அந்த இமயமும் பசிபிக்கும் எமக்குச் சொந்தம்!

மேல்கோடி பலூச்சி முதல் கீழ் முனையின் பர்மா வரை படர்ந்து, அகன்று, பாரின் உச்சி என உயர்ந்து நிற்கும் இமயத்தை பற்றி என்ன தோன்றும்?  அதன் ஒப்பிலாக் குளிர் உறை பேரூர்களான ஸ்ரீநகர், சிம்லா, முசௌரி, நைனிடால், டார்ஜிலிங், ஷில்லாங் பற்றி  எல்லாம் என்ன உணர்வு ஏற்படும்? வியப்பு – இனிய பூரிப்பு – அமைதியான ஆனந்தம் – இந்த இமயம் எமது என்ற பெருமை – எந்த நினைவை எப்படி அளந்து எப்படித்தான் சொல்ல முடியும்? அது அளவையில் அடங்காப் பேருணர்வு!

பசிபிக் பெருங்கடல்

நான்கில் மூன்று பகுதி நீர் சூழ் உலகில் – கடலில் பெருங் கடலாய் இருக்கும் பசிபிக் கடலைப் பற்றி என்ன தோன்றும்? ஆழ்கடல்! இமயம் அளவு உயரம் தலைகீழாகப் போவது போன்ற பள்ளங்களை – படுபாதாளங்களை, ஆழ அகலங்களைக் கொண்ட கடல்! இந்தக் கடலினுள்ளேயே எரிமலைகளாம், மூழ்கி மூழ்கிப் போன கோடிக்கணக்கான கப்பல்களாம், நாகரிகத்தின் எத்தனையோ புதிய வாய்ப்புகளைப் பார்த்துவிட்ட அமைதிப் பெரும் பரப்பு – ஆழம் மிகுந்தாலே அமைதி வருமோ! இந்தக் கடலும் எமக்குச் சொந்தம் என்ற நினைவு?

ஓ, உயரத்தில் உயரமும் எமது; ஆழத்தில் ஆழமும் எமது. அது மலை. அது கடல். அது பெரியார்!

என்னடா உன் வாழ்வு?

காலக் கலத்தில் கொஞ்சம் பின்னோக்கிச் செல்வதாக – காலத்தை கடந்து பனிக்காலம், கற் காலம் என்று காலங்களைக் கடப்பதாக வைப்போம். கிழக்கிலிருந்து மேற்காக, வடக்கிலிருந்து தெற்காக உலகை அளப்பதாக நினைப்போம். நாம் என்ன காண்போம்- விசித்திரமான மனிதர்களின் பேராட்சி – வேடிக்கையாக அவர்களுடைய பெரும் வீழ்ச்சி. ஆங்கிலோ – சாக்ஸன் காட்டுமிராண்டிகளின் படை யெடுப்பு, மொகஞ்சதாரோவில் ஆரியர்களின் படை யெடுப்பு – ரோம சாம்ராஜ்யத்தில் குதிரைப்படையின் குளம்பொலிகள், கிளியோ பாட்ராவின் அழகுப் படையில், அலக்சாந்தரின் உலகம் தழுவிய வெற்றிப் பேரணி, செங்கிஸ்கான், ராஷ்டிரகூடர்கள், களப்பிரர்கள், மவுரியர்கள், கஜினி, கோரி, விஜயநகரப் பேரரசு, நெப்போலியன், ஹிட்லர், முசோலினி, ஹிரோசிமா-நாகசாகி! என்ன ஆயிற்று? ஆயிரம் டன் எடையுள்ள இரும்புத் தளவாடங்களை அமைத்துப் போடப்பட்ட பாலம்தான்!

பாண்டிச்சேரியில் பாருங்கள். நாகப்பட்டணத் தில் பாருங்கள். இப்போது இரும்புத் தூள்தான் இருக்கிறது! காலம் மண்ணும் தண்ணீருமான மாபெரும் சக்திகள் – ராஜ கம்பீரங்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிட்டிருக்கின்றன. பேரரசுகளை எல்லாம் பொட்டைத் திடலாக்கியிருக்கின்றது. நயில் நதிக்கரையில் இருக்கும் மலைபோல் உயர்ந்த பிரமிடுகள் சொல்லும் செய்தி என்ன தம்பி! சர்வ ஆட்டங்களிலும் கடைசியில் மிஞ்சுவது சமாதிதான் என்பதல்லவா? அது நியதி. அதில் கவலைப்பட எதுவுமே இல்லை.

