திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (9)

லண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர்

1918 ‘தேசிய’ பார்ப்பனக் காங்கிரஸ்வாதிகள், அவர்களின் கையாளாகப் பயன்பட்ட அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கியதை, ஆகியவற்றை நீதிக்கட்சித் தலைவர்கள் அவ்வப் போது தோலுரித்துக் காட்டி வந்ததோடு பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியை தூண்டியும் வந்தனர்.

நாயரின் எழுத்துகள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தின. அன்னி பெசன்டின் வாழ்க்கை வளர்ச்சிகள் என்று, நாயரால் எழுதப்பட்ட ஆங்கில நூல், அன்னிபெசன்டின் அரசியல் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்தது. இந்நூல், “டுநயன நெயவநச ளஉயனேயட டிக 1913” என்ற தலைப்பில் நாயரால் மெயில் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். அன்னிபெசன்டுக்கும் லெட் பீட்டருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தை அம்பலப்படுத்திட அவரின் ஊழல்களை வெட்ட வெளிச்சமாக்கியது. இதற்கென அன்னிபெசன்ட் நாயர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து பெரிய (பாரிஸ்டர்) வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடினார். நாயர் வழக்கறிஞர் எவரு மின்றி, தமது தரப்பு நீதியை மன்றத்தில் வாதாடி வென்றார். அம்மையார் தொடுத்த வழக்கு தள்ளுபடி ஆயிற்று.

பார்ப்பனர் தூண்டுதலால், காங்கிரசுக்குள் ஏற்படுத்தப்பட்ட ‘சென்னை மாகாண சங்கத்தை’ ஒழித்துக் கட்டும் உள்நோக்கத்தோடு, பார்ப்பன ஆதிக்கக் காங்கிரஸ்வாதிகள் ‘நேஷனலிஸ்ட் அசோஷியேசன்’ என்பதாக ஒரு சங்கத்தை ஏற்படுததினர். இதன் தலைவராக கஸ்தூரி ரங்க அய்யங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரும், விஜயராகவாச்சாரியும், உபதலைவராக சி.ராஜகோபாலாச்சாரியும், தமிழ்நாட்டுக்குச் செயலாளராக பெரியார், மலையாளத்திற்கு கே.பி.கேசவமேனனும், ஆந்திராவுக்கு பிரகாசமும் இருந்தனர். இந்த நேஷனலிஸ்ட் அசோசியேஷனிலும் பெரியார் முயற்சியால் பார்ப்பனரல்லாதாருக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்த அறிக்கை சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒரு கமிட்டியை அமைத்து, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் தங்களது நோக்கங்களைச் சொல்லுவதற்காக இங்கிலாந்து வருமாறு அழைத்தது. நாயர் இக்கமிட்டியின் முன் பார்ப்பனரல்லாதார் சார்பில் கருத்துகளைச் சொல்ல லண்டன் சென்றடைந்தார். ‘மாண்டேகு செம்ஸ்போர்ட்’அறிக்கையானது, ஜூலை 2 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை, சீக்கியருக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந் திருந்தது. பார்ப்பனரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சட்டமன்றத்தில் எந்த ஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும் இடம் பெறவில்லை.  நாயர் லண்டனில் இருக்கும்போதே வெளியான இவ்வறிக்கையை எதிர்த்து அவர் பேச இயலாவண்ணம் எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை ஆணையை ஒரு ராணுவ அதிகாரி நாயரிடம் நேரில் சென்று அளித்து ‘சர்வ்’செய்தார். நாயர் சோர்வடையாமல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமது நண்பர்களை தனியே சந்தித்து, பார்ப்பனரல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியதின்நியாயத்தை வலியுறுத்தியதோடு அவர்கள் உதவியோடு தடை ஆணையை நீக்கவும் முயற்சி செய்தார். ஏற்கனவே இந்திய மாநிலங்களில் கவர்னர்களாக இருந்து பணியற்றிய லாமிங்க்டன், சிடன்ஹாம், கார்மிசெல் ஆகியோர், ஜூலை 31 இல் நடந்த பிரபுக்கள் சபையில் நாயரின் அறிவாற்றலைப் புகழ்ந்தும், தடை ஆணையை நீக்கி நாயரைப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். அதன் விளைவாக தடை ஆணை நீக்கப்பட்டு, ஆகஸ்டு 2 இல் பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றினார். அந்த உரையில், மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கையில் உள்ள ஊழலை எடுத்துக் காட்டி, வகுப்புவாரி உரிமையை வற்புறுத்தினார். பார்ப்பனரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சட்டமன்றத்தில் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

மதுரையில் ‘பார்ப்பனரல்லாதார் மாநாடு’ அக்டோபர் 13 இல் நிகழ்ந்தது. உத்தமபாளையம் ஜமீன்தார் எம்.டி.சுப்பிரமணிய (முதலியார்) வரவேற்புரை நிகழ்த்தினார். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பல மாநாடுகளிலும், பார்ப்பனரல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் அளிக்காத மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆங்கிலேய அரசு, ‘சவுத்பரோ கமிட்டி’ என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தி, வகுப்பு அடிப்பiயில் தொகுதிகள் அமைக்கலாமா என்பது குறித்து ஆராய்ந்துஅறிக்கை தருமாறு பணித்தது. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல் இந்தக் குழுவில், வி.எஸ்.சீனுவாச சாஸ்திரி, எஸ்.என்.பானர்ஜி என்ற இரு பார்ப்பனர் இடம் பெற்றிருந்தனர்.

(தொடரும்)

கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 10052012 இதழ்

You may also like...