ஜஸ்டிஸ் கட்சியாரின் எதிர்கால வேலைத் திட்டம்

 

தோழர் ஈ.வெ.ராமசாமியின்  வேலைத்திட்டம் உள்பட

 

(1) ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை சாதித்த வேலைகளை பொது ஜனங்கள் அறிந்தே இருக்கின்றார்கள். எல்லா சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பமளிப்பதும் தேசத்தின் பொதுவான முன்னேற்றத்திற்கு உழைப்பதுமே ஜஸ்டிஸ் கட்சியார் வேலையின் அடிப்படையான கொள்கைகளாக இருந்து வந்திருக்கின்றன.

கிராமவாசிகள் க்ஷேமாபிவிர்த்தி, ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம்,

பொதுஜன சுகாதார அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,

போக்குவரத்து வசதிகள், குடித்தனச்செட்டு, கூட்டுறவு பாங்கி ஏற்பாடு,

சகல சமூக ஆண் பெண் குழந்தைகளுக்கு சம வசதியுடன் ஆரம்பக் கல்வி முன்னேற்றம்,

அறநிலையப் பாதுகாப்பு, குடியிருப்பு பாத்தியதை, குடிவாரப் பாதுகாப்பு,

கிராம வாசிகளுக்கும் நகர வாசிகளுக்கும் அதிகப்படியான நலம் ஏற்படும் முறையில், ஸ்தல ஸ்தாபன முனிசிபல் நிர்வாகம் நடத்துதல்.

இவை முதலியனவே ஜஸ்டிஸ் கட்சியாரின் முக்கியமான நோக்கங்களாக இருந்து வந்திருக்கின்றன. இவற்றை அனுசரித்து பல காரியங்கள் செய்யப்பட்டும் இருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயங்களையும் பற்றி எவ்வளவோ விஸ்தாரமாக எழுதலாம். ஆனால், அவைகளை பொது ஜனங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதினால் மீண்டும் விளக்கிக் கூற நாங்கள் விரும்பவில்லை. எனவே, எங்களது எதிர்கால வேலைத்திட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூற விரும்புகிறோம்.

(2) எங்கள் எதிர்கால வேலைத் திட்டத்தை விளக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் கட்சிக் கொள்கைகளைப் பற்றிக் கூறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில், எங்கள் வேலைத் திட்டங்களுக்கெல்லாம் அந்தக் கொள்கைகளே அடிப்படையாக இருக்கின்றன.

எங்கள் கொள்கைகள் ஆவன

(எ) பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக, சட்ட வரம்புக் குட்பட்ட நியாய முறைகளினால் சாத்தியமான மட்டும் விரைவாக சுயராஜ்யம் பெறுவது.

(பி) எல்லாப் பொது ஸ்தாபனங்களிலும் சர்க்கார் சர்வீசிலும் எல்லா சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும், சந்தர்ப்பமும் அளித்து எல்லா வகுப்புகளுக்குள்ளும் நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் உண்டுபண்ணுவது, கடைசியில் எல்லா சமூகங்களும் ஒன்றுபடுவதற்கு அனுகூலமாக ஒவ்வொரு சமூகத்தையும் சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவருவது.

(சி) தென்னிந்தியாவிலுள்ள சகல சமூகங்களுடையவும், கல்வி, சமூக சுதந்திரம், பொருளாதார கைத்தொழில், விவசாய, அரசியல் முன்னேற்றங்களுக்காகப் பாடுபடுவது.

(டி) முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி தென்னிந்திய பொதுஜன அபிப்பிராயத்தை உருப்படுத்தி அதைத் தாராளமாக வெளியிட வசதி யுண்டுபண்ணுவது.

மேலே குறிப்பிட்ட லôயங்களை நிறைவேற்றுவதற்காக தேவையான வேலைகளை யெல்லாம் செய்வது.

  1. அரசியல்

கட்சிக் கொள்கைகளுக்கு அநுகுணமாகவே இதுவரை வேலைத்திட்டம் வகுக்கப்பட்டு வந்திருக்கிறது. மேற்கொண்டும் கட்சிக் கொள்கைகளுக்குப் பொருத்தமாகத் திட்டம் வகுக்கவே முயற்சி செய்யப்படும்.

சீர்திருத்தங்கள் குறைபாடுடையனவா யிருந்தாலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள்ளே குடியேற்ற நாட்டந்தஸ்துப் பெறுவதை லட்சியமாக வைத்துக் கொண்டு தேச மகாஜனங்களுக்கு சாத்தியமான நன்மைகளையெல்லாம் செய்யும் முறையில் புதிய சீர்திருத்தத்தை ஜஸ்டிஸ் கட்சியார் அமல் நடத்துவார்கள். இதற்காக சட்ட வரம்புக்குட்பட்டு அவசியமான சகல முறைகளையும் ஜஸ்டிஸ் கட்சியார் கையாளுவார்கள்.

செயலிலும், கொள்கையிலும் தனி வகுப்பு நோக்குடன் இன்றி பரந்த நோக்குடன் எல்லா மக்களுக்கும் வேலை செய்யும் கட்சி ஜஸ்டிஸ் கட்சி ஒன்றே, சர்க்கார் சர்வீசிலும், இதர இடங்களிலும் ஒரு சமூகத்தார் ஏகபோக உரிமை பாராட்டி வருவது இந்நாட்டின் துரதிர்ஷ்டமாக இருந்து வருகிறது. அதை ஒழித்து எல்லா சமூகங்களுக்கும் சம சந்தர்பங்களும் உரிமைகளும் அளிக்கும் பொருட்டு எல்லா ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்ற ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையே சமூக வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் ஒழித்து ஒற்றுமையை உண்டுபண்ண ஏற்ற மார்க்கமாக இருந்து வருகிறது.

