‘அக்சய திருதி’யும் ‘இந்து’ நாளேடும்

‘அக்சய திருதி’ என்று ஒரு புதுக்கரடி இந்து மதத்தின் பெயரில் பிரபலமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நகை வர்த்தகம் செய்யும் வணிக நிறுவனங்களும், ஊடகங்களும் இதை ஊதிப் பெருக்கி, பாமர மக்களின் மடமையை சுரண்டி வருகின்றன. அன்றைய நாளில் ஒரு கிராம் நகையாவது வாங்கினால், ஆண்டு முழுதும் நகை குடும்பத்தில் குவியுமாம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பெரும் கூட்டம், கடைகளில் அலைமோதுகிறது. கூட்டத்தில் நகை வாங்க வந்து, நகையை திருட்டுக் கொடுப்போரும் அதிகம். போலி தங்கக் காசுகள் மோசடி வேறு. இவ்வளவு கூத்துகளுக்கிடையில், ‘அக்சய திருத்தியா’ என்பது குறித்து ‘இந்து’ நாளேட்டில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

ஏப்ரல் 23 ஆம் நாள் ‘அக்சய திருதி’ அன்று அந்த நாளேட்டின் முதல் பக்கம் முழுதும் ஒரு நகை வணிக நிறுவனம் தந்துள்ள விளம்பரத்தில் ‘இந்து’ ஏடே தனது வாசகர்களுக்கு இந்தப் ‘புனித நாளில்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதுபோல குறிப்பிடப்பட்டிருந்தது. “இந்த நாளில் தங்கம் வாங்கினால், ஆண்டு முழுதும் உங்களுக்கு வளம் கொழிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் அனைவருமே பகிர்ந்து கொள்கிறார்கள்” என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. அடுத்த நாள் ஏப்ரல் 24 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டின் முதல் பக்கத்தில் அதன் ஆசிரியர் சித்தார்த்த வரதராசன், இந்த விளம்பரம் பற்றி, ஒரு தன்னிலை விளக்கத்தை அளித்திருந்தார். ‘இந்து’வில் வந்த அந்த விளம்பரத்தில் வெளி வந்த கருத்து, ‘இந்து’ ஆசிரியர் குழுவின் கருத்து அல்ல என்றும், இப்படி ஒரு விளம்பரம் வருவது குறித்து தன்னிடமோ, ஆசிரியர் குழுவிடமோ கலந்து ஆலோசிக்கப்பட வில்லை என்றும் ‘இந்து’வின் ஆசிரியர் குழு கொள்கைக்கு எதிராக ‘இந்து’வின் பெயரால் வெளியிடும் விளம்பரங்கள் எதிர்காலத்தில் உறுதியாக தவிர்க்கப்படும் என்று ஆசிரியர் விளக்கமளித் துள்ளார்.

‘இந்து மதத்தின் – மிக புனிதமான நாள் இது’ என்ற வாசகமும், ‘அனைவராலும் இது ஏற்கப்படுகிறது’ என்ற வாசகமும் ‘இந்து’ ஆசிரியர் குழுவின் கொள்கை அல்ல என்றும், மிக சமீபகாலமாகத்தான் இந்த ‘அக்சயதிருதி’ பெரிதுப்படுத்தப்படுகிறது என்றும்  ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் குறிப்பு கூறுகிறது. ‘இந்து’ நாளேட்டின் பல்வேறு கருத்துகளில் நமக்கு முரண்பாடு உண்டு என்றாலும், இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தர முன் வந்ததைப் பாராட்ட வேண்டும்.

பெரியார் முழக்கம் 03052012 இதழ்

You may also like...