மதுரை ஆதினமும் காஞ்சி ஜெயேந்திரனும்
மதுரை ‘குருமகா சன்னிதானமாக’ இருந்த அருணகிரி, மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக நித்யானந்தாவுக்கு முடிசூட்டி விட்டார். மடாதிபதியாக தனது வாரிசை நியமிக்கும் முழு உரிமை தனக்கு உண்டு என்கிறார் மதுரை ஆதினம். ‘சிவபெருமானும் பார்வதியும்’ தனது கனவில் வந்து கேட்டுக் கொண்டதற்கேற்ப இந்த முடிவை எடுத்துள்ளதாக மதுரை ஆதினம் அடித்துக் கூறுகிறார். ‘தினமலர்’ பார்ப்பன நாளேடும், இந்து மக்கள் கட்சி போன்ற இந்து அமைப்புகளும் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. “சிவபெருமானா வது, கனவில் வருவதாவது; என்ன காதில் பூசுற்று கிறார்களா? இந்தக் கதை எல்லாம் நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை” என்று இந்து அமைப்புகளே தமிழ்நாட்டில் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்கி விட்டதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது! இதேபோல் பெரியாரியல்வாதிகள் கேள்வி கேட்டால், பக்தர்கள் உணர்வைப் புண்படுத்துவதாக இதே இந்து அமைப்புகள் போராடக் கிளம்பி விடு வார்கள். ‘இந்து’ அமைப்புகளுக்கு மட்டும் இப்படி பகுத்தறிவு வந்து விட்டதாக கூறி விட முடியாது. சைவ மடங்களுக்கும்கூட பகுத்தறிவு வரத் தொடங்கி விட்டது. அப்படித்தான் ஆதினத்தின் செயல்பாடு களும் பறைசாற்றிக் கொண்டிருக் கின்றன!
சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்களை புறக்கணித்த திருஞான சம்பந்தன் காட்டிய வழிகளில் இனி சைவத்தைப் பரப்ப முடியாது. ஆண்கள் பெண் களுடன் ஆடிப்பாடி கூடி மகிழ்ந்து, சைவத்தைப் பரப்பினால் தான் உண்டு என்ற ‘பகுத்தறிவு’ சிந்தனைக்கு மதுரை ஆதினமும் வந்து விட்டது. அது மட்டுமல்ல, சைவம் தமிழை வளர்த்திருக்கலாம், அது அந்தக் காலம். ஆங்கிலப் புலமை தான் இப்போது அவசியம். எனவே, நன்றாக ஆங்கிலம் பேசக் கூடியவரை சைவ மடாதிபதியாக்க முடிவு செய்து
விட்டார் ஆதினம்.
இந்து அமைப்புகளுக்கும் மதுரை ஆதினத்துக்கும் இப்போது ‘பகுத்தறிவு’ உதிர்த்துக் கிளம்பியது போல், ஞானசம்பந்தன் காலத்திலேயே மக்களுக்கு பகுத்தறிவு இல்லாமல் போய் விட்டதுதான் ஒரு குறை. அப்போது பெரியார் இல்லாமல் போய் விட்டாரே! இருந்திருந்தால் ‘கனவிலாவது… சிவனாவது வருகிறதாவது…?’ என்று இன்று கேட்பதுபோல், அன்றைக்கே ஞானசம்பந்தன் அவிழ்த்துவிட்ட புரூடாக்களை கேள்விகளால் துளைத்தெடுத்திருப்பார்கள். இப்போதும்கூட பகுத்தறிவாளர்கள் ஞானசம்பந்தன் திருவிளை யாடல்களை கேள்விக்குள்ளாக்கினால் இதே இந்து அமைப்புகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். இவர்களுக்கு அந்தக் கால மடமைகள் ஆன்மீகம்; இக்கால மடமைகள் தான் பகுத்தறிவு. ஆக, காலம் ‘பகுத்தறிவு யுகம்’ என்பதால், தங்கள் ‘வாய்ப்பு வசதிகளுக்கு’ மட்டும் பகுத்தறிவு தேவை என்று அவர்களே முடிவுக்கு வந்து விட்டார்கள் போல!
ஆனால், ஒரு கேள்வி மட்டும் நெருடுகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேநதிரர் எப்படி மடத் தலைவராக நீடிக்கலாம்? அறநிலையத் துறை பதவியிலிருந்து ஜெயேந்திரனை நீக்கி வெளியிட்ட அறிவிப்பு, அப்படியே அமுக்கப்பட்டது ஏன்? விஜயேந்தர னுக்கு பட்டம் சூட்டிவிட்டதாக அறிவித்துவிட்டு, பிறகு தானே மீண்டும் மடாதிபதியாக ஜெயேந்திரர் ஒட்டிக் கொள்ள சட்டம் எப்படி அனுமதித்தது?
– என்ற கேள்விகள் மட்டும் ‘தினமலரி’டமோ, இந்து அமைப்புகளிடமோ வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. பார்ப்பனர் என்று வந்துவிட்டால் மட்டும் ‘பகுத்தறிவு’ வேலை செய்ய மறுத்து விடுகிறது போலும். ஆனால், ஜெயேந்திரன் என்னவோ முழுமையான பகுத்தறிவுவாதியாகி விட்டார் என்றே தெரிகிறது. “குற்றங்களுக்கு ஆண்டவனாகப் பார்த்து தண்டனை தந்து விடுவான் என்று மக்களை ஏமாற்ற முடியாது; அதுஅந்தக் காலம். குற்றங்களுக்கு இப்போதே தண்டனையை பெற்றுவிட வேண்டும்” என்று அரசாங்கம் உருவாக்கிய இந்தியத் தண்டனைச் சட்டங்களை ஏற்றுக் கொண்டு, எப்போது வழக்கறிஞர் வைத்து தனக்காக வழக்காடத் தொடங்கினாரோ, அப்போதே அவரும் பகுத்தறிவாளராகிவிட்டார்!
ஆனால், ‘தினமலரும்’, இந்து அமைப்புகளும், சைவ மடத்திடம் பகுத்தறிவு முகம் காட்டிக் கொண்டு பார்ப்பானிடம் மட்டும் பகுத்தறிவை அடகு வைப்பது நியாயம் தானா என்று சிந்திக்க தெரிந்த ஒருவர் கேட்கிறார்! வில்லங்கமான கேள்விதான்!
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 03052012 இதழ்