வாதி – பிரதிவாதி!

குதிரைப் படையின் குளம்பொலிக்குக் கொஞ்ச மும் சளைக்காதபடி புழுதி கிளப்பிப் பீதி விளைத்தவர்கள் மதவாதிகளும்தான்! அக்கினிக் கண்டங்கள், எண்ணெய்க் கொப்பரைகள், சிரச்சேதங்கள், கழுவேற்றல்கள்! அட அறுவைச் சிகிச்சையில் மரப்பு ஊசி போடாதே என்று தடுத்தவன் எத்தனை பேர்? காலராவுக்கு மருந்து கொடுக்காதே என்று குதித்தவன் எத்தனை பேர்? பெண் – வேதனையில் – அழுதழுது – பிள்ளை பெறுவாள் – என்று பைபிளில் தேவன் சொல்லி விட்டாராம். அதற்காக, வலி – மரப்பு ஊசிகளைப் போடாதே, வலி குறைக்கும் மருந்துகளைக் கொடுக்காதே – வலி குறைக்கும் மருந்துகளைக் கொடுக்காதே – வலி அவளுக்கு விதி என்று சொன்னவர்கள், காலத்தின் பின்னோட்டத்தில் சரித்திரத்தின் காட்சிகளை, அருங்காட்சியங்களில் பார்வையிட நேர்ந்தால், ஆம், நாம் நிச்சயம் பார்ப்போம் – பரம பிதாவின் பெயரால் கருணை வழியும் முகத்தோடு கொடுமைகளை விநியோகம் செய்தவர்களை! ஆண்டவன் கடமையாக இவர்கள் புரிந்த கொலைகள், செய்த மாபாதகங்கள், அட்டூழியங்கள் கொஞ்சமா? மனிதத் தொகுதியின் ஒரு பகுதி – ஒரு காலகட்டத்தில், இரத்தமும் சதையும், உயிருமாக இவர்களுக்கும் பணயம் கட்டி செத்தது – செத்துப் பிழைத்தது – பிழைத்துதான் வந்திருக் கிறது. எனவே சர்வ ஆட் டங்களிலும் – சர்வ ஓட்டங் களிலும் மிஞ்சுவது எது என்றால் –

மனித மேம்பாட்டுச் சிந்தனை

சிந்தனை; மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்! ஒரு நாகரிகத்தின் சாறுபோல, ஒரு ஆயிரம் ஆண்டுத் தமிழ் மக்களின் சிந்தனைத் தொகுப்புபோல திருக்குறள் இல்லையா? ஆங்கில சமூக வாழ்வு – அரசியல் – மந்திரம் – தந்திரம் – அத்தனையும் இணைப்பதாக ஷேக்ஸ்பியர் என்ற ஒரே மனிதனின் சிந்தனைகள் இல்லையா? ஷேக்ஸ்பியரின் முழு வேலைகள் – என்ற அந்தப் புத்தகமே பெரிய சைஸ் புத்தகம் – அதில் பொடி எழுத்தில் இரண்டாயிரம் பக்கத்திற்கு மேல் அத்தனையும் தத்துவத் தொகுப்புகள்! ஒரு ஆயிரம் ஆண்டுகள் – சினிமாக் காரர்கள் படம் பிடிக்கவும், எழுத்தாளர்கள் மேற் கோள் காட்டவும், உலகம் முழுதும் பல மொழி களிலும் மொழி பெயர்க்கவும் ஷேக்ஸ்பியர் சிந்தனைகளே என்றால் – அது எளிய செய்தியா? சொந்த அறிவல்ல – வெறும் தொகுப்புதான் என்றே வைத்துக் கொண்டாலும் அது அறிவும் விவரமும் கொண்ட மாபெரும் பண்டக சாலை போல ஷேக்ஸ் பியரின் ஒரே நூல் இருக்கின்றது. ஷேக்ஸ்பியர் காலத்தில் அரசர்களிடம் உதைபட்டிருக்கலாம். தேவடியாள்களிடம் தேநீர் யாசித்துக் குடித்திருக்க லாம். பிச்சை எடுத்திருக்கலாம். ரோமப் பேரரசும், ஆங்கில சாம்ராஜ்யமும் செய்ய முடியாத காரியங் களை ஒரு தனி மனிதன் – ஷேக்ஸ்பியர் செய்திருக் கிறான்.

