ஓமலூரில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

26.5.2012 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் சேலம் மாவட்டம் ஓமலூரில், கழகம் சார்பாக நாத்திகர் விழா மற்றும் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஓமலூர் செவ்வாய் சந்தையிலிருந்து பறை முழக்கத்துடன் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பேருந்து நிலையம் வரை எழுச்சியுடன் நடை பெற்றது. பேரணியின் முன்பே நங்கவள்ளி அன்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி வருவதையும், அதன் நோக்கத்தையும் ஒலிபெருக்கியின் மூலமாக அறிவித்துக் கொண்டு வந்தார்.

பேரணியில் பெண்கள் தீச்சட்டிகளை எடுத்துக் கொண்டனர். குழந்தைகளெல்லாம் உடல் முழுவதும் ஊசிகளை குத்தி, அதில் எலுமிச்சைப் பழங்களை தொங்கவிட்டு வந்தனர். சிந்தாமணியூர் ஜெயபிரகாஷ் கன்னத்தில் அலகு குத்தி வந்தார். தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன் மற்றும் கோவிந்தபாடி சென்னியப்பன் ஆகியோர் முதுகில் அலகு குத்தி ஒரு ஆம்னி வேனையும், அம்மாபேட்டை செந்தில் மற்றும் இளம்பிள்ளை தனசேகர் ஆகியோர் முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனையும்  இழுத்து வந்தனர். இளம்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் கொளத்தூர் அய்யனார் ஆகியோர் பறவைக் காவடி அலகு குத்தி உயரத்தில் தொங்கி வந்தனர். எருமாபாளையம் கலைவாணன் தலையில் தீயை எரியச் செய்து, அதன் மீது ஒரு பாத்திரத்தில் பால் காய்ச்சி, இதற்கும் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மக்களிடையே விளக்கி வந்தார். நங்கவள்ளி இராசேந்திரன் ஆனிப் படுக்கையில் படுத்து வந்தார். கிணத்துக் கடவு நிர்மல் குமார் கத்தி (அரிவாள்) மீது நின்று காண்பித்து வந்தார்.

கழகத் தோழர்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒலி முழக்கங்களை எழுப்பி வந்தனர். முதன்முறையாக இந்தப் பகுதியில் நடைபெறும் இந்தப் பேரணியை ஆர்வமுடன் பார்த்த பொது மக்கள் வியப்படைந்தனர். இளம்பிள்ளை சந்திர சேகர், பார்த்திபன் ஆகியோர் தீச்சட்டிகளை தயார் செய்து வந்தனர். கோவை வடக்கு மாவட்டத் தலைவர் சென்னிமலை இராமசாமி, கோவை நகர கழகப் பொருப்பாளர் கோபால், இரஞ்சித் பிரபு ஆகியோர் தலைமையில் வந்திருந்த குழுவினர், தோழர்களுக்கு அலகுகளை குத்திவிட்டு, மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணியை வழி நடத்தினர்.

மாலை 6 மணிக்கு ஓமலூர் பேருந்து நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு மற்றும் சாதி ஒழிப்புப் பாடல்களுடன் துவங்கிய இந்த பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமையேற்றார். போலிச் சாமியார்களின் மோசடிகளை விளக்கியும், மூடநம்பிக்கைகளை நகைச்சுவையுடன் எடுத்துக் கூறியும், மந்திரமில்லை தந்திரமே என்ற தந்திர நிகழ்ச்சிகளை சிற்பி இராசன் செய்து காட்டினார். சிந்தாமணியூர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.

சிற்பி இராசன் நிகழ்ச்சியின் இடையிடையே மேற்கு மாவட்டத் தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெரியப்பட்டி அன்பரசன் ஆகியோரும் உரையாற்றினர். ஆரம்ப காலங்களில் இந்த ஓமலூர் பகுதியில், பல பெரியார் இயக்கக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. பல முக்கிய தலை வர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் அவைகளை விட அதிகமான கூட்டத்தையும், பகுத்தறிவு விளக்கத்தையும் தற்போது பார்ப்பதில் வியப்பாக இருப்பதாக கூறிய தலைமை ஆசிரியர் அன்பரசன், கழகத்தின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘மனுதர்ம எரிப்பு போராட்டம் ஏன்’ என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். மீண்டும் சிறிது நேரம் சிற்பி இராசன் நிகழ்ச்சிகளை நடத்தி, சாமியார்கள் மோசடிகளை விளக்கினார். சிந்தாமணியூர் இரவி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவடைந்தது. தோழர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 31052012 இதழ்

You may also like...