ஒரு நாட்டிலே தேசீய உணர்ச்சி விருத்தியடைய வேண்டுமானால் சமூக ஒற்றுமை ஏற்பட்டுத் தீரவேண்டும். எனவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மூலமே சமூக ஒற்றுமையும், பரஸ்பர நல்லெண்ணமும் திருப்தியும் ஏற்படுமென்பது ஜஸ்டிஸ் கட்சியாரின் திடமான நம்பிக்கை.

  1. நிலவரிக் கொள்கை

விலைவாசிகள் வீழ்ச்சியினாலும், உலகப் பொருளாதார மந்தத்தினாலும், நிலவரி வருமானம் துரதிர்ஷ்டவசமாகக் குறைந்து வருகிறது. அத்துடன் நிலவரியை குறைக்கச் செய்ய வேண்டுமென்ற கூச்சலும் தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வருகிறது.

நிலவரி, கலால், வன வருமானந்தான் மிகவும் குறைவாக இருக்கிறது. வருமானம் குறையும்போது தேசோத்தாரண வேலைகள் தடைபடுகின்றன. கைத்தொழில் அபிவிர்த்திக்கும், விவசாய முன்னேற்றத் திட்டங்களுக்கும் பாதகம் ஏற்படுகிறது, இவைகளுக்கெல்லாம் பணம் தேவையாக இருக்கிறது. எனவே, தேச நிருவாகத்துக்குத் தடை ஏற்படாமல் சாத்தியமான வழிகளில் எல்லாம் வருமானத்தைப் பெருக்கத் தேவை யுண்டாகிறது.

எவருக்கும் பலுவேற்படாமல் நியாயமான முறையில் நிலவரி முறையை வகுக்கத் தேவையான முயற்சிகள் செய்யப்படும்.

தற்காலப் பொருளாதார மந்த காலத்தில் மறு பைசல் செய்வதை ஆதரிக்க முடியாதென்று சட்டசபையிலும், மகாநாடுகளிலும் ஜஸ்டிஸ் கட்சியார் வற்புறுத்தியே வந்திருக்கிறார்கள். எனவே போதுமான அளவுக்கு நில வரியை குறைக்க செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் மேற்கொண்டும் முயற்சி செய்தே வருவார்கள்.

மறு பைசல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடங்களில் விலைவாசியை முன்னிட்டு வரிகளை உயர்த்துவதில்லையென்றும் அந்தப் பொறுப்பை புது அரசியல் திட்டத்தின் படி ஏற்படும் சர்க்காருக்கு விட்டுக் கொடுப்பதென்றும் ஜஸ்டிஸ் கட்சியார் தூண்டுதலின் பேரிலே சர்க்கார் சம்மதித்திருக்கிறார்கள். மறு பைசல் ஏற்பாடுகள் யோசனைக்கு வரும்போது ரயத்துகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும்.

நிலச்சுவான்தார்களும், விவசாயிகளும், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வேலை செய்தால்தான் விவசாயிகள் பிரச்சினை திருப்திகரமாக முடியுமென்பது ஜஸ்டிஸ் கட்சியார் நம்பிக்கை. சமீபத்தில் ஜமீன் சட்டம் திருத்தப்பட்டபோது மகாநாடுகள் மூலம் நிலச்சுவான்தார் களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யப்பட்டது. அம்முயற்சி வெற்றியும் பெற்றது. குடிகளுக்கு குடி இருப்பு உரிமை, மேய்ச்சல் வசதிகள், நீர்ப்பாசன உரிமை முதலியன கிடைக்கும் பொருட்டு ஜஸ்டிஸ் கட்சி நிலச்சுவான்தார் மெம்பர்கள் தூண்டுதலினாலேயே ஜமீன் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

பெரிய நிலச்சுவான்தார்களும், ஜமீன்தார்களும் இருக்க வேண்டியது அவசியமென ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக்கொள்வதுடன் அவர்கள் க்ஷேமத்துக்கு குடிகள் திருப்தியாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமெனவும் ஜஸ்டிஸ் கட்சியார் ஜமீன்தார்களுக்கு எடுத்துக்காட்டி வருகிறார்கள்.

ஆகவே, குடிகளின் நியாயமான குறைபாடுகளையெல்லாம் பரிகரித்து அவர்களது நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க ஜஸ்டிஸ் கட்சியார் சதா முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள்.

விவசாயப் பொருள்களின் விலைவாசிகள் குறையும்போது ஜமீன் குடிகளின் வாரங்களையும் குறைக்க வேண்டுமென்று ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை முடிவு செய்யும் விஷயத்தில் ஜமீன் குடிகளும், ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியாருடன் ஒத்துழைத்தே வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட இனாம் சட்டத்தினால் இனாம் குடிகளும், இதர ஜமீன் குடிகளும் அநேகமாக சமநிலையை அடைந்திருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தினால் மாகாணம் முழுதுமுள்ள சுமார் 50 லக்ஷம் இனாம் குடிகள் நன்மையடைந்திருக்கிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையில் மிகவும் பாடுபட்டு இனாம் சட்டத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.

