திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (8)
1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (3)
திராவிடர் சங்கத்தின் பணியும் தொடர்ந்தது. நவம்பரில் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பட்டம் பெற்ற திராவிட மாணவர்கட்கு வழக்கம்போல் விருந்தும் பாராட்டும் நடைபெற்றது. நாயரின் வேண்டுகோளுக்கிணங்க அலெக்சாண்டர் கார்டியூ தலைமை வகித்து, திராவிட மாணவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டுமென்றும், நாட்டிற்கு நற்றொண்டு செய்ய வேண்டுமென்றும், அறிவுரைகளும், பாராட்டும் வழங்கினார். பனகல் அரசர், பித்தாபுரம் ராஜா, பவானந்தம் பிள்ளை, கே.வி.ரெட்டி, தியாகராயர், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க, நடேசனார் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார். ‘அரசு தலைமைச் செயலாளரான கார்டியூ விழாவுக்கு தலைமை வகித்தது கண்டிக்கத்தக்கதென்றும், ஒரு சார்புடைய இச்சங்கத்தின் நலனில் கார்டியூ போன்ற அரசு அலுவலர்கள் அக்கறை கொண்டிருப்பது தேசீய உணர்ச்சிக்கு வெடி வைப்பதென்றும், அன்னிபெசண்டின் பார்ப்பன பத்திரிகையான ‘நியூ இண்டியா’ நவம்பர் 26 இல் எழுதி ஓலமிட்டது.
முதல் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கியதைக் கருத்திற் கொண்டு நல்லொழுக்கத்தைக் காட்டும் அறிகுறியாக இந்திய மக்கள் தம்மைத் தாமே ஆண்டு கொள்ள பயிற்சி அளிக்கும் நோக்குடன் இந்தியத் துணைக் கண்டத்திற்கு அதிக அதிகாரங்களைத் தர பிரிட்டிஷ் அரசாங்கம் முன் வந்தது. இதனை உணர்ந்து கொண்ட இம்பீரியல் கவுன்சில் உறுப்பினர்கள் 19 பேர் (ஜின்னா உட்பட பலர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்) இந்தியர்களின் கோரிக்கையை விளக்கி ஓர் அறிக்கையை அன்றைய இந்திய வைஸ்ராய் – செம்ஸ்போர்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையின் பயனோ என்று எண்ணுமளவிற்கு, இந்திய மந்திரி மாண்டேகு, ‘இந்திய அரசியலில் இந்தியர்களுக்கு அதிகப்படியான பங்களித்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு பொறுப்பாட்சி அளிப்பதே பிரிட்டிஷ் சர்க்கார் நோக்கம்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 20 நாளிட்ட இந்திய அரசின் விசேஷ கெஜட்டில் வெளி வந்தது. இந்த அறிக்கையைக் குறித்து மக்களின் கருத்தை அறிய இந்தியத் துணைக் கண்டம் முழுதும் சுற்றுப்பயணம் செய்த மாண்டேகுவும், செம்ஸ்போர்டும், டிசம்பர் 24 இல் சென்னை வந்தனர். இவர்கள் முன் பார்ப்பனரல்லாதார் சார்பில் 4 வகையான தூதுக் குழுவினர் சாட்சிய மளித்தனர். கேசவ பிள்ளை தலைமையில், சென்னை மாகாண சங்கத்தின் சார்பில், ரெவரண்ட் டாக்டர் ஜே. லாசரஸ், எம்.சி.டி. முத்தையா (செட்டியார்), லட்சுமி நாராயண (செட்டி), ஏ.என்.பரசுராம (நாயக்கர்), மூக்கணாச்சாரி, வி.சக்கரை (செட்டியார்), கே.ஆஷர் பி.தாசர், எஸ்.ஏ.சிங்கு மற்றும் சிலர் அடங்கிய தூதுக் குழுவினர் சாட்சியம் அளித்தனர். “ஹோம் ரூல் கட்சியினரால் ஆதரிக்கப் பெற்ற
19 பிரதிநிதிகளின் அறிக்கையை ஆதரிப்பதாகவும், எல்லா சமூகத்திற்கும் பாதுகாப்பளிக்க வேண்டும்” என்றும் அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
நீதிக்கட்சியின் சார்பாக, திவான்பகதூர் பி.ராஜரத்தின (முதலியார்) தலைமையில் தியாகராயர், நாயர் ஆகியோர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் சாட்சியமளித்தனர். இக்குழுவின் சார்பில் தியாகராயர் ஓர் அறிக்கையை மாண்டேகு-செம்ஸ்போர்டு முன் அளித்தார். பார்ப்பனரல்லாதார் எத்துறையிலும் முன்னேற்றமடையாமல் பின் தங்கியுள்ளனர். அரசியல் உணர்வு பெறாதவர்களாக உள்ளனர். இம்பீரியல் கவுன்சில் உறுப்பினர் அறிக்கையை (12 பேர் அறிக்கை) பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதனை ஒப்புக் கொண்டால் பார்ப்பனரல்லாதார் பார்ப்பன சமூகத்திற்கு அடிமையாக நேரும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் ஒழிய, பார்ப்பனரல்லாத மக்களுக்கு முன்னேற்றமும் நல்வாழ்வும் கிடைக்க முடியாது. தற்கால நிலையில் எல்லா சமூகங்களுக்கும் சமநீதி வழங்க வேண்டிய பிரிட்டிஷார் இன்னும் கொஞ்ச காலம் இந்தியாவில் இருந்தே தீர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘திராவிடர் சங்கம்’ சார்பில் பனகல் அரசர் தலைமையிலான குழுவினரும், பார்ப்பனரல்லாதார் சங்கத்தின் சார்பில் ராவ்பகதூர் வெங்கடரத்தினம் தலைமையிலான குழுவினரும், அதே கருத்துள்ள அறிக்கைகளை அளித்தனர். சென்னை மாகாண சங்கத்தின் தூதுக் குழுவைத் தவிர, ஏனைய மேற்கண்ட 3 தூதுக் குழுவில் இருந்த 50 பேர்களும் ஒன்றாக வைஸ்ராய்க்கும் இந்திய மந்திரிக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்திய மக்களின் கருத்துகளைத் திரட்டிக் கொண்டு, மாண்டேகு லண்டன் பயணமானார். அங்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சீர்திருத்த அறிக்கையைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். (தொடரும்)
கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 26042012 இதழ்