திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (8)
1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (3) திராவிடர் சங்கத்தின் பணியும் தொடர்ந்தது. நவம்பரில் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பட்டம் பெற்ற திராவிட மாணவர்கட்கு வழக்கம்போல் விருந்தும் பாராட்டும் நடைபெற்றது. நாயரின் வேண்டுகோளுக்கிணங்க அலெக்சாண்டர் கார்டியூ தலைமை வகித்து, திராவிட மாணவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டுமென்றும், நாட்டிற்கு நற்றொண்டு செய்ய வேண்டுமென்றும், அறிவுரைகளும், பாராட்டும் வழங்கினார். பனகல் அரசர், பித்தாபுரம் ராஜா, பவானந்தம் பிள்ளை, கே.வி.ரெட்டி, தியாகராயர், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க, நடேசனார் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார். ‘அரசு தலைமைச் செயலாளரான கார்டியூ விழாவுக்கு தலைமை வகித்தது கண்டிக்கத்தக்கதென்றும், ஒரு சார்புடைய இச்சங்கத்தின் நலனில் கார்டியூ போன்ற அரசு அலுவலர்கள் அக்கறை கொண்டிருப்பது தேசீய உணர்ச்சிக்கு வெடி வைப்பதென்றும், அன்னிபெசண்டின் பார்ப்பன பத்திரிகையான ‘நியூ இண்டியா’ நவம்பர் 26 இல் எழுதி ஓலமிட்டது. முதல் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கியதைக் கருத்திற் கொண்டு நல்லொழுக்கத்தைக்...