  1. நகரசபைகளும் ஸ்தல ஸ்தாபனமும்

நகரசபைகளில் நிர்வாக வேலைக்கு நகரசபைகளுக்கும் சர்க்காருக்கும் ஜவாப்தாரிகளான கமிஷனர்களை நியமனம் செய்து சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நகரசபைத் தலைவர்களுக்கு எவ்வளவோ ஆறுதல் ஏற்பட்டிருக்கிறது. நகரசபை, ஸ்தல ஸ்தாபன க்ஷேமத்தைக் கருதி, நகரசபை, ஸ்தல ஸ்தாபன சிப்பந்திகளை இடமாற்றும் அதிகாரம் சர்க்காருக்கு இருக்கும்படி ஸ்தல ஸ்தாபனச் சட்டங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன.

இதனால் நகரசபை, ஸ்தல ஸ்தாபன உத்தியோகஸ்தர்கள் சர்க்கார் ஒழுங்கு முறைகளை மீறி நடவாமல் தடுக்கப்பட்டிருப்பதுடன் ஸ்தல கட்சிப் பிணக்குகளினால் அவர்களுக்குத் தொல்லைகள் ஏற்படாமலிருக்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், சந்தர்ப்பங்களுக்குத் தக்கபடி நகரசபை ஸ்தல ஸ்தாபன அபிவிருத்திக்குத் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் அவ்வப்போது செய்யப்படும்.

தாலூகா போர்டுகள் நிர்வாகச் செலவுக்குப் பணமில்லாமல் கஷ்டப்பட்டதினால் நிறுத்தப்பட்டன. தாலூகா போர்டு நிர்வாகத்தில் இருந்த இடங்கள் 1934 ஏப்ரல் முதல் ஜில்லா போர்டு நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டன. ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தைச் சீர்படுத்தும் பொருட்டு சில ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட ஜில்லா போர்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலைவரும் உபதலைவரும் ஏற்படுத்தப்பட்டனர். பொருளாதார நெருக்கடியினால் பிரிக்கவேண்டிய ஏனைய ஜில்லா போர்டுகளும் காலக்கிரமத்தில் பிரிக்கப்படும். ஜில்லா போர்டுகளைப் பிரிவினை செய்வது சம்பந்தமான வேலைகளை கவனிக்கும் பொருட்டு ஒரு ஸ்பெஷல் உத்தியோகஸ்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

  1. பஞ்சாயத்துகள்

லோக்கல் போர்டு ஆக்டின்படி அமைக்கப்பட்ட யூனியன் போர்டுகளும் 1920 – வது வருஷத்திய சென்னை கிராமப் பஞ்சாயத்துச் சட்டப்படி அமைக்கப்பட்ட பஞ்சாயத்து போர்டுகளும் 1930-வது வருஷத்திய ஙீஐ-வது சட்டப்படியுள்ள பஞ்சாயத்துகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஸ்தல நிருவாக சம்பந்தமாக அவைகளுக்கு ஏராளமான அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. குடிநீர் உற்பத்தி ஸ்தானம், மார்க்கட்டுகள், வண்டிப்பேட்டைகள், கைத்தொழில்கள், ஆலைகள், கிராம ரஸ்தாக்கள், பொது ஸ்தலங்கள் முதலியவைகளை பஞ்சாயத்துகள் மேல் பார்த்து நிர்வகித்து வருகின்றன. கிராம ஜனங்கள், நீர்ப்பாசன வேலைகள் முதலியவைகளையும் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு விட்டுக் கொடுக்கலாம். வீட்டு வரி முதலியன வசூல் செய்வதைப் பற்றி பஞ்சாயத்துகள் சர்க்காருக்கு சிபார்சு செய்யலாம். ஜில்லா போர்டு, ஸ்தல ஸ்தாபன சர்க்கார் அதிகாரங்களுக்கு சில விஷயங்களில் கட்டுப்பட்டு, பஞ்சாயத்துகளும் லோக்கல் பண்டு நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் சுய ஆட்சி ஸ்தாபனங்கள் ஆகிவிட்டன.

கிராம ஜனங்களின் தேவைகளை கவனித்து, சரியானபடி பூர்த்தி செய்ய வசதி கிடைக்கும்படி கிராமப் பஞ்சாயத்துகளை விருத்தி செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் மேற்கொண்டும் தேவையான முயற்சிகள் எல்லாம் செய்வார்கள்.

  1. கூட்டுறவு ஸ்தாபனங்கள்

கூட்டுறவு ஸ்தாபனங்கள், கிராமவாசிகள் கடன் பளுவைக் குறைக்க தேவையான முயற்சிகள் எல்லாம் செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய நில அடமான பாங்கி விடுத்துள்ள கடன் பத்திரங்களில் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு சர்க்கார் உத்தரவாதம் சொல்லுவதாக ஒப்புக்கொண்டிருப்பது மூலம் நில அடமான பாங்கிகளின் நிலைமை மிகவும் விருத்தியடைந்திருக்கிறது.

இந்த ஏற்பாட்டின்படி கடன் வாங்க ரயத்துகள் ஏராளமாக முன் வருகிறார்கள். மேற்கொண்டும் அவர்கள் அதிகமாக முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சம்பந்தமான தஸ்தாவேஜிகளுக்குக் கட்டணம் வாங்கப்படுவதில்லை. மற்றும், தேவையான சலுகைகள் எல்லாம் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. கூட்டுறவு நாணயச் சங்கங்களை விருத்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கரும்புச் சாகுபடி, பழ விற்பனை, நெசவுத் தொழில், குடிசைக் கைத்தொழில் முதலியவைகளையும் கூட்டுறவு முறையில் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் விவசாயக்கடன் சட்டத்தில் சர்க்கார் செய்த திருத்தங்களினால், காலநிலை வேற்றுமையினால் ஏற்பட்ட கஷ்டங்களைத் தவிர இதர கஷ்டங் களுக்காகவும் கடன் வாங்க விவசாயிகளுக்கு வசதியளிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் கடன் பளுவைக் குறைப்பதற்காக கடன் சமரச போர்டுகள் ஏற்படுத்தும் விஷயங்களிலும் ஜஸ்டிஸ் கட்சியார் எப்பொழுதும் ஆதரவளித்தே வந்திருக்கிறார்கள்.

