதலியவர்களால் குறிப்பிட்டு கொடுக்கப்பட்டவைகளின் பெரும்பாகத்தை பொறுத்ததே ஒழிய வேறில்லை. மற்றப்படி நம்முள் ஒருவருக்கொருவர் உள்ள அவ நம்பிக்கையாலும் துவேஷத்தாலும் ஒருவரை ஒருவர் வஞ்சிக்க எண்ணும் கெட்ட எண்ணத்தாலும் ஒருவர் உழைப்பில் ஒருவர் நோகாமல் சாப்பிட வேண்டும் என்ற சோம்பேறி உணர்ச்சியாலும் பிரிட்டிஷார் சில பாதுகாப்புகளும் சில சுயநல வசதிகளும் புகுத்தி இருக்கலாம். ஆனால் அதற்கு பிரிட்டிஷோ ஏகாதிபத்தியமோ காரணம் அல்ல என்பதையும் காங்கிரசும், ஜவஹர்லாலும், காந்தியாருமே முக்கிய காரணம் என்பதையும் ஆதாரத்தோடு எடுத்துக் கூறத் தயங்கோம்.

ஆதலால் சீர்திருத்தத்தைப் பற்றி குறைகூறுவதும் புத்திசாலித்தனமாகாது என்று கூறுவோம்.

தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியவர்களைப் பற்றி நமது ஜவஹர் கண்ணீர் வடிக்கிறார், ஒப்பாரி வைத்து அழுகிறார். இது யார் வீட்டு சாவுக்கோ போன எவர் வீட்டுப்பெண்ணோ எதையோ நினைத்துக்கொண்டு மாரடித்துக்கொண்டு அழுவதையே ஒத்து இருக்கிறது. தோழர் ஜவஹர்லால் தொழிலாளிகளுக்கு ஆக காங்கிரசினிடம் திட்டம் இல்லை என்றும் தன்னிடமும் திட்டம் இல்லை என்றும் சென்ற 3 மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது தொழிலாளியிடம் கூறி இருக்கிறார். வேலைத்திட்டமோ நிவர்த்தி மார்க்கமோ தன் கைவசம் இல்லாதவருக்கு பொய்யழுகை அழுகவாவது பாத்தியம் எப்படி உண்டாகும்? விவசாயிகள் விஷயத்தில் பழம் பாடம் படித்திருக்கிறார். பலவற்றுள் ஜஸ்டிஸ் கட்சியாரின் திட்டத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுகிறார். ஆனால் அவற்றை காரியத்தில் கொண்டுவர இவரது திட்டம் என்ன என்பதை விளக்கவில்லை.

சென்ற பல காங்கிரஸ்களில் “விவசாயிகளின் நன்மைக்கு திட்டம் வகுக்க ஏற்படுத்தப்பட்ட கமிட்டி இதுவரை தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை” என்று குறைகூறுகிறார். இதிலிருந்தே காங்கிரஸ்காரர்கள் விவசாயிகளிடம் கொண்டுள்ள அனுதாபம் எப்படிப்பட்டது என்பது வெளிப்படுகிறது. கிராமத்தில் காங்கிரஸ் கூட்டினதினால் கிராமவாசிகளுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடும்? இதை ஒரு பெருமையாக சொல்லுகிறார். இவைகள் எல்லாம் ஏமாற்றத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் என்பதை வாசகர்கள் உணரவேண்டுகிறோம்.

விவசாயிகளின் வரியை சமரசப்படுத்தவும் அவர்களது கடன் சுமையைக் குறைக்கவும் விவசாயிகளுக்கும் பொதுஜனங்களுக்கும் மத்தியில் உள்ள தரகர்களை ஒழிக்கவும், கூட்டுறவு இயக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படச் செய்யவும் தோழர் ஈ.வெ.ராமசாமி கொடுத்த திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக்கொண்டு சிலவற்றை அமுலுக்கு கொண்டுவந்திருப்பதோடு மற்றவைகளை வேலை முறையாகவும் ஜஸ்டிஸ் கட்சியார் கைக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆகவே சீர்திருத்தத்தை ஏற்று பயன்படுத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள். அதை காங்கிரஸ் தலைவர் பாடம் பண்ணி ஒப்புவித்துவிட்டார். ஆனால் அரசியல் திட்டத்தையும் மந்திரி பதவியையும் பஹிஷ்கரிக்க வேண்டுமென்கிறார். இப்படிப்பட்ட அழிவு வேலைக்காரர்களால் – அழிவு வேலையை திட்டமாகக் கொண்ட காங்கிரசினால் மேற்கண்ட காரியங்கள் விவசாயிகளுக்கு அனுபவத்தில் செய்ய எப்படி சாத்தியப்படும் என்பது நமக்கு விளங்கவில்லை. இனி எந்த காலத்தில் சீர்திருத்தம் உடைக்கப்பட்டு, வேறு ஜனப்பிரதிநிதி சபை கூட்டப்பட்டு, திட்டம் போட்டு, வெள்ளைக்காரரை விரட்டி அடிக்கும் பூரண சுயராஜ்யம் பெற்று இவைகளை நடைமுறையில் கொண்டுவரக்கூடும் என்பதையும் வாசகர்களையே உணர்ந்து கொள்ளும்படி விட்டுவிடுகிறோம்.

