‘சாதி கவுரவத்திற்காக’ குடும்பத்தினராலே கொல்லப்படும் இளம் பெண்கள்

தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞரைத் திருமணம் செய்துவிட்ட “குற்றத்துக்காக” மகளையே தாயும் அவரது மாமியாரும் கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளனர். ‘சாதி கவுரவத்தை’க் காப்பாற்றிட நடந்த இந்த கொலை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘எவி டென்ஸ்’ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் வெளிவந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது திருச்செல்வி, தலித் சமூகத்தைச் சார்ந்த டேனியல் ராஜ் என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூரில் ஒரு தொழிற் சாலையில் வேலை செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது மாமியார், திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி நாடகமாடியதை நம்பி, அம்மை நோயுடன் பெண் வீடு திரும்பியபோது, தாயும், மாமியாரும் பூச்சி மருந்தை பெண்ணின் வாயில் திணித்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அந்தப் பெண் மறுக்கவே, கையையும் காலையும் பிடித்துக் கொண்டு, பூச்சி மருந்தை வாயில் ஊற்றி, பிறகு கழுத்தை நெறித்து கொலை செய்து வீட்டுக்குள்ளே புதைத்து விட்டனர். ‘எவி டென்ஸ்’ உரிமை அறியும் குழு தந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணை நடத்தி கொலை தான் என்று உறுதி செய்து, வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளது.

‘எவிடென்ஸ்’ இயக்குனர் கதர் இது பற்றி கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 12 ‘கவுரவக் கொலைகள்’ இதேபோல் சாதி வெறியுடன் தமிழகத்தில் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 2009-10 ல் தமிழ்நாட்டில், 11,483 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். அதே காலகட்டத்தில் 1216 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 18-லிருந்து 30 வயதுக்குட்பட்ட பெண்கள் 419. கவுரவ கொலைகள் என்பதோடு இப்போது கவுரவ ‘தற்கொலைகள்’ நடந்து வருகின்றன. சாதியைக் கடந்து காதலிக்கும் பெண்களை, தற்கொலை செய்து கொள்ளுமாறு சாதிக் குடும்பம் கட்டாயப் படுத்துகிறது என்றார் கதிர். இதில் பலியாவது பெரும்பாலும் பெண்கள்தான்.

பெரியார் முழக்கம் 26042012 இதழ்

You may also like...