எழுத்தல்ல – செயல்!

எழுத்து ஒரு வகை; சாய்வு நாற்காலி விட்டு எழ முடியாதவர்கள் – உயிருக்குப் பயந்தவர்கள் – வேறு வழி தெரியாதவர்கள் எழுதி வைத்துவிட்டுத்தான் போக வேண்டும். ஷேக்ஸ்பியர், ஷா, வால்டேர் ஸ்பினோசா, நீட்ஷி, கான்ட் – எல்லாப் பயல்களும் எழுதி வைத்து விட்டுப் போனார்கள். எழுதியாவது வைத்தார்களே – அது சிறப்புதான். எழுதியதைவிடச் சிந்தித்துப் பிரச்சாரம் செய்தவர்களும் இருந்தார்கள். கிரேக்கத்தில் சாக்ரட்டீஸ், சீனத்தில் கன்பியூசியஸ், இந்தியாவில் புத்தர்! நடையாக நடந்து, ஊர் ஊராகத் திரிந்து அறிவை, அன்பை, தாம் அறிந்த வாழ்க்கை நெறிகளை பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பிரச்சாரங்கள் – பகுத்தறிவு இயக்கமாக, புத்தமதமாக, கன்பியூசியன் சிந்தனைகளாகப் பிறகு வளர்ந்து அப்படி ஒரு வகை. மதமாக வளர்ந்து பிரிந்து உடைந்து அழிந்து அப்படி ஒரு வகை!

அடி, உதை

எழுத்தாவது, பேச்சாவது, எடுடா கத்தியை என்று காரியத்தில் இறங்கியவர்களும் உண்டு. குருகோவிந்தர் – ஒரு குரு மட்டும் அல்ல, ஒரு போர் வீரரும்கூட! சீனத்தின் மாசேதுங் 30 ஆண்டுகள் – சீனத்தின் தென் பகுதி மலைச் சரிவுகளில் பதுங்கிக் கொண்டு – உலகின் மாபெரும் சக்திகளை எதிர்த்துப் போரிட்டார். தமிழ் ஈழத்தில் நடப்பது என்ன? தத்துவ பரிவர்த்தனையா? ஜீவ மரணப் போராட்டம்! மனிதச் சுரண்டல்களை எதிர்த்து மனித வர்க்கம் நடத்தும் ரத்த யாகம்! உலக வரலாற்றில் எத்தனையோ போர்கள், கொலைகள், ரத்தக் களறிகள்  – சில சிலரின் ஆசை வெறிகளால்; பல பல சூழ்நிலைகளில் மனித விடுதலை முயற்சிகளினால்! ஒரு சில மிகச் சில மட்டுமே மனித நேயக் காதல் சித்தாந்தங்களால் நடந்த போர்களாகும். மனித மேம்பாட்டுச் சிந்தனைகளால் – மனித ஒருமைப்பாட்டு எண்ணங்களால் இங்கு நடந்த போர்கள் மிகச் சில தான்! மனித மேம்பாடு – மனித ஒருமை என்றால் அதற்குப் போர் எப்படி நடத்துவது? மனிதனை எப்படி அழிப்பது? அதுதான் சிக்க்ல!

வாழ்ந்தவர்களும் – செய்தவர்களும்!