தம்துபட் (ஈச்ட்ஞீதணீச்t) சட்டப்படி முதலைவிட இரட்டிப்பான வட்டியை ஒரே முறையில் ஈடாக்க முடியாது. சென்னை மாகாணத்தில் இந்தச் சட்டம் அமலில் இல்லாமலிருந்தாலும், சென்னை கடன் சமரசச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு திருத்தம் மூலம் முதலைவிட இரட்டிப்பான வட்டியை எந்தக் கடன்காரரும் வசூல் செய்யகூடாது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது விவசாயக் கடனாளிக்கு மிகுந்த ஆறுதலளிக்கும்.

நீண்ட காலக் கடன்களை சிறு சிறு தவணைகளாகச் செலுத்தவும், குறைந்த வட்டியில் அது வகைக்குக் கடன் கொடுக்கவும் ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்பாடு செய்வார்கள்.

கிராமவாசிகளின் க்ஷேமத்துக்குத் தேவையான சட்டங்கள் இயற்ற ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு பொழுதும் பின்வாங்க மாட்டார்கள். மாகாணத்திலுள்ள பலதிறப்பட்ட ஐக்கிய நாணய ஸ்தாபனங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து விவசாயிகள் கடன் பளுவைக் குறைக்கச் செளகரியம் செய்யும் பொருட்டு ஒரு தனி ஸ்தாபனம் ஏற்படுத்தவும் ஜஸ்டிஸ் கட்சியார் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் கடனாளிகளாவதற்கு வேலையில்லாத் திண்டாட்டமே காரணம். ஆகவே, குறைந்த வட்டிக்குத் தேவையுடையவர்களுக்குக் கடன் கொடுக்க ஏற்பாடு செய்வதுடன் ஏராளமான பேருக்கு வேலை கொடுப்பதற்காக பெரிய கைத்தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். விவசாயம் மூலம் கிராமவாசிகளுக்கு வேலை கிடைப்பது கஷ்டமாய் விட்டதினால் கைத்தொழில் ஸ்தாபனங்கள் மூலமே கிராம வாசிகளுக்கு வேலை கொடுக்க முடியும்.

போஸ்டு ஆபீஸ் முதலிய சர்க்கார் ஸ்தாபனங்கள் மூலம் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் பெற்று வரும் இன்ஷியூரன்ஸ் வசதிகள் ஏனையோரும் பெறும்படி ஏற்பாடுகள் செய்யப்டும்.

  1. கல்வி

10 வருஷ காலத்துக்குள் எல்லாருக்கும் ஆரம்பக் கல்வியளிப்பதே ஜஸ்டிஸ் கட்சியின் லட்சியம். சில குறிப்பிட்ட இடங்களில் கட்டாய ஆரம்பக் கல்வி ஏற்பாடு அமலில் இருந்து வருகிறது. சொற்ப காலத்துக்குள் கட்டாய ஆரம்பக் கல்வி ஏற்பாடு எங்கும் அமலில் கொண்டு வரப்படும்.

ஆரம்பக்கல்விச் சட்டத்தைத் திருத்த ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. உத்தேசிக்கப்பட்டிருக்கும்படி, உயர்ந்த வகுப்பு வரைப் படியாமல் இடையில் பள்ளிப்படிப்பை நிறுத்துகிறவர்களுக்குத் தண்டனையளிக்கப்படும். இதனால் ஆரம்பக் கல்வி விஷயத்தில் ஏற்படும் வீண்செலவு தடைபடும். ஆரம்பக் கல்விப் பயிற்சிக்குத் தடையேற்படாமல் இருக்கும் பொருட்டு ஏழை மாணவர்களுக்கு மத்தியானச் சாப்பாடு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியானச் சாப்பாடு கொடுக்கும் விஷயத்தில் மேற்கொண்டும் கண்டிப்பான ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாணவர்களுக்கு இலக்கிய கல்வியளிப்பதுடன் தொழிற்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

தகுதியற்ற பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கிராண்டை நிறுத்தல் செய்துவிட்டு தகுதியுடைய பள்ளிக் கூடங்களுக்கு அதிகப்படியான கிராண்டுகள் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

கிராண்டு கொடுக்கும் விஷயத்தில் இதுவரையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் ஆள் வீத முறை நிறுத்தப்பட்டு விடும். ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மாதவாரி கிராண்டு 12 ரூபாயிலிருந்து 13 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

எல்லோருக்கும் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள வசதியளிக்கும் பொருட்டு ஸ்பெஷல் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்து பருவமடைந்தவர் களுக்கு கல்விபுகட்ட மாகாணம் முழுதும் ஏற்பாடுகள் செய்யப்படும். யூனிவர்சிட்டி, செக்கண்டரி, பிரைமரிக் கல்விகளுக்கு மொத்தம் 232 லக்ஷம் ரூபாய் வருஷந்தோறும் செலவாகிறது.