“ஏட்டு சுரைக்காய் கறி செய்ய உதவுமா?” என்ற பழமொழிபோல் காங்கிரஸ்காரர்கள் திட்டம் காரியத்துக்கு பயன்படுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் தோழர் ஜவஹர்லால் அவர்களே தமது தலைமை உரையில்,

“இந்த லòயங்கள் எல்லாம் நமக்கு வெகு தூரத்தில் இருக்கின்றன” என்று சொல்லி அவரே ஒப்புக்கொள்ளுகிறார்.

மற்றும் “பாமர மக்களுக்கு பயன்படத்தக்க ஒரு திட்டம் (இனிமேல் ப-ர்) வகுத்து வேலை செய்தால்தான் இவைகளுக்கு பரிகாரம் செய்ய முடியும்” என்கிறார்.

அதோடு கூடவே,

“ஏகாதிபத்தியமும் பணக்காரர்களும் இருக்கிற இடத்தில் எந்த திட்டமும் பயன்படாது” என்கிறார்.

அப்படியானால் இவர்கள் எப்போது திட்டம் போடுவது? ஏகாதிபத்தியம் எப்போது ஒழிவது? பணக்காரர் எப்போது ஒழிவது? அதுவரை இவர் திட்டம் என்ன? வேலை என்ன? என்பவற்றை கவனித்தால் ஜவஹர்லால் பேச்சு அவ்வளவும் வெத்தி வேட்டு என்பதும் கையில் ஒரு திட்டமும் இல்லை என்பதும் சுலபத்தில் புலனாகாமல் போகாது.

கடசியாக ஓட்டு கேட்கிறார் – அதாவது சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றும் ஒப்புக்கொள்ளுகிறார்.

ஆனால் எதற்கு ஆக என்று மாத்திரம் சொல்லவில்லை. சட்டசபையில் சுயராஜ்யம் சம்பாதிக்க முடியாது என்றும் ஒப்புக்கொள்ளுகிறார்.

மந்திரி பதவி ஏற்பது அரசாங்கத்துக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுப்பதாகும் என்றும் அடிக்கடி சொல்லுகிறார். மந்திரி பதவி ஏற்றால் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்ததாக ஆகுமே ஒழிய முட்டுக்கட்டை போட உதவவே உதவாது என்கிறார். மற்றும் “தேசத்துரோகிகள் சட்ட சபைக்கு போய் மந்திரி பதவிகளை ஏற்று நடத்துவார்கள் என்கின்ற பயம் அர்த்தமற்றது” என்றும் சொல்லுகிறார். அதாவது “நமக்கு மந்திரி பதவி ஏற்கும்படியான மெஜாரிட்டி இருந்தால் அந்த மெஜாரிட்டியைக் கொண்டே ஏன் மந்திரி சபையை கவிழ்க்கக் கூடாது” என்கிறார். இது புத்திசாலித்தனமான பேச்சுத்தான். ஆனால் இதற்கு பதவி மோக காங்கிரஸ்காரர் என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை. நிற்க, கடசியாக ஒரு விஷயத்தை ஜவஹர்லால் விளக்கி இருப்பதை குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம். அதாவது இன்றைய தன்னுடைய போராட்டம் அபேதவாதத்திற்கு அல்ல என்று வியக்தமாகச் சொல்லி விட்டார்.

“அதாவது அபேதவாதத்தைப்பற்றி நினைப்பதற்கு முன் நாம் இன்னம் வெகு தூரம் போய் ஆகவேண்டும்” என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே இதை பல தடவை சொல்லி இருக்கிறார். இதையே தான் நாமும் சொல்லி வருகிறோம். ஆனால் அதற்கு ஆன வேலையை அதாவது அபேதவாதத்துக்கு நெருங்கும் வேலையை நாம் செய்கையில் செய்து வருகிறோம். அதற்கேற்ற சாத்திய திட்டம் வகுத்து வருகிறோம். ஆனால் ஜவஹர்லாலோ பாம்புக்கு (அதாவது பணக்காரர்களுக்கும் மேல் ஜாதிக்காரருக்கும்) தலையையும், மீனுக்கு (பாமர மக்களுக்கு) வாலையும் காட்டி வருகிறார்.

பொதுவாக ஒவ்வொரு கூட்டத்தாரையும் ஏமாற்றத்தக்க சூழ்ச்சியிலும் வஞ்சத்திலுமே காரியம் செய்து வருகிறார். சமுதாயத்தில் உள்ள குறைகளைப்பற்றியும் அவை சமுதாய அமைப்புக்கும் அரசியல் விடுதலைக்கும் பொருளாதார விடுதலைக்கும் எவ்வளவு முட்டுக் கட்டையாகவும் கெடுதி தரத்தக்கதாகவும் இருக்கிறது என்பதை மறந்தும் கூட காங்கிரஸ் தலைமைப் பேச்சில் ஜவஹர்லால் பேசவில்லை.

ஆகவே பெய்ஸ்பூர் காங்கிரஸ் என்னும் ஏமாற்றுத் திரு விழாவானது பெரிதும் தங்களையே ஏமாற்றிக்கொண்ட முடிவில்தான் முடிந்தது என்று சொல்ல வேண்டி இருக்குமே தவிர அத்திருவிழாவால் மக்கள் ஏமாந்திருப்பார்கள் என்று சொல்ல தைரியம் வரவில்லை.

காங்கிரஸ் தீர்மானங்களைப் பற்றிய விஷயங்கள் பின்னால் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 03.01.1937

You may also like...