சோலையார்பேட்டையில் தமிழர் சமூகவியல் கல்வி முகாம்

2012 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வேலூர் மாவட்டம் சோலையார்பேட்டை கே.கே.சி. திருமண மண்டபத்தில் தமிழர் சமூகவியல் கல்வி முகாம் நிகழ்த்தப் பெற்றது.

12.05.12 காலை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.  கே.சி.காமராஜ் (முன்னாள் நகராட்சித் தலைவர் மற்றும் அ.மே.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தவைலர்) தலைமையேற்றார். புலவர் பூபதி வரவேற்புரையாற்றினார். சிவலிங்கம், அன்பு தனசேகர், டேவிட் பெரியார் சோலை வி.கே. செல்வ ராஜ், கே.சி.கே. பிரபாகரன், பூங்குளம் வேலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிய தென் செய்தி ஆசிரியர் பூங்குழலி வருகை புரிந்தார்.

பெரியாரியலாளர் ஓவியா, ‘பெண் அடிமைப் படுத்தப்பட்ட வரலாறு’ குறித்தும், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், ‘தமிழினத்தின் சமூக ஜனநாயகம்’ என்னும் தலைப்பிலும் கற்பித்தனர். இறுதியில் மாணவர் அய்யங்களுக்குத் தலைவர் கொளத்தூர் மணி விடையளித்தார்.

13.5.12 அன்று புலவரேறு கி.த. பச்சையப்பன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு) ‘தமிழும் தமிழரும்’ என்னும் பொருளிலும், தியாகு (பொதுச் செயலாளர், தமிழ்ச் தேசிய விடுதலை இயக்கம்) ‘விடுதலை வென்ற நாடுகளின் வரலாறு’ என்னும் பொருளிலும், தமிழ் வாணன், ‘முதலீடுகள்’ என்னும் பொருளிலும் பாடம் கற்பித்தனர். சிற்பி இராசன் இருபொழுதும் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி மூலம் மாணவர் களுடன் மக்களையும் சிரிக்க வைத்ததுடன் பகுத்தறிவைச் சிந்திக்க வைத்தார்.

14.5.12 அன்று கவிஞர் தமிழேந்தி (தமிழக செய லாளர், புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம்), பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மூலம் தமிழுணர்வை ஊட்டினார். சிந்தனையாளன் முகிலன் (தலைமைக் குழு உறுப் பினர், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி), ‘மார்க்சியம்’ என்னும் தலைப்பில் இருபொழுதும் கற்பித்தார். சிற்பி இராசன், இரு பொழுதும் தந்திரக் காட்சிகளை நிகழ்த்தினார்.

வாணியம்பாடி ஜெயச்சந்திரன் (நாம் தமிழர் கட்சி) தலைமையில் மேகநாதன், மோகன், ஆம்பூர் பன்னீர்செல்வம், குரிசில் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் புலவரேறு கி.த.பச்சையப்பன் உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘இளைஞர்களின் இன்றைய கடமை’ என்ற தலைப்பில் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினார். அய்யநாதன் (துணை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி) உரையாற்றினார். இறுதியாக செந்தமிழன் சீமான் (ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி) முகாமிற்கு உற்ற துணை புரிந்த தோழர்களுக்கு பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார். மாணவர்களுக்குச் சான்றளித்தார். தொடர்ந்து நிறைவுரையாற்றினார். காஞ்சி பொன்னப்பன் (பேரறிவாளன் கல்விப் பாசறை அமைப்பாளர்) நன்றி கூறினார்.

திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, காஞ்சி, ஆம்பூர், பூங்குளம், வாணியம்பாடி மற்றும் உள்ளூர் மாணவர் என 40 மாணவர்கள் மண்டபத்தில் தங்கியும், வீட்டுக்குச் சென்று வந்தும் பங்கேற்றனர். நிதி அளித்த அனைவருக்கும் குயில்தாசன் நன்றி தெரிவித்தார்.

பெரியார் முழக்கம் 31052012 இதழ்

You may also like...