கைத்தொழில் விவசாயக் கல்விகளுக்கு சுமார் 4 லக்ஷம் ரூபாய் செலவாகும். இது மொத்தக் கல்விச்செலவில் 1.8 சதமானமாகிறது. இந்தத் தொகை சர்க்கார் கைத்தொழில் சாலைக்கும், சர்க்கார் சாங்கேதிகக் கல்விச்சாலைக்கும் செலவு செய்யப்படுகிறது. சர்க்கார் சாங்கேதிகக் கல்விச்சாலை உயர்தர எலக்டரிக்கல், மெக்கானிக்கல் கல்விப் பயிற்சியளித்து வருகிறது. அத்துறைகளில் நிபுணர்களை உற்பத்தி செய்யவும் அது முயலுகிறது. அப்பள்ளிக்கூடத்தை விருத்தி செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் மேலும் முயற்சி செய்வார்கள்.

கைத்தொழிற் பயிற்சியளிக்க ஒரு உருவான திட்டம் போடப்படுகிறது. ஒவ்வொரு ஜில்லாத் தலைநகரத்திலும் ஒவ்வொரு கைத்தொழில் கல்விச்சாலை ஸ்தாபிக்கவும் அந்தந்த இடத்துக்குப் பொருத்தமான கைத்தொழில்களில் மாணவர்களைப் பழக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

  1. குடி

முன்னமே கூறியுள்ளபடி கலால் வருமானம் தற்பொழுது சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எதிர்கால சர்க்கார் கலால் வருமானத்தில் இனி நம்பிக்கை வைப்பதில் பிரயோஜனமில்லை. இவ்வருமானத்திற்கு ஈடுசெய்ய வேறு வழிகளைக் கண்டு பிடித்தாக வேண்டும். குடி ஒழிப்புப் பிரச்சினை இதன் மூலம் தானாகவே தீர்ந்து விடும்.

மேலும், குடியை ஒழிக்க வேண்டி கள், சாராயம் முதலியவற்றிற்கு காண்பிக்கப்படும் சலுகையைத் தவிர்க்கவும், திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சப்படுதலைத் தடுக்கவும் சட்டமூலம் இயன்றவற்றைச் செய்ய கட்சி தன் முழுப் பலத்தையும் கொண்டு பாடுபடும்.

  1. தீண்டாமை

சமூக சமத்துவம், சகோதரத்வமே கட்சியின் அடிப்படையான கொள்கைகளில் முக்கியமானதாகும். தீண்டாமையை வேருடன் களைந்தெறிய கட்சி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. பாடசாலைகள், கல்லூரிகள், குடிதண்ணீர், பொதுகாட்சிச் சாலைகள், மற்றும் பல பொது இடங்கள் முதலியவற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்களும் யாதொரு நிர்ப்பந்தமின்றி இதர ஜாதியினருடன் சமத்துவமாய் இருந்துவர, சட்டபூர்வமாகவும் கட்சி தன்னாலானவற்றைச் செய்ய பின் வாங்காது.

எம் மாணவனாவது வகுப்பு வித்தியாசக் காரணத்தைக் கொண்டு எப்பாடசாலையிலும் சேர்வதற்கு அநுமதி மறுக்கப்படுமேயானால் அப்பாடசாலையை அங்கீகரிப்பதில்லை யென்றும், அப்பாடசாலைக்கு நன்கொடை யளிப்பதில்லை யெனவும் சென்னை ஆரம்பக்கல்விச் சட்டத்தில் கண்டிருக்கிறது. அதைக் கண்டிப்பாக அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் தாழ்த்தப்பட்ட (ஷெட்யூல் வகுப்பு) மக்களுக்குத் தற்பொழுதிருந்து வரும் தடையும் நொடிப்பொழுதில் மறைந்து விடுமென்பதில் சிறிதும் ஐயமில்லை.

1933ம் வருஷத்திய திருத்தச் சட்டப்படி பஞ்சாயத்தின் மேற்பார்வையிலிருந்து வரும் கிணறுகள், குளங்கள், தண்ணீர்த் தேக்கங்கள் முதலியவற்றில் ஜாதி, மத வித்தியாசமின்றி எம்மக்களும் அனுபவிக்கலாமென்று கண்டிருக்கிறது. கிராமப் பஞ்சாயத்துக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் பிரதிநிதித்துவத்திற்கும், ஸ்தல ஸ்தாபன ஊழியங்களில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை கண்டிப்பாய் அனுசரிக்கவும், ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தில் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சட்டங்கள் மேலும் வேண்டியிருந்தால் அவைகளும் இயற்றப்படும்.

  1. கிராம சுகாதாரம்

கிராம சுகாதாரமே கட்சியின் பிரதம நோக்கமா யிருந்து வருகிறது. வாழ்க்கையை இன்புறச் செய்வதற்கு சுத்தம், சுகாதாரம் என்பவை அவசியம் என்பதை விவசாயிகளுக்குப் போதிக்க வேண்டி ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும், ஒவ்வொரு சுகாதார இன்ஸ்பெக்டர்களை அளிக்க நோக்கங் கொண்டுள்ளது.

சேரி அபிவிருத்தி

கிராமங்களிலும் நகரங்களிலும் சேரி அபிவிருத்திக்கான எல்லாக் காரியங்களையும் செய்ய கட்சி தன் முழுக்கவனத்தையும் செலுத்தும். சேரிகளில் நெருக்கத்தைத் தவிர்க்கவும் சுகாதார முறைப்படி புதிய வீடுகள் அமைக்கவும் தகுந்த திட்டத்தின் மீது முயற்சிகள் கையாளப்படும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்வதற்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த 10 வருஷங்களில் மாகாணத்தின் அதிகப்படியான வருமானத்தில் இச் செலவு சேரும்.

