அரசியல் சட்டத்துக்கு எதிரான ‘மனுதர்மத்துக்கு’ தடை போடுக! நவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்!

திருப்பூர் நிறைவு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு

அரசியல் சட்டத்துக்கு எதிரான மனுதர்மத்தை மத்திய அரசு தடை செய்யக் கோரியும், வாழ்வியலில் சட்டப்பூர்வமாக திணிக்கப்படும் சாதி ஒடுக்குமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரியும், கழக சார்பில் தமிழகம் முழுதும் ‘மனுதர்மம்’ தீயிடப்படுகிறது.

திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி பரமக்குடியில் மாவீரன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சாதி ஒழிப்பு உறுதியேற்று, பயணம் தொடங்கியது. பயணக் குழுவினர், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு முருகேசன் நினை விடத்தில் வீரவணக்கம் செலுத்தினர். ஏப். 29 ஆம் தேதி திருப்பூரில் பயணம் நிறைவடைந்தது.

அன்று காலை கோவை மாவட்டம் சோமனூரி லுள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி, பயணத்தைக் குழுவினர் நிறைவு செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த ஒருவரின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அரசுப் பேருந்தில் அமர்ந்து பயணம் செய்தமைக்காக முருகேசன் இல்லத்தில் சாதி வெறிக் கும்பல் அவரைத் தாக்கியது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்தார் முருகேசன். வழக்கைத் திரும்பப் பெறுமாறு, சாதி வெறியர்கள் மிரட்டினர். திரும்பப் பெற அவர் மறுத்துவிட்டதால், அவர் சாதி வெறியர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சோமனூரில் சாதி தீண்டாமை எதிர்ப்புப் பரப்புரை நடத்திய தோழர்கள் அவைருக்கும் திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் துரைசாமி இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. மாலை 7 மணியளவில் திருப்பூர் அரிசிக் கடை வீதியில் பரப்புரை நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தது. சாதி ஒழிப்பு உறுதிமொழியைத் தொடர்ந்து பரப்புரைக் குழுவில் பயணித்த பரப்புரையாளர்கள் வெள்ளமடை நாகராசு, தூத்துக்குடி பால். பிரபாகரன், திருச்சி புதியவன் உரையாற்றினர். தொடர்ந்து, தியாகி இமானுவேல் பேரவை பொதுச் செயலாளர் சந்திரபோசு, ‘தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். பயணக்  குழுவில் இடம் பெற்ற தோழர்கள் தீர்மானங்களை பலத்த கரவொலிக்கிடையே முன்மொழிந்தனர்.

பயணத்தில் பங்கேற்ற தோழர்களைப் பாராட்டி நினைவுப் பரிசாக கழக வெளியீடுகளை வழங்கி, கழகத்தின் போராட்ட அறிவிப்புத் தீர்மானத்தை, தனது உரையின் இறுதியில் கழகத் தலைவர் கொளத் தூர் மணி முன் மொழிந்தார். தீர்மான விவரம்:

இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பன மனு நீதியே எழுதப்படாத சட்டமாக மக்களை  அடக்கி ஆண்டு வந்தது. இந்தியாவில் முதன்முதலாக 1950 ஆம் ஆண்டுதான் ஓர் அரசியல்  சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் சட்டம்கூட மக்களுக்கு முழுமையாக நீதியைப் பெற்றுத் தரவில்லை. தீண்டாமையைத் தடைசெய்தாலும் இந்த சட்டம் சாதியைப் பாதுகாக்கிறது. பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது என்று கூறி பழைமையை பார்ப்பனீ யத்தை உயர்த்திப்பிடிக்கிறது. ஆனாலும் மனுதர்மம் திணித்த அடிப்படையான சமுக ஏற்றத்தாழ்வுகளை அரசியல் சட்டம் ஏற்கவில்லை.

