பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்

உள்நாட்டுப் பாதுகாப்புகளில்கூட மத்திய அரசு நேரடியாக தலையிடுவதை மாநில அரசுகள் எதிர்க்கின்றன. அரசியல் சட்டம் உருவாக்கிய காலச் சூழல் வேறு; இப்போதைய நிலை வேறு; அரசியல் நிர்ணய சபை, வலிமையான மத்திய அரசையே விரும்பியது. பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா போராடியதையும் சமஸ்தான மன்னர்கள் தங்களின் ஆளும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்ததை யும் கவனத்தில் கொண்டு, மாநிலங்கள் வலிமையாகி விடக் கூடாது. மத்திய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்பியது. நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பலரும் தங்கள் துறைகளுக்கான முழு அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்று விரும்பினர்.  1950 ஆம் ஆண்டு நேரு உருவாக்கிய திட்டக் கமிஷன்கூட இதே கண்ணோட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது.

இது பேரதிகார மிக்க அமைப்பாக எதிர்காலத்தில் மாறிவிடும் என்று சர்தார் பட்டேல்கூட அச்சம் தெரிவித்தார். அதுதான் நடந்தது. திட்டக் கமிஷன் பற்றி அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிதி ஆணையம், தேசிய வளர்ச்சிக் கவுன்சிலைவிட திட்டக் குழுதான் அதிகாரம் செலுத்துகிறது. ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு திட்டக் குழு முன்புதான் கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது. 1960 ஆம் ஆண்டில் இந்தியா ‘கூட்டுறவு கூட்டமைப்பாக’ செயல்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போது அந்த நிலையும் போய், மாநிலங்கள் நகரசபைகளாக மாற்றப்பட்டுவிட்டன. இந்தியாவுக்கு இத்தகைய வலிமையான மத்திய அரசு தேவை இல்லை என்று அரசியல் கட்டுரையாளர் சுவப்பன் தாஸ் குப்தா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (ஏப்.22) எழுதியுள்ளார்.

மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து வரும் டில்லி ஆட்சி, இப்போது மாநிலங்களின் சட்டம் ஒழுங்குகளிலும் தலையிடத் தொடங்கிவிட்டது. ‘பயங்கரவாத தடுப்பு மய்யம்’ என்ற மத்திய அரசின் தீவிர முயற்சிக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்டம் வேண்டும்; அதில் மாநில உரிமைகள் பறிக்காதவாறு திருத்தங்கள் வேண்டும் என்பதே பல மாநில அரசுகளின் கோரிக்கை. இத்தகைய சட்டமே தேவையற்றது என்பதே நமது கருத்து. இந்தியா என்ற அமைப்பை கட்டிக்காக்க முடியாமல், பல்வேறு தேசிய இனங்களின் முரண்பாடுகளுக்கு இடையே பலவீனமாகிக் கொண்டிருக்கும் மத்திய அரசு ‘பயங்கரவாத ஆபத்துகள்’ என்ற அச்சத்தையூட்டி, இந்தியாவை உடையாமல் இணைத்து வைக்க நடக்கும் பார்ப்பனிய சிந்தனை இதில் அடங்கியிருக்கிறது. ‘பயங்கரவாதம்’ என்று இவர்கள்

கூறிவரும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே இந்தியா என்ற கட்டமைப்புதான் என்பதே உண்மை!

பெரியார் முழக்கம் 10052012 இதழ்

You may also like...