சேரிகளைத் திறம்பட நிர்வகிக்கவும், நகர மக்கள் அனுபவிக்கும் வசதிகளை சேரி மக்களும் அனுபவிக்கச் செய்யவும் வேண்டி சென்னை நகர முனிசிபல் திருத்தச் சட்டத்தில் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற ஸ்தலங்களுக்கும் காலாகாலத்தில் சட்டங்கள் அதே போன்று இயற்றப்படும்.

  1. போக்குவரத்துகள்

கிராம போக்குவரத்துக்களை அபிவிருத்தி செய்ய வேண்டுவதே கட்சியின் இடைவிடா நோக்கமாயிருந்து வருகிறது.

கிராமங்களை ஒன்றோடொன்று இணைக்கவும் தனது விளை பொருள்களை முக்கியமான சந்தைகளுக்கு கிராமவாசி கொண்டு செல்லவும், கிராமங்களில் வண்டிப் போக்குவரத்துக்கான தக்க ரோடுகளை அமைக்கவும், கடைசியில் அவற்றையெல்லாம் கிராமத்தின் பெரிய ரோட்டில் கலக்கும்படி செய்யவும் நகரிலுள்ள வைத்திய வசதிகளை கிராமவாசியும், கஷ்டமின்றி அடையும்படி செய்யவும் செலவிடாத பணம் சரியான முறையில் செலவிட்டதாகாது.

இது சம்பந்தமாக ரோடு அபிவிருத்தி விஷேச இஞ்சினீயர் தோழர் வைப்பன் தயாரித்த திட்டம் உடனே அமுலுக்குக் கொண்டு வரப்படும். மாகாணம் முழுமைக்கும் இத்திட்டப்படி 5 கோடி ரூபாய்கள் பிடிக்குமென கணக்கிடப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக இந்தியா சர்க்காரிடமிருந்து கடன் வாங்கிக் கொள்வதெனவும், மத்திய சர்க்காரிடமிருந்து பெட்ரோல் சம்பந்தமாக வருஷா வருஷம் கிடைக்கும் 16 லக்ஷ ரூபாயிலிருந்து இக்கடனை திருப்பி அடைத்து விடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

சென்ற பட்ஜெட் கூட்டத்தின் பொழுது இது சம்பந்தமாக சட்டசபையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது.

  1. வைத்திய உதவி

வைத்திய உதவியை அதிகரிக்க முயற்சிகள் கையாளப்படும். ஒவ்வொரு கிராமத்திற்கும், அல்லது பல கிராமங்களுக்கும் சேர்ந்தாற்போலும், சிசு சம்ரக்ஷணை ஸ்தலங்களும், வைத்திய நிவாரண ஸ்தலங்களும் அளிக்கப்படும்.

சென்னையிலுள்ள இந்திய வைத்திய பாடசாலையும், மாகாணத்தின் பல பாகங்களிலும் கிராமங்களிலுமுள்ள இந்திய வைத்தியசாலைகள் யாவும் கட்சியின் முயற்சியினால் ஏற்பட்டனவே. அவைகள் மேலும் அதிகரிக்க எதிர்காலத்தில் முயற்சிக்கப்படும்.

சுகாதார நிபுணர்கள் தற்பொழுது பொறுக்கி எடுக்கப்பட்டுள்ள ஸ்தலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவை இன்னும் அதிகரிக்கப்படும்.

  1. பொருளாதார முன்னேற்றம்

விவசாயிக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமையை நிவர்த்திக்கவும் மேல் கொண்டு கடன் ஏற்படுவதினின்றும் அவனைப் பாதுகாக்கவும் சட்ட மூலமாகவும் இதர வழிகள் மூலமும் எல்லா முயற்சிகளும் கையாளப்படும்.

500 ரூபாய்க்கு மேற்படாத சிறிய கடன்காரர்களை, செளகார்களின் இம்சையினின்றும் பாதுகாப்பதற்காகவே, சமீபத்தில் சட்டசபையில் கடன்காரர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரிசி, நெல் மற்றும் பல தானியங்களும், கடலைக்காய், கரும்பு, புகையிலை, எள் முதலியனவும் பழ வகைகளும் தக்க விலைக்கு விற்கும்படிச் செய்ய சர்க்கார் மார்க்கெடிங் உத்தியோகஸ்தர்களை நியமனம் செய்துள்ளது. அவைகளின் உற்பத்தி அதிகரிக்கச் செய்வதும் புது புது சரக்குகளை உற்பத்தி செய்வதும் பயிர்களுக்கு நோய் வருவதைத் தடுக்க தக்க முயற்சிகளைக் கையாளுவதும் அவர்கள் வேலையாயிருந்து வரும்.

  1. தொழிற்சாலைகள்

உள்நாட்டுத் தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதே தற்போதைய முக்கிய பிரச்சினையாயிருந்து வருகிறது. 100க்கு 75 பேர் விவசாயிகளாயிருந்தாலும் விவசாயம் மட்டும் பலன் தராது. தொழிற் சாலைகளும், நம் தேசத்தில் அதிகரிக்க வேண்டும். இறக்குமதியைக் காட்டிலும் தயார் செய்யப்பட்ட சரக்குகளின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். தொழிற்சாலைகளின் அபிவிர்த்திக்குக் கட்சி தன்னாலானவற்றை எல்லாம் செய்யும். இத்தேசத்திலும், வெளிநாடுகளிலும், தொழிற்பயிற்சி அடையும் மாணவர்களுக்காகத் தொகை ஒதுக்கி வைக்கப்படுவது அதிகரிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அவர்கள் அத்தொழில்களுக்கு நியமிக்கப்படுவார்.

