திருப்பூர் நோக்கி திரளுவீர்!

பெரியார் கொள்கையைக் கவசமாக உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டு வரும், கழகத்தின் கொள்கைத் தோழர்களே!

காலத்தின் தேவையும்,  அவசியமும்  நமது களச் செயல்பாட்டை தீர்மானிக்கிறது. பார்ப்பனியமும் அதன் கொடூர வடிவமான சாதியமும் உயிர்த் துடிப்போடு மனித மாண்புகளை சிதைத்து வருகிறது!

வாழ்வியலை சீரழித்து, வன்மத்தையும், வெறுப்பையும், கொலைகளையும் தூண்டி விடும் சாதியத்தை எதிர்த்து, பரமக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய பரப்புரை பயணம் – தொடருகிறது!

சில இடங்களில் எதிர்ப்பு, கல்வீச்சு; பல இடங்களில் இறுக்கம்; அமைதி; வேறு பல இடங்களில் வரவேற்பு; பாராட்டு – என்று வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு சூழல்களை எதிர்கொண்டு, தோழர்கள் பயணிக்கிறார்கள்!

சாதிய ஒடுக்குமுறைக்கு பலியாகிக் கிடக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அல்ல, சாதியைத் திணிக்கும் மக்கள் வாழும் பகுதி களில் மட்டுமே இந்தப் பரப்புரை நடக்கிறது!

சுய மரியாதை சூடேற்றி – தன்மானப் போருக்கு அழைப்பு விடுத்த நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் உரத்து முழங்கிய சமத்துவக் குரலை எதிரொலித்து, புரட்சியாளர் அம்பேத்கர் காலமெல்லாம் கருத்துரைத்து களமாடிய அந்த லட்சிய முழக்கத்தை எதிரொலித்து – சாதிக்கும், சாதி அமைப்புக்கும் எதிரான இந்தப் பயணம் – ஏப்.29 ஆம் நாள் திருப்பூரில் நிறைவடைகிறது.

அன்று கழகத் தலைவர், பொச்செய லாளர்கள், தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

சாதிய வாழ்வியலுக்கு எதிராக ‘சேரி-ஊர்’ பிளவுக்கு எதிராக போராட்ட அறிவிப்புகளை கழக சார்பில் கழகத் தலைவர்  அறிவிக்க இருக்கிறார்!

பெரியார் திராவிடர் கழகத் தோழர்களே! சாதியை வீழ்த்தத் துடிக்கும் தோழமை சக்திகளே! அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

திருப்பூர் நோக்கித் திரண்டு வாரீர்!

ஆம்; அதே திருப்பூர்!

இராமாயணத்தையும் மனுநீதியையும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்று 1922 இல் பெரியார் முழங்கினாரே! அதே திருப்பூர்!

– பெரியார் திராவிடர் கழகம்

 

பெரியார் முழக்கம் 26042012 இதழ்

You may also like...