எனவே உலகில் பலர் விலங்குத் தன்மையோடு, உணவு, இன விருத்தி என்று வாழ்ந்து ஒழிந்ததும் உண்மை. சிலர் பேரரச ஆண்மைகளோடு, போர், யுத்தம், உலக சாம்ராஜ்யம் என்று கனவு கண்டு, அலைந்து போரிட்டு, கொஞ்சம் வென்று, கொஞ்சம் தோற்று மாண்டதும் உண்மை. ஒரு சிலர் – சுரண்டல் முடியும் என்றால் மனிதனையும் சுரண்ட முடியும்; அடக்க முடியுமென்றால் மனிதனையும் அடக்க முடியும்; ஆள முடியும் என்றால் மனிதனையும் ஆள முடியும் – என்று மத மோட்ச பிதிர்லோக ஏற்பாடு களுடன் தர்பார் நடத்தியதும் பிறகு நிர்வகல்ப சமாதி அடைந்ததும் உண்மை. இடை யிடையே மனித மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் தோன்றுவதும் சிந்தனை மாளிகைகளில் ஒட்டடை அடிப்பதும் தூசு தட்டுவதுமாக இருந்து மறைந்ததும்கூட உண்மைதான். இத்தனை உண்மைகளுக்கும் இடையே –

இந்த மண் – இது வாழ்வு – இதை எண்ணு!

இத்தனை போர் பூசல், ஆட்சி, மதம், சித்தாந்த வேதாந்தங்களுக்கிடையே இந்த மண் – அது தொடரவில்லையா? நாகப்பட்டணத்து இரும்புப் பாலங்கள் என்னவாயின? ரோம சாம்ராஜ்யத்தின் வைரமணி மாளிகைகள் எங்கே போயின? கால ஓட்டத்தில் அவை கபளீகரமாகி ஜீரணிக்கப்பட்டன. அவை அப்படித்தான் படும், பட்டும்கூட – இமய உயரமும், பசிபிக் ஆழமும் இந்த மண்ணில் உண்டா இல்லையா? உலகம் இருக்கும். எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு இருக்கும். இருக்கும் இந்த உலகம் வருகின்ற – வாழ்கின்ற மனிதர்களின் வீடாக இருக்கும். அவர்கள் அந்த வீட்டை இடிப்பார்கள்; மாற்றி அமைப்பார்கள், வாழ்வார்கள். அதில் என்ன முக்கியம்? உலகின் தன்மைக்கேற்ப – வாழ்வின் தேவைக்கேற்ப – மனித உணர்வு – அறிவுக்கேற்ப – மனித வாழ்வுக்கு உடன்பாடான ஏற்பாடுகள் இடிக்கப்பட மாட்டாது; மனிதத் தேவைக்கான கண்டுபிடிப்புகள் தூக்கி எறியப்பட மாட்டாது! சக்கரம் – எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதை உலகம் தூக்கி எறியுமா? நெருப்பு – தற்செயலாக மனிதன் கண்ணில்பட்டது. நெருப்பின்றி வாழ முடியுமா? அப்படிக் கண்டுபிடிப்புகளில் எல்லாம் பெரிய கண்டுபிடிப்பு எது என்றால் –

ஏ, மனிதனே! உன் அறிவை

தூசு படியாமல் பார்த்துக் கொள்!

ஒட்டடை பிடிக்காமல் செய்துகொள்!

அது உனக்கும் உதவும்;

உனது சந்ததிக்கும் உதவும்!

இந்த உலகிற்கும் எல்லாருக்கும் உதவும்!

என்ற கண்டுபிடிப்புதான். இதைச் செய்தவர் பெரியார்.

ராஜ கம்பீர – மதவாதமவுடீக – புத்திச – பிரச்சார அடி உதை சிந்தனைகளுக்கு எல்லாம் மேலே – நிரந்தர இமயமாக – அடித்தளம் தெரியா ஆழ்கடல் பசிபிக்காக இருப்பது, மனிதனே – அறிவைத் தூய்மை செய் என்ற சிந்தனைதான்!

அதை வழங்கியவர் பெரியார்!

அந்த இமயமும் பசிபிக்கும் எமக்குச் சொந்தம்!

– நன்றி: பெரியார் 107 ஆவது பிறந்த நாள்

‘விடுதலை’ மலர் (1973)

 

 

You may also like...