வியாபாரக் கல்வியும், பயிற்சியும்கூட போதிக்கப்படும். வியாபாரத்தில் திறமையும், பயிற்சியும் பெறுவதற்காக அன்னிய நாடுகளுக்கு அனுப்பப்படும் மாணவர் கோஷ்டிகள் அதிகரிக்கப்படும்.

குடிசைத் தொழில்கள்

குடிசைத் தொழில்களை புதுப்பிப்பது கட்சியின் பிரதம திட்டங்களில் ஒன்றாகும்.

நெசவு, பிரம்பு வேலை, விளையாட்டுச் சாமான்கள், பொத்தான் உற்பத்தி, டேப், லேஸ், பின்னல் வேலை, நாருரித்தல், கயிறு பின்னுதல், சாயம் போடுதல், சோப் உற்பத்தி மற்றும் பல கைத்தொழில்களும் இத்தேசத்திலிருந்து வருகின்றன. சிறிய பண உதவி அளிக்கப்படுமாயின் இக்கைத்தொழில் வளர்ச்சியுறுவதற்கு ஏதுவாயிருக்கும். அதை அளிக்கச் செய்து அவற்றின் அபிவிர்த்திக்கான யாவற்றையும் கட்சி செய்யும்.

விவசாயத்திற்கு அடுத்தபடியான நம் தேசத்தில் இருக்கும் படியான முக்கியமான தொழில் கைத்தறியே ஆகும். இத்தொழிலை அபிவிர்த்தி செய்ய வேண்டுவதே கட்சியின் இடைவிடா முயற்சியாயிருந்து வருகிறது.

கையால் நெய்யப்பட்ட சரக்குகளை நல்ல விலைக்கு விற்க வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக சர்க்கார் ஐந்து வருஷத்திற்கு அரை லட்ச ரூபாய்க்கு மேல் திரவிய சகாயம் செய்துள்ளனர். அன்னிய நாட்டு நூற்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியிலிருந்து இத்தொகை பெறப்படுகிறது. மாகாணக் கைத்தறியாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பணமுடையால் கஷ்டப்படும் கைத்தறியாளர்க்கு பணவுதவி செய்வதும், ஸ்தல நெசவாலைகளிலிருந்து அவர்களுக்கு வேண்டிய நூற்களை கொடுத்து உதவுவதும், ஸ்தலத்தில் விற்பனையாவது போக நெய்யப்பட்ட இதர சரக்குகளை சென்னையில் விற்பனையாக்க முயற்சிகளை எடுத்துக்கொள்வதும் அதன் பிரதம வேலையாயிருந்து வருகிறது.

கைத்தறிக்கு உதவுவது போன்று, கம்பளித் தொழிலுக்கும் 5 லக்ஷம் ரூபாய் உதவி செய்ய இந்தியா சர்க்கார் சமீபத்தில் தீர்மானித்துள்ளனர். இத்தொகை கிடைக்கப்பெற்றதும், இத்தொழிலாளர்களின் நன்மைக்காகவே உபயோகப்படும்.

பட்டு உற்பத்தி எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்க முயற்சிக்கப்படும். கொள்ளேகால், குப்பம், பால்மனார், மதனபள்ளி, பெத்தாபுரம் போன்ற விடங்களில் மைசூரில் நடத்தி வருவதைப் போன்று பட்டு உற்பத்தித் தொழில் அதிகரிக்கச் செய்ய வசதியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வேலையில்லாதவர் களுக்கும் பட்டு உற்பத்தித் தொழில் மூலம் வேலை கிடைக்கும்.

இதற்காக ஒரு கட்டுப்பாடான திட்டத்தின் மீது தீவிரப் பிரசாரம் செய்ய கட்சி மேற்கொண்டு இருக்கிறது.

எண்ணெய் வித்துக்கள் விஷயத்திலும் நம் மாகாணம் பெரும் பாக்கியம் அடைந்திருக்கிறது. ஆனால், அவற்றை நாம் பலன்படுத்திக் கொள்ளாமலிருக்கிறோம். மேற்குக் கடற்கரை ஜில்லாக்களிலும் கிழக்குக் கடற்கரை ஜில்லாக்களிலும் ருசிகரமான எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாகின்றன. அவற்றிலிருந்து சமையலுக்கும் மருந்து வகைகளுக்கும் எண்ணெய் எடுப்பதன் மூலம் நம்பிக்கையான வருமானம் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும். இதையும் கட்சி மேற்கொள்ளும்.

  1. சர்க்கார் உத்தியோகங்கள்

தற்போதைய நிர்வாகம் தாங்க முடியாதபடி இருந்து வருகிறது. ஆகவே, நிர்வாகத் திறமையில் சிறிதும் குறைவேற்படாத வண்ணம் நம் தேச பொருளாதார நிலைமைக்குத் தக்கபடியும் இந்திய வாழ்க்கைக்குத் தக்கபடியும் சர்க்கார் உத்தியோகங்களுக்குச் சம்பளம் தரப்பட வேண்டும்.

ரயில்வேக்கள், தண்ணீர் சப்ளை, மின்சாரம், நீர்ப்பாசனம் போன்ற பொதுஜன நன்மைக்குகந்தவற்றை சர்க்காரே தங்கள் மேற்பார்வையில் நடத்த கட்சி முயலும்.

வடக்கு, தெற்கு ஜில்லாக்களிலுள்ள டெல்டா பிராந்தியங்களில் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரம்பித்து நடத்தப்பட்டு வருகின்றன. அது போன்றே மேற்கு மத்திய ஜில்லாக்களிலும், சீதன ஜில்லாக்களிலும் நீர்ப்பாசனத் திட்டங்கள் கூடிய சீக்கிரத்தில் ஆரம்பித்து நடத்தப்படும்.