மனிதர்கள் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனுதர்மச் சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம். கல்வி பெறும் உரிமையை சூத்திரர்களுக்கு மறுத்தது மனுதர்மம். 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக் கும் இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் ( பால்ய விவாகம்) செய்து விட வேண்டும் என்கிறது மனுதர்மம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்வது குற்றம் என்கிறது அரசியல் சட்டம். சூத்திரர், பஞ்சமர் நாடாளக்கூடாது என்கிறது மனுதர்மம். மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் எவருக்கும் நாட்டை ஆளும் உரிமை வழங்கு கிறது அரசியல் சட்டம். பிறப்பின் அடிப்படையில் தொழிலை நிர்ணயித்தது மனுதர்மம். விரும்பும் தொழிலை சட்டத்திற்குட் பட்டு எவரையும் செய்ய அனுமதிக்கிறது அரசியல் சட்டம்.

இப்படி ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுதர்மம் அரசியல் சட்டத்தின் நோக்கிற்கும், உணர்வுகளுக்கும் நேர் எதிர் திசையில் உள்ளதால் மத்திய அரசு மனுதர்மத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

அரசியல் சட்டத்தின் நோக்கங்களை முன்னெடுக்க – முறையாக அமுல்படுத்த மனுதர்மச் சிந்தனை களுக்கு எதிரான இயக்கம் அவசியமாகிறது. இந்த நிலையில் மனுதர்மத்தை அச்சிட்டுப் பரப்பி, நியாயப்படுத்துவதை பார்ப்பனர்களும் பார்ப்பனிய ஆதரவாளர்களும் மேற்கொள்வது சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதோடு மீண்டும் மனுதர்மப் பாதையை வலுப்படுத்தும் முயற்சி யாகவே இருக்கிறது.

அரசியல் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று கூறினாலும் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் திணிக்கப் படுவதை நாம் தீர்மானங்கள் வழியாக பட்டியலிட்டுக் காட்டியுள்ளோம். இந்தத் தீர்மானங்களைச் செயல் படுத்தவேண்டுமென்று கோருவதோடு, ஜாதி – தீண்டாமை ஒழிப்பை நோக்கி பெரியார் திராவிடர் கழகம் முன்வைத்துள்ள மேற்கண்ட செயல் திட்டங்களை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறோம். நிறைவேற்றாவிடில், பெரியார் ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்திலுள்ள ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்த நவம்பர் 26 அன்று தமிழ்நாடு முழுவதும் பெரியார் திராவிடர் கழகமும் ஜாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இணைந்து மனுதர்ம சாஸ்த்திரத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கிறது.

(ஏனைய தீர்மானங்கள் 2 ஆம் பக்கம்)

 

முழுமையாக கலந்து கொண்ட தோழர்கள்

பரப்புரைப் பயணத்தில் வெள்ளமடை நாகராசு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர்,

திருப்பூர் – சம்பூகன், மூர்த்தி, விஜயன்; பல்லடம் – வடிவேல்; மேட்டூர் – முத்துராசு, முத்துரத்தினம், கோவிந்தராசு, மூர்த்தி; கரூர் – ஸ்ரீகாந்த், திண்டுக்கல்- இராவணன் முழுமையாக பங்கேற்றனர்.

சுழற்சி முறையில் பயணத்தில் பங்கேற்ற தோழர்கள்: சூலூர் – நாராயணமூர்த்தி, ரமேஷ்குமார், வைகுண்டராமன்; கரூர் மாவட்ட செயலாளர் காமராசு; சேலம் – கோகுலக்கண்ணன்;

மேட்டூர் – முத்துக்குமார், குமரப்பா, காளியப்பன், கோவிந்தராசு; வத்தலக்குண்டு – ஜெயப்பாண்டி;

திருப்பூர் – பெரியார் முத்து; பழனி – பத்மநாபன்; திருச்சி – பழனி.

சொற்பொழிவாளர்களாக சுழற்சி முறையில் கலந்து கொண்ட தோழர்கள்: திருச்சி – புதியவன்,

சூலூர் – வீரமணி, பழனி – நல்லதம்பி, தூத்துக்குடி – பால். பிரபாகரன்.

பெரியார் முழக்கம் 03052012 இதழ்

You may also like...