  1. பெண்ணுரிமை

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கட்சி எப்பொழுதும் முயன்றுவரும்.

  1. மீன்

மீன் பண்ணையும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும். உணவுக்கு அருமையான, விலை மதிக்க கூடிய உயர்ந்த ரக மீன்கள் தற்பொழுது மீன் இலாகாவின் முயற்சியினால் நதிகளில் விடப்படுவது இன்னும் தீவிரமாக நடைபெற்று வரும்.

  1. தொழில்

தொழிலாளர் பிரச்சினையின் அவசியத்தை கட்சி உணராமலில்லை. தொழிலாளிக்கு குடியிருக்க செளகரியமான வீடு, போதிய சம்பளம், வேலை நேர நிர்ணயம், தொழிலாளிகளின் குழந்தைகளுக்குப் படிப்பு, வயது வராத சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதைத் தடுப்பது, வாழ்க்கைக்கு வேண்டிய மற்றும் பல அத்தியாவசியமானவைகளும் கட்சியால் கவனிக்கப்பட்டு வரும்.

  1. மாகாண பொருளாதார கவுன்சிலும் 10 வருஷத் திட்டமும்

மாகாண பொருளாதார கவுன்சில்கள் அமைக்க சர்க்கார் தீர்மானித்துள்ளனர். சர்க்கார் இலாகாக்கள் பலவற்றுடனும் இக்கவுன்சில்கள் ஒத்துழைத்து தேச முன்னேற்றத்துக்கான ஒரு பத்து வருஷத்திட்டத்தை வகுக்கும். அக்கவுன்சிலில் உத்தியோகஸ்தர் பாதிபேரும் உத்தியோகஸ்தர் அல்லாதார் பாதிபேருமிருப்பர். அதன் அமைப்பு, வேலை, நடவடிக்கை முதலியன இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆயினும் இம்மாகாண விவசாய அபிவிருத்தியைக் குறித்தும், ஆரம்பக் கல்வியைக் குறித்தும் ஆலோசிக்க இரு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விளைபொருள்கள் உற்பத்தி விஷயத்தில் பிறரை எதிர்பார்க்காத முறையில், இம்மாகாண விவசாய அபிவிருத்தியைச் செய்ய ஒரு பத்து வருஷத் திட்டத்தை வகுக்கவே முதற் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல கிராமங்களுக்கு வேண்டிய விதைகள் சேகரம் செய்வதும், எருக்களை அதிகப்படியாக உபயோகிக்க வசதிகள் ஏற்படுத்துவதும், இல்லாத இடங்களில் நீர்பாசனங்களை உண்டாக்குவதும், கால்நடைகளை அபிவிருத்தி செய்வதும் அதன் நோக்கமாயிருந்து வரும்.

கிராமங்கள், நகரங்களிலுள்ள வயதுவந்த சிறுவர், சிறுமிகளுக்கெல்லாம் கல்வி கிடைக்கத் தக்கவிதமாய் ஆரம்பக்கல்வியை விஸ்தரிக்கச் செய்வதே கல்வி சப் கமிட்டியின் முக்கிய நோக்கமாய் இருந்து வரும். மேலும் விவசாய தோரணையில் இருக்கத் தக்க விதமாய் ஆரம்பக் கல்வி திருத்தி அமைக்கப்படும். விவசாயக் காட்சிகளும் அடிக்கடி தகுதியான இடங்களில் நடத்திக் காண்பிக்க முயற்சிக்கப்படும்.

மேலும் தகுதியான விலை வரும் வரையில், தங்கள் விலை பொருள்களை விவசாயிகள் சேமித்து வைப்பதற்காக தானியக் களஞ்சியங்களைத் தக்க இடங்களில் கட்டவும் கட்சி நோக்கங்கொண்டுளது. விவசாயிகளுக்கு இலவசப் பொது மேய்ச்சல் தரை கிடைக்கும்படிச் செய்வதற்காக ஸ்தல ஸ்தாபனங்கள், மேய்ச்சலுக்குத் தகுதியான இடங்களை விலைக்கு வாங்கும்படிச் செய்யவும் ஆலோசனையிலிருந்து வருகிறது.

ஆகவே, கட்டாய ஆரம்பக்கல்வி, கிராமங்களில் எல்லாக் காலத்துக்கும் தக்கதான ரோடுகள் அமைப்பது, பாதுகாப்பு தண்ணீர் சப்ளை, கிராமாந்தரங்களுக்கு குறைந்த விகித மின்சாரம் முதலியனவே ஜஸ்டிஸ் கட்சியின் 10 வருஷத் திட்டமாகும். சுருங்கக் கூறுமிடத்து தேச வருமானத்தையும், வாழ்க்கையின் அந்தஸ்தையும் உயர்த்துவிப்பதுடன், தற்கால நிலைமையில் அடையக்கூடிய எல்லா வித செளகரியங்களையும் கிராமவாசியும் அடையும்படிச் செய்வதேயாகும்.

  1. பொது

ஜாதி, மத பேதமின்றி எம் மக்களும், இவற்றாலும், இன்னும் பலவற்றாலும் நன்மையை அடைய வேண்டுவதே கட்சியின் அடிப்படையான நோக்கமாய் இதுவரை இருந்து வந்தது போன்றே, இனியும் இருந்துவரும். வருங்காலத்தில் சரித்திராசிரியர்களே இது பற்றித் தீர்ப்புக் கூறவேண்டியர்களாவர்.

குடி அரசு – அறிக்கை – 03.01.1937

You may also like...